POST: 2021-08-17T09:44:49+05:30

வி ஜி பி குழுமத் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் விழா – 15 8 2021

பெருமிதத்தின் பேரொளி !

அருமை அண்ணாச்சிக்குப் பெருமை சேர்க்கின்ற பிறந்தநாள் வாழ்த்துக்களை நான் மகிழ்ச்சியோடு அளிக்கிறேன்.

பெருந்தகை சந்தோசம் அண்ணாச்சி அவர்களை நான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நன்கறிவேன் .

அவருடைய பண்பு அவருடைய எளிவந்த இயல்பு, ஈகைத் திறம், ஊக்கமுடைமை, உள்ளத்தில் சிறந்து இருக்கின்ற பெருமிதத் திறம் என்று இவைகளையெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம் .

அன்பின் திலகமாகத் திகழ்கின்ற அண்ணாச்சி விஜிபி சந்தோசம் தான் பிறந்த நாள் தொடங்கி இதுவரையில் பிறர் நலம் பாராட்டுகின்ற பரிவு கொண்டவராக வாழ்கின்றார் .

திருக்குறள் நெறி பரப்புவதில் அவர் மனம் திளைத்திருக்கிறார்.

உலக நாடுகள் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் சிலைகளை வழங்கி இருப்பதோடு திருக்குறள் நெறி பரப்புவதற்காகவே தன்னுடைய வாழ்நாளை நிறைவாக வாழ்கின்றார்.

உலகத்துக்கெல்லாம் உதவவேண்டும் ,உலகத்தைத் தமிழால் உயர்த்த வேண்டும் என்கிற உயரிய குறிக்கோளோடு தம் எண்ணங்களைப் பரப்பி வருகின்ற அண்ணாச்சி அவர்களின் திருமுகத்தில் அவருடைய நடையில் அவர்கள் கைகளில் எல்லாவற்றிலும் நான் எந்தவிதமான சோர்வையும் எப்போதும் காணவில்லை .

மகிழ்ச்சி, இன்பம் ,மனவளம் என்ற பண்புகளை எல்லா நிலைகளிலும் வளர்த்து வருகின்ற செந்தமிழ்ச் செம்மல் தகைசான்ற தமிழ்க்கடல் என்று அண்ணாச்சியைப் போற்றுகிறேன் .

ஒரு பெருந்தகையாளர் என்ற வகையில் அண்ணாச்சி அவர்கள் பல்லாண்டுக் காலம் வாழ்க ! வாழ்க !

அவர் புகழ் வெல்க வெல்க என்று நான் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

வாழ்த்துகளோடு
ஒளவை நடராசன்
15 8 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *