மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-157
—————-
இசைச்சித்தர்
சிதம்பரம் ஜெயராமன்
============================
இசைச்சித்தர், பெயருக்குத்தான் இயக்குநராக இருந்தார். எந்த வாய்ப்பும் வசதியும் இல்லாத வாய்மூடிய பதவியாக அது அமைந்தது. புரட்சித்தலைவரும் எங்கள் முறையீட்டைக் கேட்டு ஒருவிடையும் சொல்லாமல் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்.
கலை உலகத்தில் நடிகராக, பாடகராக, எவரும் எட்ட முடியாத எல்லைகளை எல்லாம் தொட்டுப் பார்த்து, பாடல் என்ற அளவில் மட்டும் பிறகு ஓய்ந்தார்கள். தஞ்சை இராஜராஜனின் 1000 ஆண்டு முடிசூட்டு விழா நிகழ்ச்சியைத் தஞ்சையில் மிகப் பெரிதாக நடத்தினோம். இசை அரங்கத்தில், தொடக்கமாக இசைச்சித்தரை பாட வைக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் விரும்பிச் சொன்னார்கள். ஓரளவு நலிந்த நிலையில் மூன்று மணி நேரம் பாடுகிறேன் என்று, இரண்டு மணி நேரத்தில் பாடுவதை நிறுத்திக் கொண்டார். புரட்சித்தலைவர், அந்த இரண்டு மணி நேரமும் அமர்ந்து மெய்மறந்து கேட்டார்கள்.
பிறகு நான், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தராகச் சென்றேன். புரட்சித்தலைவரின் வாழ்வும் நிறைவடைந்தது. இசைக் கல்லூரியின் இயக்குநர், முதல்வர் பதவி இரண்டுமே பானுமதி அம்மையாருக்குத் தரப்பட்டது. நான் சென்னையில் இருந்தபோதெல்லாம் திங்களக்கு ஒருமுறை அவர் இசைச்சித்தரின் இல்லம் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவரும் என்னைக் கண்டு அளவளாவ அண்ணா நகருக்குப் பலமுறை வந்திருக்கிறார்.
நான் தஞ்சையில் இருந்தபோது, தமிழ் பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஒரு பெரும் பாராட்டு விழா நடத்திப் பரிசு வழங்க வேண்டும் என்று முயன்றேன். பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிற மரபு தஞ்சையில் தொடங்கப்படவில்லை. எனக் கனவு நிறைவேறாமல் போயிற்று.
நலிந்து மெலிந்து மறைந்தாலும் அவருடைய ஓங்கிய தீக்குரல் என்றும் ஒலிக்கும். இசைச்சித்தர் இசை உலகத்தில் ஒருவராகவே வாழ்ந்தார்.
“ஒருவன் என்னும் ஒருவன் காண்க”
என்ற திருவாசகத் தொடர்தான் அவருக்குப் பொருந்தும்.

Add a Comment