செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 24
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
பழமையை மறைக்கும் படலம் !
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி எழுச்சி பெற்றதும் தமிழ்நாட்டில் தமிழறிஞரிடையிலும் ஆர்வலர்களுக்கும் மாபெரும் விழிப்புணர்வு நற்பேறாய் பிறந்தது .
தமிழின் தனித்தன்மை ,சங்க இலக்கிய மாட்சி ,தமிழ் வேந்தர்களின் பெருமிதம் கழகத் தலைவர்களால் பரப்பப்பட்டன .
இளைஞர்கள் நல்லுணர்வு பெற்றனர் .
இனிய தமிழ்ச்சொற்கள் 20 ஆயிரம் சொற்கள் என்று எண்ணினால் அவை கழகத்தால் உருப்பெற்று வலுப்பெற்றன .
இந்நிலையில் வடமொழி எதிர்ப்பு ,இந்தி எதிர்ப்பு ,பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு ,மூட நம்பிக்கைகளை வேரோடு பறித்தல் ,சாதியொழிப்பு ,வேத எதிர்ப்பு முதலிய எண்ணங்கள் வீறெய்தி மலர்ந்தன .
தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ,முத்தமிழறிஞர் கலைஞர் ,நாவலர் ,பேராசிரியர் எழுப்பிய முழக்ககங்கள் – விளக்கங்களைக் கண்டு பிற்போக்காளர் அதிர்ந்தனர் என்பதை நாடு நன்கறியும் .
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ,மறைமலை அடிகள் , கா சு பிள்ளை ஊட்டிய திராவிட உணர்வுகள் செழுமைப்பட்டன .
கழகம் மெல்ல வளர்ந்து அரசியலில் வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து தமிழகத்தில் மாபெரும் மலர்ச்சியை உருவாக்கியதைத் தாங்க முடியாத நிலையில் இடது கருத்து என்று அணி வகுத்துக் கொண்டு தம் கருத்துக்களை எழுதலாயினர் .
முற்போக்கு என்று கூறிச் சிலர் இன்றும் அதே நிலையில் தொடர்ந்து வரைகின்றனர் .
புறநானூற்றை மறைக்க வந்த புழுதிக்காற்றே புறமுதுகிட்டு ஓடு ! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே , கால் பிடரியில் இடிபட ஓடு ஓடு என்ற கலைஞரின் திரைப்பட வசன வரிகள் வரலாற்றில் இருட்டடிப்பைச் செய்த ,மாற்றார்களுக்கு கூறிய மறுப்புரைகளாகும் !
முற்போக்கு ,அறிவியல் போக்கு என்ற சொற்களைப் பெய்தாலும் தனித்தமிழ் ,வடமொழி எதிர்ப்பை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்பது சிலரின் நோக்கமாகும் என்று அவர்கள் எழுதுகிறார்கள் என்பதைக் காட்டச் சில பத்திகளைச் சுட்டிக் காட்டலாம் .
தமிழ்மொழியின் பல்வேறு துறைகள் பற்றியும் நாம் பெருமையும் இறுமாப்பும் கொண்டிருக்கிறோம்.
சர்வ தேசரீதியாக நாம் அறியும் மொழியியல், இன வரலாறு சாதனைகளை நுணுக்கமாகப் பார்க்கின்றபோது நிச்சயமாக நமக்கு அயர்வும் நம்மைப் பற்றிய மறுபரிசீலனை உணர்வும் தோன்றவே செய்கிறது.
கடந்த காலத்தின் நம்மைப் பற்றிய உணர்ச்சி வசப்பட்ட மதிப்பீடுகள் என்பவை நமது மொழி, வரலாறு, துறைகள் ஆகியனவற்றை எவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடையாமல் செய்திருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.
தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் பிறதுறைகள் பற்றி ஆய்வுநெறியற்ற கத்தைகத்தையான புத்தகங்களும், கட்டுரைகளுமே நிறைய வெளியாகியுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் தவறு ஒன்றுமில்லை.
வெற்றுவிவாதங்கள், இரசனைகள், குருட்டு வழிபாடுகள் என்பனவே பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் என்பனவற்றால் நீண்டகாலம் செயலாக்கமாக இருந்து வந்திருக்கின்றன.
இவற்றை மீறி. எழுந்த நியாயமும் உண்மையும் ஆய்வு மனோபாவ்மும் கொண்ட குரல்களை ஒடுக்குவதில் மிக இழிந்த போக்குகள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.
ஆனாலும் இந்த மீறற்குரல்களே தமிழையும் தமிழியலையும் எல்லாத் துறைகளையும் ஆரோக்கியமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.
இன்றும் அவ்வழியைத் தொடர்கின்றன.
தமிழ் ஆய்வை ஒரு திருவிழாவாகவும் ஆதாரம் ஏதுமற்ற ஆய்வுகளின் புகழ்ப் பாடலாகவும் மாற்றிய காரணத்தால் நமது முன்னேற்றம் எப்போதோ முடமாக்கப்பட்டு விட்டது.
ஆய்வு நெறியின் ஆதாரமே விஞ்ஞான பூர்வமானது.
எவ்விதம் விஞ்ஞானம் உண்மையை ஆதாரபூர்வமாக ஆய்ந்து, நிரூபிக்கிறதோ, அப்படியே. செம்மையான ஆய்வு நெறியும் உண்மையைத் தேடி அதை உறுதிப் படுத்துகிறது; நிறுவுகிறது.
உணர்ச்சி வசப்பட்டு வழிபாட்டு மனோபாவத்துடன் ஆய்வுத்துறையில் நின்றவர்கள் ,விஞ்ஞான அடிப்படையில் செம்மையுற ஆய்வு செய்தவர்களை எவ்விதம் புறந்தள்ளி, தடைகளையுண்டாக்கி, இருட்டடிப்புகள் செய்தனர் என்பது இன்னமும் பூரணமாக வெளிவராத வரலாறு.
செம்மையான, கற்றுத்தேறிய இத்தகைய ஆய்வாளர்களுக்கு எதிராக இன்றளவும் – மேலே காட்டிய வெற்றுத்தனங்கள் உடையோர் கடுமையான இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள்.
இதனாலேயே தமிழும் தமிழியலும் பிற துறைகளும் முன்னேற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
பேராசிரியர்கள் வையாபுரிப்பிள்ளை, நா. வானமாமலை,க, கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்கள் தமிழின் வல்லமைக்குரிய ஆய்வுமுறைகளைச் செழுமைப்படுத்தியவர்கள், இவர்களின் வழியில் இன்றைக்கு நிறைய ஆய்வாளர்கள் உருவாகியுள்ளனர், முன்னவர்களைப் போலவே இவர்களும் பல எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையே உள்ளது.
தமிழகத்தின் அண்மைக் கால வரலாற்றில். பிராமணர் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்குப் பெரும் பங்கு ண்டு.
இதன் தொடக்கத்தைச் சோழர் காலம் தொட்டுக் காணுதல் கூடும். அக்காலத்தில் பிராமணர்களைப் போன்றே வேளாளர்களும் சமுதாயத்தின் மேல் தட்டில், சாதி ஏணிப்படியில் மேல் இடத்தைப் பெற்றிருந்தனர்.
பிரமதேயம் எனப்படும் நிலங்கள் எவ்வாறு பிராமணர்களுக்கு நிவந்தங்களாக அளிக்கப்பட்டனவோ அவ்வாறே வேளாளர்களுக்கு வெள்ளான் வகை நிலங்கள் மன்னர்களால் நிவந்தங்களாக அளிக்கப்பட்டன.
இது இவ்விரு வகுப்பினரின் மேலாண்மையைக் காட்டுகிறது.
இத்தகைய சமூக, பொருளாதார நிலை இவ்விரு சமூகத்தினரிடையே கலாச்சாரப் போட்டியையும் கருத்துப் போராட்டத்தையும் உருவாக்கியது.
தத்துவத்துறையிலும் இப் போராட்டம் வெளியாயிற்று.
நிலவுடமை முறை லலுப் பெற்றுவிட்ட பிற்காலத்தில் சைவ நூல்களும் அதனடியாக சைவ சித்தாந்தமும் தோன்றலாயின.
பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் தத்துவ விசாரணை என்பது பிராமணரின் ஏகபோகமாகத் திகழ்ந்தபோது தமிழகத்தில் வேளாளர்களும் தத்துவ விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாகவே தமிழில் சைவ சித்தாந்தம் உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இவ்விரு வகுப்பினரிடையே முரண்பாடு மேலும் முற்றியது.
அறிவு ஜீவிகளான இம்மேல் தட்டு வகுப்பினரிடையே ஆங்கில ஆட்சியில் அரசுப் பதவிகளில் அமர்வதில் கடும் போட்டி ஏற்பட்டது.
இம்முரண்பாடு பிராமணர் எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்து, நீதிக் கட்சியில் சங்கமம் ஆயிற்று.
பின்னர் ஆரிய, திராவிட இனப் பாகுபாடாகப் பரிணாமம் பெற்றது.
இவ்வியக்கத்தின் கொள்கைகளை கலாச்சார, சமய மட்டத்தில் பிரச்சாரம் செய்யும் பணியில் பல பிராமணர் அல்லாத அறிஞர்கள் – குறிப்பாக வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
அவர்களில் கா. சு. பிள்ளை , மறைமலை அடிகள், சிவராசப் பிள்ளை போன்றோர் முன்னிலை வகித்தனர்.
சமயம் மற்றும் தத்துவத்துறைகளில் பிராமண ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கோடு தமது ஆய்வுகளை இவர்கள் நடத்தினர்.
ஆனால் சைவ சமய குரவர்களாகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரின் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களில் வேதங்களையும் அந்தணர்களையும் போற்றியிருந்ததும், நெடுங் காலமாகவே அவ்வேதங்களே தத்துவங்களின் மூலநூல்கள் எனக் கருதப்பட்டு வரும் மரபும் இவ்வறிஞர்களது பணிக்கு இடைஞ்சல் ஆயிற்று.
வேறு விதமாகச் சொல்வதானால் ரிக் ,யஜுர்,சாமம் ,அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ஆரியர்களின் படைப்புகளே – என்ற உண்மையும், -: பிராமணர்களே, அவற்றின் காப்பாளர்கள் என்ற யதார்த்த நிலையும் அவர்களது நோக்கிற்கு இடையூறாக வாய்த்தது.
இத்த இடையூறைக் கடக்க முன்பு எப்போதும் இல்லாத புதுக் கொள்கைகளை நீதிக் – கட்சியின் கருத்துக்காவலர்களாகிய இந்த அறிஞர்கள் உருவாக்கினர்.
அதாவது வேதங்கள் என்றும் மறை நூல்கள் என்றும், சைவ சமய குரவர்களால் குறிப்பிடப்படுபவை வடமொழி வேதங்கள் அல்லவென்றும் வடமொழி வேதங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் வேதங்கள் தோன்றிவிட்டன என்றும் அவற்றைக் கண்ட வடமொழியாளர், தெளிவாகச் சொல்வதானால் பிராமணர்கள் அவற்றை வடமொழியில் பெயர்த்துக் கொண்டனர் என்றும் கூறத்தலைப்பட்டனர்.
அவ்வாறாயின் அத்தமிழ் வேதங்கள் இன்று உள்ளனவா என்ற வினாவிற்கு அவை கடல்கோளில் அழிந்துபோயின என்றும் அவர்கள் கூறினர்.
இக்கூற்றுகள் முற்றிலும் வரலாற்று விரோதமானவை; விஞ்ஞான பூர்வமற்றவை என அறிஞர்களால் தள்ளப்பட்டன.
என்றாலும், அவற்றின் தாக்கம் இன்று வரை தமிழக மக்களிடையே நீடித்திருக்கிறது எனின் மிகையாகாது.
இக்கட்டுரையில் இச்சித்தாந்தப் போராட்டம் குறித்து நாம் ஆராயவில்லை.
இப்போக்கின் ஆர்வலர்கள் குறிப்பாக கா.சு. பிள்ளையவர்களின் ஒரே ஒரு கருதுகோளை மட்டும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
அதாவது தமிழில் எழுதப்பட்ட வேதங்கள் அல்லது நான்மறை நூல்கள் (ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ் மூல நூல்கள் கடல் கோளில் அழிந்து போயின என்றாலும் அவற்றின் பெயர்கள் முறையே தைத்திரீயம்; பௌடிகம்,தலவாகாரம், அதர்வணம் ஆகும் என கா.சு.பிள்ளை தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நான்மறைகள் எவை என விளக்கத் திருநான் மறை விளக்கம் என்ற நூலையே கா. சு. பிள்ளை எழுதி யிக்கிறார்’.
தமது இக்கூற்றை நிரூபிக்க தொல்காப்பியத்தின் பாயிர உரையில் நச்சினார்க்கினியர் கூறியுள்ள விளக்கத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்.
தொடர்புக்கு
thamizhavvai @hotmail .com

Add a Comment