POST: 2021-07-18T10:28:21+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 67

மராட்டிய மதிவாணர் காண்டேகர் என்ற கதைப்புதையல்

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

அப்பாவின் நூலக அடுக்குகளில் உடற்பயிற்சிக்கு நிற்கும் காளையர் போல நூல்கள் அடுக்கடுக்காக அணிவகுத்து இருக்கும்.

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலுங்கால் பல நூலாசிரியர்களைப் படிப்படியாக அப்பா அறிமுகம் செய்து படிக்கச் சொன்னார்.

அவ்வண்ணம் சமுதாயத்தில் உள்ள மனிதர்களுக்கு வாழ்வின் இன்ப துன்பங்களைக் கதைப்போக்கில் சுவைக் குன்றாமல் நெஞ்சில் நிறுத்தும் வல்லமை வாய்ந்த மராட்டியக் கதை மன்னர் காண்டேகரின் தமிழாக்கப் புதினங்களைப் படித்துப்பார் அருள் என்றவுடன்

காண்டேகர் (11.01.1898 – 02.09.1976) எழுதி கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழாக்கம் செய்த புதினங்களான
கண்ணீர், அமுதக் கொடி, யயாதி, இரு துருவங்கள், புயலும் படகும், வெண்முகில், கருகிய மொட்டு.

அக்காலங்களில் திலீபன் என்ற விடுதலைப் போராளியின் பெயர் இதழ்களில் வெளிவந்தபோது அப்பா என்னைக் ‘கிரௌஞ்சவதம் படி. அதில் திலீபன் என்ற புரட்சிப் பாத்திரம் வரும்’ என்றதால், அதனை நுணுகிப் படித்து 6.2.1986-ல் என் கருத்துக்கோவையில் குறித்த பகுதிகளில் சில:-

“குழந்தை உலகம் எத்தனை அழகியது.
அதிலுள்ள கண்ணீர் பனித்துளி போலவும் ஆவல்கள் பல நிறம் பூப்பறவைகள் போலவும் மகிழ்ச்சி பவளமல்லிகை போலவும் இருக்கின்றன.”

“காலம் கடந்து எப்போதும் முன்னால் ஓடுகிறது, ஆனால் மனம் மட்டும் ஏதாவது பழைய பிரியமான இடத்தில் குழம்பி நிற்கிறது.”

“மனிதரை விலக்குவது எளிது, மனிதருடன் கூடுவது கடினம்.”

“சுகத்தை எப்போதும் தனியாக நுகராதே, துயரத்தை எப்போதும் பங்கிடாதே.”

“கல்லூரிப் பெண்களின் வம்பளப்பு என்பது கால்பந்து விளையாட்டு போல ஓடிப்போய் உதைத்துப் பந்தைத் தொலைவில் உயரப் பறக்க விடுவது போல சொற் சித்திரங்களால் உயர உயரக் களிக்கிறார்கள்.”

“பக்தி என்பது காதலின் அடுத்தபடி, வாழ்வு என்பது பரந்த கடல், பலவகை விந்தைகள் நிரம்பியது எவ்வளவு அழகோ அவ்வளவு பயங்கரம், ஆனால் அதற்கு இக்கரையும் அக்கரையும் இல்லை.”

“இந்தக் கடலில் மனிதனுக்கு உணவாக மீன்கள் ஏராளமாக உள்ளன.
அதனை உணவாகக் கொள்ளக் கூடிய திமிங்கலங்களும் கொஞ்சம் நஞ்சமாக இல்லை.”

“அமுதக் கொடியில் வரும் நந்தா தன் இளநெஞ்சப் புயலை நோட்டில் குறித்து வைத்திருப்பேன்.
அந்த நோட்டுப் புத்தகமே அவளின் உயிர்த் தோழி போலும்.”

“குழந்தையின் பிடிவாதம். பெண்ணின் பிடிவாதம், அரசனுடைய பிடிவாதம் இந்த மூன்று பிடிவாதங்கள் உலகத்திலே பிரசித்தமானவை.

ஆனால் கணவருடைய பிடிவாதம் என்பது இந்த மூன்று பிடிவாதங்களும் சேர்த்துப் பிடித்த உருண்டையாகும்.”

“இளமை என்பது முன்யோசனை இல்லாமல் நியாயத்தீர்ப்பு பெறுவது மிக ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய நாடகம்.”

“எந்தப் புரட்சியும் கண்ணீரினாலே நடப்பதில்லை, எந்த புரட்சிக்கும் பிடித்தமான நைவேத்தியம் ஒன்றே ஒன்றுதான் அதாவது அன்பர்களின் ரத்தம்.”

“எலுமிச்சைப்பழ ஊறுகாய் பழகப்பழகப் புளிப்பும் இனிப்பும் கலந்து ருசியாக இருக்கும்.

வாழ்க்கையின் பழைய ஞாபகங்களும் அதைப்போலவே சுவை நிரம்பியவை.”

“வாழ்க்கை என்பது பூஞ்சோலை அல்ல அது போர்க்களம்.”

“மனிதன் மனிதனாகவே பிறந்து விடுவதில்லை .
உலகம் அவனை மனிதனாக்குகிறது.”

“வாழ்க்கை என்பது சாதாரண போர்க்களம் அல்ல.

இந்த போர்க்களத்தில் எதிரிகளோடு மட்டும் போராடினால் போதாது.

நண்பர்களுக்கு எதிராகவும் வாளை உருவ வேண்டும்.

இது மட்டுமல்ல சமயம் வந்தால் நம்மோடு நாமே போராடவும் வேண்டும்.”

“தென்னை மரத்துக்கும் கிளை இல்லை, பூ இல்லை, அடர்ந்த நிழல் இல்லை, ஒன்றும் இல்லை.

ஆனால் அதன் தலையில் தொங்கும் நீரை உடைத்தால் அமுத வெள்ளம் பெருகும்.”

“அரசியலில் ஒட்டாமல் இருக்கும் மாணவர்கள் மெழுகுப் பொம்மைகள்.

புத்தகப் படிப்பில் உழலும் கிளிப்பிள்ளைகள்.”

“வறுமையிலும் மென் முறுவல் மறையக்கூடாது .

என்ன துன்பம் நேர்ந்தாலும் இலட்சியத்திலிருந்து வழுவக்கூடாது.”

“கலை என்பது கடந்த காலத்தின் கன்னிகை, நிகழ்காலத்தின் மனைவி, வருங்காலத்தில் தாய்.”

“மனிதன் கனவுகளினால் வாழ்கிறான்.

இலட்சியத்தால் வாழ்கிறான்.

சோற்றைப் போலவே நம்பிக்கையும் அவனுக்கு இன்றியமையாத தேவையாகும்.”

“கம்யூனிசமும் காந்தியியமும் நுட்பமாகப் பார்த்தால் அவை ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பவை.

கம்யூனிசம் உலகை ஒரு தகப்பனுடைய கண்ணோடு பார்க்கிறது,

காந்தியியம் தாயின் கண்ணோடு பார்க்கிறது.

கம்யூனிஸம் புது உலகைப் படைக்க விரும்புகிறது.

காந்தியியம் புதிய மனிதர்களைப் படைக்க விரும்புகிறது.”

“சிதைந்த கனவின் துணுக்குகளைத் தழுவிக்கொண்டு சோர்ந்து கிடப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை.

வெறுமே கடந்த காலம் என்ற இரும்புச் சங்கிலி கொண்டு மனத்தை இறுகக் கட்டி வைக்க முடியாது.”

சமுதாயத்தில் வாழ்கின்ற மனித இனத்தில் உள்ள இன்ப துன்பங்களை கதைப் போக்கிலே சுவை குன்றாமல் எழுதும் வல்லமை வாய்ந்தவர் மதிவாணர் காண்டேகர்.

அவரின் இலக்கியங்கள் காலத்தால் அழியக் கூடியது அல்ல.

இலட்சியவாதியான சிறந்த எழுத்தாளர்.

தம் இளம் வயதிலேயே இலக்கிய வாயிலாகச் சமூகத்தை உயர்த்த முடியும் என்ற வேட்கையில் மராட்டிய மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர், காண்டேகர்

இலக்கியத்தைத் தமிழ்நாட்டில் ஊறவைத்துப் பரப்பிய பெருமை அல்லயன்சு நிறுவனத்திற்கும், கலைமகள் இதழுக்கும் மட்டுமே உண்டு.

காண்டேகரின் மணிமொழிகளை அப்பாவும் அவரின் நண்பர்களும் மனப்பாடமாகச் சொல்வார்கள் என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு.

காண்டேகரின் கதைகள் துன்புற்ற மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒப்பற்ற துணிவைத் தந்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற ஊக்கமளித்தது.

கோலாப்பூரிலுள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் காண்டேகரின் அருங்காட்சியகம் உள்ளது.

அவருடைய நூல்கள், விருதுகள், ஒளிப்படங்கள் அங்கு அணிசெய்வது பெருமிதமாக உள்ளது.

தமிழ்நாட்டின் காண்டேகர் என்று பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட கா. ஸ்ரீ. ஸ்ரீநிவாசாரியர் (15.12.1913 – 28.07.1999)

தமிழ், வடமொழி, இந்தி, மராட்டியம், ஆங்கிலம் அறிந்த வல்வவர்.

இந்தி பிரச்சார சபையிலும், கலைமகள் இதழிலும் பணியாற்றிய பெருந்தகையாவார்.

மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.

தன்னுடைய 24வது வயதில் இந்தி இதழான ‘அம்சு’ல் காண்டேகர் சிறுகதைகளைப் படித்துத் தமிழில் மொழியாக்கம் செய்ய ஆர்வப்பட்டதால் தினமணி மலரில் சகோரமும் சாதகமும் என்ற காண்டேகரின் கதையின் மொழியாக்கம் வெளிவந்தது.

பிறகு அவரின் கதைகளை வெளியிட்டு வந்தாலும்

பேரறிஞர் அண்ணா தான் நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் காண்டேகரின் நூல்களைப் பற்றி கருத்தோவியம் வரைந்த பிறகு அரசியல் தொண்டர்களிடையே காண்டேகர் கதைகள் செல்வாக்குப் பெற்றன.

காண்டேகர் ஞானபீட விருது பெற்ற போது, விருதுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னது மொழிபெயர்ப்பு உலகிற்குப் பெரும் பேறாகும்.

“வருங்காலம் என்ற கருடச் சிறகும் மனத்துக்குப் பெரு வரமாகும்.”

“மனோரஞ்சிதம் தாமரைக்குளத்தில் மிக மெல்லிய இதழ்களைக் கொண்டது போன்ற எளிய நடை.”

அண்ணல் காந்தியடிகளுக்குத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தியில் மொழிபெயர்த்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.ஐச் சாரும்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை,

மின்சார இரயில் வண்டியை இழுத்துச் செல்வது போல மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்பது கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மேற்கோளாகும்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்ப்புகளால் எனக்குத் தற்கால இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னது மொழிபெயர்ப்பு உலகிற்கு வாய்த்த வைர மகுடமாகும்.

காண்டேகரும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் ஒருவரையொருவர் கண்டதில்லை என்பார்கள்.

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு நம் நினைவுக்கு வருகிறது.

ஒருவர் எழுத்தே திருமுகம் என்றே குறிப்பிடலாம்.

மராத்தியத்தை விடத் தமிழகத்தில் என் பெயர் செல்வாக்குப் பெற்றது என்று காண்டேகர் பெருமிதமாகக் கூறினாராம்.

“கண்களை விளக்காக்குகிறாள். கைகளைக் கட்டிலாக்கினாள்.
தன் இரத்தத்தைப் பாடலாக்கினாள். இவளை வெறும் தாய் என்ற சொல்லால் அடக்க முடியவில்லை”

என்ற மராட்டிய மதிவாணர் காண்டேகரின் கதைப் புதையல் வரிகள் கல்வெட்டுத் தொடர்களாக எந்நாளும் மின்னுகின்றன.

தொடருக்குத் தொடர் இயல்பான உவமைகளை எளிமைக்கு எளிமையாக எழுதிக் காட்டிய கலை வித்தகம் காண்டேகருக்குக் கைவந்த கலையாகும்.

அக்கதையின் உள்ளுணர்வுகளை தன் நெஞ்சில் கலந்து பொருத்தமான வைர வரிகளோடு மொழிபெயர்த்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மட்டுமே சாரும்.

—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

பொருநராற்றுப்படை தொடர்ச்சி…

கரிகால் வளவன் கரிகாலன் சோழ நாட்டு முடி மன்னன்;
இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; செங்கோலன்; தண்ணளியன்; பகைவரிடத்து முருகனது சீற்றம் போலும் சீற்றமுடையவன்.
இவன் பிறக்க வேண்டிய காலத்தே பிறவாமல் நல்ல பொழுது வருமளவும் தாயின் வயிற்றிலேயேயிருந்து பின்னர்ப் பிறந்து அதனாலே அரசவுரிமையடைந்தவனென்பர்.

“உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்

முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்

தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி.’

இவன் இளமைப்பருவத்திலேயே கூற்றுவன் போல வலிமையிற் சிறந்து விளங்கினான்.
பால் குடிக்கும் பருவத்திலேயே, இரை வேட்டைக்குச் சென்ற சிங்கக்குட்டி போல வெண்ணில் என்ற இடத்தில் சேர பாண்டியராகிய இரு பெரு வேந்தரையும் ஒரு களத்தே பொருது வீழ்த்தினான்.

ஒருசமயம் தம்முள் மாறுபட்ட இருவர், தமக்கு முறை வேண்டி இவ்வரசர் பெருமானது அவையிற் புகுந்தனர்;

இவனது இளமை கண்டு, தம் மாறுபாட்டைத் தீர்க்க இவ்விளை யோன் வல்லவனோவென ஐயுற்றனர்.

கரிகாலன் அவரது ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்து நரை முடித்து முதுமைக் கோலத்துடன் தோன்றி முறை வழங்கினான்.

“முதியோர் அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்”

என்ற தொடரால் கூறப்படுகின்றது. இவ்வரலாற்றை,

“உரை முடிவு காணான் இளமையோன் என்ற

நரைமுது மக்கள் உவப்ப-நரை முடித்துச்

சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை

கல்லாமற் பாகம் படும்.” என்னும் பழமொழிப் பாடல் தெரிவிக்கின்றது.

அவன் ஆண்ட சோழ நாடு நிறைந்த வளமுடையது.

ஒரு மாநிலத்திற்கு ஒன்றாக மேடுகளெங்கும் நெற்கூடுகள் திகழ்வதை ஆங்குக் காணலாம்

உழவர்கள் தென்னைமரச் சோலையில் குடியிருப்பர்.

உழத்தியர் கடற்கரை மணலில் வண்டல் (மணல் விளையாட்டு) விளையாடுவர்.

மருதநிலக் காக்கைகள் குருதி பெய்த சோற்றைக் குறைவிலாது உண்டு, பசித்தபோது தின்பதற்கென நொச்சியின் நிழலில் நெய்தல் நில ஆமைக்குட்டிகளை மறைத்து வைக்கும்.

பாகற் பழமும் பலாமரச் சுளையும் தின்ற மயிற்பெடைகள் காஞ்சி மரத்திலும் மருத மரத்திலும் இருந்து ஆரவாரிக்கும்.

ஆண்மயில்கள் வண்டுகளின் ஓசை கேட்டு மருதநிலத்தை விட்டு நெய்தல் நிலத்து உலர் மணலிலே சென்று தோகை விரித்து ஆடும்.

மருதமும் அடும்பும் பகன்றையும் புன்கும் ஞாழலும் ஏனைய மரங்களும் திரண்டு வளர்ந்திருக்கும்.

அவ்விடத்து வாழ்வார் கரும்பையும் நெல்லையும் அறுக்கின்ற களமருடைய ஓசையை வெறுத்ததால் முல்லை நிலத்தே சென்று விரும்பியுறைவர்.

முல்லை நிலத்தே தளவும் தோன்றிய யாழினையும் கொன்றையும் காயாவும் செழித்து மலர்ந்திருக்கின்றன. அங்கு வசிப்பவர் அவ்விடத்தை வெறுப்பின் மருத நிலத்தே சென்று அதனைப் புகழ்ந்து அங்கே தங்குவர்.

நெய்தல் நிலத்தே கடல் மீனைத் தின்று, புன்னைக் கிளையில் தங்கிய நாரைகள் அலையோசையை வெறுத்து மலையில் சென்று தங்கும். நெய்தல் நில ஊர்களான பாக்கங்களில் தெங்கும் வாழையும் காந்தளும் சுர புன்னையும் பேராந்தைகளும் உள்ளன.

அங்கு வாழும் பரதவர் அவ் வாழ்வை வெறுத்துக் குறிஞ்சி நிலத்தே சென்று தங்குவர்.

கானவர் மருதம் பாடுவர். பரதவர் குறிஞ்சி பாடுவர்.

தேனும் கிழங்கும் விற்பவர் மீனின் நெய்யும் கள்ளும் பண்டமாற்றாகப் பெறுவர்.

கரும்பும் அவலும் கொடுத்தவர் மான்தசையும் கள்ளும் கொண்டு போவர்.

குறிஞ்சிக் குறவர் நெய்தற் பூக்களைச் சூடுவர்.

காட்டுக் கோழிகள் நெல்லைக் கவர்ந்து தின்னும்.

மருதக் கோழிகள் தினைக்கதிரைக் கவரும். மலைக்குரங்கு கழியிலே மூழ்கும்.

இவ்வகையில் நால்வகை நிலங்களும் அடுத்தடுத்து அச்சோழ வள நாட்டிலே நெருங்கி வளப்பமாயிருக்கின்றன.

பகலவன் வெம்மையால் கஞ்சங்குல்லை தீய்ந்தன; மரக்கிளைகள் கரிந்தன; மலையிடத்து அருவிகள் இல்லையாயின;
மேகம் கடல் நீரை முகந்து பெய்யவில்லை;
இங்ஙனம் வறண்ட காலத்தும் காவிரியாறு பெருக்கெடுத்து வருகின்றது;

நறைக்கொடி, நரந்தப்புல், அகில், சந்தனம் இவற்றைத் துறைகள் தோறும் தள்ளிக் கொண்டு செல்கின்றது;

நுரையைச் சுமந்து போகின்றது, ஆரவாரத்துடன் குளத்திலும் கோட்டத்திலும் கமழ்கின்றது.

பெண்கள் அவ்விடங்களில் குடைந்து குடைந்து விளையாடுகின்றனர்.

அக் காவிரி தனது நீரைப் பாய்ச்சுவதால் ஒருவேலி நிலத்தில் ஆயிரங்கலமாகச் பெருகி விளைகின்றது.

இது காவிரியின் சிறப்பாகும்.

உன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண் மாற

சொல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்

குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்

அருவி மாமலை நிழத்தவும் மற்றக்

கருவி வானம் கடற்கோள் மறப்பவும்

பெருவ ற னாகிய பண்பில் காலையும்

நரையும் நரந்தமும் அகிலும் ஆரமும்

துறை துறை தோறும் பொறையு திர்த் தொழுகி

நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுந்தொறும்

புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து

சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்

குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை

கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்

சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட் டாகக்

காவிரி புரக்கும் நாடுகிழ வோனே.”

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail. Com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *