POST: 2020-10-10T11:10:08+05:30

பண்பாட்டுத் திலகம் – முனைவர் ஒளவை நடராசன் –
மங்கலப்பெருவிழா மலர் – 15.7.2012
ஒளவை 75…..

பக்கம் எண் : 10

எந்தையும் தாயும் இரட்டை இமயங்கள்

கண்ணன்
அருள்
பரதன்

மழலையர் மருத்துவமாமணி எங்கள் அம்மா !
மலைப்பூட்டும் தமிழ் மாமலை எங்கள் அப்பா !

தமிழுலகைத் தலைநிமிரச் செய்த
உரைவேந்தர் ஔவை துரைசாமி !
உயர்ந்தவர் மாசிலாமணி எங்கள் தாய்வழித் தாத்தா !
உள்ளங்கவர்ந்த பாட்டனார்கள்
அப்பாவிற்கு அகவை முதிர்ந்தாலும்
பிள்ளைத் தமிழாகவே அவர்
எங்களுக்கு எப்போதும் தெரிகிறார் !

அப்பா அமைந்த பெயருக்கேற்பத்
தமிழ்வளர்ச்சித் துறையிலேயே தங்கியிருந்தவர்.

அம்மா பிள்ளைகள் வளர்ச்சியிலேயே பேரன்பு
செலுத்தியவர்
எங்கள் வீடு
தாயின் பெயர்கொண்ட
தண்ணிலவு பொழியும் தாரகை இல்லம்.
தாராவின் கையால்தான்
தடைபடா வளர்ச்சியில் எங்கள் குடும்பம்
தழைத்து நிற்கிறது.

எங்கள் வீட்டைத் தாய்தான் காப்பாற்றினார்
தாய் இல்லாதபோது,
வந்த அண்ணன் நாராயணன் வளர்த்தார்
சீசர் நாய் காவல் தெய்வமாகக் காத்தது.
மூன்று சிறுவர்களையும் முறைப்பட ஊட்டிப்
பணிக்குச் சென்றாலும்
நொடிக்கொருமுறை எங்களைத் தன் பணியிலிருந்தபடி
அடிக்கடி காத்த உருக்கம்

எங்கள் தாயின் கருணையின் பெருக்காகும்.

அப்பா
எங்கள் தந்தையாய் மதிப்போடு இருந்தார்
அம்மாவோ
தந்தையின் கடமையையும் தனதாக மாற்றிக்கொண்டு
தந்தை தாயாகத் தனிப்பெரும் தெய்வமாகத்
திகழ்ந்தார்.
எங்கள் வீட்டில் எந்த நிலையிலும்
எங்கள் அம்மா ஆட்சிதான் !
அருமையான அரசாட்சி !

அம்மா அன்பைப் பொழியும் அறிவுப்
பல்கலைக்கழகம்
ஒரு புயலாகச் செயற்படுபவர்
உயர்ந்த பாடசாலைதான் வேண்டுமென்று
எங்களோடு அமர்ந்து உடன்வந்து சேர்த்தவர்
ஒவ்வோர் அங்குலமும் எங்கள் வளர்ச்சியையே
பார்த்தவர்.

அம்மா எங்களின் ஆண் தாய்
எதிர்காலத்திற்கும் வழிகாட்டும்
கூனில்லாத ஔவைக் கொள்கைப் பிராட்டி
அப்பாவுக்குப் பெயரில் மட்டும் ஒளவை !
அம்மாவோ அறிவுரை தந்து அரவணைப்பதிலும்
ஔவையாகவே மிளிர்ந்தார்.

எங்களோடு ஒருவர் என்று பழகி
எந்தக் கவலையும் இல்லாமல் எந்தை எப்போதும்
பரிவின் (ப) வடிவமாய் வாழ்பவர் !.
தன்னை நினையாமல் பிறர் நலம்
பிறர் வளத்தையே நினைத்தவர் அப்பா.

ஒருவர் இருவர் இல்லை ஒரு நாளைக்குப் பலரெனப்
புலவர் கூட்டம் விருந்துண்ண எங்கள் வீடு
அருந்தமிழ் உணவின் அகமாகவே அமைந்தது
அம்மாவின் கையில் அமுத சுரபிதான் இருந்தது !

எண்பதுகளில் லிபியாவில் வேலை கிடைத்தும்
அருமைப் பிள்ளைகளுக்காக ஆறு மாதத்திலேயே
அலுவலை விட்டுவிட்டுத் தாயகம் திரும்பினார்
செல்வத்தில் இல்லை செழிப்பு !
என் செல்வங்களைச் செயல் வீரர்களாக்குவதில்தான்
என் உழைப்பு
என்று எப்போதும் கூறும் எங்கள் தாய்க்கு
இணையாருமிலை.

மிதி வண்டி, விசை வண்டி, மகிழுந்து
பழக வைத்தார் அவரே பழக்கிக் காட்டினார்
தட்டிக்கொடுத்துத் தட்டச்சுக்கு அனுப்பினார்.

நறுக்கென்று பேசியதை நன்றாக
எழுதிவைத்துக்கொள்ள சுருக்கெழுத்துக்
கற்கச் சொன்னார்.

அனைத்தும் பயில ஆசிரியத் தாயாய் இருந்து
எங்களை ஆளாக்கினார்.

இந்தியைப் பயிலவும் இசைக்கலை படிக்கவும்
விளையாட்டை விரும்பவும் குடும்பத்தில்
எங்களோடு ஓடி விளையாடிய ஒப்பற்ற
தோழியாகவும் துள்ளி வலம் வந்தார்.

மூச்சடக்கி நீச்சல் பழக முறையாக அனுப்பிவைத்தார்
தாய் தந்தையைச் சாராமல் தனித்த தளபதிகளாகத்
தகுதியோடு வாழக் கற்றுத்தந்தார்

எங்கள் மீசையில்லாத் தாயின் கன்னத்தில்
ஆசை முத்தமிட்டு ஆயுள்வரை நாங்கள்
அகம் மகிழ்கிறோம் !

அம்மா
எங்கள் மூவரையும் தாம் பெற்ற வரங்கள் என்பார்
அப்பா
எங்கள் மூவரையும் மூவேந்தர் என்பார்.
முடியுடை, மூவேந்தர் என்று போற்றிப்
பெருமையடைவார்.
நாங்கள் எந்த வகுப்புப்படிக்கிறோம் என்றுகூட

எப்போதும் வினவ மாட்டார்.
உரிமை தருவதில் அவருக்கு நிகர் அவர்தான்
எல்லையில்லாத உரிமை எதிலும்.

அப்பாவிடத்தில் எப்போதும்
எதைச் சொல்லவும் நாங்கள் அஞ்சியதில்லை
அம்மாவைக் கேட்டுச் செய்யுங்கள் !
அவளின்றி ஓரணுவும் அசையாது என்பதே அப்பா
சொல்வது !.|

அப்பா
எங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருக்கிறார்
அம்மா
எங்கள் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கிறார்

அம்மா
எங்களுக்குத் தலையெழுத்து
அப்பா
எங்களுக்குப்
புகழ்ப்பெயர் தந்த கையெழுத்து

அப்பா
எங்களைப் பெற்றுக் கொடுத்தவர்
அம்மா
எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்.

அப்பா
எங்களை அவரவர் போக்கில்
அவரவர் வளரட்டும் என்று
எப்போதும் மனத்தில்
ஒரு சிந்தனைத் தனிமையில் இருப்பார்
இன்றுவரை புகழில் நிலைக்கின்றார்.

எல்லாத் துறையிலும் முதலில் நிற்க வேண்டும்
எவர் துணையும் இல்லாமல் இமயமாய் நிமிர
வேண்டும்
என்று ஓயாமல் சொல்வார்
தம்மில் தம் மக்கள் அறிவுடைமை
என்ற திருக்குறளை எப்போதும்
சுட்டிக் காட்டுவார்.

அப்பாவிற்கு எங்களை
அயல் நாட்டிற்கு அனுப்பவே ஆசை.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்ற
பாரதியார் சொல்வதே நல்வழி என்பார்
அப்பாவின் பார்வையில் நாங்கள்
மெகஸ்தனிஸ், யுகான்சுவாங், வாஸ்கோடகாமாதான்
நாங்கள்

மூவரும் துறை வேறுபட்டவர்களானோம்
முறை வேறுபட்டதில்லை.

தாம் தந்தை எங்களுக்குத்
தண்டவாளமாய் அமைந்ததால்
நாங்கள்
பாதை மாறாமல் பயணம் செய்கிறோம்.

நாங்கள் உங்கள் பிள்ளை
நீங்கள் எங்கள் எல்லை .
இரண்டு இமயங்களின் திருவடிகளை
எப்போதும் தொட்டபடியே வணங்குகிறோம்.

உங்களைச் சேர்ந்து வாழ்கிறோம் சார்ந்தல்ல
உங்கள் சாதனைகளை வியக்கிறோம்
மழலை மருத்துவத்தில் அம்மாவும்
மரபுத்தமிழில் அப்பாவும் திளைப்பவர்கள்

உங்களை
இரண்டு கண்களாய்
இமைகூப்பி வணங்குகிறோம்.

உங்கள்
சாதனையைப் போதனையாய் எண்ணி
நாள்தோறும் நடப்போம்
உங்கள் வயதில்
நாங்கள்
உங்களைப்போல் உயர வேண்டும்
அன்றுதான் அப்பாவின் கனவு நனவாகும்
அம்மாதான் எங்கள்
வளர்ச்சியின் ஒவ்வொரு
அசைவிலும் அமைந்த உயிரணு.

எங்களை ஈன்றவர் நீங்கள்
உங்களைப் போன்றவர் நாங்கள் என
எதிர்காலம் எங்களை
என்றென்றும் வாழ்த்தட்டும்.

குழந்தை மாத்திரை அம்மாவும்
குறில் நெடில் மாத்திரை அப்பாவும்
எங்கள் நல்வாழ்வுக்கு
உரமேற்றட்டும்

நாங்கள்
உங்களைப்போல் வாழவேண்டும்
புகழோடு !

நீங்கள்
எங்களைப்போல் வாழவேண்டும்
இளமையோடு !

ஒரு நிகழ்ச்சி உள்ளத்தைச் சிலிர்க்க வைக்கும் !
இதயம் நின்றுவிட்டது இரண்டு மூன்று நொடிகள்
என அம்மாவைப் பார்த்து
நீ யிருக்கும் வரை நிற்காது
நீ தொட்டால் எதுவும் அசையும்
என்று நீர்மல்கச் சொன்னாராம் என் தந்தை
இப்படித் தழுதழுத்துச் சொன்னாரென்று
இதய மருத்துவம் முடிந்தபிறகு
டாக்டர் கூறினார்.

அம்மா எதற்கும் துணை வேண்டாதவர்
துணிவே துணை என்பவர் !

இந்த இரட்டை இமயங்களை
எதையும் தாங்கும் இதயங்களை
எப்போதும் வாழ்த்தும் உங்கள்
செல்லப் பிள்ளைகள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *