அன்னை சமைத்த ஆலயம்
முனைவர் கு வெ பாலசுப்பிரமணியன்
பேராசிரியர் ( ஓய்வு )
தமிழ்ப் பல்கலைக்கழகம்
1.தமிழ்க்கலைகள் நாடோறும் வளரு கின்ற
செந்தமிழ்ப்பல் கலைக்கழகம் தஞ்சை யூரில்
அமிழ்துவிளை கழனியெனத் திகழ்ந்த போதில்
அந்தமிழின் உரைவேந்தர் ஒளவை யென்னும்
இமைக்குள்ளே தமிழ்காத்த சான்றோர் ஈன்ற
ஏந்தலவர் நடராசர் நிறுவனத்தே
தமிழ் வளர்க்கும் துணைவேந்தர் பொறுப்பை யேற்றுத்
தஞ்சையெனும் நன்செய்யில் புகுந்த போதில்
2.அம்மையப்பர் என்னுமாரே அவரோ டந்நாள்
அன்புடைய அன்னையவர் தாரா என்னும்
செம்மை மனம் . விழிகருணை நேர்மைப் பண்பு
தெளிவுடைய சிந்தனைகளின் தேக்க மாக
நம்மிடத்தே வந்தார்கள் நற்றமிழ்க்கோர்
நடராசர் சிவகாமி என்றே செந்நெல்
விம்மியெழு தஞ்சையெனும் நகரே செய்த
மாதவத்தால் கற்றோர்கள் மகிழ்ந்து வாழ்த்த !
3.புல்பூண்டே படர்ந்திருந்த நிலத்தி டத்தே
புன்செய்யாய்க் காய்ந்திருந்த வெளியிடத்தே
கல்மண்ணே பரவிநின்ற காட்டிடத்தே
கனிந்தமன அம்மையாரே கோயி லொன்றை
வல்லமைசேர் கணேசருக்கே சமைத்த மேன்மை
வளாகத்தே உறைவோரின் உள்ள மெல்லாம்
இல்லமெல்லாம் உவகையினைச் செய்த தன்றே !
ஈடு சொல முடியாத பணியே யன்றே !
4.செம்பியன்மா தேவியாரே சோழ நாட்டில்
சிற்பமிகு கலைக்கோயில் பலவி டத்தே
கும்பிட்டு வழிபடற்கே ஆக்கி வைத்த
குறிப்பையெலாம் வரலாறு சொல்வ துண்டு ;
நம்பெரிய துணைவேந்தர் நடராசர்தம்
நாயகியார் பலகலைசேர் வளாகத் துள்ளே
தும்பிக்கைப் பிள்ளையார்க்குக் கோயி லொன்றைச்
சமைத்ததுவும் வரலாறே ஆவ தாமே !
5.அரவூரும் : ஆந்தையது ஒலியெழுப்பும் :
அழகுமயில் மான்களெலாம் அச்சத் தோடே
இரவுபகல் செலவஞ்சும் : மனித ரெல்லாம்
இயங்குதற்கே தயங்குகின்ற காட்டி னூடே
மரஞ்சூழ்ந்த வெளியிடத்தே கணப திக்கே
மணிக்கோயில் எடுத்துமகிழ் தாரா தேவி
வருகையினால் பல்கலைசேர் வளாக மெல்லாம்
மிகப்பொலிவு பெற்றதனை மறக்கப் போமோ !
6.ஊழியர்கள் குடும்பநலம் உடல்நலத்தை
உசாவிடுவார் அம்மையார்தாம் அன்பினோடு ;
சூழ்கின்ற நோய்களுக்கே மருந்தும் ஈவார்
தேர்ந்தநல மருத்துவரும் ஆன தாயே !
பாழ்வெளியில் பசும்பயிரே வளர்ப்பார்போலப்
பலரோடும் அளவளாவிக் குழந்தைக் கெல்லாம்
வாழ்நெறிகள் கற்பிப்பார் ; சுருங்கக் கூறின்
வளாகத்தில் புதுப்பொலிவு விளைந்த தன்றே !
7.உரைவேந்தர் எழுத்துநூல் நூற்றார் : நாவால்
ஓங்குபல மேடையெலாம் நடராசர்தாம்
புரைதீர்ந்த சொல்வேந்தாய்ப் பொழிவு செய்தார் ;
பொன்மனத்துச் செம்மல்செய் நிறுவனத்தில்
வினாமலர்கள் கொண்டுவழி பாடே செய்ய
விநாயகர்க்குக் கோயிலொன்று சமைத்து வைத்தார்
கறையுடைக்கும் காவிரிசூழ் தஞ்சை நாட்டில்
கலைதேர்ந்த மருத்துவராம் அன்னை யாரே !
8.கொள்ளைநோய் தனக்கேயோ இறையாய்ப் போனார் ?
கொடுங்காலன் அவருயிரோ கொண்டு போனாள் !
விள்ளரிய விதைநெல்லை , தொண்டு செய்ய
விழைகின்ற நல்லுயிரைக் கொள்ள லாமோ ?
தெள்ளுதமிழ்த் துணையிங்கே அழுதி ருக்க ,
தேம்புகின்ற பிள்ளைகளும் வருந்தி நிற்க
நள்ளிரவில் தென்றலென நகர்ந்தா ரையோ
நமன்செய்த அறக்கேடாம் இதுவே நன்றோ !

Add a Comment