POST: 2021-04-30T09:22:24+05:30

ஓய்வறியாது உழைத்த செம்மல் !

மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகத் தலைமைச்செயலகத்தில் 2009 ஆம் ஆண்டில் நான் பணியில் சேர்ந்த பொழுது,
அந்நாளைய இணைச்செயலாளராக பணியாற்றிய உறவுச்செம்மல் முத்துக்குமாரசாமி, தன்னிடம் பணியாற்றும் மும்முகங்களைச் சுட்டிக்காட்டி, ‘காலம் இவர்களின் சிறப்பான பணிகளுக்குக் காத்திருக்கிறது’ என்றார்.

அவர் நம்பிக்கையோடு சுட்டிக்காட்டிய ஒரு முகம் தான் அருமை அமரேசனாவார் (19.2.1965 – 26.4.2021).

தமிழ் இந்து நாளிதழில் நான் வரைந்த ஆங்கில பெருங்கவிக்கோ சேக்சுபியர் கட்டுரையை (23.4.2018) வரி விடாமல் படித்து என்னைப் பாராட்டி விட்டுத்
தான் தமிழ் இந்துவின் தீவிர வாசகன் என்று பெருமிதமாகச் சொன்னார்.

திருக்குறளைக் கொரிய மொழியில் வெளியிடும் முன்னர்

என்னிடம், தன் மகள் ‘கொரிய மொழி வல்லுநர்’ என்று மகிழ்வோடு சொன்ன பொழுது நான் உடனே அவர்களை, ‘கொரிய மொழியாக்கத்தைக் கூர்ந்தாய்வுச் செய்யச் சொல்லலாமா?’ என்று வினவிய போது, ‘வேண்டாம் ஐயா’ என்றார் பணிவோடு.

கண் இமைக்கும் நேரத்தில் தட்டச்சைப் பாங்குற வடிவமைப்பார்.

நூறு முறைக்கு மேல் அலுவல் கோப்புகளை, கொள்கை விளக்கக் குறிப்புகளை, அறிவிப்புகளை நுணுகி நோக்கித் திருத்துவார், செம்மைப்படுத்துவார்.

அரசு செயலருக்கு அனுப்பும் கோப்புகளில் எப்பிழையும் நேரக்கூடாது என்பதில் எப்போதும் மிகவும் விழிப்பாக இருப்பார்.

தலைமைச் செயலகத்தில் (18.10.1988) பணியில் சேர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறையின் அரசு சார்பு செயலாளராக மிளிர்ந்து, வனத்துறையின் அரசு துணைச் செயலாளராக அணி செய்து 32 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய அண்ணல் அமரேசனின் பிரிவுக்கு என்ன அவசரம்?

துயரத்தோடு,

ஒளவை அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *