அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 51
“கைத்திறனும் கல்விச் செறிவும் – சிங்கப்பூர் சிந்தனை”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
முதுகலைத் தமிழிலக்கியம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முடிக்கும் சூழலில் பம்பாயைச் சார்ந்த கிளியா நிறுவனத்தில் திருமதி வித்யா சீனிவாசன் பரிந்துரையில் பணியில் சேர்ந்திருந்தேன்.
முதுகலைத் தமிழிலக்கியம் நிறைவாண்டில் எந்தையார் ஆய்வுப் படிப்புக்காக அமெரிக்கா செல்ல நீ முயலலாம் என்று அறிவுறுத்தினார்கள்.
அப்பொழுது சிங்கைத் தமிழாசிரியர் திருமதி இந்திரா கிருஷ்ணன் சென்னைக்கு அவ்வப்போது வருகை புரிந்து என் பெற்றோர்களிடம் சிங்கைப் பல்கலைக்கழகத்திலேயே ஒப்பிலக்கியத் துறையிலோ, மொழியியல் துறையிலோ முனைவர் பட்டத்திற்கு அருள் முயலலாம்.
பல்கலைக் கழகத்தில் பயிலும்பொழுதே சிங்கையிலுள்ள செய்தித்தாள்களிலோ, தொலைக்காட்சி நிறுவனத்திலோ சேர்ந்து பணியாற்றலாம். அதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கும் முகமாக என்னுடன் அருளை சிங்கைக்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறினார்கள்.
சிங்கையிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்வது எளிது என்றும் வலியுறுத்தினார்கள்.
எந்தையார் அடிக்கடி சொல்வது, ‘இலக்கியக் கல்வி பன்முகத் திறனும், நோக்கமும் கொண்டதாக அமைய வேண்டும். செயற்படுத்தும் வாய்ப்பும் செயல்திறனில் மேம்பாடும் என்ற வகையில் தமிழிலக்கியம் பயில வேண்டும். அறிதோறும் அறியாமை என்பது போல அன்றாடம் அறிவியற் புதுமை அலைகள் உலகெங்கும் வீசுகின்றன. நேற்று என்பது நாளைய வடிவமாக வரக்கூடாது. நேற்றைக்குப் பெயர் தமிழில் இறந்தகாலம் என்றுதான் சொல்வார்கள் என்பார்.
திருமதி இந்திரா கிருஷ்ணன் அழைப்பில் அணிகல வணிகச் செம்மல் சாந்தகுமாருடன் (A G குமார்) 21.06.1990-ஆம் நாளன்று முதன்முதலாக வெளிநாட்டுச் செலவு மேற்கொண்டேன்.
சிங்கையிலுள்ள டவுனர் சாலையிலுள்ள அடுக்ககத்தில் சரியாக ஒரு திங்களுக்குத் தங்கினோம்.
சிங்கையிலே பல உயர் அலுவலர்கள், பேராசிரியப் பெருமக்கள், இதழாசிரியர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர், வணிக வேந்தர்கள் எனப் பலரை திருமதி இந்திராவும் அவரது அருமைக் கணவர் தமிழ்ச்செம்மல் கிருஷ்ணனும் என்னை அறிமுகம் செய்து மகிழ்வித்தனர்.
பலர் தங்கள் கருத்துகளை எடுத்தியம்பினாலும், செயல்வடிவம் பெறுவதென்பது எட்டாத் தொலைவில் இருந்தது.
இதனூடே சிங்கையையும், மலேயாவையும் கண்டு களிப்பதும் பெருமகிழ்ச்சியளித்தன.
தமிழகத்தில் இருப்பதுபோலவே காட்சியளித்தாலும், சிங்கையின் தூய்மை, புதுமை, கண்களைப் பளிச்சிட வைத்தன.
திருமதி இந்திரா கிருஷ்ணன் வாயிலாக சிங்கையின் தமிழ்ப் பேரவையில் “சிங்கப்பூர் மருமகள்” என்ற நாடகத்தின் பாராட்டு விழாவில் 23.06.1990-இல் நான் வாழ்த்துரை வழங்கினேன்.
நாடகப் பாராட்டு விழாவிற்குப் பிறகு அதே நாளில் சிங்கையிலுள்ள ‘பார்க்’ ஹோட்டலில் டாக்டர் வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும், நான் உரையாற்றினேன்.
இக்கூட்டங்கள் அனைத்தும் முன்னதாகத் திட்டமிடப்பட்டவை அல்ல. அழைத்துச் சென்றவுடன் அறிவிப்பின்றிப் பேசிய கூட்டங்கள் ஆகும்.
சிங்கையில் எந்தையாரின் இனிய நண்பர் பெரும் பேராசிரியர் சுப. திண்ணப்பனை அவர்களின் இல்லத்திலேயே சந்தித்துத் தமிழிலக்கிய மேற்படிப்பு வாய்ப்புகள் தொடர்பாக அளவளாவினோம்.
அவருடைய திருமகன் அருண் திண்ணப்பன், அக்காலங்களில் என்னுடைய இனிய நண்பர் பார்த்திபனுடைய அமெரிக்க நண்பரும் ஆவார்.
அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அருணின் வழிகாட்டுதல் சிறப்பாக அமைந்தது.
சிங்கையில் மறக்கவொண்ணாத நிகழ்வு என்னவென்றால், ஜெருவோஸ் சாலையில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு நாங்கள் சென்றபொழுது (25.06.1990), நான் எடுத்துச் சென்ற குடையை மறந்து வைத்துவிட்டுத் திரும்பினேன். மீண்டும் 4 மணிநேரம் கழித்து அவ்வலுவலகத்திற்குச் செல்கையில் குடையை என்னிடமே மீளத் தந்தது கண்டு என் விழிகள் வியப்பில் உயர்ந்தன.
சிங்கையில் தமிழ் முரசின் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களைச் சந்தித்து நாளிதழில் பணியாற்றுவதற்குரிய வாய்ப்பினைப் பற்றி வினவினோம்.
அதற்கேற்ப ஓரிரு ஆங்கிலச் செய்திக் கட்டுரைகளை என்னை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து தருமாறு சொன்னார்கள். அதனையும் ஒருங்கே செய்தேன்.
ஆசிரியர் அரசு, சிங்கையிலேயே படித்துப் பணியாற்ற வேண்டுமென்றால் அங்குள்ள ‘O Level’ (பள்ளி நின்ற நிலைத்) தேர்வை எழுத வேண்டுமெனச் சுட்டிக் காட்டினார்கள்.
சிங்கையின் கோளரங்கத்தில் (30.06.1990) எங்களுடைய உடல் எடையை ஒரே நேரத்தில் பூமியிலும், செவ்வாய்க் கோளிலும் எவ்வளவு என்பதை ஒப்பிட்டுக் காண்கிற திறவுகோலைக் கண்டு வியந்தோம்.
பெலிஸ்டியார் சாலையிலுள்ள சிங்கை ஒலிபரப்புக் கழகத்தைச் சார்ந்த உயர் அலுவலர் திரு. எஸ்.பி. பன்னீர்செல்வம் நன்முயற்சியால், கண்காணிப்பாளர் N. K. நாராயணன் வழிகாட்டுதலில், 02.07.1990 அன்று சிங்கை வானொலியில்
‘தமிழ் அன்றும் இன்றும்’ மற்றும் ‘மொழிபெயர்ப்பும் அதன் விளைவுகளும்’ என்ற இரு தலைப்புகளில் ஒரு மணிநேரம் நான் பேசிப் பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது.
வானொலியில் தொடக்கமாக நான் பேசிய அவ்வுரைப்பகுதி இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
“சிங்காரத்தின் சிகரம் சிங்கப்பூர். தமிழ்க் கருத்துகளை இலக்கிய நயத்தோடு வரலாற்றுத் தேடலோடு, சமூகத் தூண்டுதலோடு வானொலி நிலையத்தார் தேனொலி பாய்ச்சுகிறார்கள்.
தமிழிளைஞனின் பார்வையில் இரு தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் பொருள்களுக்கு விலையுண்டு. ஆனால், வாழும் மக்களோ விலையுயர்ந்தவர்கள்.
நான் கற்ற பாடம் இங்கே பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் சிங்கையில் பெரும்பாலும் இல்லை என்பது.
எந்தக் காரியத்தை எந்தக்காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிடத் துடிக்கின்றனர்.
பரபரப்பான நடை, சுறுசுறுப்பான சிந்தனை, துறுதுறுவென்றிருக்கும் மூளை இவையே சிங்கப்பூர்.”
கணிப்பயிற்சி, தொலைத் தொடர்பியம், அடுப்படி மின் செப்பனீடு, தச்சுப்பணி, குளிர் வளிமக் குறை நீக்கம், காரோட்டுதல் முதலிய தொழில் நோக்கில் பாடங்கள் இலக்கியக் கல்வியில் இணைய வேண்டும்.
முதலுதவியும் தெரியும் முத்தமிழ்ப் புலமையும் வேண்டும் என்று பெருமிதமாக இங்கே பலர் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்.
மறந்தும், அரசைக் குறை சொல்லாத மனம் சிங்கப்பூர் மக்களைக் கடமை வீரர்களாக மாற்றியுள்ளது
என்று குறிப்பிட்டுத் தொடங்கினேன்.
சிங்கையிலிருந்து சாந்தகுமாரும் நானும் பேருந்திலேயே மலேயாவுக்குச் (05.07.1990) சென்றோம்.
அங்கே, எந்தையாரின் இனிய நண்பர் திரு. கோடிவேலும், அவர் மகன் வழக்கறிஞர் முரளியும் எங்களை வரவேற்று மலேயா, பினாங்கு, ஈப்போ, பட்டர்வர்த் ஆகிய இடங்களையெல்லாம் சுற்றிக் காட்டினார்கள்.
ஈப்போவில், கவிக்குயில் கலியபெருமாளைச் சந்தித்து, அவரின் இல்லத்திலேயே தங்கியதும் மறக்கவொண்ணா நிகழ்வாகும்.
கவிக்குயில் பல அறிவுரைகளை எனக்கு நல்கினார்.
அப்பொழுதே அவர் சொன்ன நல்லுரைகள் பல,
அப்பாவைப் பின்தொடர்ந்து செல், அவரின் களஞ்சியங்களை மறவாமல் கற்றுக் கொள். அவர் பேசுவதை உற்றுக் கவனி. அவரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகைப்படுத்துக. அவற்றின் ஒலி வடிவத்தை வரிவடிவமாக மாற்று, என்றெல்லாம் அறிவுறுத்தியது இன்றும் என் நினைவில் பசுமையாவுள்ளது.
அப்பாவைத் தொடர்ந்து ஏதாவது கேட்டால், எதற்குப் பதிவு செய்கிறாய். நேற்றைக்கு நடந்ததை மறந்து, ஏதாவது புதிதாகப் படித்ததை எனக்குச் சொல் என்றுதான் இன்றும் அறிவுறுத்துகிறார்.
அப்பா எவ்வளவு மறுத்தாலும், நாளைய உலகம் ‘ஏன் பதிவு செய்யவில்லை’ என்று கேட்கும் என்பதனால் முடிந்தவரை அவர் பேசிய (90) உரைகளையும், பல அறிஞர்களுக்கு வரைந்த (738) அணிந்துரைகளையும், பல்வேறு (400) கட்டுரைகளையும் தட்டச்சு செய்து இதுவரை திரட்டியுள்ளேன்.
கவிக்குயில் கலியபெருமாள் 07.07.1990-ஆம் நாளன்று நள்ளிரவில் புனைந்த
VAN – கூட்டுந்து,
Ambulance – காப்புந்து,
Aeroplane – வானுந்து,
Helicopter – திருகு உந்து
போன்ற கலைச்சொற்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின.தொலைபேசி யில் முதலில் அவர் சொல்வது இன்ப மே சூழ்க எதிர்முனையில் சொல்வார்கள் எல்லோரும் வாழ்க என்று…
எந்தையாரின் நண்பரான கவிதாயினி இராமநாயகம் குடும்பத்தினருடன் பட்டர்வர்த்துக்கும் அவர்களின் நண்பர் நார்மனுடன் பினாங்கு சென்றதையும் நினைத்துப் பார்க்கிறேன்.
சிங்கைக்கும் ,மலேயாவுக்கும் சென்ற வாய்ப்பை இன்றும் எண்ணிப் பார்த்தால் மீண்டும் எத்தனையோ முறை இந்த இரு நாடுகளுக்கு நான் சென்று வந்தேன் என்பதையும் எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
—–
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
உரைவேந்தரின் உரைத் தொடர்
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி
இனி, “முருகப் பெருமான், காலை இளங்கதிரவன் கடற்கண் தோன்றுங்கால் திகழும் ஒளியைப் பொருந்தியவன்; தன்னை அடைந்தாரைத் தாங்கும் அழகு பொருந்தியது அவனது திருவடி; தன்னை வெறுத்துப் பகைத்தாரைப் பழிக்கும் வலிமிக்கது அவனது திருக்கை; கற்பால் மாசு மறு இல்லாதவர் அவன் தேவியர்; அவனது திருமார் பில் செங்கடம்பின் உருள் பூவால் தொடுக்கப்பட்ட தண்ணிய தார் கிடந்து புரளும்; திருமுடியில், சுடர்விட்டுத் திகழும் காந்தட்பூவாலாகிய பெருந்தண் கண்ணி இருந்து இனிய காட்சி வழங்கும்;
கடல் நடுவிற் புகுந்து, ஆங்கே வாழ்ந்த சூரனை அடியோடு தொலைத்த நெடுவேல் அவன்பால் இருந்து அவனது அடல்விளக்கி நிற்கின்றது;
பகைவரான அவுணர்க்கு வலியும் அரணும் நல்கி வந்த மாமரத்தை வேரோடு தொலைத்ததினால் உண்டான மறுவில்லாத வெற்றியால், என்றும் அழியாத புகழ்பெற்றுச் செவ்வே லேந்தும் இந்த முருகனுடைய செம்மை விளங்கும் திருவடியை நீ நினைந்து, செம்மல் உள்ளம் பெற்றனை;
அவ்வுள்ளத்தால் நலம்புரி கொள்கையை மேற்கொண்டு பிறவிக் கேதுவாகிய புலன்கள் வழிச்செல்லாது முருகன் திருவடிக்கண் சென்று சேரும் அருள் நெறியில் செல்லும் செலவையே நீ விரும்புகின்றாய்;
அதனால் நன்னெறித்தாகிய நின் நெஞ்சின்கண் நேயமாகிய இனிய ஞானவேட்கை நன்கு கைகூடக், கருதிய பேற்றைக் கருதியவாறே இப்போதே பெறுவாய்” என்று சீவன் முத்தராகிய சான்றோர் முருகனது திருவடிஞானம் விழைந்து வந்த சான்றோர்க்கு உரைக்கின்றார்.
கேட்ட சான்றோர் தமது உள்ளத்தே, “முருகப்பெருமான் எங்கும் எல்லாமாய் இருக்கும் பரம் பொருளாதலால், எங்கே சென்று எப்படிக் காண்பது?’ என எண்ண மிடுகின்றார்.
அதனை யவர் முகக்குறிப்பால் உணர்ந்து கொள்ளும் சீவன்முத்தர்,
“கூடல் நகர்க்கு மேற்கிலுள்ளதும், ஞாயிறு தோன்றிய காலைப்போதில், வண்டினம் போந்து ஒலிக்கும் மலர் நிறைந்த சுனையையுடையது மான பரங்குன்றத்தில் நெஞ்ச மர்ந்து உறைவன்; அதுவேயன்றி, உலகத்து நன்மக்களது புகழால் உயர்ந்த திருச்சீரலை வாய்க்கு விசும்பாறாகச் செல்வதும் அவனுக்கு நிலைத்த பண்பாகும்;
தேவரும் முனிவரும் பிறரும் வந்து தன்னைக் காணும்படியாகத் திருவாவினன்குடியில் மடந்தையுடன் சின்னாட்கள் இருப்பன்;
அதுவேயன்றி இரு பிறப்பாளர் தனக்குரிய ஆறெழுத்து மறையை ஓதி மலரிட்டு வழிபட அதனைப் பெரிதும் உவந்து திருவேரகத்தில் எழுந்தருளியிருத்தற்கும் உரியன்;
அதுவேயன்றிக் குறமகளிராடும் குரவைக் கூத்துக்கு முதற்கை கொடுத்து அவரோடு குன்றுதோறும் விளையாடுவதும் அவன்பால் நிலை பெற்ற பண்பு;
அதுவேயுமன்றி, ஊர்தோறும் மக்கள் செய்யும் திருவிழாக்களிலும், தன்பால் அன்புடையார் ஏத்துதற்கு அமைத்த இடங்களிலும், வேலேந்தி வேலன் வெறியாடும் இடங்களிலும், காடுகளிலும் காக்களிலும் அழகிய ஆற்றிடைத் தீவுகளிலும் குளங்களிலும் வேறுபல அழகிய இடங்களிலும், சதுக்கம், சந்தி முதலியவற்றிலும், புதுப்பூ மலரும் கடம்பு மரங்களிலும், மன்றங்களிலும், பொதியில்களிலும், கந்து நிற்கும் கந்துடை நிலைகளிலும், வேறுபிற இடங்களிலும் ஆங்காங்குத் தன்னை வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட எழுந்தருளுவன்” என்று கூறுகின்றார்.
அது கேட்டு மகிழ்ச்சியால் முகமலர்கின்றார் சான்றோர் அவரைச் சீவன்முத்தர் நோக்கி, “ஆங்காங்கு அவன் எழுந்தருளக் கண்டதும், அவனது தெய்வ வடிவு நோக்கி அஞ்சாமல் அன்புடன் முகனமர்ந்து துதித்துக் கைகூப்பித் தொழுது அவன் திருவடியில் தலை பொருந்த வீழ்ந்து வணங்கி, ‘
செல்வ,
ஆல் கெழு கடவுள் புதல்வ, மலைமகள் மகனே,
மாற்றோர் கூற்றே,
கொற்றவை சிறுவ,
பழையோள் குழவி,
தானைத்தலைவ,
மாலை மார்ப, புலவ,
ஒருவ,
மள்ள,
அந்தணர் வெறுக்கை,
சொன்மலை,
மங்கையர் கணவ,
பெருஞ் செல்வ,
குறிஞ்சிக் கிழவ,
புலவர் ஏறே,
பெரும்பெயர் முருக,
இசை பேராள,
பொலம்பூண் சேய்,
நெடுவேள்,
பெரும் பெயர் இயவுள்,
மதவலி,
பொருந,
குரிசில்’
என்று இவ்வாறு யான் கூறும் அளவில் அமையாது மேலும் பல சொல்லி, ‘நின் பெருமை அளந்தறிதல் மன்னுயிர்க்கரிது; நின் திருவடி பெற வேண்டி வந்தேன். நின்னோடு ஒப்பார் பிறர் இல்லாத மெய்ஞ்ஞானமுடைய வனே,’
என மொழிந்து, உன் மனத்திற் கருதும் கருத்தைப் புலப்படுத்துவாயாயின்,
அங்கே பலவேறு உருவுடன் குறியராகிய பல கூளியர் நின் கருத்தை உணர்ந்து கொண்டு விழா அயரும் களத்தின்கண் எழுந்தருளும் முருகன் திரு முன்னே வணங்கி நின்று, ‘பெரும, மிக்க வாய்மையுடைய புலவன் ஒருவன் நின் திருவருளை இரந்து இனியவும் கேட்போர்க்கு நலம் பயப்பனவுமாகிய நின் புகழை விரும்பிப் பல சொற்களால் வாழ்த்திக் கொண்டு வந்துள்ளான்” என்று தெரிவிப்பர்.
உடனே முருகன் தெய்வத்தன்மையோடு கூடிய வன்மை பொருந்திய தன் வடிவின் வானளாவி நிற்கும் பெருமையொடு எழுந்தருளிக் கண்டார்க்கு அச்சம் பயக்கும் தன் உயர் நிலையைத் தன்னுள் அடக்கிக்கொண்டு பண்டு தான் கொண்டிருந்த தெய்வமணங் கமழும் இளமைக் கோலத்தைக் காட்டி, ”வீடுபேற்றுக்குரிய ஞானம் வேண்டி வந்த நின் வரவினை அறிவேன் ;
அஞ்சற்க,” என்று அன்பு பொருந்திய நன் மொழிகளை யருளிச்செய்து, கடல் சூழ்ந்த இந்நில வுலகத்து வாழ்வோருள் நீ ஒருவனே வீடுபெறத்தக்கவன் என்று பலரும் விளங்கத் தெரியுமாறு விழுமியவற்றிற் கெல்லாம் விழுமியதும் பிறர் பெறுதற்கரியதுமாகிய திருவருள் ஞானத்தை, மலை கிழவோனாகிய அவன் நல்குவன்,” என்று கூறுகின்றார்.
இங்கே கூறிய இப்பொருளைத் தன்னகத்தே கொண்ட இத்திருமுருகாற்றுப் படையில் திருவருள் ஞானம், “விழுமிய பெறலரும் பரிசில்” எனப்படுகிறது.
நச்சினார்க்கினியர் அதனைக் கந்தழி என்று கூறி, “கந்தழியைப் பெற்றானொருவன் அதனைப் பெறா தான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப் படுத்துக் கூறுவான்,” என்றும், ‘
கந்தழியாவது ஒருபற்று மற்று அருவாய் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்,” என்றும், “இதனை ‘உற்ற ஆக்கையின் உறு பொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்’ என அதனை யுணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க,” என்றும் கூறினர்.
கந்து பற்றுக் கோடு எனப் பொருள்படுவதாகலின், கந்தழியாவது சார்பில தாதுகாத்தருள் என்பதாகக் கொண்டார்.
பரம்பொருளை நல்கப் பெறுவ தென்பது, அதற்குரிய ஞானத்தைப் பெறுவதாம்.
பரம்பொருளை எய்தினோர் மீள உலகிற்கு வாராராதலால், நல்குதற்கும் பெறுவதற்கும் உரியது பரமஞானமே யாம் எனத் தெளிதல் வேண்டும். ‘
பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர், பதார்த்தங்கள் பாரார்,” (சிவ. சித்தி) எனப் பிற்காலத் தான்றோர் இதனை விளங்கக் கூறியிருப்பது காணலாம்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment