POST: 2021-06-28T09:22:57+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !
பகுதி – 7

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

பேராசிரியர் காட்டிய பேரொளி !

நான் பச்சையப்பர் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதுகலை படித்தேன் .

முதலிரண்டு ஆண்டுகளில் பேராசிரியர் எங்களுக்கு இலக்கியப் பாடம் நடத்தினார் .

அப்போதே நாடு புகழும் பெருமகனாராக பேரறிஞர் அண்ணாவின் தோழராக கழகத்தின் தலைவராக மிளிர்ந்தார்..

பேராசிரியர் கனிவுடையவரே தவிர வகுப்பில் கண்டிப்பும் – அதட்டலும் கொண்டவர் .

அவர் வகுப்பென்றால் எல்லோருக்கும் ஒரு நடுக்கம் .

பதினொரு மணியளவில் பச்சையப்பர் வளாகத்தைச் சுற்றி வரும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் கிருஷ்ணமுர்த்தி எங்கள் வகுப்பறைப் பக்கம் செல்லும் போது பேராசிரியரைப் பார்த்துப் பணிவாக வணக்கம் சொல்வார் .

பேராசிரியரைச் சுற்றி அப்படியொரு புகழ் வட்டம் நிலையாக இருந்தது .

கலித்தொகைப் பாடல்களை நடத்தியதாக நினைவு .

பாடலை விளக்குவதற்கு எங்களில் ஒருவரை எழுந்து பாடலைப்படி என்பார் .

படிக்கும் போது சீர் பிரிக்கத் தெரியாமல் விழித்தபடி நின்றால் நீ எதற்குத் தமிழ் படிக்க வந்தாய் என்ற வசை பிறக்கும் .

மேலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கட்சிச் சொற்பொழிவாற்றி விட்டு விடியலில் தான் வீடு திரும்பியிருப்பார் .

அப்போதே அவருக்குக் களைப்பிருந்தது .

எங்களுக்கு அப்போதே இயக்க உணர்வு ஊட்டப்பட்டிருந்ததால் அவரைப் பார்த்தால் போதும் என்ற நிறைவில் மகிழ்ந்திருந்தோம்.

அருவி போலத் தடையில்லாமல் பேசுவார் .

நான் இப்படிச் சிந்தித்துப் பழக்கப்பட்டவன் .

என் கருத்து இது .நீங்கள் ஏற்கவில்லை என்றால் எனக்குக் கவலையில்லை என்று தமக்கே உரிய கருத்துக்களை ஆராய்ந்து பேசுவார் .

கழகக் கூட்டமானாலும் ,கல்லூரி அரங்கானாலும் அவரிடம் ஒரே போக்கு தான் .

நாடாளுமன்ற உறுப்பினராக ,
சட்டப்பேரவை உறுப்பினராகப்
புகழ் பொலிந்த பல்துறைகளில் தமிழக அமைச்சராகப் பெருமதிப்போடு விளங்கினார் .

ஒருமுறை நான் இராமலிங்கர் பணிமன்றத்தில் வள்ளலாரைப்பற்றி உரையாற்ற அவரை அழைத்தேன்.

நான் மீன்வளத்துறைக்கு இப்போது அமைச்சர் .

நான் வள்ளலாரைப் பற்றிப் பேசுவது பொருத்தமாயிருக்காது .நான் வரமாட்டேன் என்றார் .

கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வந்து பேசும் போது முந்தைய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார் .

நான் இறைச்சி உண்பதில்லை ,எப்படியோ சில ஆண்டுகள் பழகிவிட்டேன் .இப்போது அப்படியில்லை நிறுத்தி விடுவேன் ,”

சொல்வது போலச் செய்ய வேண்டும் .செய்வதைத் தான் சொல்ல வேண்டும் ” என்ற அண்ணாவின் தொடரில் தொடங்கி வள்ளலாரின் பொதுநெறி பற்றிப் பால் போலத் தேன்போல நல்லுரையாற்றினார் .

பேராசிரியர் பேருரைகள் சில நூல்களாக வந்தன

.மேலை நாட்டறிஞர்கள் தமிழ் வளர்த்த திறத்தைச் சிறப்பாகக் குறிப்பிடுவார் .

பேராசிரியரின் தந்தையார் பகுத்தறிவுப் பழம் .தன் தளர்ந்த முதுமையில் திருக்குறளுக்கு உரை வரைந்தார் .

எனக்குப் பேராசிரியரின் இளவல் அறிவழகன் இனிய நண்பரானார் .

பேராசிரியர் கு திருமாறன் என்னைப் பரிவுடன் வினவுவார் .

பேராசிரியர் குடும்பத்தினரோடு என் தந்தையார் பெரிதும் பழகியவர் .

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என் தந்தையார் இருந்ததால் அப்போது நான் உயர்நிலைப்பள்ளியில் மாணவன் ,

நாவலர் பேராசிரியருக்கு அடுத்த அணியைச்சார்ந்த இளந்தலைவர்

கடலூர்
இளம்வழுதி .கார்மேனியநாயகனாக கவரும் முடியழகும் நடையழகும் கொண்ட கொள்கை வீரர்

இளம்வழுதி அவர்களை அண்ணா கருப்பு இளவரசன் என்று கனிவோடு அழைப்பாராம் .

தலைமுறை தலைமுறையாகத் தழைத்துச் செழித்துவரும் தன்மான இயக்கத்தின் தி மு க வின் அடலேறாகத் திகழ்ந்தார்

.இளம்வழுதி என்னும் தண்டபாணி அவர்களை பார்த்ததும் – பழகியதும் என் நினைவில் மங்கலாக உள்ளன .

என் விழிக்கு விருந்தாகத் தந்தையின் தனிப்புகழையும் சுமந்து இப்போது கழகத்தின் தானை மறவராக தனிப்புகழோடு விளங்குகிறார் வழக்கறிஞர் திரு புகழேந்தி .

வழக்கறிஞர் புகழேந்தி மழலையாகத் தவழ்ந்த போதே கலைஞர் இல்லத்தில் ஆடி ஓடி விளையாடியவர் .

1989,1996,2001 ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராக ஒளி வீசியவர்

.பல்வேறு நிலைகளில் உயர்வு பெற்று மாணவரணிச் செயலாளராக அருந்தொண்டுகள் ஆற்றினார் .

அயராத முயற்சியோடு ,ஆர்வம் ததும்பக் ” கல்வி நிலையங்களில் கலைஞர் ” என்ற தலைப்பில் இரு தொகுதிகளை இணையற்ற கருவூலமாகத் தொகுத்து வழங்கியுள்ளார் .

இரண்டு தொகுதிகளிலும் கலைஞர் ஆற்றிய 161 உரைகள் இடம் பெற்றுள்ளன .

இந்த இமயப்பணியை தோளில் சுமந்த வழக்கறிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

நன்றிப்பெருக்கோடு தன் அன்னையாரையும் , துணைவியாரையும் குறிப்பிட்டு ,அறிஞர் பலர் தொகுக்கும் பணிக்குத் துணை நின்றதை நெகிழ்வோடு உருகி எழுதியுள்ளார் .

இத்தொகுப்பால் புகழோங்கிய பெருமையைப் புகழேந்தி பெற்றுள்ளார் .

இந்தத் தொகுதியின் வாழ்த்துரையை மாண்புமிகு முதலமைச்சர் அன்றே நுணுக்கமாக வழங்கிப் பாராட்டியுள்ளார் .

இந்த அரிய தொகுதிகளை வனப்பாக வெளியிட்ட பெருமை என் இனிய நண்பரான சீதை பதிப்பகத்தின் நிறுவனர் பதிப்புச் செம்மல் ராஜசேகர் அவர்களையே சாரும் .

இந்த வரலாற்றுப் பேழைக்கு முகப்பினை உருவாக்கிய தனிப்பெருமை இதழ்ப்போராளியாக எந்நாளும் தலை நிமிர்ந்து நிற்கும் அருமைச் சோதரர் நக்கீரன் கோபாலின் கலைவண்ணமாகும்.

நக்கீரனின் பன்முக ஆற்றலில் இப்படி வடிவமைக்கும் ஆற்றலும் உண்டு என்பதை அறிந்து வியந்தேன் .

இத்தொகுதியில் பேராசிரியர் எழுதிய அணிந்துரை ஒப்பற்றது

.கலைஞரின் வாழ்வியலை போற்றிப்புகழும் பொன்னுரையாக வரலாற்றின் வைரவரிகளாக ஒளிர்கின்றன

.அணிந்துரையின் அருமையும் – பெருமையும் அழியாப் புகழ் கொண்டதாக இக்கட்டுரை நிலை நிறுத்தும் .அனைவரும் படித்து மகிழ அணிந்துரையை இனிக் காணலாம் .

தன்மான இயக்கத் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையில் ஆர்வம் கொண்ட மாணவராய்த் தொடங்கி, பேரறிஞர் அண்ணாவின் இனமொழி மறுமலர்ச்சி இலட்சியப் பணியில் ஈடுபட்ட இளைஞராய் வளர்ந்து, தமது எழுதுகோலின் திறன்காட்டிக் கலையுலகில் பகுத்தறிவுச் சிந்தனையைப் படரவிட்டு வெற்றி நடை போட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராய் உயர்ந்து, அதன் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி, அறிஞர் அண்ணாவுடன் தமிழகச் சட்டமன்றத்திலும் அமர்ந்து, மாற்றாரும் மதித்திடும் வகையில் தமது கொள்கைகளை எடுத்துக் கூறி, கழகம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆளுங்கட்சியாக உயர்ந்தபோது, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணாவுடன் ஓர் அமைச்சராகச் செயற்பட்டு, நாடே துக்கத்தில் ஆழ்ந்திடுமாறு அண்ணா இயற்கை எய்திய அந்தச் சூழலில், அண்ணா விட்டுச் சென்ற கடமையை ஏற்று, கழகத்தை வழிநடத்தும் பொறுப்புச் சுமையைத் தாங்கி, அண்ணா வழியில் அயராது உழைப்பவராய்ப் பற்பல தேர்தல்களையும் சந்தித்து, ஆளுங்கட்சி முதல்வராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ அமர்ந்து ஜனநாயகக் கடமையாற்றி, இன்று ஐந்தாவது முறையாகத் தமிழக முதல்வராக அமர்ந்திடும் அளவுக்குச் சிறப்புமிகு வரலாறு படைத்துள்ள ஓர் அருந்திறல் ஆற்றலாளர், நடுவண் அரசின் வழிகாட்டியாக விளங்கும் விற்பன்னர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதனை இன்றைய இந்தியத் திருநாடே நன்கறியும்.

கலைஞர், பல துறையிலும் பரிமளிக்கும் அறிவாற்றல் மிக்கவராதலின் ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணையற்ற தலைவராக; தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையினால் அந்த அவையில் ஆற்றிய பணிக்குப் பொன்விழா கண்டவராக; கலைத் துறையில் கால்பதித்த சிறப்பினால் அத்துறையில் மணிவிழாக் கண்ட கலை உலகத் தந்தையாக; எழுத்துலகில், கொள்கை பரப்பும் நாளேடு நடத்துவதில் ஈடுபட்டுப் பவளவிழாக் கண்ட தனிப் பெரும் தகுதி வாய்ந்த வராக; இந்திய அரசியலை, ஜனநாயகத்தைக் காத்திடுமாறு உருவாக்கும் தலைவர்களுள் ஒரு மூதறிஞராக விளங்குபவர் முத்துவேலர் கருணாநிதி.

தமிழ் எழுத்துக்கும், சொல்லுக்கும், தமிழ்மொழி மரபுவழிப்பட்ட பொருளுக்கும் தொன்னாளிலேயே இலக்கணம் கண்டவர்

ஒல்காப்புகழ் தொல்காப்பியர் எனில், அந்த எழுத்தும், சொல்லும், மரபுவழிப் பொருளும் கலைஞரின் எழுதுகோலில் குடிபுகுந்து அவர் தீட்டும் செம்மொழிச் சித்திரங்களின் வண்ணமாகி, அவற்றை எழில்மிக்கவை ஆக்குகின்றன.

அய்யன் திருவள்ளுவரின் சிந்தனைச் சுடர்மணிகளாக ஒளிரும் குறள் வெண்பாக்களில், ஓரெழுத்தையோ, சொல்லையோ மாற்றுவதற்குச் சிறிதும் இடமளிக்காது, தோடுகளில் பதிந்த மரகத மணிகளைப் போன்று பொருள் பொதிந்த அசையும், சீரும் தளையுமாகப் பிணைக்கப்பட்டுள்ளது போன்றே, கலைஞர் இயற்றும் தமிழ்ப்படைப்பு எதுவாயினும் அவற்றில் கையாளும் சொல்லும், பொருளும் ஓர்ந்து பொருள் பொதிந்த நடையிலேதான் அவர் தம் எண்ணங்களை வடித் தெடுப்பார்.

அவர் எழுதும் புதினங்களிலேயே எந்த ஒரு சொல்லும் தேவையற்றதாக இடம்பெறாது எனில், அவரது கவிதையும், கட்டுரையும், உரையாடலுமே செறிவான நடையினால் திட்டவட்டமான வடிவமைப்புக் கொண்டிருப்பது வியப்பன்று.

எழுத்தைப் போன்றே, பேச்சிலும் வல்லவர் கலைஞர்.

மேடைப் பேச்சில் மட்டுமின்றி, உரையாடலிலும் நகைச்சுவை ததும்ப நகையாட வல்லவர்.

இடம் பொருள் ஏவல் அறியாமலோ, அவையின் தகுதி அறியாமலோ, பொருள் தெளியாமலோ, சொல்லினைத் தேறாமலோ, அவரும் மேடை ஏறமாட்டார், அவரது செம்மொழிச் செந்நாவும் சுழலாது.

பொதுக்கூட்ட மேடையோ, பல்கலைக் கழகப் பட்டமளிப்பு மண்டபமோ, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டமோ, ஓர் அமைப்பின் நிருவாக ஆலோசனைக் கருத்தரங்கமோ எதுவெனினும், தமது பேச்சினை அவர் எண்ணிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்ளாமல் ஒருபோதும் பேசியதில்லை .

“அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் ”

என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது அவரது பேச்சு.

அவர் மேடை ஏறத் தலைப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவர் இடம்பெறாத அவையுமில்லை; மேடை ஏறி நின்று பேசாத மன்றமுமில்லை.

அவர் சிந்தனையில் தவழாத பொருளுமில்லை; தம் பேச்சினால் வெல்லாத கூட்டமும் இல்லை.

வெல்லும் சொல் தேர்ந்து, பேசும் இலக்கியப் புலமையில் வல்ல கலைஞரின் எந்தச் சொல்லும் வீண் போனதில்லை.

மாற்றார் பயன்படுத்தும் ஒரு சொல்லினைக் கொண்டே மாற்றாரை மடக்குவதில் அவருக்கு எவரும் ஈடில்லை .

செவிமடுப்பவர்க் கெல்லாம் வற்றாத கேள்விச் செல்வமாவது அவரது பேச்சு.

அது பின்னரும் எழுத்து வடிவில் ஏடாகிக் காலமெல்லாம் படிப்போரின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தும் சிறப்புடையதாய் இலங்கும் பெற்றியதாம்.

இளமை முதல் அவர் படிக்கும் ஏடு எதுவெனினும், அதில் இடம்பெறும் சொல்லாட்சியையும், சொல் பயன்பாட்டு முறையால் எழும் பொருள் வேறுபாட்டையும் நுனித்தறிந்து நினைவில் நிறுத்துபவராதலின், வாய்ப்பு அமையும் வழி சொற்சிலம்பம் நிகழ்த்தி, தம்முடன் அரங்கேறிப் பங்கேற்கும் புலமையுடையார் பலரையுமே வியப்புறச் செய்யும் வித்தகர் அவர்.

அவரது தேர்ந்த புலமையும், உரையாடல் வல்லமையும், நகைச் சுவை வித்தகமும் கொள்கை மாறுபட்ட புலவர்களையுங்கூட அவர்பால் ஈர்த்துள்ளன. “

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்” என்னும் திருக்குறள் குறித்திடும் சொல்லின் சிறப்பும் இதுவே !

ஒருமுறை, ஆன்மிக ஈடுபாடுடைய பெரியவர் ஒருவர், ‘கடவுள் நம்பிக்கை எல்லோருக்குமே இருக்க வேண்டும்’ என்று பேசியபோது, அதற்கு விடையாகும் வகையில் கலைஞர் சொன்னார், ‘

என்னைப் பொறுத்தவரையில், நமக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பது முக்கியமல்ல. கடவுள் நம்மை நம்புமாறு நாம் நடந்துகொள்கிறோமா என்பதுதான் முக்கியம்’ என்றார்.

ஒரு நாத்திகரின் இந்த வாதத்தை எந்த ஆத்திகரால்தான் மறுத்துப் பேசமுடியும் ?

சட்டமன்ற விவாதங்களில் பங்கேற்றபோது மதிநுட்பத்துடன் கலைஞர் கூறிய விடைகள் பல,

அவையோரையே நகைச் சுவையில் மூழ்கச் செய்துள்ளன.

அத்தகு சிந்தனைத் திறனும், புலமை வளமும், நினைவாற்றலும், கற்பனை ஊறும் கவி நெஞ்சமும் கொண்ட கலைஞர், அறுபது ஆண்டுகட்கும் மேலாக ஆற்றிவந்த இலக்கிய வளமும், உவமை அழகும், கருத்தாழமும் செறிந்த சொற்பொழிவுகளே “ கல்வி நிலையங்களில் கலைஞர் ” என்னும் இந்த நூலாக, அதன் இரு பகுதிகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது.

பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு தலைப்புகளில் அவர் ஆற்றியுள்ள இந்த உரைகளே, அவற்றின் பொருளாலும், விளக்கத்தாலும், நடை நலத்தாலும், ஓசை நயத்தாலும் ”

தமிழுக்கு அமுதென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ”
என்று புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாடுவதற்குத் தமிழ்மொழி ஏதுவானதற்குரிய நியாயத்தை உணர்த்தும்.

கலைஞரின் பேச்சு இளமைக்கு விருந்து, முதுமைக்கு மருந்து. உயிர் வாழ்வதற்கு உணவு, உடல் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்து.தமது உரைகள் மூலம் கலைஞர் உணர்த்தும் உண்மைகள் பல நமது உள்ளத்தில் உறைந்திட வேண்டியவையாம் என்று அவர் கூறுகிறார்.

தந்தை பெரியார் என்னும் அரும்பெருந் தலைவர் உண்மையிலேயே புரட்சியை உருவாக்கிய தலைவர்.

அந்தத்
தலைவருடைய காலடி பட்ட மண்; அந்தத் தலைவருடைய குரல் ஒலித்த மண்; அந்தத் தலைவர் பிறந்த மண்; அந்த மண்ணிலே நின்றுகொண்டு நான் உங்களுக்குச் சொல்லுகின்ற செய்தி, சமுதாயத்திலே நாம் எந்த அளவுக்குத் தாழ்ந்து கிடக்கின்றோம் என்பதை எண்ணிப் பாருங்கள் என்பதுதான்.

பொருளாதாரம் என்ற மாளிகைக்கு அதன்மீது அழகு ஒளியைச் சிந்திக் கொண்டிருக்கின்ற வைரக் கலசங்களுக்குப் பாதுகாப்பும் வலிவும் அளிக்க வேண்டுமேயானால், சமுதாயச் சீர்திருத்தம் என்கின்ற அடித்தளம் இருந்தால்தான் பொருளாதாரம் – அரசியல் என்கின்ற இரண்டும் அதன் மீது நிலைக்க முடியும்.

இதைத்தான் பெரியார் அவர்கள் அழுத்தந் திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள்.

இன்றைக்குத் தந்தை பெரியாருடைய புகழை அல்ல; அறிவை – ஆற்றலை – அவர் கொண்டிருந்த துணிவை – அவர் சண்ட மாருதமாகச் சீறிச் சாதி மத வேறுபாட்டையெல்லாம், களையத் துடித்த அந்தத் தூய செயலை இன்றைக்கு உலகமே போற்றிக்கொண்டிருக்கிறது.

“ நீ புழுவல்ல; பூச்சியல்ல; நீயும் மனிதன்தான்; பிறருக்கு மண்டியிடத் தேவையில்லை, நிமிர்ந்து நட ! ” என்று தந்தை பெரியார் கூறியது மாத்திரமல்ல; அவ்வழி நடந்தும் காட்டியவர்
அவர்.

* “தமிழ் இனத்தை வாழவைப்பது; திராவிடச் சமுதாயத்தை வாழவைப்பது! இந்தச் சமுதாயத்திலே உள்ள மூடநம்பிக்கை களை முழுமையாக ஒழிப்பது” என்பதே அவரது குறிக்கோள். அவ்வழியில் வந்தவர்களே அறிஞர் அண்ணாவும், அதே வழிவந்த நானும்.

* “பகுத்தறிவு வாதம் என்பது, அடிப்படை உண்மைகளை நெறிகளை மறப்பதாகாது; எதையும் காரணங் கண்டு, ஆராய்ந்த உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்”.

“தமிழைப் படிப்பது தேவை; அதைவிடத் தமிழில் படிப்பது மிக மிகத் தேவை. அது தமிழ்நாட்டின் எல்லாவகையான எதிர்கால வளர்ச்சிக்கும் தேவை”.

எதையும் ஆராய்ந்து, தெளிந்து உண்மை கண்ட பின்னரே உலகோர்க்கு உரைக்கும் ஒரு நெறியைப் பின்பற்றியவர் கலைஞர்.

தெளிவில்லாத பேச்சோ, தேவையற்ற சொல்லாடலோ, குழம்பிய முடிவோ இன்றித் திட்டவட்டமாகத் தமது கருத்தை எடுத்துவைப்பது அவரது சிறப்பு.

பொதுநலத்தின் பேரால் தன்னலம் வளர்க்கும் வஞ்சகத்தை, கயமையைக் கண்டனம் செய்கிறார் கலைஞர்.

‘தன்னால் கட்சிக்கு என்ன இலாபம் என்று நினைப்பது இதயத் துடிப்புக்குச் சமம், கட்சியால் தனக்கு என்ன இலாபம் என்று கருதுவது, உடலிலே ஓடும் இரத்த நாளங்களில் சீழ்பிடித்ததற்குச் சமம்

‘ என்று. அப்படிப்பட்ட உணர்வே பொதுநலன் காக்கும் பொதுத் தொண்டிற்கு இன்றியமையாத அடிப்படையாகும்.

“இனியும் இருக்கின்ற காலம் எவ்வளவு என்பதல்ல கேள்வி. அந்தக் காலத்தில் என்ன செய்தோம் என்பதே கேள்வி. இருக்கின்ற காலம் இன்னும் சில மணித்துளிதான் என்றாலும் சில மணித்துளிகளில் ஒருதுளிதான் மிச்சமிருக்கிறது என்றாலும், அந்தத் துளிநேரமும் இந்த உயிர் தமிழுக்காகத்தான் பாடுபடும்; பாடுபட வேண்டும்’.

அப்படிப்பட்ட திட்டவட்டமான உறுதியோடு இயங்கும் ஒரு தலைவரே கலைஞர்.

இனிவரும் கட்டுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய உரைகள் சிலவற்றை சுட்டிக்காட்ட விழைகிறேன் .

செம்மொழிச் சிகரத்தின் சாரலில்

தொடர்ந்து நனைவோம் ….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *