POST: 2021-02-16T07:35:58+05:30

சித்திரச் சிலம்பின் வித்தகத் தகைமை !

இயலிசைப்பேரொளி பேராசிரியர் வைத்தியலிங்கம் அவர்களை திண்டுக்கல்லில் பணியாற்றியபோதே நான் அறிவேன் .

” முன்புறக் கண்டிலன் தங்கள் முழுவளம் கேட்டுளன் ” அன்று அப்போது கூறியதாக நினைவு .

மாங்கனி தேடிய போது அருட்செல்வர் மடியில் விழுந்த தேமாங்கனிகளாகப் பேராசிரியரும் – இளவல் இன்னிசைத்தென்றல் கோடிலிங்கமும் இராமலிங்கர் பணிமண்றத்திற்கு வாய்த்தனர் .

பேராசிரியர் வைத்தியலிங்கம் செயலாளரான பிறகு அன்று முதல் எண்ணினால் எங்கள் நேயம் நாற்பதாண்டுகளாக நாளும் உயர்வதோர் நலம் கொண்டதாய் அமைந்துள்ளது .

பண்ணாராய்ச்சிக் கோமகனார் அண்ணல் குடந்தை சுந்தரேசனார் தொடர்பும் எங்கள் கேண்மையைச் செழிக்க வைத்தது .

குரலால் எடுத்து மொழியும் திறனால் ” நம்பியும் நாயகனை ஒக்கின்றான் ” என்று நாடு அவரைப் பாராட்டியது .

சங்க இலக்கியம் தொடங்கி நேற்று வந்த கதையிதழ் வரை முற்றக்கற்ற மூதறிவாளர் .எனக்குப் பலமுறை ஐயம் தெளிவுறுத்தும் அண்ணலாக உள்ளார் .

பேராசிரியால் தான் இராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில் திருமுறை இசை மாநாடு நடத்தப்பெற்றது .

உச்ச நீதிமன்ற நீதியரசர் இராமசுப்பிரமணியம் – பேராசிரியர் வைத்தியலிங்கத்தை இன்னும் ஒரு பாசுரம் பாடச் சொல்லுங்கள் , பேராசிரியரின் இசையும் விளக்கமும் எனக்கு ஒரு திங்களுக்கு அமைதி தரும் என்றார் .

தமிழவேள் சிவாலயத்தின் நெஞ்சக்கோயிலிலிருந்து அருள்நெறி காட்டும் ஆற்றலுக்கு அளவில்லை .

சிலப்பதிகாரத்தில் கரை கண்ட செந்தமிழ் வீறு வாய்க்கப்பெற்ற புலவர் திலகம் வைத்தியலிங்கனாரைப் பாராட்டித் தமிழக அரசு இளங்கோவடிகள் விருது வழங்கியது அவர் தகுதி மகுடத்தில் மற்றுமொரு தனி மாணிக்கமாக ஒளிரும் !.

பேராசிரியரைப் போற்றி மகிழ்கிறேன் .

வாழிய பல்லாண்டு !
வளர்க கலைத்தொண்டு !! .

அன்போடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *