திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 23
==========
இதற்கு முந்திய பாசுரத்தில் கண்ணனைத் துயிலுணர்த்திய திருவாய்ப்பாடிச் சிறுமியர், ‘கார்மேனிச் செங்கண் கண்ணபிரானே! உன்றன் அழகிய கண்களின் அருள் நோக்கம் எங்களின் பாவத்தை நீக்குமன்றோ?’ என்றார்கள். அது கேட்ட கண்ணனும்;, ‘நீங்கள் வேண்டுவது என்ன?’ என்று வினவி நின்றான். அதற்குக் கோபியர் கூறும் விடையாகவும் – அவர்தம் விண்ணப்பத்தை வெளியிடுவதாகவும் அமைவதே, ‘மாரிமலை முழைஞ்சில்’ என்னும் இப்பாசுரம்.
“கண்ணா! அயலார் அறியாமல் குன்னாங்குறிச்சியாய் – அதாவது பரமரகசியமாய் இப்படுக்கையில் இருந்தவாறே எம் விண்ணப்பத்தை நீ கேட்டருளலாகாது. இங்கிருந்து எழுந்து சிங்கம் போல் நடந்து, சீரிய சிங்காசனத்தில் சென்று அமர்ந்த பின்னரே யாம் வந்த காரியத்தைக் கேட்டு அதனை நீ ஆராய்ந்து அருளல் வேண்டும்” என்கிறார்கள்.
மேலும் அவன் நடையழகைக் காண விரும்பி, ‘நீ படுக்கையினின்றும் துயில் நீங்கும் போதான அழகை அனுபவித்தோம். இவ்வழகு வௌ;ளத்தைத் திருமாளிகைக்குள்ளேயே தேக்கி வைக்கலாமா? அணைவெட்டி விடுதல் போல் எமக்காக நாலடி நீ நடந்து காட்டாயோ?’ என்கிறார்கள்.
அந்த நடையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை உவமை முகத்தான் மேலே விவரிக்கிறார்கள்.
கமலக்கண்ணனே! இது கார் காலம்; விடாது மழைபொழியும் காலம்; காதலரைப் பிரிந்த மங்கையரின் கண்களும் புனல் பொழியும் காலம். ‘காரிகையார் நிறை காப்பவர் யார்?’ என்று மேகங்கள் அறைகூவல் (திருவிருத்தம் 19) விடுக்கும் காலம். பிரிந்தார் கொடுமை கூறும் (திருவிருத்தம் 7) தண்பு+ங்காலம்; கலந்தார் வரவு எதிர்கொள்ளும் (திருவிருத்தம் 68) காலம்; கூடினார் போகரசம் அனுபவிக்கும் காலம்; நீயும் எங்கள் நப்பின்னைப்பிராட்டியும் ஒரு கட்டிலில் சேர்ந்திருப்பதைப் போலவே மலைக்குகையில் சிங்கம் தன் பேடையொடு பொருந்திக் கிடக்கும் காலம். இக்காலத்தில் உன்னைப் பிரிந்திருக்கும் எங்களுக்கு நீ அருள்செய்ய வேண்டாமோ?
காயாம்பு+ வண்ணணே! பு+வைப்பு+ மேனியனே! நீயும் பு+ – அலர்ந்தாற் போலே (நேரமறிந்து மலரும் பு+வைப்போல்) துயிலுணர்ந்து எழுவாய். மலைக்குகையில் துணையுடன் கூடிக்கிடந்த சிங்கம் நித்திரை நீங்கி எழுந்து – தீப்பொறி பறக்க விழித்து நான்கு பக்கமும் புடைபெயர்ந்து சென்று சோம்பலை முறித்து, பிடரிமயிர் சிலிர்க்குமாறு உதறி, நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டால் எப்படியோ அப்படியே உன் எழுச்சியும் நடையும் அமைவதாக. நீ உன் உறக்கம் நீங்கி அவயவங்களைத் தனித் தனியாக உதறி உடம்பினை நிமிர்த்தி நடந்து வர வேண்டும். நாங்கள் உனக்குச் சிங்கத்தை உவமை சொன்ன போதிலும் நரசிங்கம் போலக் கலந்த கட்டியாய்ச் சீர்மை கெட்டிராதே, சிற்றாயர் சிங்கமாய் நடந்து வரவேண்டும். பிறரையடக்கும் பெருமை தோற்ற நடப்பது சிங்கமன்றோ? அச்சிங்க நடையோடு கொல்லேற்றின் (ரிஷபம்) செருக்கும் மதயானையின் மதிப்பும் புலியினுடைய சிவிட்கும் (சினம்) தோற்ற நடப்பாயாக.
இப்படி உன் நடையழகைக் கண்டும் ஆராத வேட்கையராய் – நீ சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் அழகையும் காண அவாவி நின்றோம். நீ அமரும் சிங்காசனமும் சீரியதன்றோ? அது தர்மாதி பீடமல்லவா? அதிலமர்ந்த பின்னர் நீ சொல்லும்; வார்த்தை சத்திய வார்த்தையாம் தகுதி சான்றது. பொய்ந்நம்பியான கிருஷ்ணன் சொன்னதேயாகிலும் ஆசனத்தின் சிறப்பாலே அவ்வார்த்தை பழுதுபடாது மெய்யாகவே இருக்குமன்றோ?
ஆதலால் நீ சிங்காசனத்தில் அமர்ந்த பின்னே தான் நாங்கள் வந்த காரியத்தை விண்ணப்பம் செய்வோம். அதனைக் கேட்டு ஆராய்ந்து எங்களுக்கு நீ அருள்செய்வாயாக – என்கின்றனர்.
ஆயினும் தாங்கள் வந்த காரியம் இன்னது – என்பதை அவர்கள் இந்தப் பாசுரத்தில் வெளியிடவில்லை. அதனைச் ‘சிற்றஞ்சிறு காலைக்கு’வைக்கிறார்கள். (ஆய் – ஈராயிரப்படி) என்பது வியாக்யானம். (அவ்வேண்டுதல் 29ஆம் பாசுரத்தில் இடம் பெற்றுள்ளது என்பது பொருள்).

Add a Comment