POST: 2021-03-01T09:55:42+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 75

ஆக்சுபோர்டுக்கு அவனியே தலை வணங்குகிறது !

முனைவர் ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

தமிழகத்தின் கடந்த ஐம்பதாண்டுக் கல்வி வளர்ச்சியை மதிப்பிடுவோமாயின், ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் பள்ளிக் கல்வியில் ஆர்வம் செலுத்தினோம். எழுபதுகளிலும் அதன் பின்னரும் புதிய கல்லூரிகள் பல நிறுவினோம். எண்பதுகளிலும், அதற்குப் பின்னும் பல்கலைக் கழகங்களை உருவாக்குவதில் ஈடுபாடு காட்டினோம். இவை மூன்றும், அதனதன் அளவில் முதன்மை வாய்ந்தவை. பல்கலைக் கழக வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கத்தை ஈடு செய்ய நாம் முயன்று செய்ய வேண்டிய திட்டங்கள் பல. அவற்றுள் முதலாவது நிதி நிலையைச் சீர்ப்படுத்துவதாகும்.பல்கலைக் கழகத்திற்கு நிதி வரும் வழிகள் பின் வருமாறு :இப்போது நடைமுறையில் இருப்பவை சில :

1. மாநில அரசின் திட்டம் சாராத நிதி ஒதுக்கீடு (Block Grant )

ii. மாநில அரசின் திட்ட நிதி ஒதுக்கீடு.

iii . பல்கலைக் கழக நல்கைக் குழுமத்தின் ( ப.ந .கு. ) திட்ட நிதி ஒதுக்கீடு.

iv. மாணவர்கள் பயிற்சிக் கட்டணம்; தேர்வுக் கட்டணம்.

v. பல்வகை நிறுவனங்கள், ஆய்வுத் திட்டங்கட்காக அவ்வப்போது வழங்கும் நிதி

vi. அயல்நாட்டு அரசு மற்றும் அயலக நிதி நிறுவனங்களிடமிருந்து மைய அரசு வழியாக பெறும் நிதி உதவி.

அயலக உதவி அத்தி பூத்தாற் போல் வருவது. இவை இரண்டும் வருவாயில் சேர்வன அல்ல. மேலும் இவை வளர்ந்த பல்கலைக் கழகங்கட்கே வாய்ப்பவை . வளரும் நிலையிலுள்ளவற்றிற்குக் கிடைக்கும் வசதிகள் அன்று. மாணவர் பயிற்சிக்கான வருமானம் மிகக் குறைவானது தேர்வுக்கட்டணமும் அளவால் குறைந்தது .. எனவே பெருவாரியாகப் பல்கலைக் கழகங்கள் மாநில அரசின் நிதி உதவியைத் துணைக்கொண்டுதான் செயற்படுகின்றன.

பல்கலைக்கழக நல்கைக் குழுமம் ( ப.ந.கு ) ஒரு புதிய பல்கலைக் கழகத்தைத் தொடர்வதற்கோ , தொடக்க கால வளர்ச்சிக்கோ நிதியுதவி அளிப்பதில்லை . பல்கலைக்கழகச் சட்டத்தின் 12.B பிரிவின் படி நிதி உதவிக்குத் தகுதியுளது என இசைவு பெறுவதற்கே ஒரு பல்கலைக்கழகம் ஓரளவு வளர்ந்திருக்க வேண்டும்.

மேலும் பல்கலைக்கழக நல்கைக் குழுமம் காப்புச் செலவை ஏற்பதில்லை. அதற்கு நிதி அளிப்பதில்லை. பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக மட்டுமே ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ( Plan Grant for Development ) செய்கிறது. திட்ட கால மேம்பாட்டின் அடிப்படையில் வரும் தொடர் செலவைத் திட்ட காலத்திற்குப் பின் மாநில அரசு ஏற்க வேண்டும். ப.மா.கு. உயர் நிலை ஆய்வு மையம் ( Centre of Advanced Studies ), சிறப்புதவி ஆய்வுத் துறை ( Department of Special Assistance ) மற்றும் சில வகைகளில் நிதியுதவி வழங்குகிறது. இவை ஒரு சில பல்கலைக் கழகங்களிலுள்ள அனைத்திந்திய அளவில் தகுதி பெற்ற துறைகள் மட்டுமே பெறத்தக்கன. தேசிய அளவில் இசைவு பெறும் அளவிற்கு வளர்ந்த துறைகளே இவ்வாய்ப்புகளைப் பெறுகின்றன.

பல்கலைக் கழகத்தின் கட்டுமானக்காப்பு , ஆசிரியர் ஊதியம், நிருவாகச் செலவு, நூல் நிலையச் செலவு, சோதனைச் சாலைகட்கான நடைமுறைச் செலவு, ஆய்வு மாணவர்களைப் பெரிய எண்ணிக்கையில் ஊக்குவிப்பதற்கான ஆய்வுப் புலமைத் தொகை, புதிய துறைகளை உருவாக்குதல், மற்றும் மாணவ, மாணவியர் விடுதி, ஆசிரியர் குடியிருப்பு போன்றவற்றில் பெரும் பகுதி, போன்றவற் றிற்கான நிதி உதவி மாநில அரசின் திட்டம் சாரா நிதி ஒதுக்கீடு ( Block Grant ), திட்டம் சார்ந்த நிதி ஒதுக்கீடு இவற்றின் மூலம்தான் வரவேண்டும்.

இதற்கான நிதியை மற்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கணிசமான அளவில் ஒதுக்குகின்றன. ஆனால் என்ன காரணத்தாலோ ஆளும் கட்சி எதுவாக இருந்த போதிலும், வேறுபாடின்றிப் பல்கலைக் கழகத்திற்கு நிதி ஒதுக்குவது மாநில அரசின் பொறுப்பு அல்ல என்பது போன்ற மனநிலையிலேயே தமிழக அரசு நடந்து வந்திருக்கிறது. நாம் கூறுவது பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழில் சார்ந்த பல்கலைக்கழகங்கள் தவிர்த்து, மற்ற பொதுப் பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்று பேரறிஞர் வா செ குழந்தைசாமி எழுதிய கட்டுரையில் சுட்டியிருப்பதைக் காணலாம் .ஒரு பல்கலைக்கழகம் தான் வைத்துள்ள நிதி வளத்தால் தான் நிலைபெற்று விளங்கும் .தனியார் நிதியத்தால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வற்றாத வளத்தோடும் வலிமையோடும் விளங்குகின்றன .

வளரும் நாடுகளில் இது ஒரு பெரிய தொல்லை தான் .சான் ஏறினால் முழம் சறுக்கும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பான எழுச்சி ஊட்டவேண்டும் , விதியை மாற்றுவது நிதி தான் .இந்நிலையில் உலகையே கலக்கி நம்மை ஒடுக்கிருக்கும் தீநுண்மிக்குத் தடுப்பூசியை உருவாக்க ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட அயராத முயற்சியையும் விளைவையும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட அறிக்கையும் நம்மை கை கூப்ப வைக்கிறது .இதன் மொழிபெயர்ப்பு வருமாறு :

இங்கிலாந்து, பிரேசில் , தென்னாப்பிரிக்காவில் பல்வேறு இனஞ்சார்ந்த புவியியல் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனைகள் இப்போது நிறைவடையும் .ஆய்வினை நோக்கித்தொடந்து நடத்தப்படுகிறது . மேலும் அமெரிக்கா, கென்யா, ஜப்பான் மற்றும் இந்தியாவிலும் இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன, மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 60,000 பேர் சோதனை முயற்சியாக பங்கேற்பார்கள் என மருத்துவஆய்வுக் குழு எதிர்பார்க்கிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியேற்றுக் கொண்டவரிடம் செயல்படும் திறன் மற்றும் பாதுகாப்புப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும், இனி COVID-19 பரவுவதற்கு எதிராகவும் தடுத்து நிறுத்துவதற்கும் திறனைக் கொண்டிருக்கும்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ( ChAdOxt nCov-19 ) ஒரு தீநுண்மிக்கலப்பால் உருவாக்கப்படுகிறது, சிறு இயல்பான சளிக்குக்காரணமான வைரசின் ( அடினோவைரஸ் ) வகைப்பாடு சார்ந்தது ஆகையால் இதன் மரபணு மாற்றப்பட்டிருப்பதால் நம் உடலில் வளர இயலாது.

கடந்த பல பத்தாண்டுகளாக அடினோவைரஸ் தடுப்பூசிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு விரிவாக மருந்துகள் பயன்படுகின்றன, மேலும் அவை நிலையானவை, எளிதாக உற்பத்தி செய்யப்படுபவை, எளிதாகக் கொண்டு செல்லப்படுபவை மற்றும் நம் இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையில் (2-8 டிகிரி சி) சேமிக்கப்படகூடியவை. இந்த தடுப்பூசி அனுமதிக்கப்படுமாயின் அதாவது இது மருத்துவரின் அறுவை சிகிச்சைகள் மற்றும் உள்ளூர் மருந்தகங்களின் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தி மிக விரைவாகப் பயன்படுத்தப்படக்கூடும்.

ஆஸ்ட்ராசெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்த செயற்பாடு தடுப்பூசி வெற்றி காணும் வளர்ச்சிக்கு முதன்மை பெற்றது உலகளாவிய உற்பத்தி மற்றும் பயன்பட்டுக்கு இது எளியதாகும் .

அஸ்ட்ராசெனெகா முப்பதுக்கும் மேற்பட்ட விநியோகத்திற்கான ஒப்பந்தங்கள் மூலமாகவும் இணைய வழிப் பங்குதாரர்கள் வாயிலாகவும் ஏற்கனவே மூன்று பில்லியன் அளவிலான தடுப்பூசியை மேலும் வழங்க அனைத்துலக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இந்நாள் குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் பொதுவாக நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சிறந்த நன்னாளாகும் .உலகெங்கிலும் உள்ள நுண்ணியல் அறிஞர்களிடம் இணைந்து நம்முடைய ஆக்கத்தினை அறிவின் மன்பதையினை நல்வாழ்வுக்காகப் பொதுவாக பயன்படுத்துவதை நாங்கள் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுகிறோம் .

” பாஸ்கல் சொரியட் நுண்ணுயிர்த் துறைகளின் பேராண்மைத்தலைவர் இது தொடர்பாகக் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது :

இன்றைய நாள் தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் தொடர் போராட்டத்தில் வெற்றி விடியலைக் காட்டுவதை முதன்மைனயாதாகக் குறிக்கிறது .இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு COVID – 19 க்கு எதிராக பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், நம் நல்வாழ்வின் நெருக்கீட்டுக்கு பெரும்பயன் ஏற்படுத்தும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

மேலும், இத்தடுப்பூசி மலிவானது மற்றும் உலகளவில் கிடைக்கக்கூடியதாக அமையும் எனவும் ஒப்புதலின் பேரில் நூற்றுக்கணக்கான மில்லியன் அளவுகளை நிறுவனம் வழங்கும் எனவும் தடுப்பூசியின் உருவாக்க விற்பனைகளை தொடரும் அணுவளவும் ஆதாயமற்ற உணர்வோடு உரிய நேரத்தில் நம் கைக்கு நற்பேறாய் அமைந்துள்ளது .ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துக்கு அவனியே தலை வணங்குகிறது .

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் நுண்ணியிரியல் , மரபணுவியல் ,தீநுண்மித் திறனாய்வியல் ,மருந்தாக்கவியல் ,உடலாய்வியல் முதலிய துறைகளைச் சேர்ந்த பேரறிஞர்கள் வேண்டிய பொதுநல மேம்பாட்டையும் இந்த ஆய்வுக்கு ஓயாத உழைப்பாற்றியுள்ளனர் .பேராய்வறிவின் பிழம்பாகத்தான் தடுப்பூசி மருந்து நம் கைக்கு நம் கைக்கு நற்பேறாய் அமைந்துள்ளது .

20 – 9 – 1983 – ஆம் நாளன்று அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாகிய சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சித் தலைவருக்கு அவருடைய பொதுப்பணிகளைப் போற்றி Doctor of Laws ( Honoris Causa ) டாக்டர் `பட்டம் வழங்கிச் சிறப்பித்தது .

30 – 10 – 1983 அன்று மாலை ஏவிஎம் திருமண மண்டபத்தில் தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்னையார் கவியரசி திருமதி. சௌந்தரா கைலாசம் பாராட்டிச் சூட்டிய பாமாலை இங்கே நினைவு கூரலாம் .இந்தப்பாடல் பொன்னெழுத்தால் பொறிக்கத்தக்க புகழுரையாகும் .

பேருலகில் வாழ்கின்ற மனிதர் யாரும்

பெரும் பயனை முயற்சியினால் அடையு மாறு

சீருடைய கலையறிவு வழிகள் கூறும் ;

சிறத்தபுகழ்க் கோபுரத்தில் ஏற்றி வைக்கும் ;

காரியங்கள் யாவையிலும். வெற்றிப் பெண்ணைக்

கைகோத்து நடக்கின்ற வாய்ப்பை நல்கும் !

கூரிய நல் லறிவாலே எய்து தற்குக்

கூடாத தொன்றிந்தப் புவியில் உண்டோ ?

அத்தகைய நல்லறிவை அனைவ ருக்கும்

ஆர்வமுடன் தருகின்ற அரிய தொண்டில்

இத்தரையில் மிகச்சிறந்து விளங்கு கின்ற

எழிலார்பல் கலைக்கழகம் நமக்குச் சொந்தம் !

மெத்த நலம் உண்டாக்கி மானு டத்தை

மென்மேலும் மிளிர்கின்ற வண்ணம் செய்யும்

எத்துணையோ கழகங்கள் இருந்த போதும்

எம்சென்னைக் கழகத்துக் கீடும் ஏது ?

சென்னைப்பல் கலைக்கழகப் பட்டம் பெற்றார்

திறமைய தன் மறுபெயராய்த் திகழ்வார் என்று

மன்னுலகில் அறிஞரெலாம் சொல்வா ரென்றால்

மாட்சியினை உரைப்பதற்கு வார்த்தை இல்லை !

பொன்னுலகாய் இவ்வுலகைச் செய்யப் போந்த

பொன்மனத்துச் செம்மலுக்கு முனைவர் பட்டம்

நன்னயமாய் அக்கழகம் தந்த தென்றால் –

நம் தலைவர் பெருமையினை அளக்கப் போமோ ?

குமிழ் சிரிப்பால் புவிமுற்றும் கொள்ளை கொண்டு

கும்மாள மிடுமிளைய பிராயம் தன்னில்

உமிழ்கின்ற எச்சிலதும் உலர்ந்து போக,

உணவின்றி மிகவாடும் சிறுவர்க் கெல்லாம்

அமிழ்தென்ற சத்துணவை • அளிக்கும் தூய

அன்புக்கும் பெரும்பட்டம் தந்தா ரன்றித்

தமிழ் நாட்டு முதல்வரெனும் பதவி யிங்கே

தாங்குகின்ற காரணத்தால் தந்தா ரில்லை !

மனிதருளே மனிதரென யாரும் போற்றும் •

மனிதாபி மானியிவர் ஆத லாலே

முனைவரெனும் பெரும்பட்டம் தேடி வந்து

முறுவலித்துப் பெயர்முன்னம் இணையக் கண்டோம் !

அனைவருமே நெஞ்சத்தில் பொங்கிப் பாயும்

ஆனந்த வெள்ளத்தில் திளைத்த வாறு *

மனம் நிறையப் பாராட்டித் தமிழாற் செய்த

மாலையினைச் சூட்டுகின்றோம் ! வாழி ! வாழி !

தொடர்வோம் …

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

– ஒளவை நடராசன்

thamizhavvai@hotmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *