POST: 2021-10-14T09:43:20+05:30

பால இரமணியைப்

( 5 – 1 – 1957 – 10 – 10 – 2021 )

பறி கொடுத்தோமே!

எண்ணி இரண்டு வாரங்களுக்கு முன்னர் என் செயலர் பொன்னேரி பிரதாப்பிடம் அன்பொழுகப் பேசி தான் எழுதிய
“தமிழ் இலக்கிய வரலாறு” நூலில் தன் கைப்பட

“ஔவை என்னும் தமிழ் இமயத்திற்கும்,
அருள் என்னும் தமிழ்
உதயத்திற்கும்.
அன்புடன் பால.இரமணி,
20.09.2021”
என எழுதிக் கையொப்பமிட்டு அனுப்பி வைத்தார்.

அருமைத்தங்கை, ஆற்றலரசி ஆண்டாளின் அருமந்த கணவர் முனைவர் பால இரமணி –
கவிஞர், பன்முகக்கலைஞர். கட்டுரையாசிரியர், பேச்சாளர் எனப் பல்கலைக் குரிசிலாக விளங்கினார்.

ஆண்டாளைப் பற்றி நான் வினவும் போதெல்லாம் அவர் முகத்தில் பூரிப்பு பொங்கி வழியும்.

வாய் மணக்க வெற்றிலையும்
மனங் குளிரப் பிறரை வாழ்த்துவதும் அவர் இயல்பு.

என்னைப் போலவே அருளிடத்தில் பேரன்பு காட்டினார்.

மாணவர்களை, ஆர்வலர்களைத் தன் தோள் மேல் வைத்துக் கொண்டாடுவார்.

ஒப்பில்லாத மாமணி!
கொடிய கூற்றுவனுக்கும் கண் இல்லை, கிழவர்களை விட்டுவிட்டுப் பொலிந்த முகத்தோடு மிளிர்ந்த பால இரமணியையா பறிப்பது!
இந்தத் துயரத்தை தாங்க முடியவில்லை.

அருமைத் தங்கைக்கு எப்படி ஆறுதல் கூறுவது?

வரலாற்றை வரைந்த கை விழுந்து விட்டது!

துயரத்தோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *