POST: 2021-04-15T10:07:14+05:30

டாக்டர் சூரிய பிரகாஷ் வாழ்க !

சென்னை கிறித்தவ மேனிலைப்பள்ளியில் இணைந்த மாணவர்களாக நானும், நண்பர் சூரிய பிரகாஷும் ஒன்றாகக் கற்றோம் .

வகுப்பில் முதலிடத்தில் வரும் நண்பர்; நன்றாக அப்போதே பாடவும் செய்வார்.

தமிழ்த் தேர்வுகளிலும் முன்னிலையில் இருப்பார்.

அவரிடம் அப்பொழுது பழகுவதில் நான் முதலில் மருண்டேன்; காரணம் ஏதாவது நம்மிடம் கேள்வி கேட்டுவிட்டால், நாம் என்ன பதில் சொல்வது என்று தவித்தேன்.

பள்ளிக்குப் பிறகு அவரவர் வேறு வழியில் பிரிந்தோம்.

நண்பர்கள் பிரபாகர் டேவிட், சாய் சேஷன் மேற்கொண்ட முயற்சியில் பள்ளியில் படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்து மகிழும் முயற்சியால் மாமல்லையில் நண்பர் சூர்யாவை மீண்டும் சந்தித்தோம்.

சந்தித்தபோதும் பல கேள்விகளை முன்வைத்தார். புன்முறுவலோடு விடை சொல்லி வெற்றி பெற்றேன்.

உடனே நான் பாடும் பாடலுக்கு நீங்கள் உரை விளக்கம் செய்யுங்கள் என்றார்.

உடனே, நாம் செய்வோம் என்று சொல்லிவிட்டுச் சிறகடித்தேன்.

வானவில், வழக்குச்செம்மல், பாரதி புதையல், அண்ணல் இரவி குயில் பாட்டைப் பற்றிய சிற்றுரை வழங்குமாறு ஒருமுறை ஆணையிட்டார்.

உரைக்குப் பிறகு எழுத்தாய் வடித்து முகநூலில் வெளியிட்டவுடன் நண்பர் கலைமாமணி சூரியபிரகாஷ் குயில் பாட்டை நான் இசையாகப் பாடுகிறேன் ஆங்கிலம் – தமிழ் விளக்கங்களை நீங்கள் வழங்கவும் ,நான் குமிழியில் ( யூடியூபில் ) வெளியிடுகிறேன் என்றார்.

அவரால் மீண்டும் எனக்குக் குயில்பாட்டு அறிமுகம் ஆயிற்று .

அவரும், அவர் பெற்றோர், துணைவியார், துபாயில் உள்ள தங்கை ஒருங்கிணைந்து செய்த அளப்பரிய இசை முயற்சி என்னையும் பெருமிதம் கொள்ள வைத்தது.

பல்வேறு பண்ணியலை உருவாக்கி உலகமே பாராட்டும் வண்ணம் கலைமாமணி சூரியபிரகாஷ் என்கிற பரிதிச்சுடர் பாடி வருவதை ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பாராட்டிப் பலர் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

8.4.2021 அன்று Structured and systematic approach to Manodharma Sangaedham என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று முனைவர் ஆனார் என் இனிய நண்பர் சூர்யபிரகாஷ்

நினைவலைகளோடு நெருங்கி இழையும் மரபிசையின் கட்டமைப்பும் விரிவும் என்ற நுணுக்கமான
தலைப்பு .

ஒரு தலைவனை அவன் தோழன் பார்த்து ஏன் நீ இன்று சோர்ந்து அயர்ந்திருக்கிறாய் என்று கேட்டபோது இரண்டு காரணங்களால் இந்த இளைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஒன்று தமிழ்ச்செய்யுளின் கட்டமைப்பை ஆராய்ந்தாயா இல்லை ,

ஏழிசையில் வண்ணங்களில் தோய்ந்து அதன் அமைப்புச் செறிவை எண்ணிக் கொண்டே இருந்தாயா என்பது மணிவாசகர் அருளிய திருக்கோவையாரில் வரும் பாடலாகும் .

எங்கள் இருவருக்கும் இது எவ்வளவு பொருத்தம் என்று நினைத்தேன் .

தன் எல்லைகளை விரிவாக்கிச் செல்லும் பரிதிச்சுடருக்கு இந்திய அரசின் பத்ம விருதுகள் காத்திருக்கின்றன என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *