கலைஞர் 92ம் பிறந்தநாள் – 03.06.2015
=====================================
ஔவை நடராசன்
மேனாள் துணை வேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••
வெல்லும் வேழம்
================
காலத்தால் குலையாத சூரியன் நீ!
காற்றுக்குக் கலங்காத மாமலை நீ!
பாலொத்த நட்புமனம் வெண்மையும் நீ!
பனியொத்த மலர்ச்சிரிப்பு மென்மையும் நீ!
ஞாலத்தில் தமிழருக்குத் தலைவனும் நீ!
நனிசங்க நூல்தொகுப்பின் திரட்டே நீதான்!
வேலொத்த கூரறிவின் கருவூலம் நீ!
விசைகொண்ட சயங்கொண்டான் பரணியும் நீ!
பொல்லாங்கைப் பொச்சரிப்பைப் புரட்டு தன்னை
பொசுக்கிவிட்டு மேல் எழும்பும் எரிமலை நீ!
நில்லாத பூமியைப் போல் சுற்றிச்சுற்றி
நிமிர்ந்து வெல்லும் போர்க்களத்தின் வேழமும் நீ!
சொல்லாலே பகைக்குலத்தைச் சாய்த்துத் தீய்த்துச்
சுடர் ஒளியைக் கொப்பளிக்கும் அறிவு ஊற்றே!
நல்லோர்கள் நெஞ்சத்தில் மருதம் போன்றே
நனிகுளிர்மைப் பசுமையிடும் நல்லோய் வாழ்க!
நீதி நூல்தான் உன் பிடித்தம்! மற்ற நூலால்
நிதம்நொந்த தமிழினத்தை நீதான் காத்தாய்!
ஆதிமுதல் பகுத்தறிவு வெளிச்சம் நீதான்!
அனல் பெரியார் அண்ணாவின் இருப்பும் நீதான்!
சாதிகளைத் தூளாக்கி மாந்தர் எல்லாம்
சரிநிகராய் உலவவிட்டாய்! தமிழர் நாட்டில்
வீதியெல்லாம் உன் தடந்தான்! தமிழர் மீள
விதிசெய்வீர் கலைஞரே நீர் வாழ்க! வாழ்க!

Add a Comment