POST: 2021-05-16T11:18:04+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 59

“எழுச்சியூட்டிய ஈடில்லாப் பேராசிரியர்”

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் போது, சென்னை வானொலி நிலையத்தில் பேசுவதற்கான வாய்ப்புகள் பல வந்தன.

அதில், இரண்டு முறை நூல் திறனாய்வு உரை நிகழ்த்தும் நெறியில் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

கல்லூரிக் காலத்திலேயே என் நெஞ்சைக் கவர்ந்த பேராசிரியப் பெருமகனார் அறிஞர் க.ப. அறவாணன் (1941 – 2018) ஆவார்.

அவரும், அவருடைய துணைவியார் பேராசிரியர் தாயம்மாள் அறவாணனும் எங்கள் பெற்றோரிடம் மிகுந்த பரிவும் பற்றும் கொண்டவர்கள் ஆவார்கள்.

பேராசிரியருக்கு இணையாக பரிவு பொங்கும் தாயம்மாள் அவர்கள் என்னை அன்பு பொங்க ‘அருள்’ என்று அழைப்பதை என்றும் மறப்பதில்லை.

அறிஞர் அறவாணரின் சிந்தனைக் கழனியில் மலர்ந்த பூக்கள் நாடெங்கும் நறுமணம் வீசுகின்றன.

தமிழ், ஆங்கிலம், மானிடவியல், மரபியல், உளவியல், பண்பாட்டு ஆய்வு எனப் பல்வேறு நெறிகளில் ஆசிரியரின் புலமை வனப்பூட்டுகிறது.

அறிஞர் அறவாணன் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், புகழோங்கி விளங்கினார்.

நெல்லையிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக அவர் செய்த புதுமைகள் இளைஞர் நல்வாழ்வுக்கு ஆற்றல் அளித்தன.

பேராசிரியர் அறவாணனின் உடையும் அவர் அணிந்திருந்த தொப்பியும் மிகக் கவர்ச்சியான தோற்றப் பொலிவோடு அவர் மிளிர்ந்ததை நாம் எல்லோரும் அறிவோம்.

அந்நாட்களில், செனகால் நாட்டில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றிய மாண்பும், அவரின் நூலறிவும், சொற்பொழிவு மாட்சியும் மாணவர்களை வியக்க வைத்தன.

தமிழ்த்துறை மாணவர்கள் என்றால் சங்க இலக்கியம் பயில்வது, புதுக்கவிதை எழுதுவது, எளிய உடை அணிவது என்ற வரம்பை உடைத்தெறிந்து, இலயோலா கல்லூரியில் முதன்முறையாகத் தமிழிலக்கிய மாணவர்களுக்குத் தமிழ்த் தட்டச்சும், சுருக்கெழுத்தும், திரைப்படப் பயிற்சியும், நாடகக் கலையையும் அறிமுகப்படுத்திய ஒரே பேராசிரியர் அறிஞர் அறவாணன் ஆவார்.

ஆல்போல் தழைத்து அறிவுத் தலைமை பெற்ற பேராசிரியரின் மருமகள் முனைவர் வாணி சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக அணி செய்கிறார்.

பேராசிரியர் வாணியிடம் மண்டியிருக்கும் நூலாயும் திறனும், நுண்ணிய புலமையும் கருத்தரங்கில் அவர் படித்த கட்டுரைகளில் பளிச்சிடுகின்றன.

பேராசிரியர் அறவாணன் மறைந்தபொழுது, அவர் குடும்பத்தினர் நடத்திய இரங்கல் கூட்டத்திற்குத் தன்னுடைய சீருந்தைத் தானே ஓட்டி என் அப்பாவை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது என் நினைவினின்று என்றும் நீங்காததாகும்.

19.11.1990-ஆம் நாளன்று பேராசிரியர் க.ப. அறவாணனின் ஆற்றலால், அறிவால், ஆழ்ந்த அனுபவத்தால், மொழி மானமும், இனமானமும் ஒருங்கே ஒளிர்ந்த ஆசிரியரின் நூற்கனிதான் ‘தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ ஆகும்.

அந்நூலினைத் திறனாய்வு செய்திட சென்னை வானொலி நிலையத்தார் வாயிலாக வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதில் எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தேன்.

அந்நாளில் நான் படித்த திறனாய்வு உரை பின்வருமாறு:-

“நூலுக்கு நுழையும் முன் முகிழ்க்கின்ற கருத்துக்கள்.

கலை, கல்வி, பண்பாடு, நாகரிகம் இவை பற்றி எல்லாம் நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். ஏன் அவ்வப்போது எண்ணுகிறோம். ஆனால் செயல் அளவில் இவை தொடர்பாக நம்மிடம் உள்ள ஏழைமைகள் அல்லது பற்றாக்குறைகள் தான் அதிகம்.

இந்த இடைவெளியை நம்பகக் குறைபாடு என்கிறார்கள்.

இந்த நூலை ஒருமுறை முழுக்கப் படித்தால் நாம் அறிவது ஆழ எழுதுவது, அழுத்தமாகச் சொல்வது, வாழ வழி காட்டுவது, வரிக்கு வரிக்கு நாட்டு வளர்ச்சிக்கு உரமூட்டுவது என்னும் நான்கு தூண்களுக்கு மேல் சிந்தனை மண்டபத்தை அமைத்துக் காட்டுகின்ற பேரறிவுத் திறனைப் பாராட்ட வேண்டும்.

கருத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் நம் நாட்டில் சிலர்.
ஆனால் காரணம் தெரியாமல் கண்ணீர் சிந்துபவர்கள் பலர்.
எண்ணத் தெரியாதவர்களும் பலர். எதையும் பண்ணத் தெரியாதவர்களும் பலர்
என்ற நிலைமையைக் வளர்த்துக் கொண்டிருக்கும் நமது மக்களுக்கு எதிர்காலப் பெருமிதம் என்ற வாயில் திறக்கின்ற ‘சிந்தனைக் கோயில்’ இந்நூல் எனலாம்.

இந்நூலில் ஆசிரியரின் பார்வையை விட அவர் கொண்ட ஆழ்ந்த நோக்கு எவரிடமும் காணாத சிறப்பாக உள்ளது.

ஏனெனில் பார்வை வேறு; நோக்கு வேறு;
பார்வை என்பது பொதுவாகப் பட்டுத் தெரிப்பது.
நோக்கு என்பது குத்தி நிலைப்பது. ஆகப் பண்பாட்டு வீழ்ச்சியை மைய மண்டபமாய் கொண்டு இந்நூலை அணுகலாம்.

நூலின் நுழைவாயிலில் ஆசிரியர் தன்னையும், இந்த மண்ணையும் விழிக்க வைத்து விழிமூடிய வெண்தாடி வேந்தருக்கு இந்நூல் காணிக்கை என்கிறார்.

எளிமை கண்டு இரங்குவதும், சிறுமை கண்டு பொங்குவதுமான பெரியாரின் தொண்டன் என்று ஆசிரியர் தன்னுடைய முகவரியை அடையாளம் காட்டுகிறார்.

நூலுக்கு அடிநாதமாய் 33 நூல்களைத் துணையாக வைத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.

இந்த நூல் 1985ல் திருச்சி சூசையப்பர் கல்லூரியில் இருந்து அருள் திரு. சி. கே. சுவாமி பெயரில் அறக்கட்டளைச் சொற்பொழிவாக எழுந்ததாகும்.

ஒரே வரியில் இந்த நூலால் ஏற்படுகின்ற எண்ணம் என்னவென்றால்

“தன் நோயை அறிந்திருக்கும் நோயாளியை விட தனக்குள்ள கொடும் நோயையை அறியாது இருக்கும் ஒருவனுக்கு அண்மையில் அவனுக்கு நிகழவிருக்கும் ஏதம் மிகப்பெரிதாக இருக்கும்.

எதிர்பாராததாகவும் இருக்கும்.

பண்பாட்டுச் சீரழிவு என்ற கடும் புற்றுநோய் தமிழினத்தின் எலும்புக்கூட்டை எல்லாம் உருக்கிக் கொண்டிருக்கிறது என்று தவிக்கிறார் ஆசிரியர்.

தமிழரைப் பற்றி தமிழுக்கு உள்ளாகவும் தமிழர்க்கு உள்ளாகவும் இருந்து பார்த்ததைவிட, அவற்றிற்கு அப்பால் இருந்து காண்பது என்பது நேருவின் (Discovery of India) பார்வைக்கு நிகராக இந்நூலை நிற்க வைக்கிறது.

இந்நூலை (Discovery or Recovery of Tamil Culture) என்று கூடச் சொல்லலாம்.

உலக இனங்களிலேயே தமிழினம் தாழ்ந்த இனமாக இன்று உள்ளது.

இப்பார்வையைச் சமூகம், பொருளியல், அரசியல் என்று முத்திற வகையில் நோக்கலாம்.

தமிழர்களிடம் மலிவாக பேசப்பெறும் பாலுறவுக் கொச்சைச் சொற்கள் இக்கொடுமையைத் தெளிவுறுத்துகின்றன.

தமிழ்ப் பண்பாடு பேசப்படும் சொற்களில் துல்லியமாகத் தெரியும் கல்லூரி இளைஞர்களிடம் சொல்லுக்குச் சொல் இழிசொல் நடமாடுவதைக் கேட்கும் அவலத்தைப் பாருங்கள்.

அது போல 1987-ஆம் ஆண்டு, ‘Sunday’ இதழில் தமிழ்நாட்டு நடிகர் உருவம் பொறித்த சுவரொட்டிகளைச் சிற்றூர்ப் பெண்கள் ஓரிரவில் அதன் மேல் படுத்து உறங்குவதற்கு ஒரு ரூபாய் வாடகை கொடுத்துப் பெறுவதற்கு போட்டியிட்டார்களாம்.

அதுபோல, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 2500-க்கும் மிகுதியான திரையரங்குகள் உள்ளன.

எங்கும் மிகுதியான சாராயக்கடைகள், அதிகமான குடியர்கள் பெருகியுளனர்.

வள்ளலாரின் அருட்புகழை இயம்புகின்ற தருணமிது.

சென்னையில் தான் காட்டுப் புலிகளின் கொடுமை அஞ்சி நம்மிடம் நிழல் தேடி வந்த விலங்குகளின் கசாப்புக் கடைகள் உள்ளன.

நோயற்ற வாழ்விற்குப் பேரணி நடத்துகின்ற நம் நாட்டில்தான் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.

அதேபோல கல்வியறிவில் நாம் தான் அளவில் குறைவு.

பொய் சொல்வதில் நடந்த போட்டியில் நாம் தான் பெரிய பொய்யர் என வெற்றியும் பெற்றோம்.

இடைவிடாமல் நயாகரா அருவி போல இரவு பகலாக 200 மணி நேரம் தொடர்ந்து பேசியவர்தான் கடலூரைச் சார்ந்தவர்.

இவையன்றிப் பொது இடத்தில் எச்சில் துப்புவது, மூக்கு சிந்துவது, குப்பையை அடுத்த வீட்டில் கொட்டுவது, எதிர் வீட்டுச் சுவர் ஓரம் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, புறம் பேசுவது முதலான சில அல்ல, பல பண்பாட்டுக் குறைகளுக்கு அவலத்தைத் தேடித் தரும் சிறுமை நமக்கு உண்டு.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பரிசுச் சீட்டுகள் 80 விழுக்காடு நம் மாநிலத்தில் மட்டும் விற்பனை ஆகின்றன.”

திறனாய்வு உரை அடுத்த வாரமும் தொடர்ந்து வரும்.
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

பேரறிஞர் ‘உபய வேதாந்தம்’ ‘உரைச் செம்மல்’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி.ஜெகந்நாதாச்சாரியர் இயற்றிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையில் சிறப்புப் பாக்களாக உள்ள ஈடற்ற வெண்பாக்களின் உரையைக் காணலாம்.

பகுதி-2

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.

செவ்வேள் திரு கை வேல் முருகப்பெருமானின் அழகிய கையேந்திய வேலானது, வீரவேல் – வீரம்பொருந்திய வேலாகும்; தாரை வேல் – கூரிய வேலாகும்; விண்ணோர் சிறைமீட்ட – தேவர்களை அசுரரிட்ட சிறையினின்றும் காப்பாற்றிய, தீரவேல் – வலிபடைத்த வேலாகும்; வாரி குளித்த வேல் – கடலிற் பாய்ந்த வேலாகும்; சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் – சூரபன்மனின் மார்பையும் அவனுக்கு மறைவாய் ஓடிவரலான மலையையும் துளைத்திட்ட வேலாகும்; (ஆகவே) கொற்றவேல் – வெற்றிவேலாகும்; அத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த வேல்) துணை உண்டு – (அடியனாகிய எனக்குத் துணையாக வமைந்திருக்கிறது; (எனவே, இனி, எனக்கு என்ன குறை என்றபடி);
‘இதனால், முருகன் கைவேல் இத்தன்மைத்தெனக் கூறி, அது துணையாயினார்க்குக் குறையில்லையென்பது பெறவைக்கப்பட்டது.

செவ்வேள் – அடை, கருவேளிற் பிரித்தபடி. தாரை – கூர்மை; இதனைக்கூறியது குன்றும் துளைக்கும் எனப் பெறவைத்தற்கு. முருகக்கடவுட்கு முன்னே எதிர்நிற்கமாட்டாது சூரபன்மன் கடலி னுட்புக்கு ஒளிக்க, அந்த முருகக்கடவுள் அக்கடலினுட்புக்குத் தனது வேற்படையினால் அவ்வசுரனை வெட்டியபோது வேல் வாரி குளித்தமை பெறப்படும்; மற்றும், கடல்சுவற வேல் விட்டமையும் நினைக. ‘சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல்’ என்றவிடத்து, “உழல் சூரு மலைமார்பும் உடனூடுறப்பொருது” என்ற தக்கயாகப் பரணியும், அதனுரையாக “சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறுபடப், பொரு தருளி ‘ என்று கூறியிருத்தலும் நோக்குக: இனி, குன்று – கிரௌஞ்சகிரியுமாம். வேல் துணையாவதை அருணகிரியாரும் தனித்து வழிநடக்குமென திடத்து மொருவலத்து இருபுறத்து மருகடுத்து இரவுபகற்றுணையது வாகும்” என்றார்.

உண்டே துணை – இதில், தெளிவுப்பொருளைத் தருதலால், ஏகாரம் தேற்றம்.

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.

கொன் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா – பெருமை பயின்ற வேலினால் (மாமரமாய் மாறி நின்ற) சூரபன்மனை வெட்டிய வெற்றியையுடையவனே ! முன்னம் – முன்னொருகால், பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட தனி வேலை – பனியினாற் சூழ்ந்த பெரிய கிரௌஞ்சகிரியைத் தீண்டி யூடுருவும்படி ( விசை யொடு ) விடுத்த ஒப்பற்ற வேலை, எனது இடும்பைக் குன்றுக்கும் – (அடியனாகிய ) என்னுடைய துன்பமாகிய குன்றினைத் தகர்த்து நீக்கு தற்கும், இன்னம் ஒருகால் – இதுபோதும் ஒருமுறை, வாங்கத் தகும் – விடுத்தல் தகுதியாகும்;
இதனால், வேலின் துன்பநீக்கி இன்பம் பயக்கும் பண்பு தெரிவிக்கப்பட்டது.

வேல், இடும்பை தொலைத்தலை ‘சுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதி தனக்கும், நரர் தமக்கும் நமர் தமக்கும் உறுமிடுக்கண் வினைசாடும் ” என்ற தாலுமுணரலாம்.

மலை போன்று பெரி தாய இடும்பையும் வேல்தொட்ட மாத்திரத்தில் நீங்குமென்ற படி. இடும்பையைக் குன்றாக உருவகித்தது, தீவினையினாலீட்டிய அதன் பேரளவு நோக்கி. ‘ குன்றுக்கும் ‘ என்றவிடத்து, நான்க னுருபுக்கு “ துன்பத்திற்கு யாரே துணையாவார், மறத்திற்குமஃதே துணை, பிணிக்குமருந்து என்பவற்றிற்போலே நீக்கஎன நடுவே பெய்து பொருளுரைக்கப்பட்டது.

கொன் – பெருமை; ” அச்சம் பயமிலி காலம் பெருமை யென்று, அப்பால் நான்கே கொன்னைச் — சொல்லே ” என்றது தொல்காப்பியம்.

உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை யொருவரையான் பின்செல்லேன்—பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ்வே.

பன்னிரு கை – பன்னிரண்டு திருக்கைகளிலும், கோல் – ( ஈட்டி, வாள் முதலிய ) ஆயுதங்களையேந்தியுள்ள, அப்பா – தலைவனே !
வானோர்-தேவர்களின், கொடிய வினை தீர்த்து அருளும்கடிய பாபங்களைப் போக்கிக் காத்துத் திருவருள் புரியும், வேல் அப்பா – வேலேந்திய தலைவனே !
செந்தி வாழ்வே- திருச்செந்தூரில் நித்தியவாசம் பண்ணுமவனே ! யான்-,உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் – உன்னைவிட்டு – வேறொரு கடவுளையும் நம்புகின்றேனில்லை; பின்னை – ஆகவே, ஒருவரைப் பின் செல் லேன் – வேறொருவரையும் பின்பற்றிச் செல்லமாட்டேன்;
இதனால், கவி தான் மறந்தும் புறந்தொழாமை பெறவைத்தார். கோல் – ஆயுதப் பொதுவைக் குறிப்பது.

பன்னிருகைக்கும் பன்னிரு படையேந்திநிற்றலை ‘அவரும் பிறரும் அமர்ந்து படையளித்த, மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும், பொறிவரிச் சாபமு மரனும் வாளுஞ், செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியுந், தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும், வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு…….

புகழ்வரம் பிகந்தோய் ” என்ற பரிபாடலால் உணர்க. வேலப்பா என வேலை விதந் தெடுத்துக் கூறியது, வானோர்கொடிய வினை தீர்த்தருளுதலில் பேருதவி புரிந்தமைபற்றி. வானோர்கொடியவினை – அசுரர்நலிந் தமை, சிறைப்பட்டமை முதலியன.

செந்தி – செந்தில்: திருச்செந்தூர். செந்தில் என்றே பாடங்கொண்டாலும் இழுக்கில்லை.

வாழ்வே – அனைவர் வாழ்ச்சிக்கும் காரணமாகுமவனே என்றபடியுமாம். நம்பு கிலேன் – கில், மாட்டாமை தெரிப்பது. பின்செல்லுதல்-வழிபடுதல்.

அஞ்சு முகந் தோன்றின் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்–நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றுனை
முருகாவென் றோதுவார் முன்.

முருகா என்று ஓதுவார் – முருகா ! என்று அவன் திருநாமத்தைச் செபிப்பவர்க்கு, அஞ்சு முகம் தோன் றின் – (யாதொரு பயத்தினால்) அஞ்சிய முகம் ஏற்படின், (அஞ்ஞான்று), முன் – அவர் முன்னிலையில் (அப்பயம் நீக்குதற்கு), ஆறுமுகம் தோன்றும் – ஆறு திருமுகங்களோடு முருகக்கடவுள் தோற்றமளிப்பான்: (மற்றும்) வெம் சமரில் – கொடிய (போர் ஏற்படுமாயின் அப்) போரிடத்து, (முன் – அவர்முன்னே ), அஞ்சல் என – ‘பயப் படாதே’ என்று அபயமளித்து, வேல் தோன்றும் – (முருகப்பெருமானின்) வேலாயுதம் தோற்றமளிக்கும்; (மற்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் – மனத்தில் (பத்தி சிரத்தையோடு) ஒருமுறை தியானிப்பாரேயாயின், ( முன் – அவர்முன்னே, இரு காலும் தோன்றும் – (அப்பெருமானின் இரண்டு திருவடிகளும் தோற்றமளிக்கும்;

இதனால், பக்தி சிரத்தையோடு முருகன் திருநாமங்களைச் செபிப்பவர்க்கு ஏற்படும் பலன் கூறப்பட்டது. ‘

ஓதுவார் ‘ என்ற சொல்லாற்றலால், முருகன் திருநாமம் வேதம்போற் சிறப்புடைத்தாதல் பெறவைக்கப்பட்டது.

‘ முன் ‘ என்றது ஏனையீரிடத்தும் கூட்டப்பட்டது.

முதலடி மூன்றாமடிகளில் சொல்லலங்காரம் காண்க. முருகு – மாறாத இளமைசெவ்வி : அதனையுடையவன் – முருகன்.

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே — ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

முருகனே! செந்தி முதல்வனே – திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள தலைவனே!
மாயோன் மருகனே – திருமாலின் மருகனே!
ஈசன் மகனே – சிவபிரானின் குமாரனே! ஒருகைமுகன் தம்பியே – விநாயகனின் தம்பியே! நின்னுடைய-, தண்டைக்கால் – தண்டையென்னுங் காலணி அணிந்துள்ள திருவடிகளை, எப்பொழுதும் – எக்காலத்திலும், நான்-, நம்பியே -, கைதொழுவேன். கைகூப்பி வணங்குவேன்;
இதனால், முருகனின் திருவடியே தஞ்சம் என்பது பெறவைக்கப்பட்டது. மருகன், மகன், தம்பி என உறவிட்டுச் சொன்னது, அவன் குடிப்பெருமை கிளந்தபடி. பார்வதியின் அமிசமான காளி கிருஷ்ணாவதாரஞ்செய்த திருமாலுக்கு உடன்பிறந்தவளாதலாலும், அறுமுகக்கடவுள் பார்வதியின் புதல்வனாதலாலும், முருகக்கடவுள் அத்திருமாலுக்கு மருகனாவன். மாயோன் – திருமால். ஒருகை முகன் – ஒப்பற்ற துதிக்கையை முகத்திலுடையவன்: ஆனைமுகத்தான், கரிமுகன். விநாயகன் கரிமுகனான வரலாறு:-மாகதனென்னும் முனிவனுக்கு விபுதையென்னும் அசுரகன்னிகையினிடத்தில் யானைமுகமாய்ப் பிறந்த கஜமுகாசுரனென்பவன், அநேகவரங்களைப் பெற்று, தன்னுடன்பிறந்த பல அசுரர்களுடனே உலகத்துக்கு அளவிறந்த பலவகைத் தீங்குகளை இழைத்து வருகையில், தேவர்களின் வேண்டுகோளால் அவனைக் கொல்லும்பொருட்டுச் சிவபிரான் யானைமுகக்கடவுளாக விநாயகமூர்த்தியை உண்டாக்கினர் என்பதாம். அவ்வசுரன் இரணியன்போலத் தேவர்களாலும் அசுரர்களாலும் மனிதர்களாலும் மற்றும் பலபிராணிகளாலும் தனித்தனி இறவாதபடி வரம் பெற்றிருந்ததனால், அவனைச் சிவபிரான் யானைமுகமும் தெய்வப்பிறப்பும் பூதவடிவமுங்கொண்ட ஒரு புத்திரனையுண்டாக்கி அவனால் அழித்தருளினர்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *