POST: 2020-04-24T10:29:03+05:30

தினமணி நாளிதழில் இன்று (24.04.2020) முனைவர் ஔவை நடராசன் குறித்து பேராசிரியர் இராம.குருநாதன் எழுதிய கட்டுரை

மேடைத் தாமரை பல்லாண்டு மிளிருமாக !
=======================================

செந்தமிழின் செழுமைக்குச் சிறப்புச் சேர்க்கும் செம்மல்; பாவன்மையைத் தம் நாவன்மையால் புனைந்துரைக்கும் ஆற்றல்; வித்தகம் அறிந்து புத்தகமாய் விரிந்த புலமை; கேட்பவர்க்கு வேட்ப மொழியும் திறம்; உறைவாளில் இருந்து புறப்படும் ஒளிப்பாய்ச்சலாய் சுடர்ந்திடும் உரை வீச்சு; எழுத்தளவில் நில்லாது கருத்தளவில் நுட்பத்தைப் பேச்சில் வடித்துக்காட்டும் வல்லமை; பேச்சின் வழி மேடையில் பூங்காற்றாய்த் தவழ்ந்துவரும் மென்மை. தமிழொடு ஆங்கிலமும் அறிந்த தகைசால் அறிவு இவற்றிற்கெல்லாம் உரியவர் அறிஞர் ஒளவை நடராசன்.

உரைவேந்தரின் ஒப்பற்ற புதல்வராகி அருந்தமிழுக்கும், ஆட்சியியல் உணர்விற்கும், அரசியலறிவுக்கும் பாலமாய் விளங்கியவர் ஒளவை நடராசன். சங்க இலக்கியம், சமய இலக்கியம், இக்கால இலக்கியம் ஆகியவற்றில் கருத்தூன்றி அவற்றைப் பற்றி நுட்பமாக உரையாற்றும் திறம் படைத்தவர் அவர். தமிழின் அடையாளமாய்த் திகழ்ந்து வருபவர். அவர் உரையாற்றும் போது, தமிழன்னை தம் சொல்லாற்றலைத் தந்து அவரது ஏவலுக்குக் காத்திருப்பார்.

நயவுரை நம்பி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஔவை நடராசனின் பன்முக ஆற்றலை வியந்து ஒருமுறை பாராட்டியதை இங்கே குறிக்க விரும்புகிறேன். “முப்பதாண்டுகளுக்’கு முன்னர் புரட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, தமிழே! என்று அழைத்து ஔவையை அரவணைத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் சிலிர்க்கிறது.”

ஒளவை நடராசனின் அகன்றுவிரிந்த அறிவுத்திறத்தை அவர் உரையாற்றலின் வழியே அறிந்துகொள்ள உறுதுணையாயிருப்பவை அவர் ஆற்றிய பொழிவுகள். அப்பொழிவுகளின் பூங்காவில் நுழைவோமானால் அங்குச் செறிந்திருக்கும் ஓர் அரியக் கூரான ஞானத் தேனடைகளை தேடி எடுத்துச் சுவைக்கலாம். தேன் பிலிற்றும் மெய்யியல் தோட்டத்தின் அருஞ்சுவையினைப் பருகலாம். தெவிட்டாத அறிவுக் கனியின் சுளைகளை உண்ணலாம். ஒளவை சமய நெறி பற்றி உணர்வால் ஒரு ஞானவேள்வியை நடத்திக் காட்டியிருக்கிறார். எண்ணுதற்கு இனியதாகவும், சித்தத்தைத் தித்திக்கச் செய்யும் தேனாகவும் அவருடைய சமய நெறி சார்ந்த விளக்கவுரைகள் அமைந்துள்ளன.

சங்க இலக்கியம் தாண்டிய நிலையில் பழுத்த பகுத்தறிவுப் பார்வை கொண்டிருந்தாலும், திருவெம்பாவை, திருப்பாவை, திருவருட்பா ஆகிய நூல்கள் பற்றிய விளக்கங்கள், ஔவையின் ஆழ்ந்த புலமையைக் காட்டக்கூடிய வெளிச்சக்கீற்றுகள். அவை ஒளிகான்ற தத்துவத்தின் உரைக்குறிப்புகளாகவும், விளக்கங்களாகவும், ஞானத்தேடலாகவும் அமைவன. ஞானத்தமிழுக்கு அவர் உரைத்திருக்கும் விளக்கங்கள் அருளியல் ஆனந்த அலைகள். அறிவுக்கடலில் முங்கிக்குளித்து முத்தெடுத்து முத்தமிழில் அழகியதோர் உரைவிளக்கத்தைத் தமது பேச்சுத்திறத்தால் ஒளிரச்செய்தவர் அவர்.

வள்ளலாரில் தனித்ததோர் ஈடுபாடு கொண்டவர் ஔவை. திருவருட்பா மூலம் வள்ளற் பெருமானின் திருவுள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் சிந்தனைக்கு விருந்தாவன.

பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் தோய்ந்த மனம் ஒளவையுடையது. பாரதியைப் புகழ்ந்து கூறும்போது, அவர், “கால்களைத் தரையில் உறுதியாக ஊன்றியவாறே வானில் உயரப்பறக்கும் விந்தைப் பறவை” என்கிறார். சங்கப் புலவரான பொய்கையார், புறப்பாடல் ஒன்றில் சேரமான் கோக்கோதை மார்பனைப் பாராட்டியிருப்பதை அண்ணாவின் பன்முக ஆற்றலோடு ஒப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரை, ”மக்களால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு மாமன்னர்” என்று பாராட்டும் ஒளவை, அருட்செல்வர் மகாலிங்கத்தைப் போற்றியுரைக்கையில், அவர் ஒரு ”பண்பாட்டுப் பனிலை” என்கிறார். இவ்வாறு ஒருவரை மனந்திறந்து பாராட்டும் பண்புடையவர் ஒளவை என்பதை இதன்மூலம் அறியலாம்.

வைணவ அரங்கத்தில் திருப்பாவைக்குரிய பேருரையை நிகழ்த்திக் காட்டிய பெருமை ஔவைக் குரியது. திருப்பாவை உரையை எண்ணும்போது, அவரது உரை வீச்சு, வைணவ உரையில் வல்லமை உடையவர் என்பதைக் காட்டும். ஆண்டாளின் சமயப்பொறையை நுண்ணிதின் காட்டும் மதிநுட்பத்தை ஓரிடத்தே ஔவை விளக்கும்போது “திருப்பாவை முழுவதிலும் கோயில் என்ற சொல் மூவிடங்களுள் வருகின்றது. திருமால் கோயில் தன்னது ஆயினும், அதனை அடைமொழி இன்றியே சாதாரணமாகச் சொல்லுவர். பிற மதத்தவராகிய சைவர்கள் கோயிலைச் சொல்ல வந்தால் திரு என்ற அடைமொழி தந்து திருக்கோயில் என்றே பேசுவர்’ என்பதனைத் தக்கவாறு விளக்கியுரைப்பர்.

உரைவேந்தர் ஒளவை துரைசாமி, திருவருட்பாவிற்கு ஆழமான உரை கண்டவர். தந்தையைப் போலவே மகனும் திருவருட்பா பற்றி விளக்கமுறப் பேசியும் எழுதியும் வந்துள்ளார். வள்ளலார் விழைந்த ஒளி வழிபாட்டை முன்னிறுத்தியே ஔவை பேசுவர். ”வள்ளற் பெருமான் இறைவனை இயற்கை விளக்கமாக, உயிரிரக்கமாக, கருணை அமுதமாகக் கண்டது போல, உண்மை வடிவமாகவும் கண்டார் என்று உணர்த்தியிருப்பதோடு, அதனைப் பெருமான், சத்தியம் என்றே வழங்குவதாகவும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். சத்தியமே சன்மார்க்கம் என்பதாயிற்று” என்பது ஒளவையின் கருத்து.

வள்ளற்பெருமான், மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் பெருநெறியை உலகுக்கு உணர்த்தியவர். இப்பெரு நெறிக்கு விளக்கம் கூறுவோர் பலர். வள்ளற்பெருமானின் வாழ்க்கையில் வியப்புக்குரிய பெருநெறி இது. வள்ளலாரின் கருத்து இதுதான் என்றும் கூறிவிட இயலாது. ஔவை இது பற்றிச் சிந்திக்கும் போது, ”இறப்பு என்ற சொல்லும், நீத்தல் என்ற சொல்லும் ஓர் எல்லையினைக் கடத்தல் என்றே பொருள்படும்.இயற்கையைக் கடந்த நிகழ்ச்சியை இயற்கை இறந்த நிகழ்ச்சி’ என்றும், கடலை நீந்தினான் என்பதைக் ‘கடலைக் கடந்தான்’ என்றும் பொருள் செய்கிறோம். எனவே ஒரு நிலையினைக் கடந்து போவதே இறப்பாகும். அருளுடையார்க்குச் சாவு அச்சம் தருவதில்லை . அவர்கள், ‘உடம்பும் மிகை’ என்று கருதியவர்களாவர். சாவைப் பற்றிய அச்சமே இல்லாதபோது, வாழ்வு இன்பமுடைய நற்சோலையாக, பேரின்ப வீடாக மாறி விடுகிறது. அப்பேரின்ப வாழ்வு, மரணமிலாப் பெருவாழ்வு ஆகாதா என்றும் தெளியலாம்.” என்ற கருத்து சிறப்புடையது.

”வள்ளலார், கூறும் செத்தார் யார் எனக் காண வேண்டும். வாழும் நாள் என்பது கடமையைப் புரியும் நாளே.அவ்வாறே, மக்களாய்ப் பிறந்தும் உணர்வின்றி ஒடுங்கி மறந்தோரையும், கருணை உணர்வின்றித் திரிவோரையும், கண்மூடிப் பழக்கங்களில் தம்மை ஆழ்த்திக் கொண்டோரையும்,செயல் மறந்து கிடப்போரையும் இறந்தார் என்று வள்ளலார் கருதினார் போலும் என்று குறித்திருப்பது ஒளவையின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும்.

ஒளவை நடராசன், சொற்களுக்குக் காணும் பொருள் நுட்பம் நம்மை வியக்கவைக்கும். படிப்பது என்பது வேறு; செய்வது என்பது வேறு என்பதை வேறுபடுத்திக் காட்டும்போது, ‘படிப்பது என்பது மனத்தில் இருப்பது; செய்வது என்பது கரத்தில் இருப்பது’ என்கிறார். அது போல, ‘கற்பனை என்பது சிந்தனைத் தெளிவைத் தருவது. வேலை பார்ப்பது என்பது செயலாற்றலை உருவாக்குவது’ என்று மணிச்சுருக்கமாக வேறுபடுத்திக் காட்டுவர்.

‘மாதவியின் ஊடல், கண்ணகியின் வாடல், கோவலனுக்கு அநீதி இழைத்த கூடல்; இம்மூன்றையும் வைத்து இளங்கோ பாடிய முதல்பாடல்; இப்படிப் பேசுவது ஔவையின் ‘மாடல்” என்று பேசி கேட்போரை என்று அறிஞர் தெ.ஞானசுந்தரம் ஒருமுறை குறிப்பிட்டார்.

ஔவை தமிழில் பெற்றிருக்கும் புகழைப் போலவே ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் அழகுறப்பேசும் பாங்கினர். அவர் மொழிபெயர்ப்புத்துறையில் இயக்குநராக இருந்த காரணத்தால் இருமொழிப் புலமையில் தேர்ச்சி பெற்றதோடு, கேட்போர் பிணிக்கும் வகையில் ஆங்கிலத்திலும் பேசும் திறனுடையவர் ஔவை.

நெல்லைக்கு பட்டமளிப்பு உரைக்காக தன் துணைவியாரோடு அவர் சென்றபோது, மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஓடி வந்து துணை நின்று மருத்துவ நிலையம் சேர்த்து, அந்நாளே மதுரை அப்பலோ மருத்துவ மனைக்கு அனுப்பிய தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தன் பெயரைக்கேற்ப வைத்திய நாதனாக இருந்தார் என்று சொல்லி அவர் கண் கலங்கியதை நான் நேரில் பார்த்தேன்.

ஓய்வறியாப் படிப்பு; உணர்வுடையோருடன் பழகி அளவுளாவுதல்; கற்றவரை மதித்துப்போற்றல்; நகைவுணர்வு மிக்க சொல்லாடலை மற்றவரோடு இனிதே பரிமாறிக்கொள்ளுதல்; தமிழ்ச்சுற்றத்தைப் பேணி வளர்த்தல்; சிரிப்பும் சிந்தனையும் கொண்டு எப்போதும் எவரிடத்தும் அளவுளாவுதல்- இப்படி ஒவ்வொரு நிலையிலும் தமிழால் தானும் உயர்ந்து, மற்றவரையும் உயர்த்திப் பல படிநிலைகளைக் கடந்து வந்து வாழ்வின் உச்சத்தைத்தொட்டவர் சுரதா மொழியில் சொன்னால், எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில் ஏற்றம்மிகக் கொண்டிடுவான் என்று கேட்டால், இதுவரைக்கும் என்றெடுத்துக் காட்ட இங்கே இவரைத்தான் நான் சுட்டிக் காட்டு கின்றேன். மதுசுரக்கும் தமிழ்ப் பேச்சால் மதியின் மாண்பால் மணி தெறிக்கும் உரை வீிச்சால் தேன் கனிந்த
அதிமதுரக் கவி போலப் பழகும் இந்த ஔவை நடராசன் என்றும் வாழ்க!

ஔவை நடராசனின் பிறந்த நாளில், www.avvainatarajan.com என்ற வலைதளத்தை ஆர்வலர்கள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேடைத் தாமரை பல்லாண்டு மிளிருமாக !

(இன்று ஔவை நடராசனின் 85-ஆவது பிறந்தநாள்)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *