POST: 2021-04-12T10:52:26+05:30

கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 81

பல்கலைக்கழகங்கள் படும் பாடு !

தகுதி வாய்ந்த ஆசிரியர்களைப் பணியமர்த்தத் தவறியமையும், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் பல்கலைக்கழக வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

அன்மையில் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு கட்டுரை அதிர்ச்சியை அளித்தது .

நூற்றுக்கு நாற்பது விழுக்காட்டில் ஆசிரியர்களுடனும் வற்றி வரும் வருவாயுடனும் சென்னைப் பல்கலைக்கழகம் போராடி வருகிறது

.

சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.என்.இராமச்சந்திரன், இணைப்பு திசு வெண்புரதத்தின் முத்திருகு சுழல் நுண்ணிய வடிவை முதலில் கண்டுபிடித்தார்.

இங்கிலாந்திற்குச் செல்வதற்கு முன்னர், கணித மேதை இராமானுசன் நான்கு ஆண்டுகளைத் தம் ஆய்வில் இப் பல்கலைக்லைக்கழகத்தில் செலவிட்டார்.

பொருளாதாரத் துறையின் பேராசிரியரான பி.ஜே.தாமஸ் , 1930 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள், தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்தார்.

1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , தென்னிந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கும் முன்னோடி அன்னைப் பல்கலைக்கழகமாக அமைந்தது .

தொடர்ந்து செயற்படுவதற்காக மிகப் பெரிய நெருக்குச் சூழலில் பல்கலைக்கழகம் இப்போது தவித்துத் தள்ளாடுகிறது .

ஒவ்வொரு மாதமும் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதே அரிய செயலாக இருப்பது விந்தைக்குரியதாகும்; அறக்கட்டளைச் சொற்பொழிவுகளுக்காகவும், பரிசுகளுக்காகவும் வழங்கப்படும் அறக்கட்டளை நிதி பதினாறு

கோடியாகக் குறைந்துள்ளது.

தரமான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அமர்த்தம் செய்யாதது, உரிய ஆய்வுத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடியாதது , பல்கலைக்கழகத்திற்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைந்தது, வருவாய் குறைந்து வரும் நிலை மறந்து புதிய கட்டடங்களுக்குச் செலவு செய்தது முதலியவை வறட்சிக்கு வழி வகுத்தன .

58% ஆசிரியர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.

இதன் விளைவாக முதுநிலைக் கல்வி மையமாகக் கண்டறியப்பட்ட சில துறைகளுக்கு நிதியைப் பெற முடியாது போயிற்று .

ஆசிரியர் பற்றாக்குறையால் நோயியல், மருந்தியல், சுற்றுச்சூழல் நச்சுயிரியல் ஆகிய துறைகளில், முதுகலைப் பாடப்பிரிவுகள் அடைபட்டுவிட்டன .

கடந்த ஏழாண்டுகளாகப் புதிதாக ஆசிரியர்கள் எவரையும் நியமனம் செய்யாததாலும் மூத்த உயர் பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதாலும், இப்பல்கலைக்கழகத்திற்கு மிகப்பெரிய அரணாக விளங்கிய ஆய்வியல் துறையில் சரிவு ஏற்பட்டள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் எஸ் .பி . தியாகராசன் கூறிய கருத்துரை :-

“பன்னாட்டு அனுபவ மிக்க ஆய்வியல் திறன்மிகு ஆசிரியர்களால் இப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர இயலவில்லை.

முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய உயராய்வு முறை வலுப்படுத்தப்படவில்லை.,

முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வினை மேற்கொண்டவர்களையே பன்னாட்டுப் பல்கலைக்கழகங்கள் தெரிவு செய்ய விரும்புகின்றன.”

சென்னை பல்கலைக்கழகத்தில், கல்லீரல் அழற்சி-பி-க்கான சிகிச்சைக்காக வைரோஹெர்ப் எனும் மருந்தைக் கண்டேன் .

2001ஆம் ஆண்டு இதற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது.

“தரமான ஆய்வியல் கருத்துருக்கள் வாயிலாக அதிகளவிலான நிதியத்தைப் பெற்றால் தான் ஆக்கபூர்வமான ஆய்வுகள் எவற்றையும் நாம் தொடர முடியும் .

கடந்த பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தின் ஆய்வியல் மற்றும் புத்தாக்கச் சுற்றுச்சூழலமைவு முறை குன்றிவிட்டது என்றும் அவர் கூறினார் .

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து, பணியாளர்களுக்கு ஊதியத்தை அளிப்பதற்குப் பதிலாக, ஓய்வூதியக் கடன் பொறுப்புகளிலிருந்து தொகையை எடுத்து மாதாந்திர அடிப்படையில், ஊதிய மானியங்களை அரசு வழங்கினால், பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமை ஓரளவு சீராகலாம் என்று பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

பல்கலைக்கழகம் தனது நிதிநிலைமையைச் சரிசெய்வதற்காக, மாணவர்களை இடர்ப்பாட்டிற்கு உள்ளாக்கக்கூடாது. ”

மாநில அரசு, குறைந்தது, 50 % வரவு செலவு நிதியொதுக்கீட்டைப் பல்கலைக்கழகத்திற்கு நல்கையாக வழங்க வேண்டும்.”

எனப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார் .

இங்குக் காணப்படும் நிலையில் உயர் அறிவியல் ஆய்வு மட்டுமே மன்பதைக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பயனளிப்பதாக அமையும் ,

மேலும் நிதி நல்கையும் அத்தகைய அறிவியல் ஆய்வுக்கே கிடைக்கும் .

இது பற்றி முரசொலி நாளிதழ் நடுப்பக்கத் தலையங்கமாகப் பல்கலைக்கழகச் சீர்குலைவை நிமிர்த்த வேண்டும் என்றும் எழுதியுள்ளது .

” சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு என்று ஆண்டுதோறும் ரூ.82 கோடி சம்பளம்,

ஓய்வூதியம் ரூ.90 கோடி,

இதர செலவுகள் ரூ.30 கோடி என்று சுமார் 202 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

மாநில அரசு ரூபாய் 40 கோடி ஆண்டுதோறும் சம்பளத்திற்கான மானியத் தொகையை வழங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தின் மொத்த செலவுகளில் 20 சதவிகிதம் மட்டுமே வழங்கி வருகிறது.

பல்கலைக் கழகத்தின் மூலம் ரூ.70 கோடி மட்டுமே கிடைக்கிறது.

இந்த மோசமான நிதிநிலையில் ஓய்வு பெறும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு 2018 ஆம் ஆண்டு முதல் கடைசி நேர பலன்களை வழங்கி அவர்களுக்கு நிம்மதியான ஓய்வூதியத்தை நிறைவு செய்ய முடியாத நிலையே இருந்து வருகிறது “.

உதவிப் பேராசிரியர், துணைப் பேராசிரியர், பேராசிரியர் எனப் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 513 பேர் இருக்க வேண்டும்.

ஆனால், 217 பேர் மட்டுமே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆசிரியர்களின் நிலைமை இதுவென்றால் மாணவர்களின் நிலைமை அவர்களின் எண்ணிக்கை வருத்தம் தருகிற போக்கில்தான் அமைந்து இருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 72 துறைகள் இருக்கின்றன. அவற்றில் ஆய்வு மையங்களும் இடம் பெற்று இருக்கின்றன.

இதில் 18 துறைகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயில்கிறார்கள்.

நான் துணைவேந்தராகயிருந்த போது பல்கலைக்கழக நல்கைக்குழுக் கூட்டத்துக்குச் சென்றதுண்டு .

நான் ,பதிவாளர் ,நிதி அலுவலர் ,துணைப்பதிவாளர் ,ஒரு புலத்தலைவர் ,என ஐவராகச் சென்றோம்

நல்கைக்குழுவின் தலைவர் ஆக்ஸ்போர்டில் கற்றவர் ,வடமாநிலங்களில் துணைவேந்தராக இருந்தவர் .

அறிவியல் திட்டங்களைப் போல உங்கள் திட்டங்கள் இல்லையே ,பழைய இலக்கியங்களை மொழிபெயர்ப்பது ,ஓலைச் சுவடிகளை வெளியிடுவது ஊர்ப்பெயர்களைத் தொகுப்பது , பட்டியலிடுவது ,இவற்றைத்தவிர வேறு புதிய திட்டங்களையே காண முடியாது .

இவற்றைத்தவிர மொழிப் பல்கலைக்கழகங்களுக்கு வேறு திட்டங்களே இல்லையா ! உங்களைச் சொல்லவில்லை ,பத்துக்கு மேற்பட்ட சமஸ்கிருதப் பல்கலைக்கழங்களிலும் இப்படித்தான் திட்டங்கள் அமைந்துள்ளன .

குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் ,எங்கள் குழு வகைப்படுத்திய அளவீடுகளுக்கு இவை சற்றும் பொருந்திவருவதில்லை , வந்து போனதற்காக ஊர்ப் பெயர்த்திட்டங்களுக்காக ஐந்து இலட்சம் மட்டும் ஒதுக்கலாம் என்றார் .

அறிவியல் பல்கலைக்கழகங்கள் கோடிக்கணக்கில் பெற்றுக்கொண்டிருந்தனர் .

இந்தப்போக்கில் தமிழாய்வாளர் ,மாணவர்கள் ,அயல்நாட்டுத் திசைகளில் கூட உயர்கல்விக்காகக் காலெடுத்து வைப்பதைக் கனவிலும் கருதிப் பார்க்கமுடியாது .

மொழிக்கல்வி முறையை ஒற்றையாக இல்லாமல் அறிவியல் சார்ந்த கற்றையாக அமைக்க முனைய வேண்டும் என்று பிறர் சொல்லக் கேட்டு என்னால் எழுதத்தான் முடிந்தது .

பள்ளம் தெரிகிறது பாய்ந்து தாண்ட காலோ முடம் இந்த அவலத்தில் பின்னேயிருந்து பிடர் பிடித்துத் தள்ளுகிற முரட்டுக் கரத்தையும் உணர முடிகிறது .

இந்த நிலை தான் தமிழ்க் கல்வியின் அவல நிலை

புகழ் வாய்ந்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களை நெறிப்படுத்த வேண்டும்

இந்த வகையில் ஐஐடி க்களின் வளர்ச்சி ஒளரவுக்கு நிறைவளிக்கின்றன .

பல்கலைக்கழகம் என்ற பெயரிருப்பதால் பல்வேறு மொழிகளிலும் பட்டம் பெறவும் ,பட்டயம் அளிக்கவும் மொழிப்பிரிவுகள் பல்லாண்டுகளாக உள்ளன .

சமஸ்கிருதம் தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் , அராபியம் ,இந்தி முதலியன உள்ளன .

எந்நாளிலும் இந்த மொழிப்பிரிவுகளில் மாணவர்கள் ஒற்றை இலக்கதிலேயே உள்ளனர்

.முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சிலர் சேர்கின்றனர்.ஒரு மாநிலத்தில் எந்த மொழி பெரிய அளவுக்கு வழங்கு மொழியாக உள்ளதோ அங்கே அயல் மொழி மாணவர் ஆய்வுக்காகச் சேர்தல் அரிது .

சிகாகோவில் தமிழில் ஆய்வு செய்வதற்காகச் சேர்கிறேன் என்பது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வியப்பு .

ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் ஆர்வத்தால் தமிழாய்வுக்குச் சேரலாம் .

இதன் பயன் முழு நிறைவளிக்கவில்லை .

அயல்நாட்டு ஆய்வு மாணவர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழறிஞர் எழுதிக்கொடுக்கும் ஆய்வை ஆங்கில மொழியில் படைத்தது விடுகின்றனர்

எவரை அணுகுகிறார்கள் – எப்படி முடிவுகளைப் பெறுகிறார்கள் என்பது சிக்கெடுக்க முடியாத பின்னலாக இருக்கிறது .

இந்நிலையில் தமிழ் இளங்கலை ,முதுகலைப் பேராசிரியராக விளங்கும் மூத்த பேராசிரியர் ஒருவர் தமிழ்க்கல்வியின் இன்றைய நிலையைப்பற்றி என்னிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் .

1. இளங்கலை(3(, முதுகலை(2), ஆய்வியல் நிறைஞர்(1 or 2), முனைவர் பட்டம்(3) என்று ஒரு மாணவன் தொடர்ந்து பத்து ஆண்டுகள் தமிழ் படிக்க வேண்டும். இதற்குள் அவனுக்கு 27 அகவை ஆகிவிடும்.

2. இளங்கலை முடித்துவிட்டு B.Ed. படிப்பார்கள். அரசாங்கப் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை என்று எம்.ஏ. படிக்க வருவார்கள். 25 முதல் 30 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டு விடுவார்கள்.

பிறகுதான் முனைவர் பட்ட மாணவனாகச் சேருவார்கள். வாழ்க்கைப் போராட்டமே இவர்களுக்கு அதிகமாக உள்ளதால், ஒரு தமிழாசிரியராகத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் இடர்ப்படுகிறார்கள்.

3. பிளஸ்-2 முதல் முனைவர் பட்டம் முடிப்பது வரையில், இடையறாது பத்து ஆண்டுகள் தமிழ் படிக்கும் யாரும் வெற்றி பெறாமல் போனதை நான் பார்த்ததில்லை.

4. பெரும்பாலும் அரசாங்கப் பள்ளிகளையும் அரசாங்கக் கல்லூரிகளையும் நம்பியே தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இவற்றில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரக்கணக்கில் தேர்வு செய்வார்கள்

. அடுத்த பத்து ஆண்டுகள் அப்படியே வெற்றிடமாக வைத்து விடுவார்கள். பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான்.

அரசாங்கப் பணி கிடைத்தால் தான் ஊதியம் நன்றாக இருக்கும்.

தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஐந்து மடங்குக்கும் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.

ஆகவே இங்கே இலட்சியம் என்பதை அரசாங்கம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களாகச் செல்வதுதான் என்று சுருங்கி விடுகிறது.

5. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்ப் பேராசிரியர்கள் பதின்மர் வேண்டுமானால் பணி நியமனம் பெற்றிருப்பார்கள். பிற பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலைமை. 20 பல்கலைக்

கழகங்களில் இரு நூறு பேர், 100 அரசு கல்லூரிகளில் ஒரு 500 பேர், சுயநிதிக் கலைக் கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் ஐயாயிரம் பேர். இவ்வளவுதான் இருக்கும் வேலை வாய்ப்பு. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் , பிஏவும் எம்ஏவும் முடித்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியே வருகிறார்கள்.

பத்து வருடங்களில் 50 ஆயிரம் பேர் வந்து விடுவார்கள். பத்தாயிரம் பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு இருக்கிறது. பிற 40 ஆயிரம் பேர் என்ன செய்வார்கள்? அது ஒன்றுதான், இதற்குத் தீர்வாக அமைய முடியும்.

6. பொருளாதார நிலையில் மிக மிகப் பிற்படுத்தப்பட்டவர்களே இன்று தமிழைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தமிழில் உயர்கல்வி கற்க வேண்டுமானால், உரிய உதவித்தொகைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

இதை ஏற்படுத்தாமல், மாற்றம் தமிழ்க் கல்வியில் வந்துவிடாது. அனைத்துத் தமிழ் கல்வியும் இலவசம் என்ற நிலையை அரசாங்கம் ஏன் கொண்டுவரக்கூடாது ?

அந்த நிலை வந்தால்தான், தமிழ் படிப்பவர்கள் நிம்மதியாகப் படிக்க முடியும்.

7. ஒவ்வோர் ஆண்டும் வருடமும் உயர்கல்வியில் பத்தாயிரம் பேர் தமிழ் படிப்பதற்கு அரசு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்தால், தமிழ்க் கல்வியில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதற்கு முன் இந்த 10,000 பேருக்குப் பணி வாய்ப்புகளைப் பல நிலைகளிலும் உறுதிப்படுத்த

வேண்டும்.

முனைவர் ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *