POST: 2021-09-16T10:00:42+05:30

தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை விளக்கக் குறிப்பு-
மானியக் கோரிக்கை எண்:46
தமிழக சட்டப்பேரவை_31.8.2021

தங்கம் தென்னரசு.

தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர்.

இயல் -2

மொழிபெயர்ப்புத் துறை

1) தோற்றமும் வளர்ச்சியும்

எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே

என்னும் நன்னூலாசிரியர் வகுத்த மரபின்படி மொழியாக்கப் பணிகளை மேற்கொண்டுவரும் தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டதாகும்.

1956-ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் முழுமையாகச் செயற்படுத்துவதில் தலைமைச் செயலகத் துறைகளுக்கு உற்ற துணையாக மொழிபெயர்ப்புப் பிரிவு திகழ்ந்து வருகிறது.

மொழியாக்கம்,
கூர்ந்தாய்வு,
ஒருமுகப்படுத்துதல்
உள்ளிட்ட மொழியாக்கத்தின் பல்வேறு படிநிலைகளைக் கைகளால் எழுதிப் பின் தட்டச்சு செய்துவந்த நிலை மாறி,

அண்மை காலத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு,

காகிதமில்லா அலுவலக நடைமுறை என்னும் மின் அலுவலக முன்முயற்சிக்கு முன்னுதாரணமாக மொழிபெயர்ப்புப் பிரிவு விளங்குகிறது.

2) மொழியாக்கப் பொருண்மைகள்

தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிடமிருந்து பெறப்படும் அரசாணை அறிவிக்கைகள்,
சுற்றோட்டக் குறிப்புகள்,
சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படும் ஏடுகள்,
பொதுக் கணக்குகள் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழுவின் தணிக்கை அறிக்கைகள்,
பொதுத் தேர்தல் தொடர்பான கையேடுகள்,
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஆண்டறிக்கைகள்,

மாநிலத் தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கைகள்,
விழிப்புப்பணி ஆணையத்தின் அறிக்கைகள் உள்ளிட்ட தலைமைச் செயலகத் துறைகள் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் ஆவணங்களும், நேர்விற்கேற்பத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு உரிய துறைகளுக்கு உடனுக்குடன் அனுப்பும் பணியைத் தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

மேலும், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் செயலகத்திலிருந்தும்,
மாண்புமிகு இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் வரப்பெறும் கடிதங்கள்
மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் செய்தி வெளியீடுகள்

உள்ளிட்ட ஏனைய மொழியாக பணிகளையும் மொழிபெயர்ப்பும் பிரிவு மேற்கொள்ள
மாண்புமிகு ஆளுநர் அவர்களின் உரை,
மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் படிக்கப்படும் நிதிநிலையறிக்கை உரை,
வெள்ளையறிக்கை
போன்றவற்றின் தமிழாக்கப் பணிகளுக்காக மொழிபெயர்ப்புப் பிரிவிலிருந்து மாற்றுப்பணி அடிப்படையில் மொழிபெயர்ப்பு அலுவலர்கள் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கம் மட்டுமல்லாது, தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகளிடமிருந்து வரப்பெறும் இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய பிறமொழி சார்ந்த மொழியாக்கங்களையும் மொழிபெயர்ப்புப் பிரிவு தன் பணியாகக் கொண்டுள்ளது.

3) மொழிபெயர்ப்பு இயக்குநரின் கூடுதல் பொறுப்புகள்

மொழிபெயர்ப்புப்பிரிவு இயக்குநர் வழக்கமான அலுவல்சார் மொழிபெயர்ப்புப் பணிகளை நெறிப்படுத்தும் பணிகளுடன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்ந்த பொருண்மைகளை அரசு நிலையில் கையாளுவதற்கு எதுவாக ஒருங்கிணைப்பாளராகவும்,

தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சிமொழித் திட்டதை முழுமையாகச் செயற்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத் துறைகளால் வெளியிடப்படும் அனைத்தும் தமிழில் அமையும் வகையில் தமிழாக்கப் பணிகளை ஒருமுகப்படுத்தும் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *