POST: 2020-12-17T10:40:05+05:30

கவிஞர் இராமலிங்க ஜோதி – மணிவிழா வாழ்த்து

தம்பி ! வா !! தலைமை காத்திருக்கிறது !

இளம் பருவத்திலிருந்தே நாட்டுணர்வு மேலோங்கி நின்ற வீர இளைஞராக நண்பர்கள் சூழ்ந்து வர வெற்றி உலா நடத்தியதை நான் கண்டு மகிழ்ந்தவன் .

அன்பு – அறிவு – பரிவு – ஆற்றல் – எக்கணமும் பொதுநலத்தை நினைக்கின்ற பரந்த நெஞ்சம் இவைகளின் வடிவமாக இராமலிங்க ஜோதி திகழ்கிறார் .

மங்கலத் திருமணம் நிறைவேறியதும் – இராமலிங்க ஜோதியின் செல்வத்திருமகளுக்கு விழாக்கள் நடத்தியதையும் நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன் .

அப்பா ! – ஓய்வில்லாமல் கட்சி – கட்சி என்று சொல்லித் , தில்லிக்கும் – சென்னைக்குமாகச் சென்று வருகிறாரே – வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுக்கக்கூடாதா என்று அவர் துணைவியார் என்னிடம் முறையிட்ட போது – ” கடமை தவறாத இராமலிங்க ஜோதி ஒரு நாள் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புக்குத் தலைவராகவும் – சட்டமன்ற உறுப்பினராகவும் வருவார் ” என்று நான் சொன்ன சொற்கள் வார்த்தைகளாக இன்றும் அப்படியே நிலைத்து நிற்கின்றன .

வாயார ” அப்பா ” என்று அழைத்துக் கட்சிப்பணிகள் பற்றி இரவு – பகல் பாராமல் என்னிடமும் என் துணைவியாரிடமும் பேசிக்கொண்டிருப்பார் .

புகழ் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் – தேசியத் தலைவராகவும் விளங்கிய இரா .அன்பரசு அவர்கள் இராமலிங்க ஜோதியைக் தட்டிக்கொடுத்து வளர்த்ததோடு – என் கை , மோதிரக்கை ஆனால் ஒளவையின் கையோ – முத்தமிழ்க்கை , அங்கே நீ குட்டுப்பெறுவதும் நல்லது என்று சொன்னதை நான் நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறேன் .

கடமை வீரனாகிய இராமலிங்க ஜோதிக்கு ” மங்கல மணிவிழா ” அமைவது எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது .

உடன்பிறந்த தோழராகிய ஐ .நா .கண்ணனோடு இருவரும் இணைந்து வருகிற அன்பின் கேண்மையை நான் எப்போதும் போற்றுகிறேன் .

கடமையில் உறுதியுள்ளவர்கள் எவ்வளவு கலக்கம் வந்தாலும் – தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் .

செயல்வீரர் இராமலிங்கஜோதி – மாலா இணையரின் மணிவிழா எல்லாச் சிறப்புக்களோடு இனிது நிறைவேற வாழ்த்தி மகிழ்கிறேன் !.

” ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
இளையபார தத்தினாய் வா வா வா ”

– பாரதியார்

அன்போடு
ஒளவை நடராசன்
17 12 2020

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *