திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 29
==========
கீழே பல பாசுரங்களில் (1,10,25,26,27,28) கண்ணனிடமிருந்து ஒரு பறையை வேண்டுவதாகச் பலகாற் சொல்லி வந்த கோபியர்கள், ‘அப்பறை இன்னது’ என்பதை இப்பாட்டில் விவரிக்கிறார்கள். கண்ணன் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே அவர்களால் ‘பறை’ என்று மறைத்துப் பேசப்பட்டதை உரை விளக்கத்தால் அறிகிறோம்.
“கோவிந்தனே! இந்த வைகறைப் பொழுதிலேவந்து, உன் அழகிய திருவடிகளைப் போற்றி நாங்கள் மங்களாசாசனம் செய்வதற்கான பலனை நீ கேட்டருள (ல்) வேண்டும். பசுக்களை மேய்த்துண்ணும் இடைக்குலத்திலே பிறந்த நீ, எங்களிடத்தில் பணிவிடைகளைக் கொள்ளாது விட்டுவிடுதல் உனக்குத் தகாது. நாங்கள் இப்போது வந்திருப்பது அப்பறையைக் கொள்ளும் பொருட்டாக அன்று. காலமுள்ளவளவும் நீ எவ்வளவு பிறவி எடுத்தாலும் உன்னோடே உறவுடையவர்களாகக் கடவோம்; உனக்கு மட்டுமே தொண்டு செய்யக் கடவோம். எங்களின் வேறு விருப்பங்களை எம்மிடமிருந்து போக்குவாயாக”.
இப்படி, இப்பாசுரத்தில் தாங்கள் நோன்பு நோற்பதென்பதும் அதற்கு வேண்டியவைகளைக் கண்ணன் உவந்து அளிப்பான் என்பதும் ஒரு (வியாஜமே) காரணமே; தங்களுடைய அடிநிலையான கருத்து இறைவன் திறத்துச் செய்யும் தொண்டே (பகவத் கைங்கர்யம்) என்பதைச் சொல்லி இப்பிரபந்தத்தின் சீரிய கருத்தினை (பரமதாத்பர்யம்) வெளியிடுகிறார்கள்.
நீ இருக்குமிடத்திற்குச் சிறு காலைப் பொழுதில் வரினும் உன்னைக் காணவொண்ணாது என்று சிற்றஞ்சிறு காலையிலே வந்தோம் – என்கிறார்கள். காலை – தாமசரும் உணரும் வேளை; சிறுகாலை – ஆய்ச்சியர் தயிர்கடையும் பொழுது; சிற்றஞ் சிறு காலை – அதற்கும் முந்தியதாம் என்க. இப்படிப் பனித்தலை வீழும் அதிகாலையில் வந்ததோடு நில்லாமல் உன்பொன்னடிகளுக்குப் பல்லாண்டு பாடியதும் எங்களின் பேரன்பினை (ஆராதிசயத்தை)க் காட்டுமன்றோ? பரத்துவத்தை விட்டு உன் எளிமையைக் காட்டுவதற்காகவே எங்களின் ஆய்க்குலத்தில் வந்து நீ அவதரித்தாய். அப்படி ஆய்ப்பாடிக்கு அணிவிளக்காய்த் தோன்றிய நீ, எங்களின் குற்றேவலைக் கொள்ளாமலும் பிரார்த்தனையைத் தலைக்கட்டாமலும் (நிறைவேற்றாமலும்) போகமுடியுமோ? இங்கு நாங்கள் பறையென்றது உன்னிடத்துச் செய்யும் நித்திய கைங்கர்யத்தையே. காதலி இருந்த இடத்தே சென்று, ‘தண்ணீர்’ என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ? நாங்கள் ‘பறை’ என்றால் அதன் தொனிப்பொருள் வேறே என்று நீ அறிய வேண்டாமோ? ஆகவே எப்போதும் உன்னோடுள்ள தொடக்கினை (சம்பந்தம்) மறவாமல் உனக்குத் தொண்டு பணும்படியாக எமக்கு அருள்வாயாக் கைங்கர்யத்துக்குக் களையாகவுள்ள உலகியலில் – எங்கள் உள்ளம் செல்லாதவாறும் நீ அருள் செய்ய வேண்டும் – என்று கண்ணனின் காலைக் கட்டுகிறார்கள் ‘மற்றைய காமங்கள் மாற்று’ என்பதன் பொருள் இதுவேயாம்.
‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே – ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்”
என்பதில் மேலும் பலபொருள்கள் பொன்னும் மணியுமாய்ப் பொதிந்து கிடப்பதைப் பழைய உரைகளிற் பரக்கக் காணலாம்.
ஒரு சோற்றுப் பதமாகச் சில:
உற்றோமேயாவோம் – எப்பிறப்பிலும் எக்காலத்திலும் உனக்கு உறவினர்களேயாவோம். உறவுண்டானாலும் சிலமாதங்களும் சில ஆண்டுகளும் பிரிந்திருந்த பிராட்டி, பரதன் முதலானோரைப் போல் ஆகக்கூடாது. இளையபெருமாளை (இலக்குவனை)ப் போல என்றென்றும் உன்னைப் பிரியாதிருக்க வேண்டும். உன்னோடு திருநாட்டில் (பரமபதத்தில்) இருக்கவும் அதற்கு எதிர்த்தட்டான் சம்சாரத்தில் பிறக்கவும் எமக்குச் சம்மதமே. உனக்கே நாம் ஆட்செய்வோம் – உனக்கே என்னுமிடத்தில் ஏகாரத்தாலே தன்பயனிலே உள்ள விருப்பத்தை (ஸவ்ப்ரயோஜந பரதையை)க் கழிக்கிறார்கள். எங்களுடைய ஆனந்தத்தைக் கருதி உனக்கு ஆட்செய்வோமல்லோம். உன் முகமலர்ச்சிக்காகவே அடிமை செய்வோம் என்கிறார்கள். இவர்கள் கைங்கர்யம் செய்வது இறைவனுடைய ஆனந்தத்திற்கேயொழியத் தங்களுடைய ஆனந்தத்திற்காக அல்ல என்பது கருத்து.
எனவே இப்பிரபந்தத்துக்கும் இப் பாசுரத்துக்கும் உயிரான அடி இது என்று பெரியோர் அறுதி இட்டனர். இப்பாசுரம் குறித்த பட்டரின் கூற்றாலும் இதன் சிறப்பும் உயிர்ப்பும் புலப்படுதல் காண்க.
‘திருமாலடியார்கள் விடியலில் எழுந்திருந்து திருப்பாவை முப்பதும் தப்பாமல் ஒதல் வேண்டும்; இயலாதாகில் ‘சிற்றஞ் சிறுகாலை’ என்னும் இவ்வொரு பாசுரத்தையேனும் ஒதுக. அதுவும் இயலாதெனில் முன்னோர்கள் இங்ஙனம் இருந்த இருப்பை மனத்தாலேனும் நினைப்பார்களாக’ என்றாராம்.
திருப்பாவைப் பாசுரமொன்றன் நினைப்புக் கூட (ஆற்றமாட்டாத அடியவர்க்கும்) பரமபத இன்பத்தை தப்பாமல் கொடுக்கும் என்பது பட்டரின் திருவுள்ளம் போலும்.
ஜபட்டர்; – பராசரபட்டர்; கூரத்தாழ்வானின் திருப்புதல்வர். எம்பெருமானாருக்குப் பிறகு ஆசார்ய பீடத்தை அலங்கரித்தவர்.ஸ
இப்பாட்டில் உபேயம் (பேறு) அவனே என்னும் அர்த்தம் விளக்கப்பட்டுள்ளது. மேலும் துவய, சரம சுலோகங்களின் பிற்பாதியை இது விளக்குவதாகவும் கூறுவர்.

Add a Comment