முரசொலி 2.8.2021
பக்கம் 7
சட்டமன்றச் சாதனை ஒரு பொன்னேடு
இந்நாள்(2.8.2021) ஒரு பொன்னாள்… சட்டமன்ற வரலாற்றில் இந்நாள் ஒரு நன்னாள் ஆகும்.
பாரதக் குடியரசுத் தலைவர் அவர்கள் இன்று(2.8.2021) சட்டப்பேரவையில் 25 ஆண்டுகளுக்கு மேல் முதலமைச்சர் ஆகவும் 50 ஆண்டுகளுக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் அமர்ந்து அலங்கரித்த அத்தாணி மண்டபம் தான் இன்றைய சட்டப் பேரவை வளாகம் .
இந்த அரங்கத்தில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ படத் திறப்பு நிகழ்கிறது.
மாண்புமிகு முதலமைச்சரின் அன்பழைப்பை விரைந்து ஏற்று இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கு மேதகு குடியரசுத் தலைவர் வந்திருப்பது பொன்ணேட்டில் பொறிக்கத்தகுந்த வைர வரிகளாகும்.
புயலாக, தென்றலாக, பூமலையாக அவர் ஆற்றிய உரைகள் அச்சு வடிவத்தில் எட்டுத்தொகையாக வெளிவந்துள்ளது.
சலியாத உழைப்பின் திலகமாக சண்முகநாதன் அவர்களை நாடு நன்றியோடு என்றும் நினைவு கூறும்.
எழுத்துப்பேச்சு எண்ணித் துணிந்த செயல், ஆர்வம் ,ஆட்சி நடத்திய பெருமிதம் கடமை உணர்ச்சியில் திளைத்த கண்ணியச் செயல்களை வடிவம் …கடும் கோபத்தையும் தவிர்த்துக் கொண்டு கண்ணென கணைகளை எதிர்க்கொண்ட கட்டுப்பாட்டின் பீடும் பெருமையும் இந்த உரைகளில் ஒளி வீசுகின்றன.
எந்தக் கேள்விக்கும் அந்த கணமே மறு மொழி கூறிய மதி நுட்ப மாட்சியை கண்டு நாடே வியந்தது.
ஒரு நாளும் சட்டமன்றம் வர அவர் தவறியதில்லை.
எப்போதுப் பேசினாலும் குறிப்பெடுத்து வைத்திருப்பார்.
மேடையில் பேசுவது வேறு ,சட்டமன்றத்தில் வாதடுபவர்களை எதிர் கொள்ளும் நுணுக்கமான பேச்சு என்பது வேறு என்று எப்போதும் கூறுவார்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவைப் பற்றி உருக்கமாக பேசிய உரையின் ஒரு பகுதி எவர் நினைவை விட்டும் நீங்காதவையாகும்….
சென்ற ஆண்டு இதே நாளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் அடையாறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிக்கப் பெற்று மருத்துவ நிபுணர்கள் அவர் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்து அந்த நம்பிக்கையின் அடிப்படையிலே இந்த மாமன்றத்தில் இந்த நேரத்திலே நாம் கூடியிருந்தோம்.
ஆனால் அந்த நம்பிக்கை வீணாகும் அளவுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார்கள் (1969)என்பதும் அவர்களுக்குப் பிறகு இந்த ஆட்சி பொறுப்பை மிகச் சாமனியர்களாகிய நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்பதையும் இந்தப் பேரவை அறியும்.
ஏறத்தாழ இந்த ஓராண்டுக் காலமாக இன்னும் நான்கைந்து நாட்கள் நிறைவேறினால் ஓராண்டு முடிந்து விடக் கூடிய இந்தக் காலத்தில் இந்த அரசு பல வெற்றிகரமான சாதனகளைச் செய்திருக்கிறது.
மக்களுடைய அன்பைப் பெற்றிருக்கிறது என்றால் ஏதோ முதலமைச்சராக இருக்கிற நானோ அல்லது அமைச்சரவையில் உள்ள நண்பர்களோ அல்லது ஆளுங்கட்சியில் இருக்கும் நாங்கள் மாத்திரம் தான் காரணம் என்று பெருமையடித்துக் கொள்ள விரும்பவில்லை….
எல்லா கட்சித் தலைவர்களின் நல்லெண்ணத்தோடு இந்த ஒராண்டுக் காலமாக அறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு தமிழகத்திலே ஒரு நல்ல அமைதியும் மற்ற மாநிலத்துக் காரர்கள் பார்த்து வியந்து பாராட்டத் தக்க ஒரு நிலைமையும் உருவாக்கியிருக்கிறோம் என்றால் அந்த வெற்றியில் எங்களுக்கு மாத்திரம் பங்கு இல்லை …
இந்த மாமன்றத்திலிருக்கின்ற அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை நான் இங்கே மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் உரையின் மீது விவாதத்தின் முடிவுரையிலே மட்டும் நான் பேசுகின்ற பேச்சு இது என்று கருத வேண்டாம்…
கடந்த 2,3 தினங்களுக்கு முன்பு வேறு சில மாநிலங்களிலே சுற்றுப் பிரயாணம் செய்த நேரத்திலே அங்கு மற்ற மாநிலங்கள் உள்ள அரசியல் மேதைகளெல்லாம் தமிழகத்திலுள்ள அமைதியும் தமிழகத்தில் நடைபெறுகின்ற நல்லாட்சியும் குறித்துப் பாராட்டுத் தெரிவித்து யாராவது பேசு வார்களையேனால் அதற்குப் பதில் அளிக்கும் நேரத்தில் இந்தப் பெருமைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரம் உரியது அல்ல…
இந்தப் பெருமைக்கு தமிழ் நாட்டிலே இருக்கி்ற எல்லாக் எதிர்க்கட்சிகளும் தருகின்ற ஒத்துழைப்பு தான் அந்த அமைதிக்குக் காரணம் இந்த பெருமைக்கு அவர்களும் காரணம் என்று மிகுந்த பெருந்தன்மையுடனும் தன்னடக்கத்துடனும் அறிஞர் அண்ணா அவர்கள் கற்றுத் தந்த அந்தப் பாடத்தின்படி என்று சொல்லி வந்திருக்கிறேன்.
அதைத் தான் இன்றைக்கும் சொல்கிறேன்.
ஒளவை நடராசன்

Add a Comment