POST: 2021-09-05T10:47:03+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 74

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் பயிலும் போது என் மாமா, மருத்துவத் திலகம் நலங்கிள்ளியும், அவருடைய உடன்பிறந்தவர்களான இளங்கோ, குமார் மீஞ்சூரில் ஈழத்தைப் பற்றியும் ‘தென்மொழி’ இதழைக் குறித்தும் அவ்விதழின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்தனாரின்
(10.03.1933 – 11.06.1995) எழுச்சிக் கவிதைகளைப் பற்றியும் தொடர்ந்து பேசுவார்கள்.

முதன்முதலாக உறவினர்கள் வாயிலாக அறிந்த பாவலரேறை, பிறகு எனக்கு தமிழிலக்கியத்தில் பெரும் ஆர்வம் எழுப்பிய பேராசிரியர் கு.அரசேந்திரன்

கம்பர் பாடல்களோடு பாவலரேறு பாடல்களையும் அறிமுகம் செய்து கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் பாரதியார், பாவேந்தர் வரிகளைப் பல மாணவர்கள் எடுப்பாக சொல்லத் தொடங்குவது போல நானும்

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை
அற்றைத் தமிழ்த்தாய்
நெஞ்சில் காட்சி புரியும் வரை
எற்றைக்கும் எந்நிலையிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்,
மண்டியிட்டால் அவன்
பெற்றவர் மேல் ஐயம்,
பிறப்பின் மேல் ஐயம் எனச்
சற்றே தயக்கமின்றிச் சாற்று

என்ற வரிகளோடும் அதே போல அவருடைய தென்மொழி இதழின் கனல் வரிகளான

கெஞ்சுவதில்லை பிறர்பால்; அவர் செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சவதில்லை எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை; உலகில் எவரும் எதிர் நின்றே என்ற

தீப்பொறி வரிகளையும் உணர்ச்சியோடு சொல்லும் பொழுதே அரங்கில் கரவொலியும், பிறர் நம்மை பார்க்கும் பார்வையும் என்னைச் சிலர்க்க வைத்தன.

பிறகு அப்பாவிடம் பாவலரேறு பற்றி வினவிய பொழுது அவருடைய ஆழ்ந்த தமிழ் மரபுப் பாடல்களின் மாட்சியைக் குறித்தும் தென்மொழியின் பழைய இதழ்களின் தொகுப்பினையும் எழுத்தெண்ணி ஆழ்ந்து படிக்கச் சொன்னார்.

அப்பொழுது அப்பா பெரிதும் விரும்பும் கவிஞர் இலெனின் தங்கப்பா பாவலரேறுடைய நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்தார்.

அறிஞர் லெனின் தங்கப்பா தன்மானத் தமிழியக்கக் கடலாக வாழ்ந்தார்.

இனம், மொழி, இயற்கை, மழலையர் என அனைத்து நிலையிலும் ஒப்பற்ற கவிதைகளை வழங்கியுள்ளார்.

குயில் பாட்டை நினைந்த நிலையில் கவிஞர் தங்கப்பா எழுதிய ஆந்தைப்பாட்டு அழகும் செறிவும் உடைய உயர்ந்த பாடலாகும்.

சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆற்றலும் அவரைச் சாரும்.

பாவலரேறு மீது பரிவு இருந்தாலும் அப்பாவிற்கு
பேரறிஞர் அண்ணாவும்,
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது தான் மீதூர்ந்த ஆர்வம் இருந்தது.

பாவலரேறு அவர்களைக் கலைவாணர் அரங்கிற்கு எதிரிலுள்ள பேருந்து நிலையத்தில் ஒரிரு முறைதான் நான் பார்த்துள்ளேன்.

அவரின் தூய வெள்ளை ஆடையும், தாடியும், கவரும் முகமும் எவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாகும்.

என்மொழி என்னிமை என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன் – வரும்
புன்மொழி பழியுரை துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்
இந்தப் பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்
வளைந்தாலும் நெளிந்தாலும்
தமிழ் பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல் தான் வீழ்வேன்
தனியேளாய் நின்றாலும் என் கொள்கை மாறேன்.

என்ற பாடல் அவருடைய உரத்தை வெளிப்படுத்தும் வைர வரிகளாகும்.

பாவலரேறு சொற்கள் தேனில் தோய்த்து எடுப்பதில்லை.

இரும்பை காய்ச்சிய நெருப்புக் குழம்பில் தோய்த்துக் கொடுப்பவர்.

உயர்ந்த உண்மைப் பாவலனாக எங்கும் விளங்க வேண்டும் என்றால் பாவலரேறு பத்துத் தகுதிகளை வரையறுத்தார்.

1) நுண்ணோக்கு
2) இயற்கையீடுபாடு
3) சொல்வன்னம்
4) பாத்திறன்
5) யாப்பறிவு
6) மொழியறிவு
7) கற்பனையாற்றல்
8) மனவியல்
9) நடு நிலைமை
10) துணிவு

என்பவையாகும்.

இவைகளைக் கொண்டால் காலத்தை வெல்லலாம். மக்களின் கருத்தினை ஆட்கொள்ளலாம் என்றெழுதினார்.

பாவலரேறு அவர்களின் அறிவாண்மைப் படை கொண்டு முனைந்துழுது தென்மொழி இதழ் வாயிலாகத் தேடரிய தெளிவியக்கம், தமிழகத்தில் புரட்சிக்கால் ஊன்றி ஆள்வினையும் கொண்டது.

தென்மொழி இயக்கத்தின் வினை வேளாண்மைக்கென
மொழி – இன – நாடு தழுவிய பல்வேறு துறைகளில் அரும் பாடற் கனிகளை வீறெய்திய மாண்ட வினைத்திட்பம் பெற்ற அருந்தொண்டர்களுக்கு காலக் கொடையாகப் பொருளுரை வழங்கினார்.

“வெல்க எம் தமிழும்,
மலர்க நல்லுலகம்”

என்ற உயரிய குமகாயக் கோட்பாட்டினை வரையறுத்த எழுச்சிக் கவிஞர் தென்மொழி மட்டுமின்றி ‘தமிழ் நிலம்’, ‘தமிழ்ச்சிட்டு’ என்ற அருமையான இதழ்களையும் நடத்தி வெற்றி பெற்றார்.

“அன்புக்கு நான் அடிமை
அறிவுக்கு நான் தொழும்பன்;
தென்புக்கு நான் துணைவன்
தெளிவுக்கு நான் இளைஞன்
உண்மைக்கு நான் உறவன்
உழைப்பிற்கு நான் மறவன்
இன்பத்தில் நான் கொடைஞன்
பொய்மைக்கு நான் பகைவன்
சொல்லுக்கு நான் வினைஞன்”

என்ற இப்பாடலில் அவரின் தூயதமிழ் எண்ணத்தையும் வண்ணத்தையும் நாம் அறிந்து மகிழலாம்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவணரின் திருக்குறள் தமிழ் மரபுரைக்கு சிறப்புப் பாயிரமாக பாடிய வரி நம்மை நெகிழ வைக்கும்.

நுண்ணிய நூலறிவும்
நுண்மாண் நுழைபுலமும்
திண்ணிய கேள்வியுந் தீர்தலால் –
எண்ணிய தெய்வத்திருக்குறட்குத்
தேவநேயன் செய்நூல் உய்யக்கிடைந்த உரை
தேவ நேயன் என்னுந் தேர்ந்தமதிப் பாவாணர்
தேவத் திருக்குறட்குத் தீர்ந்தவுரை
மேவிய பின் மற்றோர் உரை செயவும் மாணுவரோ?
மாணுவரேல் கற்றோர் நகைப்பர்
கலித்து தூயவை எண்ணல் துணிவென துணிதல்
தூங்காதொரு வினை முடித்தல்
தீயவை பொறுத்தல்
தெளிவுரை கோடல் தெரியார்க்கு
அவையெடுத் துரைத்தல் ஓயவை ஈதல்,
எழுத்தறிவித்தல் இகழ்வெனப்படுவதை இழித்தல்
ஆய்வை என்னவர்க்கானவை என்றே அறைவாய் இருட்பூங்குயிலே!

என்ற பாவலரேறின் கொள்கைப்பாடல் கல்வெட்டுத் தொடர்களாகும்.

பாவலரேறு வசை பாடினாலும் தமிழினத்தின் மீது கொண்ட இரக்கத்தால் எழுதியது என்றே தமிழுலகம் இப்பாடலைப் போற்றி மகிழும்.

எனக்குத் தெரியும், இந்தத் தமிழன்
என்றைக்கும் உருப்பட மாட்டான்’ என்பது!
தனக்கும் உதவான்; தமிழ்க்கும் உதவான்!
தன்னின நன்மைக்கும் நாட்டுக்கும் உதவான்!
திருப்பம் இலாமல் சென்ற திசையிலே
தேடியும் ஒடியும் தேம்பியுந் திரிவான்!
இருப்பினும் ஒருகை பார்த்திடலாம்; – மன
எழுச்சியை அவன்பால் சேர்த்திடலாம்!
எனக்குத் தெரியும், ‘இந்தத் தமிழன்
என்றைக்கும் திருந்திட மாட்டான்’ என்பது!
மினுக்கத் தெரிந்துளான் மெலுக்காய்த் திரிவான்!
மெப்புக்கே உழைப்பான்; உப்புக்கும் அலைவான்;
காயினும் காய்வான்; நனையினும் நனைவான்!
கடுமையாய் உதைப்பார்க்கு அடிமையாய்க் கிடப்பான்
ஆயினும் ஒருகை பார்த்திடலாம்: – அவன்,
அடிமைக் குழியைத் துர்த்திடலாம்!

மொழியினை இழந்துவிட்டான் – பல
மூடப்ப ழக்கங்கள் கொண்டுவிட்டான்; வந்த
வழியினைத் துறந்துவிட்டான் – தான்
வாழ்ந்திட அடிமையாய்த் துணிந்துவிட்டான் – எனும்
பழியினை நினைத்து விட்டேன் – இப்
பாழ்மனம் எனைநொடி விடுவதில்லை – இந்த
இழிவினைத் துடைப்பதற்கே – எனை
இராப்பகல் தூண்டியே அலைக்கழிக்கும்! – வேறு
எனக்கென எதுவுமில்லை! – இந்த
இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர!

1958 ஆம் ஆண்டில் திரைப்படக்காரர் செய்யும் தமிழ்க்கெடுப்பு மக்கள் மனநலக்கெடுப்பு முதலியவற்றை விளக்கமாகக் கூறி அவர்கள் தங்கள் போக்குகளில் மாறுதலுற வேண்டுமென நீண்ட நெடிய பாடலை எழுதியது குறிப்பிடத் தகுந்தது.

ஆயினும் அந்நெடிய பாடலின் இறுதி வரிகள் நயத்தக்க வரிகளாக மிளிர்கின்றன.

ஓ ஓ! திரைப்படக்காரரே!
நல்ல கதைகளில் நாட்டஞ் செலுத்துக!
நல்ல பாடல்கள் நாட்டுக்குத் தருக!
நடிகர் நல்ல நடிப்பினை நாட்டுக!
நடிகையர் பெண்மையை நங்கையர்க்குணர்த்துக!
படப்பிடிப்பாளர் பண்பைக் காட்டுக!
படத்தின் இயக்குநர் பாடறிந்தொழுகுக!
நாட்டைத்திருத்திடும் நல்ல தொண்டினில்
நாட்டங் கொள்க நானிலம் சிறக்கவே!

பாவலரேறு பாடல்களில் வரும் அருஞ்சொற்கள் நம் எண்ணங்களை வலிமையாக்கும் தன்மையுடையன.

எஃகம் (துப்பாக்கிக்குண்டு)
அஃகம் (நீர் ஊற்று)
ஒகிஃய (இடுகிய)
கைத்துமுக்கி (கைத்துப்பாக்கி)
வேட்டெஃகம் (துப்பாக்கி)
மொய்ம்பு (வீரம்)
செறும்பு (மனச்செருக்கு)
செற்றம் (சினம்)

பாட்டுப்பத்து, கூத்துப்பத்து, இயற்பத்து பாரதிதாசன் பத்து என்று பல்சுவைப் பாடல்களை இயற்றி தமிழ் நானிலத்தை பெருமைப்படுத்திய பாவலரேறு அவர்களின் திருமகன் முனைவர் பூங்குன்றன் என்மீது அன்பும் பரிவும் பொழிவது என்னை இறும்பூது எய்த வைக்கிறது.

——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பட்டினப்பாலை

சோழன் கரிகால் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.

பாலைத்திணைப் பாடல்.

செலவழுங்குதல்- தலைவியைப் பிரிந்து செல்லுதலைக் கைவிடல்

துறை. தலைவன், பொருள் வயிற்பிரிவு காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். ஆனால், தலைவியின்பாலுள்ள மிகுபற்றின் காரணமாக அவன் நெஞ்சமோ அவளைப் பிரிய மறுக்கிறது.

‘அருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
பெரும்பாழ் செய்து மமையான்; மருங்கற
மலையகழ் குவனே; கடல்தூர்க் குவனே;
வான்வீழ்க் குவனே; வளிமாற் றுவனெனத்
தான்முன்னிய துறைபோகலின்,
பல்லொளியர் பணிபொடுங்க,
தொல்லரு வாளர் தொழில்கேட்ப,
வடவர் வாடக் குடவர் கூம்பத்,
தென்னவன் திறல்கெடச் சீறி
பொன்றொடிப் புதல்வ ரோடி யாடவும்,
முற்றிழை மகளில் முகிழ்முலை திளைப்பவும்,
செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூண்
அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க் கோங்கிய
வேலினும் வெய்ய கானமவன்
கோலினுந் தண்ணிய தடமென் றோளே!’

மிகச்சிறந்த காவல்மதிலை உடைய ஊரின் அழகை, அழித்துப் பெரும்பாழ்ப் படுத்தியும் அமையாதவன்;

பக்கச்சாரல் அழியுமாறு பெருமலையை அகழ்ந்தழிப்பவன்;

பெருங்கடலைத் தூர்க்கும் திறமையாளன்;

வானமண்டலத்தையே தரைமட்டமாக்குபவன்;

குணதிசை, குடதிசை, வடதிசை, தென்றிசை எனும் திக்குகளிலிருந்து வீசும் காற்றுகளையும் திசைமாறச் செய்பவன்;

இவ்வாறெல்லாம் கரிகால் பெருவளத்தான், தான் நினைத்தவற்றையெல்லாம் செய்துமுடிக்கும் ஆற்றலாளன்.

அனைத்திலும் துறைபோனவன்.

பல்வேறுபட்ட மேன்மக்களும் அடங்கவும், தொல்குடிப் பெருமக்களும் ஆணை கேட்கவும், தாயத்தாரோடு போரிட்டும் சினமடங்காத திருமாவளவன்,

வடபுலத்தார் வாட்டமுறவும், குடபுலத்தார் உள்ளம் குமுறவும், தென்னவனாகிய பாண்டியனும் தன் வலிமை குன்றவும் விளங்கினான்.

இத்தகு ஆற்றலுடையவக், பகைவர்மீது செலுத்திய வேலைக்காட்டிலும் கொடியது, தலைவியைப் பிரிந்துசெல்லும் சுரம்.

ஆனால், தலைவியின் தோள்களோ, வளவனது செங்கோலினும் தண்மையானவை.

மலைபடுகடாம்

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்,
பன்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்சேய் நன்னனைப் பாடியது.

இவன், வேளிர் குலத்தைச் சார்ந்தவன்.

இந்நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் கூறுவதுண்டு.

பல்குன்றக் கோட்டம் என்பது, தொண்டை நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்று.

செங்கண்மா என்பது, செங்கண்மான் எனவும், செங்கமா எனவும் தற்காலத்தில் வழங்கும். நவிரமலை, நன்னனுக்குரியது.

இம்மலையும் இக்காலத்தில், திரிசூலகிரி, பருவதமலை என்றெல்லாம் வழங்கப்படுவது.

இவனுடைய நாட்டில் ஓடிய சேயாறு, இக்காலத்தில், சண்முகநதி என வழங்கப்படுகிறது.

இவனுடைய காலத்தில், பரணர், மாங்குடி மருதனார், மாமூலனார், பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் போன்றோர் இருந்தனர்.

நன்னன்சேய் நன்னனிடம் இருந்து, பரிசில்பெற்றுத் திரும்பும் கூத்தன், பாணரோடும் விறலியரோடும் பலவகை வாத்தியங்களையும் சுமந்துகொண்டு, வறுமைத்துன்பத்தால் வள்ளலை நாடிச்செல்லும் கூத்தன் ஒருவனைக்கண்டு, ஆற்றுப்படுத்துவது.

அதன் காரணமாக இந்நூல், ‘கூத்தராற்றுப்படை’ எனவும் வழங்கப்படுகிறது.

மதுரைக்காஞ்சிக்கு அடுத்த நிலையில் பாவடிகளைக் கொண்டது.

மதுரைக்காஞ்சி, 782 அடிகள்; மலைபடுகடாம், 583 அடிகள்.

கடாம்-ஓசை. இங்கு, மலையோசைகளின் தொகுதி.

‘துறைபல முற்றிய பைதீர் பாணரோடு,
உயர்ந்தோங்கு பெருமலை ஊறில் றேறலின்,
மதந்தபு ஞமலி நாவி னன்ன,
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொள் தோகையின் கதுப்பிகுத் தசைஇ,
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து
இலங்குவளை விறலியர், நின்புறஞ் சுற்றக்
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்
புறைகால் கழீஇய மணல்வார் புறவில்,
புலம்விட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுள ரொக்கல் தலைவ!
தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடல்படர்ந் தாஅங்கு,
யாமவண் நின்றும் வருதும்; நீயிரும்
கனிபொழி கானம் கிளையொ டுணீஇய,
துளைபறை நிவக்கும் புள்ளினம் மானப்
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழில்முலை வாங்கமைத் திரள்தோள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்கஙந துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப்
புதுநிறை வந்த புனலஞ் சாயல்
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
வில்நவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறி ராயின் பொழுதெதிர்ந்த
புள்ளினிர் மன்ற, எற்றாக் குறுதலின்,
ஆற்றி னளவு மசையுநற் புலமும்,
வீற்றுவளஞ் சுரக்குமவன் நாடுபடு வல்சியும்,
மலையுஞ் சோலையும் மாபுகல் கானமும்,
தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப்
பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கு மவனீகை மாரியும்,
இகழுநர்ப் பிணிக்கு மாற்றலும், புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு,
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்குமவன் நாண்மகி ழிருக்கையும்,
நல்லோர் குழீஇய நாநவி லவையத்து,
வல்லா ராயினும் புறம்மறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி,
நல்லிதி னியக்குமவன் சுற்றத் தொழுக்கமும்’

பரல்கள் நிறைந்த சுரவழியில் நடந்துவரும் களைப்பால், நாயின் நாப்போன்ற மருண்ட கண்களையும், வளையணிந்த கைகளையும், மயிலின் தோகைபோன்ற அழகிய கூந்தலையும் உடைய விறலியருடன் செல்லும் கூத்தனிடம், பரிசில் பெற்று வரும் கூத்தன் பேசுகிறான்.

‘ஆறானது கடலை நோக்கி விரைவது போல, நாங்களும் நன்னனிடம் சென்று, பரிசில் பெற்றுத் திரும்பி வருகிறோம். நீங்களும் பழுமரத்தை நாடிச்செல்லும் பறவைகளைப் போல், அவனிடம் செல்லுங்கள்.

கற்புடை மகளிர் கணவனாகிய அவன், போர்க்களத்தில் மாற்றலரை வெல்லும் வீரமுடையவன்; ஆனால், பாடியும் ஆடியும் பரிசில் பெறவரும் பாணர், விறலியர் ஆகியோர்முன், உள்ளத்தால் உவந்து தருவதில் ஈரமுடையவன்.

உள்ளத்தில் தீமையைப் போக்குவான்; நன்மையைத் தேக்குவான். அவனுடைய கைகளோ, படைக்கலன் ஏந்துகையில் வீரத்தையும், பரிசில் வழங்குகையில் ஈரத்தையுடம் உடையன.

அவனிடம் சென்றால், செல்வங்கள் அனைத்தையும் பெற்று மகிழலாம்.

நன்னன்சேய் நன்னன், பெருங்கொடையாளன்;
நிலைத்த புகழுடையவன்.

அவன் பெற்றுள்ள அனைத்துச் செல்வங்களையும், பாடும் புலவர்க்கும், பாணர்க்கும், விறலியர்க்கும் வரையாது வாரி வழங்குபவன்.

கேளாரும் அவனுடைய ஆற்றலைப் புகழ்ந்து பேசுவர்.

பாடுவோர்க்கு நாட்டுரிமையையும் தரும் பண்புடையவன்.

ஆன்றோரும் சான்றோரும் மிக்கிருப்பது, அவனுடைய அவைக்களம்.

புலவர் சிலர், அவனது புலமையை மறைப்பினும், அத்தகையோரையும் பாராட்டிப் பரிசில் தரும் பண்பாளன்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *