POST: 2021-02-18T12:05:13+05:30

திருவுடைத்திலகம் பேராசிரியர் திண்ணப்பன் வாழ்க !

பச்சையப்பன் கல்லூரியில் நானும் அறிஞர் திண்ணப்பனும் ஒன்றாகப் படித்தோம் .

என்னை விட நன்றாகப் படித்தவர் – நகரத்தார் திருவிளக்கு என்று ஒருமுறை அறிஞர் மு வ பாராட்டினார் .
அதிர்ந்து பேசாதவர் .

ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றாண்மையில் உறைவிடமாக – நிறைகுடமாக சிங்கப்பூர் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பெரும் பேராசிரியராக விளங்கியவர் .

கலை – இலக்கியம் – சமயம் – வாழ்வியல் – அருளியல் முதலிய துறைகளில் இவர் காட்டிய புலமைப் பெருமிதத்தால் பல்லாயிரக்கணக்கில் தமிழ் ஆர்வலர்கள் சிங்கப்பூரில் பெருகியுள்ளனர் .

அறிவால் திண்ணப்பன் – அன்பால் கண்ணப்பன் என்று நான் அடிக்கடி மகிழ்ந்து கூறுவேன் .

தமிழகத்துக்கு வந்திருந்தால் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவி சேர்த்திருப்பார் .

மகிழ்ச்சியோடும் – மனநிறைவோடும் வாழ்கின்ற பெரும்பேராசிரியர் திண்ணப்பன் அவர்களுக்கு தமிழக அரசு 2020 ஆம் ஆண்டிற்கான மதுரை – உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருதளித்துப் பாராட்டிப் புலமைப் பரிசில் வழங்கியதைக் கேட்டு என் மனம் களிப்பில் திளைத்தது .

நானும், அவரும் அடுத்தடுத்த அறையில் சேர்ந்து பயின்ற நினைவு என் நெஞ்சில் நிலைத்திருக்கின்றது .

பெரும் பேராசிரியர் திண்ணப்பன் அவர்கட்குப் பல்லாண்டு சொல்லி வாழ்த்துகிறேன் .

அன்போடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *