POST: 2021-10-10T09:29:25+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 78

சிந்தை கவர்ந்த எழுத்து வேந்தர் விந்தன்

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் பொழுது கல்லூரிப் பாடத்தில் முதன்முதலாகப் பாடமாக படித்து விந்தன் எழுதிய ‘கண் திறக்குமா?’ புதினம் தான்.

வகுப்பில் படித்த புதினத்தை 1.2.1986 ஆம் ஆண்டு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரான வி.கே இராசுவின் மகன் இரவிசங்கர் (என் வகுப்புத் தோழரிடம்) இராஜாஜி அரங்கத்தின் நெடிய படிக்கட்டுகளில் நின்று கொண்டு இரவிசங்கர், செங்குட்டுவன், பிராங்கிளின், பாபு நண்பர்கள் சூழ இக்கதையை உரையரங்கமாகவே பேசிக் காட்டினேன்.

அப்பேச்சைக் கேட்ட பிறகு கரவொலி பெற்றேன்.

நண்பர் இரவிசங்கர் என்னை எழுதுமாறு வற்புறுத்தி அதனை 7.2.1986 இல் என் காதும் கண்ணும் பதிந்த கருத்துக் கோவையில் குறித்திருந்தேன்.

இந்திய நாட்டு விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் சமுதாயத்தில் புதிதாக உருவான படித்த ஆடவர், மகளிர் நடுவில் உருப்பெற்ற விவாதங்களின் தொடர் மாலையாக அமைந்த ‘கண் திறக்குமா?’ புதினத்தை நாமெல்லாம் உள்வாங்க வேண்டும்.

எனக்கு இன்றுவரை தெரியாத ஒரு பொருண்மையை இக்கதை வாயிலாக அறிகிறேன்.

காதல் திருமணங்கள் ஆபத்தை விளைவிக்கும் என்றும் பெரியவர்களின் பழைய பஞ்சாங்கம் ஒருபுறம் காதல் திருமணங்கள் ஆண் – பெண் உறவைச் செம்மைப்படுத்தும் என்னும் இளைய தலைமுறையினரின் வாதம் மற்றொருபுறம் இந்த இருநிலைகள் இக்கதையின் கருவாகும்.

கதைத்தலைவன் செல்வம், காந்தியக் கொள்கைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் செல்கிறான்.

சிறையடைப்பு முடிந்த பிறகு வந்ததும் தாயார் உயிருடன் இல்லை, தங்கை சித்ரா தாய்மாமன் வீட்டில் இருப்பது, நாடு விடுதலைக்குப் பிறகு காந்தியச் சிந்தனைகளில் வீழ்ச்சி.

செல்வத்துக்கு உறுதுணையாகச் சாந்தினி மட்டுமே. கதை நெடுக சமூகத்தைப் போலிப் படைப்பாளிகளை போலிக் கொள்கைகளைச் சாடிய வண்ணம் கதை நகருகிறது.

கதையில் என்னை கவர்ந்தது, தனியிடத்தில் ஓர் ஆடவனைச் சந்திக்கும் பெண் உடனடியாக காதல் வயப்படுகிறாள் என்னும் பழமையான சிந்தையை அடித்து நொறுக்குவது ஆகும்.

எழுத்தாளர் விந்தன் (22.09.1916 – 30.06.1975) 150 சிறுகதைகளும், 7 புதினங்களும், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், குட்டிக் கதைகள், தன்வரலாறு, திரையிசைப்பாடல், திரைக்கதை, வசனம் ‘மனிதன்’ இதழ் தொகுப்புகள் படைத்துள்ளார்.

விந்தன் நடத்திய ‘மனிதன்’ இதழில் இடம்பெற்றுள்ள சில ஆக்கங்களை நண்பர் நந்தன் மாசிலாமணியின் முயற்சியால், ‘கலைஞன்’ பதிப்பகம் வாயிலாகத் தொகுப்பாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயகாந்தன் கதைகளை முதன்முதலில் அச்சிட்டுப் புத்தகமாகத் தன் ‘புத்தகப்பூங்கா’ நிறுவனம் மூலம் வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் விந்தனாவார்.

இராஜாஜி எழுதிய ‘பஜகோவிந்தம்’ நூலுக்கு மறுப்பாக ‘பசி கோவிந்தம்’ என்ற மறுப்பு நூலை வெளியிட்டார்.

விந்தன் போலியைச் சுட்டெரிக்கும் பார்வை கொண்டவர்.

புத்தம்புது தலைமுறைகளை படம்பிடித்துக் காட்டி மனித உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஒளிந்து கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்கள் வழங்கியவர்.

உழைப்புக்கு ஏற்ற மதிப்புப் பெறவேண்டும் என்ற மக்கள் இலக்கியத்தின் அசைக்க முடியாத அச்சாணியாகவே திகழ்ந்தார்.

பாரதியைப் பின்பற்றிய விந்தனும் பழமை வாதத்தை முற்றும் எதிர்த்தார்.

‘மனிதன் மாறவில்லை’ புதினத்தில் பெரும் பேராசிரியர்களைக் கடுமையாக விமர்சித்து எழுதி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஒவ்வொரு நாவலிலுமே மெய்க்காதல் மற்றும் பொய்க்காதல் குறித்த கருத்து மோதல்கள காணப்படுகின்றன.

மெய்க்காதல் புரிவோரின் வாழ்வு திருமணத்தில் முடிகிறது.

பொய்க் காதல் புரிவோரின் வாழ்வு குறிப்பாக பெண்ணின் வாழ்வு மரணத்தில் முடிகிறது.

அவரின் கதைமாந்தர்கள் அனைவருமே சாதி, மதம், இனம் சார்ந்த எந்த அடையாளத்தையும் பெறவில்லை.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதற்கு மாற்றாக மகளிர் மானம், அறிவு, ஒழுக்கம், உயர்ந்த எண்ணம் கொண்டு வளர வேண்டும் என்று தன் கதைகளில் விந்தன் வலியுறுத்துவார்.

விந்தன் எழுதிய செந்தமிழ் நாட்டினிலே என்னும் சிறுகதை வாழும் பொழுது எழுத்தாளனைக் கண்டுகொள்ளாத சமூகம் அவர் மறைந்த பிறகு அவனையும் அவன் எழுத்துகளையும் கொண்டாடுவது குறித்த எள்ளலே !

பேரறிஞர் அண்ணாவின் மனம் கவர்ந்த எழுத்தாளர் விந்தன் ஆவார்.

எந்த சித்தாந்தமாயிருந்தாலும் சரி வாழ்க்கையை உண்மையாக உருவாக்க வேண்டும், உருக்குலைக்கக் கூடாது என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடையவர் விந்தன் ஆவார்.

“கைப் பேனாவால் காகித வயலை உழுதார்;
கீழ்த்தட்டு மாந்தருக்காக அழுதார்;
ஊருக்கு உதவாததை ஒருபோதும் எழுதார்… அவர்தான் விந்தன்’ என்பது காவியக் கவிஞர் வாலி கவி வரிகளாகும்.

எந்தையார் விந்தனை ‘அண்ணா’ என்று விளித்து மகிழ்வார்.

ஒருமுறை அவரிடம், ‘என்னண்ணா? நீங்கள் எழுதுவதெல்லாம் அப்படியே தெரிகிறதே!

உண்மை விஷயங்களையெல்லாம் எழுதுகிறீர்களே!

அவர்களுக்குத் தெரிந்து விடாதா?’ என்று கேட்பேன்.

அலட்டிக் கொள்ளாமல், அதற்கு விந்தன் ‘தெரிந்தால் தெரியட்டுமே!’ என்று கம்பீரமாகப் பதில் சொல்வார்.

என்னுடைய கருத்துக் கண்ணும் காதும் பதித்த கோவையில் எழுத்தாளர் விந்தனைப் பற்றி எந்தையார் பேசிய வரிகள்:

“வாழ்க்கையில், எந்த வாய்ப்புமில்லாமல், எரிமலையிலிருந்து ஒரு இடி இடித்துக் கொண்டு, வெடித்து, ஒரு மின்னல் வருவதுபோல், தமிழுலகத்துக்கு வந்த முதல் எழுத்தாளர் விந்தன் தான்.

யானையினுடைய நடையும், சிங்கத்துடைய பாய்ச்சலும்,
ஒரு பருந்தினுடைய சிறகுகளும் சேர்ந்தவொரு படைப்பு இருக்குமானால், அது விந்தனென்று சொல்வேன்!

அவர் எழுத்தில் கற்பனையே இல்லை.
அவர் எழுத்தும் கனவு காண்பதேயில்லை.
கண்ணில் காண்கின்ற காட்சிகளை எழுதுவதற்கு பல பேருக்கு நெஞ்சத்தில் துணிவில்லை.

துணிவோடு அதை எழுதிக் காட்டியது விந்தன்தான்.

விந்தனின் எழுத்துநடை, நடையல்ல. யாரையோ தாக்குவதற்கு வரும் படை என்பதற்கான அறிகுறி தெரியும்.

ஒரு போர்க்களத்தைத் தொடங்குவதைப்போலத் தன் எழுத்தை அவர் தொடங்கினார்.

அவர் அப்படித் தொடங்கி வழிவகுத்த அந்த நடையில்தான் ஜெயகாந்தன் வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது!

மற்றவர்களின் துன்பங்களையும், தன் துன்பங்களையும் குழைத்து-அவலங்களில் அழுத்தப்படுகிற மக்களின் குரலிலேயிருந்துதான் இலக்கியம் பிறக்கும் என்பதைக் காட்டிய பெருந்தகை விந்தன்!

இன்று வளர்ந்து வருகின்ற முற்போக்கு எழுத்தாளர்களின் இனம் முழுவதுமே, விந்தனுக்குக் கடன்பட்டது!

“தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பாய் கோவிந்தா!” என்று தெருவோரத்தில் பலர் புரண்டுகொண்டிருந்தார்கள்.

ஆனால், அந்த நேரத்தில், சமுதாயத்திலுள்ள தீராத நோய்களையெல்லாம் எழுதியாவது காட்டலாம் என்று வந்த ‘கோவிந்தன்’தான் இந்த ‘விந்தன்’ ஆவார்.

பழம்பெரும் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி ‘பூம்புகார்’ படத்தில் ஒரு பாடல் எழுதி வெளிவரவில்லை.

“என்னைப் பாருங்கள், என்னைப் பாருங்கள்”
என்று தொடங்கும் அந்தப் பாடல்,

நான்-‘கூண்டுக்கிளி’ படத்தில் இடம்பெற்ற விந்தனின் “சரியா, தப்பா” என்ற பாடலின் பாணியில்தான் எழுதினேன்! என்று விந்தனைத் தனது உந்து சக்தியாக உடுமலை நாராயணகவி குறிப்பிட்டது,

விந்தனின் பாடல் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

விந்தன் தொடர்பான நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வது நான் உடன்பட்டேன் என்பதால் மட்டுமல்ல; விந்தனுக்கு நான் பலமுறை கடன்பட்டேன் என்பதால்தான்.”

எழுத்தாளர் விந்தனின் மகன் கோ. ஜனார்த்தனன் விந்தன் நினைவு அறக்கட்டளையை உருவாக்கித் தொடர்ந்து விந்தன் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது சாலச் சிறப்பான பணியாகும்.

———————————————————

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (2)

1970-திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுத் திருவிழா;

திருச்சி வானொலி நிலைய இயக்குநர் திரு. கோபால் அவர்கள் அறைக்கூடத்திலிருந்து ஒலிபரப்பும் வழக்கத்திற்கு மாறாகத் திறந்தவெளியிலிருந்து நேரடியாக ஒலிபரப்பும் புதுமையான சிறப்பு நிகழ்ச்சியை மதுரையில் செய்திருந்தார்

தலைவர், மதுரைப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்;

இராய சொக்கலிங்கனார், திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியனார், உரைவேந்தர் ஔவை துரைசாமியார்,
திருக்குறளார் முனிசாமியார், பண்டித கந்தசாமியார்
முதலிய பன்னிருவர்;

எல்லோருக்கும் தலைப்பு ஒன்றுதான்,

‘என்னைக் கவர்ந்த குறள்’.
ஒருவருக்கு நேரம் – ஐந்து மணித்துளிகள்.

மேடையில் அமர்ந்தபடி அனைவரும் பேசினர்.

இறுதியாக எனது முறை, அவையோரின் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்த தமிழ்க்கடல், திருவாசகமணி, உரைவேந்தர், திருக்குறளார் முதலியோர் சற்றே திரும்பி, நின்ற நிலையில் பேசிக்கொண்டிருந்த என்னை அண்ணாந்து நோக்கினர்;
எனது பேச்சு முடிந்தது;
தமிழ்க்கடல் எழுந்து என்னைக் கட்டிப்பிடித்தவாறே
‘மணியின் பேச்சு, மணிப்பேச்சு, நயம்’ என்றனர்
‘மணி, காண்டாமணி’ என்றார் திருவாசகமணி; ‘

மணி .. தமிழ் மணி, அதுவும் சிவ மணி’ என்று, தமிழ், சிவம் சொல்லில் சற்றே அழுத்தம் கொடுத்துப் பெரியப்பா என்னை வாழ்த்தினார்.

திருவள்ளுவர் விழா;
மதுரைத் திருவள்ளுவர் கழகச் செயலாளர் அறநெறி யண்ணல் பழனியப்பனாரின் ஏற்பாடு.
ஒரு சிறப்புப் பட்டிமன்றம் ,

நடுவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள்.

தலைப்பு,

“திருவள்ளுவரால் பெரிதும் சிறப்பிக்கப்படுபவர் ஆடவரே மகளிரே” என்பது.

மகளிர் அணியில் நகைச்சுவை நாவலர் திருக்குறளார் முனிசாமி;

எதிரணியில் நான்.

பொழிவாளர்கள் அமர ஒரு சிறு மேடை, எதிரே தரைவிரிப்பில் பெரியப்பா ஒளவை, கலைப் புரவலர் கருமுத்து தியாகராசனார் இராதா அம்மை இணையர், பெருமளவில் அறிஞர் திரண்டிருந்தனர்.

பட்டிமன்றம் தொய்வின்றி, புலமை எள்ளல்கள், செல்லச் சிணுங்கல்கள் என அரங்கமே அதிரும் வண்ணம் ஆரவாரமாக நிறைவடைந்தது.

பெரியப்பா என்னை அழைத்துக் கலையிணையரிடம் “எங்க பையன்” என்று அறிமுகம் செய்தனர்.

கலையன்னை அவர்கள் “உங்க பேர் ஒன்றுதான் தலைப்பை ஒட்டி, கேட்கும்படியிருந்தது” என்று என்னைப் பெரிதும் பாராட்டினர்.

அருகிருந்த திருக்குறளார்

“பிரின்ஸ்பால் சிவமணி போக பிரின்ஸ்பல் பேச்சு, கெத்துப் பேச்சு, மற்றதெல்லாம் வெத்துப் பேச்சு” என்று தமக்கே உரிய பாணியில் பாராட்டினர்.

என் மூத்த மகள் மணிமேகலை இன்றுவரை செய்யும் நாள் வழிபாட்டு முறை அதற்கு மதுரைத் தாத்தா (ஔவை) அவர்கள் கற்றுக்கொடுத்தது.

ஒளவையவர்கள் கரந்தையில் வாழ்ந்த காலத்தில் அவர்களும் என் தந்தையார் கரத்தை சிவ.குப்புசாமியாரும் இணைபிரியாத இரட்டையர்கள்

முன்னவர் ‘என்னை நன்றாக இறைவன் படைத்தவன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்பதையும்,

பின்னவர் ‘என்கடன் பணி செய்து கிடப்பதே என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

இருவரும் ஒரே நேரத்தில் கரத்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றினர்.

சிவ.குப்புசாமியாருக்கு அலுவல் சுமை மிகுதி, வாய்ப்பு நேரும் போதெல்லாம் இருவரும் ஒன்றாகவே பயின்றனர்.

கருத்துப் பரிமாற்றம் கொண்டனர்.

இரவு நெடுநேரமாயின் சங்கப் பெருமன்றத்திலேயே துயின்றனர்.

ஔவையவர்களின் புலமை வாழ்க்கையில் வாரணர், பண்டாரத்தார், கரந்தையார் ஆகிய மூவரும் இன்றியமையாதவர்கள்;

அண்ணாமலைப் பல்கைக்கழகப் பத்தாண்டுப் பணியின்யின்போது உடனிருந்த அறிஞர்கள் ஆவார்கள்.

ஆனால் பெரியப்பா கரந்தையில் காலடிவைத்த நாள் தொட்டு, அவர்கள் கரந்தை விடுத்துச் சென்றபின்னரும் நட்புக்கும் அப்பால் இனிய உறவினர் எனுமளவு கரந்தையார் வாழ்நாள் முழுவதும் ஒன்றிக் கலந்த கேண்மையராகத் திகழ்ந்தனர்.

விடுமுறை நாட்களின் போது, குறிப்பாகக் காலாண்டு விடுமுறைகளில் பெரியப்பாவிடமிருந்து ஓர் அஞ்சலட்டை வரும்.

என் தந்தையாரும் செல்வார்கள், ஒரு வாரம், இரண்டு வாரம், சிலநேரம் ஒருமாதம் கூட இருந்து வருவார்கள்.

அப்பொழுதெல்லாம் ஒளவை அவர்களுடைய இலக்கியப்பணிக்குத் துணையாக இருப்பார்கள்.

அவர்கள் எழுதியதைப் படியெடுப்பார்கள், இருவரும் கலந்து பேசிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்.

‘நற்றிணை முன்னுரையில்’ கூடத்

‘தஞ்சைக் கரந்தை அருந்துணைவர் சிவ.குப்புசாமிப்பிள்ளை அவர்களுக்கு’ என்றெழுதிக் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.

அடிநாளில், ஒளவையவர்களின் மூத்தமகள் பாலகுசத்திற்கு மாப்பிள்ளையை இறுதி முடிவு செய்தது முதற்கொண்டு, பின்பு மதுரை வாழ்க்கையில் துணிமணிகள் போன்ற பிற பொருள்கள் வாங்கும் வரை அத்தனையிலும் அருந்துணைவருக்குப் பெரும் பங்குண்டு.

நட்புக்கும் அப்பால் குடும்ப உறவினர் என்று சொல்லுமளவு இத்தொடர்பு வாழும் காலம் வரை இனிதாக நீடித்தது.

என் தந்தையார் மறைந்த போது பெரியப்பாவும், பெரியம்மாவும் தஞ்சை வந்து எனக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.

அந்த நிகழ்ச்சி நெஞ்சில் நிழலாடுகின்றது.

எத்தனையோ நினைவலைகள் நெஞ்சக்கரையில் மோதுகின்றன.

இருப்பினும் அலைகள் இவ்வளவில் அமைதியுறுக!

இருபதாம் நூற்றாண்டில் வண்டமிழின் ஆய்வுப்பரப்பை வளப்படுத்தி வலுப்படுத்திய பெருமக்கள் பலருள்ளும் செம்மாந்து நிற்கும் உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்களின் வீறார்ந்த பணியை, விழுமிய பங்களிப்பை, புலமைப் பெருமிதத்தை ஆங்காங்கே தொட்டு ஓரளவு இயம்புகிறது இந்த நூல்;

விரிப்பின், ஆயிரம் பக்கக் களஞ்சியம் ஆகும்.

இன்றைய தமிழ் இளைஞர்கள் அன்றைய தமிழ்ச் சூழல் பற்றி அறிந்து கொள்வதன் வழியே அவர்களும் தமிழ் வளர்ச்சியில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் தொடர்புடைய சில செய்திகள் நூலுள்ளும், ஔவையெனும் அழகிய தமிழ்ச் சிற்பியின் உருவாக்கத்தில் பங்கு பெற்ற புரவலர் / ஆசிரியன்மார் குறிப்புக்கள் பிற்சேர்க்கையிலும் இடம்பெற்றுள்ளன.

ஒளவையவர்கள் உரையெழுதிய சங்க இலக்கியங்கள் பொறுத்தவரையில் அவற்றை முதல் நூல்களுடன் ஒப்புநோக்கி உரைநலச் சிறப்பையும், அதன் பயனையும் வெளிக்கொணர்வதில் என் சிந்தனை தனிக்கவனம் செலுத்தியிருக்கிறது.

அதற்குக் காரணம், அண்மைக்காலத்தில் அந்நூல்களைச் செம்பதிப்பு / மக்கள் பதிப்பு / மலிவுப்பதிப்பு எனக் கொணர்ந்தோருள் முதுமுனைவர் இளங்குமரனார் போன்று ஓரிருவர் தவிர, பதிப்பாசிரியர் பலரும் ஔவையவர்களின் உரைப் பெரும்பயனைக் கண்டு கொள்ளவில்லை என்பதே.

ஆதலால், இந்நூல் ஒளவையவர்களின் புலமைத்தளத்தை மையமாகக் கொண்டு,
புலமைப்பேறு,
புலமைவீச்சு,
புலமைப் பூசல்,
புலமைவளம்,
புலமை வாழ்வு

எனும் 5 தலைப்புக்களில் அவர்களுடைய தொண்டையும் தொலை நோக்கையும் ஆராய்ந்து புலப்படுத்துகிறது.

உரைவேந்தர் பற்றி நான் சொற்பொழிவாற்ற வேண்டும் என விரும்பியவர்கள் முன்னைத் துணைவேந்தர் ஔவை நடராசனார்.

ஔவையின் புலமை நலத்தைச் சிந்திக்கத் தூண்டியவர் அவர் பெயரன்-முனைவர் அருள் நடராசன் ஆவார்கள்.

“பெருமக்களின் வாழ்க்கை, அவர் புறப்படுங்காலத்துக்
கால மணல் வெளியில் விட்டுச்சென்ற கால் சுவடுகள்,
நம் வாழ்க்கையை விழுமியதாக்கலாம் என்பதை
நமக்கு நினைவூட்டுகின்றன.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *