உரைவேந்தரின் உரைத்திறம் !
தந்தை வழி தமிழ்ப்புலமையும் –
தம் சிந்தைவழி செந்தமிழ்க் காதலும் சிறக்கப்பெற்ற இலக்கிய இணையராகச் செம்மல் மோகனசுந்தரமும் – ” தமிழ்மாமணி ” கவிஞர் கலைமணியும் திகழ்கின்றனர் .
செய்யுள் இயற்றும் வன்மையால் ” சிவபெருமான் பாமாலை ” புனைந்த திருமதி கலைமணி திறத்தினைச் சைவத் தமிழுலகம் போற்றிப் பாராட்டியது .
நூற்று இருபத்தாறு ( 126 ) ஆண்டுகள் கழித்து இராமலிங்க அடிகளார் பிள்ளைத்தமிழ்நூலை மீளவும் வெளியிடக் ” கலைச்செம்மல் ” திரு .இரா .மோகனசுந்தரம் முன்வந்திருப்பதைத் தமிழுலகம் கண்களில் நீர் மல்கக் கையேந்திப் போற்றும் .
வள்ளலார் பிள்ளைத்தமிழ் என்ற நூலில் இடம் பெற்ற உரைவேந்தர் பற்றி அவர் எழுதிய நல்லுரையை மீள வெளியிடுவதில்(பக்கம் 116,117) மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் .
திருவருட்பிரகாச வள்ளலார் தந்தருளிய அருட்பாவிற்கு அரிய பெரும் உரைகண்ட பெருமைக்குரியவர் உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை .
மதுரை தியாகராசர் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அருட்செல்வர் நா.மகாலிங்கம் ஏற்பாட்டின்படி பொள்ளாச்சி இல்லத்திலேயே தங்கி ஏழாண்டுக் காலம் அருட்பா உரை வரைவதில் செயலாற்றி வெற்றி பெற்றார்.
திருவருட்பா உரை முழுவதும் நிறைவு பெற்றுத் தட்டச்சு செய்த நிலையில் பார்த்தபோது தான் பெற்ற குழந்தை தன்மடி மீது தவழும் தாயின் பெருமகிழ்ச்சியைத் தான் உணர்ந்ததாக அருட்செல்வர் குறிப்பிடுகிறார்.
உரைவேந்தரின் பக்தி இலக்கிய ஆழமும், அனுபவமும் இவ்வுரையில் காணலாம்.
சைவசித்தாந்த அடிப்படையில் இவ்வுரை அமைந்துள்ளது.
திருவருட்பா உரையில் மூலத்தின் பொருளை விளக்கச் சில சொற்களைச் சுட்டிப் பொருள்கூறும் முறைமையைக் காணலாம்.
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்.
செப்பாத மேனிலை மேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே
தமிழ்மக்கள் என்றும் பாடி மகிழும் திருவருட்பா பாடலில் தப்பேதும் நான் செயினும் எனும் தொடருக்கு உரைகூறும் ஒளவை முக்குண வயத்தால் தவறு செய்தல் உயிர்கட்கு இயல்பாதலால், தப்பேதும் நான் செயினும் எனவும் கூறினார் என்று குறிப்பிடுகிறார் .
வள்ளலார் இப்பாடலில் தான் ஏதேனும் தவறுகள் செய்தாலும் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார்.
ஔவை தம் உரையில் உயிர்கள் தவறு செய்யக் காரணம் முக்குணங்கள் என்று நிறுவுகிறார்.
உரைவேந்தரின் உரைத்திறத்திற்கு இஃதொரு சான்றாகும்.
வள்ளற் பெருமான் அருளிய திருவருட்பா ஒரு தோத்திர இலக்கியம்.
ஔவையின் உரையாழம் ,
நெடிய விளக்கம் – சமய சாத்திரச் செறிவு – இலக்கணப் பேரறிவு – தொல்காப்பியம் முதல் பாரதி வரை கற்ற தமிழிலக்கியத் தொடர் அறிவு – இவை மூலம் உரையின் பெருமையை நாம் கற்று இன்புறலாம்.
சித்தாந்த செம்மல் ஔவை திருவருட்பாப் பாடல்களில் காணும் தத்துவக் குறியீடுகட்குச் செம்மையாக விளக்கம் தருகிறார்.
விளக்கங்கள் இன்றேல் தத்துவக் குறியீடுகளை நாம் எளிதில் புரிந்து கொள்ள இயலாது.
இவ்வாறு திருவருட்பா உரைத் தொகுதி முழுவதும் ஒளவை தமது வடமொழி அறிவின் துணையும் கொண்டு சமய, சாத்திர விளக்கங்களைத் தந்துள்ளார்.
இதன் மூலம் வள்ளற் பெருமானின் வடமொழி அறிவும், உரைவேந்தர் ஔவையின் வடமொழித் திறனையும் அறியலாம்.
இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய பழைய உரையாசிரியர் மரபில் வந்த பல்துறை வித்தகர் ஔவை பல்வேறு அரிய சொற்கட்கான பொருளையும் தத்துவக் கலைச் சொற்களின் உள்ளாழத்தையும் தம் பேருழைப்பின் மூலமாகப் புலப்படுத்துவதை அருட்பா உரைத்தொகுதி முழுவதும் கண்டு நாம் பெருமிதம் கொள்ளலாம்.

Add a Comment