பெருந்தகைப் பேரொளி துரைமுருகன் !
பெருந்தகை துரைமுருகன் அவர்களை நான் மாணவப் பருவத்திலேயே கண்டு மகிழ்ந்திருக்கிறேன் .
பச்சையப்பர் கல்லூரியில் மேடைத் திலகமாக அனைத்துக் கல்லூரிப் போட்டிகளிலும் வென்று நின்றவர் .
சிவந்த மேனியும், சிரித்த முகமும் கொண்ட அவரை மாணவருலகம் பெரிதும் மதித்துப் போற்றியது .
கல்லூரிப் படிப்பை முடித்துக் கழகத்தின் கொள்கைச் சுடராக மிளிர்ந்தார் .
நண்பர் முரசொலி செல்வம் ,
மறைந்த வழக்கறிஞர் நல்லியண்ணன்
சூழ அவரைப் பலமுறை கண்டு பழகினேன் .
எவரிடமும் எள்ளளவும் பகை பாராட்டாத பரந்த மனம் , முத்தமிழ்க்கலைஞரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார் .
கலைஞரைப் போலவே அவர் கையெழுத்தும் அமைந்தது
.கட்சித்தலைவர்கள் எப்படிப் பேசுவார்கள் ,அவர்களைப் போலவே பேசிக்காட்டுவதைத் தலைவர் கலைஞர் கேட்டு நகைத்து மகிழ்ந்ததை இப்போது எண்ணிப் பார்க்கிறேன் .
ஒரு முறை காட்பாடி நான் சென்று போது என் மாமனார் வீட்டுக்குச் சென்று வாருங்கள் என்று பரிவோடு கூறினார் .
என் துணைவியாரோடு அங்கு விருந்துண்டதை நினைத்து உருகுகிறேன் .
அன்பில் கலந்த அருமைத் துணைவியார் – நாடாளுமன்ற உறுப்பினர் – பண்பும் பெருமையும் கொண்ட கதிர் ஆனந்த் , சீரிய குடும்பத்தின் ஒளிச்சுடர்களாக அமைந்துள்ளனர் .
திறமையைக்கண்டு போற்றும் அவர் செயலுக்கு ஒரு சான்று கூறுவதென்றால்
மறைந்த வார்தைச்சித்தர் வலம்புரி ஜானை வளர்த்ததோடு அந்த இளம் வயதிலேயே அவருக்கு மாநிலங்களின் மேலவை உறுப்பினராக வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ,வேறொருவரும் செய்ய முடியாது .
கலைஞர் ஒரு சொல் மறுப்புக் கூறாது துரைமுருகன் அவர்களின் பேச்சைக் கேட்பார் .
பெருந்தகை துரைமுருகனைப் புரட்சித்தலைவர் தன் மக்களைப் போல் கருதினார் .
ஆனால் பெருந்தகையின் உயிர் முத்தமிழ்க்கலைஞர் உயிரோடும் – உணர்வோடும் ஒட்டியிருந்தன .
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழ்க்கலைஞர் ஆருயிர் இளவல் துரைமுருகனின் சட்டமன்றத்தில் ஐம்பது ஆண்டுகள் மக்கள் பணி செய்த பொன்விழாவை நெகிழ்ந்து பாராட்டியது – தமிழகமே மகிழ்ந்து பாராட்டுவதாகும் .
ஒப்பற்ற திலகமாக ஒளிவீசும் பெருந்தகை துரைமுருகன் பல்லாண்டு வாழ்க !
ஒளவை நடராசன்

Add a Comment