உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – மொழிபெயர்ப்பு நாள்(30.9.2021) – குறித்து
செய்தித்தாள்களில் வந்த செய்திப்பரல்கள்
தினத்தந்தி (2.10.2021) பக்கம் – III
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நாள் விழா
சென்னை தரமணியில் நடந்தது .
சென்னை , அக்.2
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நாள் விழா நடந்தது,
இயக்குநர் செ.சரவணன் தலைமை தாங்கினார். ”
மொழியாக்க வானம் ” என்ற தலைப்பில்
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் அருள் பேசியதாவது:
தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் அறிவுரைக்கு இணங்க தலைமைச் செயலகத்தில்
வெளியிடப்படும் அரசாணைகள் அனைத்தும் தமிழிலேயே அமைவதை உறுதி செய்யும் வகையில்
மொழிபெயர்ப்பு பணி நடக்கிறது.
மொழியாக்கம் என்பது மொழி இலக்கியங்களை மட்டும் மொழிபெயர்ப்பதல்ல, மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த நாட்டின் பண்பாட்டை, புவியியல் அமைப்பை, இயற்கை வனக்காட்சியமைப்பை அறிந்து, தெரிந்து, புரிந்து மொழியாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மணவழகன், ஜானகி, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ராஜகோபாலன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வி.இரா.பவித்ரா வரவேற்றார்.
தா.சுலோசனா நன்றி கூறினார்.
தினசெய்தி(2.10.2021) பக்கம் எண் – 8
மாணவர்கள் இரு மொழி புலமையில் வல்லமை பெற வேண்டும்
மொழி பெயர்ப்புத்துறை இயக்குனர் ஔவை அருள் பேச்சு
சென்னை, அக். 2-
சென்னையில் நடந்த மொழி பெயர்ப்பு நாள் விழா வில், தமிழ்நாடு மொழி பெயர்ப்புத்துறை இயக்குனர் ஔவை அருள் பேசுகையில், “
மாணவர்கள் இரு மொழி புலமையில் வல்லமை பெற வேண்டும்” என பேசினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நாள் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் .செ. சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
மொழிபெயர்ப்பு நாளின் சிறப்பு குறித்து நோக்கவுரையாக மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர் ஒளவை அருள் ‘மொழியாக்க வானம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது :-
தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்,
‘விமான விண்வெளிப் பொறியாளர்’ என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
அவர் தலைமை தாங்கும்போது “மொழியாக்க வானம்” என்ற தலைப்பில் நான்பேசுவது பொருத்தம் என கருதுகிறேன்.
‘நிலம் அளவில் பெரியது.
நீர் தண்மையானது,
தீ உடனே படர்வது,
வளி நிலையில்லாது வீசுவது,
வான் எல்லையில்லாதது.
வானத்தின் அமைப்பு முறை எல்லையில்லாத ஆய்வுக்குரியது.
வானத்தின் நீளத்தை வட்டிலில் கொண்டு வர முயல்வது தான் மொழிபெயர்ப்பாகும்.
இன்று, உலக மொழிபெயர்ப்பு நன்னாளாகும்.
மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பொன்னாளாகும்.
விவிலிய மொழிபெயர்ப்பாளர் அருட்தந்தை ஜெரோம் நினைவாகப் பன்னாட்டு மொழிபெயர்ப்பு அமைப்பால் உலக மொழிபெயர்ப்பு நன்னாள் 1953-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நன்னாளினை 2013-ஆம் ஆண்டு முதல் தவறாமல், நடத்தி வருவது பாராட்டுக்குரிய செயலாகும்.
இருமொழிப் பயிற்சி எளிதானது இல்லை.
மூல மொழியில் தேர்ச்சி 40 விழுக்காடு என்றும் – பெயர்ப்பு மொழியில் தேர்ச்சி 60 விழுக்காடு என்று வேண்டுமானால் ஒரு கணக்கிடலாம்.
நாங்களெல்லாம் விரைவு மொழிபெயர்ப்பாளர்களாவோம்.
தலைமைச் செயலகத்தைச் சார்ந்த பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்படும் அரசாணை, அறிவிக்கை, சுற்றோட்டக்குறிப்பு, கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழியாக்கம் செய்து வருகிறோம்.
தலைமைச் செயலாளரின் அறிவுரைக்கிணங்க, தலைமைச் செயலகத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் அனைத்தும் தமிழிலேயே அமைவதை உறுதி செய்யும் வகையில் மொழிபெயர்ப்புப்பணி நிகழ்கிறது.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 16 உதவிப் பிரிவு அலுவலர்கள் தேர்வு 2013-ஆம் ஆண்டு நடைபெற்று அதில் தேர்ச்சிப் பெற்று தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுபவர்களில் ஒருவர்கூட இளங்கலை தமிழிலக்கியம் பயின்றவர்கள் இல்லை.
இதே நிலை தான் 2020-இல் தேர்விலும் நீடித்தது.
பெரும்பாலும், அறிவியல் மாணவர்கள்தான் மொழிபெயர்ப்பில் தேறியுள்ளனர்.
ஆக, இருமொழிப் பாடங்களில் இணைந்த மொழிபெயர்ப்பு இளங்கலை, முதுகலை பட்டமாக தமிழ் முதுகலை போல மொழிபெயர்ப்பு முதுகலை என்று அமைக்கலாம்.
திருக்குறளைச் சீன மொழியில் கவிஞர் யூஷி மொழிபெயர்த்த பொழுது, அவரிடம் கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், சூது போன்ற அதிகாரங்களிலுள்ள திருக்குறட்பாக்களைப் பற்றி தாய்வான் நாட்டில் நான் விளக்கிய பொழுது,
அவர் அக்குறட்பாக்களையெல்லாம் சீனமொழியில் மொழிபெயர்த்தாலும் அதன் கருப்பொருளை அவர் ஏற்க மறுத்தார்.
காரணம் புலால் நாள்தோறும் உண்பதும், மது அருந்துவதும் எங்களுக்கு அன்றாடப் பழக்கம் என்ற சொல்லி, சீனர்கள் செல்வப் பெருக்கில் சூதாட்டத்தில்தான் விஞ்சி நிற்பதும், உலகமெல்லாமுள்ள பல கேசினோஸ் (களியாட்டங்களில்) உரிமையாளர்கள் சீனர்கள்தான் என்று சொல்லி விளக்கினார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, கவிஞர் யூஷி, சைவ உணவை மட்டுமே உட்கொள்பவராக மாறிய போது, திருக்குறளை மொழிபெயர்த்த சிறப்பால் மாறி விட்டீர்களா என்ற நான் வினவியபொழுது சிரித்துக் கொண்டே, ‘பௌத்த கொள்கையின் முதிர்ச்சியால்தான் மாறினேன்’ என்று பதிலுரைத்தார்.
ஆக மொழியாக்கம் என்பது மொழி இலக்கியங்களை மட்டும் மொழிபெயர்ப்பதல்ல.
மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த நாட்டின் பண்பாட்டை,புவியியல் அமைப்பை, இயற்கை வளக் காட்சியமைப்பை அறிந்து தெரிந்து, புரிந்து மொழியாக்கம் செய்ய முற்பட வேண்டும்.
இல்லையென்றால், பாவேந்தர் எழுதிய ‘மாந்தோப்பில் மணம்’ என்ற கவிதையினை மாந்தோப்பில் நடந்த காதல் திருமணம் என்ற பொருள் புரியாமல் பொருள் மாறி மொழிபெயர்த்து விட்டோம்.
அதேபோல ‘முட்டுவன் கொல்’ என்ற சங்க இலக்கியப் பாடலை மொழியாக்கம் செய்யும் பொழுது,
தலைவி, தலைவன் வரவில்லையே என்ன செய்வேன், ஆ, ஓ, என்று கதறிய நிலையை அந்த தலைவியின் ஏக்கம் புரியாமல் பிழையாக மொழியாக்கம் செய்யப்பட்டது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சீரும் சிறப்பும் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
தங்கள் நிறுவனம் வாயிலாக பதிணென்கீழ்க்கணக்கு நூல்களை பிரெஞ்சு, செருமானியம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.
அப்போது மொழிபெயர்ப்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைத்தான் ‘கீழடி’ தகவல் ஏட்டினை உலகமொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யும் போது தொல்லியல் துறையினர் அளவுகோலாக அமைத்துக் கொண்டார்கள்.
என் எதிரில் அமர்ந்திருக்கும் பேராசிரியர் மணவழகன் நிறுவனத்தில் அமைந்துள்ள சங்க இலக்கியக் காட்சிக் கூடத்தை அமைப்பதற்கு ஒருங்கிணைத்திருந்த புலமைச் செம்மலாவார்.
சங்க இலக்கியப் பாடலில் எனக்கு ஏதாவது ஐயமென்றால் தொலைபேசியில் மணவழகனை அழைத்துத்தான் என்றும் கேட்பேன்.
உடனுக்குடன் முழுப் பாடலையும் சொல்லும் தகுதி மிகுதி வாய்ந்தவராவார்.
அவரைப்போலவே திருக்குறள் காட்சிக் கூடத்தை அமைப்பதற்கு ஒருங்கிணைத்த பேராசிரியர் ஜானகி அவர்களையும்,
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளினைப் பெருமிதமாக நடத்திக் காட்டிய பேராசிரியர் சுலோசனா அவர்களையும் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன்.
மாணவச் செல்வங்களே,
உங்களுக்கு இரு மொழி புலமையில் தேர்ச்சி தேவை.
நீங்கள் இதில் வல்லமை பெற்றவர்களாக விளங்க வேண்டும்.
இறுதி வரிசையில் அமர்ந்திருக்கும் பெரியவர் இராஜகோபாலன் வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
தலைமைச் செயலகத்தில் குறுங்காலிகமாக மொழிபெயர்ப்பாளராகத் தன்னுடைய எழுபதாம் அகவையில் பணியாற்றிய சிறப்பு வாய்ந்தவர்.
இன்றைக்குத் தன்னுடைய 76ஆம் வயதில் அரசு சார் தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி, எறும்பு தோற்கும் சுறுசுறுப்பின் சொந்தக்காரராகத் திகழ்வதை நீங்கள் அறிய வேண்டும்”
இவ்வாறு ஔவை அருள் பேசினார்.
விழாவில் முனைவர் வீ.இரா. பவித்ரா, உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வரவேற்புரை வழங்கினார்.
முனைவர் நா. சுலோசனா உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நன்றியுரை ஆற்றினார்.

Add a Comment