செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 27
ஒளவை நடராசன்
தன்னை வெல்லான்
சோதிடம் பொய்யல்ல; சோதிடர்கள்தான் பொய் சொல்லி விடுகிறார்கள்” என்று ஒரு வாதம் வைக்கப்படும்.
அந்த வாதத்தை வலுப்படுத்தப் பல எடுத்துக்காட்டுகள் கூறப்படுகின்றன.
“சோதிடம், ஆரூடம் என்பவைகள் எல்லாம் ஒரு கணக்கே தவிர வேறு ஒன்றுமில்லை.
கிரகங்களின் நிலையை வைத்துக் கணிக்கப்படுபவை.
அந்தக் கணக்கில் ஓர் இம்மி தவறினாலும் சொல்வது பலிக்காமல் போய்விடும்.
பாருங்கள் பக்கத்துக் கிராமம் மிட்டாதார் இருந்தாரே; பல நூறு ஏக்கரா நிலமும் – பாங்குகளில் ஏராளப் பணமும் – பாட்டன் பூட்டன் காலத்திலேயிருந்து பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்த சொத்து; பட்டினத்துக்குக் குடிபோனார் – எப்படித்தான் எல்லாச் சொத்தும் அழிந்ததோ – இப்போது ஒரு தனியார் கம்பெனியில் எளிய வேலை பார்த்துக் குடும்பம் நடத்துகிறார்.
இப்படி நடக்குமென்றும் – அவர் சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் என்று ஆடி எல்லாவற்றையும் இழப்பார் என்றும் அவர் ஜாதகத்திலேயே முன்கூட்டியே கணிக்கப்பட்டு எழுதியும் வைக்கப் பட்டிருப்பதைத் தன்னிடமே காட்டினார்கள் என்றும், தானே அதைப் படித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன் என்றும் நாமும் நம்புகிற அளவுக்கு நம்மிடமே சொல்கிறவர்களும் உண்டு.
அந்த மிட்டாதார் வாழ்க்கை எதிர்காலப் பயன் என்ற குறுந்தலைப்பில் அத்தகைய ஏட்டில் நிகழ்வுகளை முன்கூட்டியே சங்கேத வார்த்தைகளில் குறிப்பிட்டிருக்கவும் கூடும்”
இவ்வளவையும் நான் கண்ணை மூடிக் கொண்டு இல்லையென்று மறுக்கவில்லை, மறுத்தே தீர வேண்டும் என்று வாதமில்லாமல், நான் எடுத்துவைக்கும் நியாயமான வாதமெல்லாம்; இப்படி முன்கூட்டி நம் ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை என்பதுதான் ! “அந்த மிட்டாதார்,ஆட்டங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருந்து விடலாமல்லவா ? என்று கேட்கத் தோன்றும்.
ஆனால் அது எப்படி முடியும் ? அவரது ஜாதகப்படி அவருக்குச் சூதாட்ட மோகம் ஏற்படும் என்று இருக்கும் போது; அதனால் பெரும் பொருள் இழப்பு ஏற்படும் என்று அந்த மிட்டாதார் பிறந்த நேரத்து ராசி பலன்கள், கிரக நிலைகள் எல்லாம் அழுத்தமாக வரையப்பட்டு இருக்கும்போது அந்தக் கோடு தாண்டி; அவர் செயல்பட அவரது ஜாதகம் அவரை விட்டு விடுமா ?
அவருக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் சூதாட்ட மோகம் ஏற்படும் – அதனால் பொருள் இழப்பு நேரிடும்; என்பதை முன்கூட்டியே அந்த ஜாதகம் சொல்லியிருக்குமானால் – அந்த ஜாதகப்படி இப்படிப்பட்ட ஓர் எச்சரிக்கை செய்யப்பட்டு; அவர் நல்வழியை மேற்கொண்டு தப்பித்து விடுவார் என்றும் கூறப்பட வேண்டுமல்லவா ?
அவ்வாறு தப்பித்து விடுவார் என்று ஜாதகத்திலே இருக்குமானால்; அது தானாகவே நடக்க வேண்டிய ஒன்றுதானே !
அது ஆரூடக்காரரால் முன்கூட்டி அறிவிக்கப்படவேண்டிய அவசியம் எதுவும் இல்லையல்லவா ? அப்படியானால் ஆரூடக்காரர் முன்கூட்டியே அறிவித்து; அதன்படி அந்த மிட்டாதார் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார் என்றும் அந்த ஜாதகத்தில் இருக்க வேண்டுமல்லவா? என்ற கேள்விக்கு விளக்கம் கிடைக்காமலே போய்விடுகிறதே !
தன்னை ஜாக்கிரதைப்படுத்திக் கொண்டு, மிட்டாதார், தவறான வழிக்குச் செல்லாமலே இருந்து விடுவாரேயானால் அதுவும் அந்த ஜாதகத்தில் அப்படியே இடம் பெற்றிருக்க வேண்டும்.
இடம்பெறாத நிலையில் ஜாதகம் பற்றிய நம்பகத் தன்மைக்கு ஆதாரமில்லாமலேதானே ஆகிவிடுகிறது.
நடப்பதும்; நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவதும் – நடப்பதைத் தடுப்பதும் – தடுத்ததால் நடக்காமல் இருப்பதும் ஜாதகப்படியேதான் என்றால்; பிராயச்சித்த தோஷம்’ கழித்தல்களும் விழலுக்கிறைத்த நீராக விடத்தானே செய்யும் ! அதற்காக யாரும் அலறத் தேவையில்லையே !
ஜாதகம் கூறியிருந்தால் அலட்டிக் கொள்வோமா; மாட்டோமா என்பதையம் – தானே சொல்லும். அது சொல்வதற்கு மாறாக நிகழ்ச்சி. நடந்தால் பிறகேன் ஜாதக நம்பிக்கை ?
அதே மிட்டாதார் இன்னும் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருப்பார், அதற்குள் ஒரு நாள் திடீரென மாரடைப்பால் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று ஜாதகம் கூறிவிடுமானால் நாள்தோறும், நிமிடந்தோறும் அவர் அதையே நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டுதானே இருப்பார் – நான் முதலில் குறிப்பிட்டிருப்பதுபோல ஜாதகம் நம்பிக்கைக்குரியது என்று ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும்; அதைக் கேட்டு முன்கூட்டியே தெரிந்து கொள்வதும், அதே கவலையால் உண்மையில் உடல் நலிவு ஏற்படுவதும் தேவையா ? என்று கேள்வி இப்போது விசுவரூபம் எடுக்கிறதா இல்லையா ?
எனவே நாள், நட்சத்திரம், இராகு காலம், குளிகை காலம் என்றும்; அமிர்தயோகம் – மரண யோகம் என்றும்; எந்த வீட்டில் குரு இருக்கிறான் – எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறான் – எந்த வீட்டில் சூரியன், சுக்கிரன் இருக்கிறான் என்றெல்லாம் – மூளையைக் குழப்பிக் கொண்டு ஆயுட் காலத்தில் இடையில் ஒரு பகுதியை வீணாக்காமல்; சோதிடம், ஜாதகம் என்ற நம்பிக்கைகளில் ஆழ்ந்து தேவையற்ற உணர்வு அலைகளால் இரத்த அழுத்தம் மாறுபட்டுப் பிரச்சினையாகாமல்; மூளையிருப்பது உலகில் புதுமைகளைப் படைப்பதற்காக எனவும், அதற்கேற்ப உடல் நலமும், சூழ்நிலை வளமும் அமைந்திட வேண்டுமெனவும், அந்த முறையில் தன்னை வெல்வானுக்கு, தரணியையே வெல்லும் அறிவும் ஆற்றலும் கூடிவருமெனவும் நிறைந்த நம்பிக்கையோடு வாழ்பவர்கள், ஆரூடம் ஜோதிடம் போன்றவற்றைக் கட்டிக் கொண்டு அழமாட்டார்கள் !
11-8-2005 – முரசொலி
ஆரூடம் , சோதிடம் முதலியவற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் எள்ளளவும் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்தார் ,வளர்ந்தார் ,சிறந்தார் ,
ஒப்பற்ற தலைவராக உயர்ந்தார் .
ஆரூடத்தை எவ்வளவு வலிக்காமல் ,பிறர் மனத்தை வருத்தாமல் வினா விடைகளை எழுப்பி விளக்கம் காட்டி எழுதினார் என்பதற்கு இந்தக் கட்டுரை ஓர் எடுத்துக்காட்டு .
தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்ற தொடர் தான் நாம் நினைவிற் கொள்ள வேண்டும் பொதுவாக .
நாலடியார் பாடல் விதியை வற்புறுத்தும் நம்பிக்கை கொண்டது .
துறவியரின் பாடலாயிருந்தாலும் தன்னால் முடியாதது இல்லை என்று தன்னைத் தானே நம்பி வாழவேண்டுமென்று வற்புறுத்தும் இந்தப்பாடல் உயர்நிலைப்பள்ளியில் என் ஆசிரியர் மனனம் செய்யுமாறு வலியுறுத்தினார் .
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிற்ப்பானும் தன்னை
தலையாகச் செய்வானும் தான்
இந்நிலையில் தன்னம்பிக்கை தான் வாழ்வாகும் தன்னம்பிக்கையை இழக்கும் போது மூடநம்பிக்கை தானே நம்மை முற்றுகையிடும் .
வானியல் விஞ்ஞானி நெல்லை முத்து தம் கட்டுரையில் அறிஞர் அப்துல்கலாம் குறிப்பிட்ட பகுதியும் என்னைக் கவர்ந்தது – ” சின்ன வயசில் நாம் பயிலும் பண்புகள் தானே மனிதனை உருவாக்குகிறது ” . ” நெல் போட்டால் நெல் ,புல் போட்டால் புல் தானே முளைக்கும் .ஆனால் மனிதநேயம் மட்டும் கெடாமல் வளரும் போதெல்லாம் பார்த்துக்கொள்ள வேணும் என்று வலியுறுத்துவார் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் .அகமதாபாத்தில் பிரமுக் சாமி மகாராஜாவைச் சந்தித்தார் .
அவரிடமும் ஏற்கனவே தான் வகுத்துக்கொண்ட வாழ்வின் இலக்கு – நோக்கமும் இந்தத் தங்க முக்கோணத்தினை நாடு முழுவதிலும் உருவாக்குவதே என்று கூறி நம் இதனை நான் இளமையிலேயே கனவாகக் கண்டேன் ” என்று இந்தியா 2020 நூலில் குறிப்பிடுகிறார் அப்துல் கலாம் .
‘சோதிடம் ஒரு கலை என்கிற அளவில் வேண்டுமானால் சில கணம் சிந்திக்கலாம் .
ஆனால், அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு அதை ஏற்றுக் கொள்வது என்பதில் எனக்கு அறவே உடன்பாடில்லை என்று தான் எங்கும் நினைவூட்டுவார் .
கிரகங்கள் நட்சத்திர மண்டலங்கள், துணைக்கோள்கள் பற்றியெல்லாம் கூட எப்படி மக்களுக்குக் கற்பனையாகக் கதை கட்டும் மாயை பிறந்தது ? தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எதுவுமே புரியவில்லை ‘ என்று அடிக்கடி கூறுவார் .”
குடியரசுத்தலைவர் வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அரசு அவரிடம் ‘ வேட்பு மனு தாக்கல் செய்ய நல்ல நாள் பார்த்திருந்தால், சொல்லுங்கள். அன்றைக்கே வைத்துக் கொள்வோம் ‘ என்றனர் ”
” ‘அப்படியானால் கெட்ட நாள்களும் உண்டா ? என்று திருப்பிக்கேட்டு எல்லா நாளும் எனக்கு நல்ல நாள் தான்.
பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் வருகிறது.
தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் ஓர் ஆண்டு மலர்கிறது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் வான இயல் தொடர்பானது.
சோதிட இயல் அல்ல.
இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே ‘ என்று சொல்லிவிட்டாராம்.
கவியரசர் பாரதியார்
சோதிடந்தனை இகழ்
என்றே ஆத்திசூடியில் அறிவுரை கூறினார் .
தந்தை பெரியார் , தளபதி அழகிரிசாமி ஆகியோரின் கருத்துரைகளைக் கேட்டுக்கேட்டு என்னை பகுத்தறிவாளனாக மாற்றிக்கொண்டேன் .
அந்த உணர்வு என் உதிரத்தில் ஒவ்வொரு துளியிலும் ஊறி விட்டது
.பராசக்தி படத்தில் தெறித்த அந்த நெருப்பு வரிகள் என் நெஞ்சை நாட்டுக்கும் காட்டியது என்று ஒருமுறை தலைவர் கலைஞர் குறிப்பிட்டது என்றும் மறக்கமுடியாதது .
தொடர்புக்கு
thamizhavvai @hotmail .com

Add a Comment