மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 64)
‘ஒருகொடியில் இரு மலர்கள் – கலையும், அறிவியலும்’
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நல்லதம்பி திரைப்படம் கலைவாணர் வழங்கிய அருமையான சிந்தனைப் படைப்பாகும். பெருமைக்குப் பெருமையாக பேரறிஞர் அண்ணாவின் கதை – கருத்து – உரையாடல் – பாடலமைப்பு முதலியன பேரெழுச்சியை உருவாக்கியது. கலைவாணரும் டி.ஏ.மதுரமும் சேர்ந்து பாடிய பாடல் இப்படித் தொடங்கும்
“விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி
வெளிநாட்டாரை விருந்துக்கழைச்சுக்
காட்டப்போறேண்டி
அஞ்ஞானத்தை அழிக்கப்போறேண்டி-
அணுசக்தியால ஆயுள் விருத்தி
பண்ணப் போறேண்டி ”
இந்த வரிகள் அறிவியற் சிந்தனை வளர்வதற்குப் பேரூக்கத்தைத் தந்தது. என் இனிய நண்பர் கு. மாஸ்கோ என்னோடு பச்சையப்பர் கல்லூரியில் உடன் பயின்றவர். பேராவூரணி குழந்தை புகழ்வாய்ந்த பெரியார் தொண்டராவார். அவர் திருமகன்தான் மாஸ்கோ. கலைவாணர் குடும்பத்துக்குப் பெரிதும் வேண்டியவர்கள்.
ஒருமுறை கலைவாணரைக் காண நண்பர் மாஸ்கோ அழைத்துப்போனார். கலைவாணர் அப்போது சிறிது நலிந்திருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது “அண்ணா நீங்கள் பகுத்தறிவுத்தணல்” என்று சொன்னேன். கலைவாணர் சிரித்துக்கொண்டே “இந்தத் தணல் மேல்தான் தண்ணீர் ஊற்றி விட்டார்களே, நான் கனல் அல்ல கரித்துண்டு, இதோ வந்து போனாரே – அவர் தான் எரிமலை” என்றார். எரிமலையா என்று வியப்போடு கேட்டோம். அவர்தான் உடுமலை நாராயணகவி என்றார். எத்தனையோ முறை அவர் கொட்டிய நெருப்புக்குழம்பை ஆறவைப்பதற்குப் படாத பாடுபட்டேன். அப்போது உடனே இந்தப் பாட்டைப் பாடினார், .
“பொய்யும் புரட்டும் எரிக்கப் போறேண்டி
புராணத்தின் வாலை நறுக்கப் போறேண்டி”
அப்போது தணிக்கைக் குழுவில் இருந்தவர் பெயர் ஆஞ்சநேயலு. அவரைத்தான் குறிக்கிறது என்று போய் கதை கட்டிவிட்டார்கள். பிறகு பாட்டை மெதுவாக மாற்றினோம். அஞ்ஞானத்தை அழிப்பதற்கு அறிவியல்தான் பெரிய கருவியாகும் என்ற பாடலை நாம் இன்றும் மறக்க முடியாது. அந்த வகையில்தான் புரட்சித்தலைவருக்கு எந்தப் புதிய கருவியை உடனே வாங்கி முன்னும் பின்னும் திருப்பி ஒருமுறை கழற்றிச்சேர்க்கிற திறமையிருந்தது.
புரட்சித்தலைவரின் இளம் பருவத்தில் கைக்கடிகாரத்தை பழுது பார்த்த ஒருவரை எப்போதும் நினைப்பதாகும். அவர் பெயர் எனக்கு நினைவில்லை என்றார். எழுதியதை நம்பினார்களே தவிர செய்து பார்த்ததற்குப் பலர் முயலவில்லை.
மாபெரும் சிந்தனையாளராகத் திகழ்ந்த அரிஸ்டாட்டில் ஆடவர்களைக் காட்டிலும் மகளிருக்குப் பற்கள் குறைவு என்று எழுதினார். இந்த அழகில் அவர் இரு மனைவியரோடு வாழ்ந்தார். ஒருமுறையாவது வாயைத் திறக்கச் சொல்லி எண்ணிப் பார்த்திருக்கலாமே என்று நம்பிக்கையில் வாழ்ந்ததை பெட்ரண்ட் ரசல் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில்தான் பல்வேறு நினைவலைகளோடு புரட்சித்தலைவரின் அறிவியல் கண்காட்சியில் ஆற்றிய உரை மேலும் தொடர்கிறது.
———————————————
“…அறிவியல் துறை என்றால், மனிதன் வாழ்க்கையைப் பற்றியும், சிந்திக்கிறான். தன் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கின்றான். அங்கே ஒரு கூடத்தில் மருத்துவத் துறையிலே, சில அனுபவங்களைப் பெற்றவர்கள் படித்தவர்கள், அந்த சகோதரிகள் மாணவியர் எங்களுடைய ஆற்றலை இந்தத் தமிழகத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்குப் பின்னணியிலே ஒரு கேள்வி இருக்கிறது. வாழ்க்கைக்கு நம்பிக்கை வேண்டும். வாழ்வதற்கு உறுதிப்பாடு வேண்டும் என்னும் கேள்வியும் அதுயொட்டிப் பின்னாலே இருக்கிறதென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க முடிகிறது.
ஒரு மாணவன், மாணவி பயின்ற பிறகு, அந்தப் பயின்றதை எதற்குப் பயன்படுத்துவது என்று எண்ணும் பொழுது வேலையில்லையென்றால் வேலை இருந்தாலும் போதிய வருவாய் இல்லையென்றால், அவன் எவ்வளவு உள்ளத்திலே சிதைந்து போகிறான். இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும். அங்கே அவர்கள் சொன்னார்கள் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள் கிராமப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நாங்கள் என்று அவர்கள் சொல்லிக் கருவிகளை இயக்கிக் காட்டிய போது, நாம் கற்பனை செய்த தமிழகம் நிச்சயமாக எங்கோ இல்லை. எனது அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது என்பதை நான் பூரிப்போடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இன்னொன்றையும் நான் நிச்சயமாகக் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மாணவன் கண்டுபிடிக்கின்ற புதிய விஞ்ஞான உத்தி இந்த உலகத்திற்கு எந்த அளவுக்கு நல்லது செய்யப் போகிறது, அல்லது தீமையைச் செய்யப்போகிறதா? அது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு யாராவது உபயோகிக்கும்போது, அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று எண்ணும்போது தான் நமக்கும் சிறிது அச்சமும் ஏற்படுகிறது. மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. நான் ஓரிரு மாணவரிடம் கேட்டேன். கண்டு பிடித்திருக்கிறீர்களே. உங்களுடைய பெயர்கள் அங்கே இல்லையே என்று கேட்டேன்.
இல்லை இராமன் தியரி என்கிறார்கள், ஐன்ஸ்டீன் தியரி என்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் தியரி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் கண்டுபிடிப்புகளுக்கு. ஆனால் இளைஞர்கள் – கண்டுபிடித்ததையெல்லாம் யாருக்கோ சொந்தமாக்குகின்றார்கள். அவர்கள் பெயர் வெளிவரவில்லை. இதில் எனக்கு வருத்தம் தான். மாணவராக இருந்தாலும் சரி, மாணவியாக இருந்தாலும் சரி, புதியது எதையாவது ஒன்றைக் கண்டுபிடித்து இந்த நாட்டிற்குப் பயன்படக்கூடியதாகக் தருவார்களேயானால் அவர்களுடைய பெயர் கண்டிப்பாகப் பொறிக்கப்பட்டாக வேண்டும். அதைப் பயன்படக்கூடிய அளவிற்கு நாட்டிற்காகச் சொந்தமாக்கும் போது “காப்புரிமை” நிச்சயமாக அந்த மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுக்கப்பட்டாக வேண்டுமென்பதை இங்கே நான் வற்புறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு மனிதனுக்கு இருக்கின்ற மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது? எத்தனையோ உக்திகளைக் கண்டுபிடிக்கலாம். எளிதாக வாங்கிக் கொடுக்கக் கூடிய புத்தகங்களாக இருந்தாலும் கூட, மேடையிலே அழைத்து, இந்தக் காரியத்திலே வெற்றி பெற்றவர்கள் இந்தப் புதிய உத்தியினைக் கண்டு பிடித்தவர்கள் புதிய தத்துவத்தை அளித்து விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவியவர்கள், அதற்காகக் கொடுக்கிறோம் என்னும்போது, அந்தப் புத்தகத்தை வாங்குகின்ற நேரத்தில் அவர்களுடைய முகத்திலிருக்கின்ற மகிழ்ச்சியையும், உள்ளத்துடிப்பையும் நாம் மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அது தான் அந்த உள்ளத்திற்குத் தருகின்ற மிகப் பெரிய பரிசே தவிர, பணமோ அல்லது அவ்வப்போது சொல்லுகின்ற பாராட்டுரைகளோ மட்டுமல்ல. இந்தக் கல்விக்காக நாங்கள் செலவழிக்கின்ற பணம், அரசின் சார்பாக எவ்வளவு என்பதை இங்கே சொல்வதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன்.
அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைப்பதற்கான இத்திட்டத்தில் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் ரூபாய் 55,000 – செலவிடுகிறது என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். ஆய்வுக்கூடக் கட்டிடத்திற்காக ரூபாய் 37,000-ம் கருவிகளுக்கான ரூபாய் 18,000 ஆகும். தனியார் மற்றும் நகராட்சி மேனிலைப்பள்ளிகள் ஒவ்வொன்றும் பெறும் மானியம் ரூபாய் 40,000 எதற்காகக் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்வாறு செலவு செய்கின்ற பணம் மக்கள் தருகின்ற வரிப்பணம் ஆகும். மக்கள் தருகின்ற வரிப் பணத்தை, எதற்காகச் செலவிடுவது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஏதோ விளம்பரத்திற்காகத் தெரிவித்துவிடலாம். பத்துப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தோம். இரு நூலகங்களைக் கட்டிக் கொடுத்தோம் என்று சொல்லலாம். அங்கு வைக்கப்படுகின்ற நூல்கள் எவையென நாம் சிந்திக்க வேண்டும். முன்னொரு முறை கூறியிருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான் சென்றேன். அங்கு நூலகத்தைத் திறந்து பார்க்க வேண்டுமென்றேன். திறந்து பார்த்தால் புத்தருடைய புத்தகம் இருக்கிறது. முசோலினியுடைய புத்தகங்கள் இருக்கின்றன. அந்த மதுரை மீனாட்சியம்மன் கோயிலைக் கட்டியவர் யார்? எந்தக் கல்லில் கட்டினார்கள்? எந்த மண்ணில் கட்டினார்கள்? எத்தனை ஆண்டுகளாயிற்று? என்னென்ன வேலைப்பாடு களமைந்த தூண்களெல்லாம் உருவாக்கினார்கள்? எப்படிச் செய்தார்கள்? அந்த மண்டபங்களை உயர்த்து வதற்கு எந்த இயந்திரங்கள் இல்லாத காலத்தில் எப்படி அவைகளை நிறுவினார்கள் என்பதைப்பற்றி எந்தப் புத்தகத்திலும் காணோம். இட்லரைப் பற்றித் தெரிந்து கொள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்கா போக வேண்டும். இப்படிச் செலவழித்துப் பயனில்லை. செலவழிக்கின்ற பணம் இந்த நாட்டிலுள்ள மக்கள் நல்வாழ்விற்கு எதிர் காலத்திற்குப் பயன்படும்படியாகச் செலவழிக்கப்பட்டாக வேண்டும்.
இங்கே துயரப்படுகின்ற ஏழைகளை அல்லது துன்பத்திற்கு ஆளானவர்கள் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் கூட இயற்கையின் தாக்குதலால் துன்பத்திற்கு ஆளானவர்களைச் சந்திக்க வேண்டியது என்னுடைய கடமை. சந்திக்கும்போது நான் என்னனாலான நிதி வசதிக்கேற்ப நான் உதவி செய்தாக வேண்டும். அந்த உதவி செய்யும் பொழுது அதைப் பெறுகின்றவர்கள் தங்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர அந்த நேரத்தில் வெளியே இருந்து யாராவது போய் உன்னிடம் 30 கிலோ அரிசியிருக்கிறது அதை எனக்குக் கொடுத்துவிடு; இருபத்தைந்து ரூபாய் கையில் வாங்கிக்கொள் என்கிற நிலையில் யாராவது இருந்தார்களேயானால் 30 கிலோ அரிசி கொடுத்தும் பயனில்லை. வேட்டி, சேலை வாங்கிக் கொடுப்பதிலும் பயனில்லை என்பதையும் நான் உணர்கிறேன்.
அதுபோல் இங்கு இருக்கின்ற இந்த இளம்பிஞ்சு உள்ளத்திற்கு ஏற்ற கொள்கைகள், இலட்சியங்கள், உணர்வுகள் பண்புகள் ஆகியவற்றை அறிந்து அவைகளின் அடிப்படையிலே தான் நாங்கள் கல்வியை உருவாக்க வேண்டும் என்று கருதுகின்றோம். நண்பன் யார் என்பதை நாம் தெரிந்து கொண்டால் இந்தப் பையன் எப்படியிருப்பான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆகவே சேர்க்கை எப்படி என்று தெரிய வேண்டும். அந்தச் சேர்க்கையை உருவாக்குவதில் நீங்கள் அத்தனைபேரும் நல்ல உணர்வோடு சேர்க்கையை உருவாக்கிக் கொள்ளக் கூடியவர்களாக அமைந்தாக வேண்டும். இந்தப் பொறுப்பு ஆசிரியர்களிடம் அதிகமாக இருக்கிறது.”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment