POST: 2021-02-25T09:54:38+05:30

தினமணி ஒரு திருமாமணி .

” நிமிர்ந்த நன்னடையும்,நேர்கொண்ட பார்வையும் ” தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு ஒரு சார்பின்மை என்ற மெல்லிய கம்பியின் மேல் செல்லுகிற மின் வண்டியாக நேரம் தவறாமல் நடத்தி வருவது ஒரு மாபெரும் பணியாகும்.

தமிழில் தொகுப்பாளர் என்று நேர்பொருள் படும் சொல்லுக்கு ஆசிரியர் என்ற சொல் அமைந்தது ஊடகவியலின் பண்பாட்டுக்கு ஏற்றம் தருவதாகும் ..

ஆசிரியர் தொடக்கப் பள்ளியில் கற்றுத் தருகிறார் .
உயர்நிலைப் பள்ளியில் சொல்லிக் காட்டுகிறார் ,
உயர்கல்வியில் உடனிருந்து உயர்த்துகிறார் .
ஆய்வுக் கல்வியில் மாணாக்கர் முடிவுக்கு இசைவளர்க்கிறார் .
இந்த நான்கு ஆசிரிய நிலைகளும் நாளிதழ்களுக்கும் அமைந்தவையாகும் .

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை – அறிஞர் சி பா ஆதித்தனார் விருதைத் தாங்கள் பெறுவது நாளிதழ் அரசியலுக்கு அடிப்படை அங்கமாக அமையும் .

ஆண்டுக்கு ஒருமுறை ,இருமுறையேனும் தமிழ் இலக்கிய விழாக்கள் ,ஊடக வாரங்கள் ,கலந்துரையாடல் ,இதழாளர்களுக்குப் பயிற்சி முதலிய விழாக்களை நடத்துவது மக்களின் நெருக்கத்துக்கு பெரிதும் உதவுவன ..

இந்த இலட்சியப் பாதையில் சீராக நடந்து எண்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறுவது அறிவு – நாகரிக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த நோக்கில் தான் அரசியல் தலைவர்கள் அவ்வளவு பேரும் அண்ணல் காந்தியடிகள் ,.பண்டிதர் நேரு ,பேரறிஞர் அண்ணா ,அறிவுச்சுடர் அம்பேத்கர்,டாக்டர் கலைஞர் ஆகியோர் தம் நிறைநாள் மூச்சு வரை இதழாசிரியர் பொறுப்பை விட்டுக்கொடுக்கவேயில்லை .

உங்களுடைய தொழில் எதுவென்று கேட்ட போது இதழாசிரியர் என்றே எழுதினார்கள் .

நூற்றாண்டு கண்டு மேலும் அனைத்து மாநிலங்களும் படர்ந்த இதழாக தினமணி நின்று – வென்று – சிறப்படைய வேண்டுமென்பது தமிழ் மக்களின் விழைவாகும் .
.
அன்போடு
ஒளவை நடராசன்
25 2 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *