மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 72
அன்புக்கு நான் அடிமை
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
புரட்சித்தலைவரின் நெஞ்சில் நிலையான இடம் பெற்றவர் கவியரசர் முத்துலிங்கம் .
மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் மிளிர்ந்த பெருமையோடு நம்மிடையே வாழ்ந்து வருகிறார்
அன்பு – அடக்கம் – அறிவு – ஆற்றல் – கற்பனை வளம் – கவிதைப்பெருக்கு – அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடு முதலிய பண்பு நலங்களின் பெட்டகமாகக் கவிஞர் முத்துலிங்கம் இன்றும் ஒரே நிலையில் ஒப்புரவு மனத்தோடு பாடற்பணியும் – தமிழ்ப்பணியும் பல தளங்களில் ஆற்றுகிறார் .
பாவேந்தர் விருது வழங்கிப் கவிஞர் முத்துலிங்கத்தைப் பற்றிப் பேசிய உரை கவிஞரை நம் கண் முன் காட்டும் .
புரட்சித்தலைவரின் பாராட்டுரை பற்றிய கவிஞரின் கருத்து வருமாறு ”
சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதை 1978 – 79 ஆம் ஆண்டில் பெற்றேன். பின்னர் கலைமாமணி விருது பெற்றேன். அதன் பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றேன்.பாவேந்தர் விருதை எனக்கு வழங்கும்போது என்னைப் பற்றித் தலைவர் பேசியது என்றும் மறக்கமுடியாத ஒன்று.
ஒரு முறை தலைவர் அலுவலகத்திலிருந்து தலைவரின் ஆணைப்படி எனக்கு நிதி வழங்க முன் வந்தார்கள் .
நானோ பாடல் எழுதும் பணியைக் கொடுங்கள் என்று தான் கேட்டேன் , நிதி வேண்டாம் .வாய்ப்பினைத் தலைவரே வழங்குவார் என்று கூறி அனுப்பினேன் .அதை நினைவுகூர்ந்து புரட்சித்தலைவர் பேசியதை என் இலக்கிய நினைவுகள் மணங் கமழ ” ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே ” என்ற நூலில் காணலாம் .
” நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974 – ஆம் ஆண்டு . முதல்வர் புரட்சித்தலைவர் எனக்குப் பாரதிதாசன் விருது வழங்கியது 1981 – ஆம் ஆண்டு.
இடையில் ஏழாண்டுக் காலம் இடைவெளி.ஏழாண்டுகள் வரை நான் சொன்னதைத் தலைவர் நினைவில் வைத்திருந்து பேசியது தான் வியப்பு.
அவரோ முதலமைச்சர் எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏழாண்டுகளில் சந்தித்திருப்பார்.
அப்படியிருந்தும் நான் மறுத்துக்கூறிய நிகழ்ச்சியை மறந்து விடாமல் பேசினார் என்றால் என்னை அவர் மனத்தில் வைத்திருக்கிறார் என்றுதானே பொருள் !. என்னைப் பற்றி அவர் பேசியது இதுதான்.
” படத்துறைக்கு வருவதற்கு முன் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் இருந்தார். எந்தப் பத்திரிகையில் அவர் பணியாற்றினாரோ அந்தப் பத்திரிகையிலிருந்து அவர் விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவாரே என்றெண்ணிக் கொஞ்சம் பணம் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். பணம் வேண்டாம். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன் இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். அப்போதும் மறுத்து விட்டார் .
படத்துறையில் என்னிடம் பணம் வாங்காத எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெரும்பாலும் குறைவு. அதுவும் அவர்கள் கேட்டுத்தான் அளித்திருக்கிறேனே தவிர, நானாக யாருக்கும் கொடுக்கவில்லை.
முத்துலிங்கத்திற்கு மட்டும் தான் நானே வலியக் கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார்.உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானமுள்ள கவிஞராக இருக்கிறார் என்பதை அப்போது புரிந்து கொண்டேன். அதன்பிறகுதான் என்னுடைய படங்களுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தேன்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் தன் காலைக் கீழே, தான் குனிந்து பார்ப்பது கூடச் சுயமரியாதைக் குறைவு என்று கருதுவார் எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட தன்மானம் உள்ள கவிஞர் பெயரிலே கொடுக்கக்கூடிய விருதைத் தன்மானமுள்ள கவிஞராகவும், தன்மானமுள்ள மனிதராகவும் விளங்குகின்ற கவிஞர் முத்துலிங்கத்திற்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பது ? ” என்று பேசினார்.
சிவகங்கை அருகே ஒரு சிற்றூரில் பிறந்த கவிகங்கை தான் நண்பர் முத்துலிங்கம்
.கவிஞர் முத்துலிங்கம் முரசொலியில் பணியாற்றியபோதே நான் கண்டு பேசியிருக்கிறேன் .அன்று முதல் எங்கள் தோழமை தொடர்ந்து வருகிறது .
இளமையிலேயே கவிதை புனையும் வளம் அவர்பால் திகழ்ந்ததை என் இனிய நண்பர் கவிஞர் மீரா பலமுறை அவரைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார் .
“கடம்பங்குடியில் பிறந்த எனக்கு எட்டு வயதிலேயே கவிதை உணர்வு படிந்திருந்தது .என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது.சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத தாய்மார்கள் பாடுகிறார்களே தாலாட்டுப் பாடல்கள். அதற்கு இணையான கவிதை இலக்கியங்கள் உலகமொழிகளில் இருக்குமா என்பது என் கருத்து.
“மல்லிகையால் தொட்டில் இட்டா எம்புள்ளெ மேலே
வண்டுவந்து மொய்க்கு மின்னு மாணிக்கத்தால்
தொட்டிலிட்டா எம் புள்ளையோட மேனியெல்லாம்
நோகுமின்னு வயிரத்திலே தொட்டிலிட்டா வானிலுள்ள
நட்சத்திரம் ஏங்குமின்னு நெஞ்சத்திலே தொட்டிலிட்டேன்
நித்திலமே நீயுறங்கு பொன்னே உறங்கு பூமரத்து
வண்டுறங்கு கண்ணே உறங்கு கானகத்துச் செண்டுறங்கு”
என்று என் தாய் பாடுவார்.
இதைக் கேட்கும் காலத்தில் எனக்கு வயது எட்டு. இதைப் போல நானும் குளத்தைப் பார்க்கையில், அலையைப் பார்க்கையில், கொக்கு, குருவிகளைப் பார்க்கையில் அன்றிலைப் பார்க்கையில் ( இன்றைக்கு அன்றில் என்ற பறவை இனமே அழிந்துபோய்விட்டது ) பனைமரங்களைப் பார்க்கையில் நானே இட்டுக்கட்டி ஏதாவது பாடிக்கொண்டிருப்பேன். இப்படித்தான் சிறுவயதில் பாட்டுணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.
என் தாய் கூறிய வரிகள் நான் பின்னர் எழுதிய தாலாட்டுப் பாட்டில் அங்குமிங்குமாக மிதந்து வருவதைக் கேட்டிருக்கலாம் .
தாம் பாடும் பாடல் வரிகளில் சொற்களை எல்லாம் தேர்ந்து தெளிந்து பொது நலத்தை வலியுறுத்தும் போக்கில் தான் பாடல்கள் அமையவேண்டும் என்பதில் புரட்சித்தலைவர் பேரார்வம் காட்டினார் .நுணுக்கமான திருத்தங்களைச் சுட்டிக் காட்டுவார் ன்றும் கவிஞர் முத்துலிங்கம் பெருமிதமாகப் பாராட்டியுள்ளார் . .
திரையுலகில் பாடல் எழுதுவது எளிதானதில்லை .படத் தயாரிப்பாளர் ,இயக்குநர் ,இணை இயக்குநர் ,துணை இயக்குநர் ,இசை வடிவாக்கும் இசையமைப்பாளர் ,குறித்த பாடலைப் பாடும் இசைவாணர் ,அனைத்துக்கும் மேலாகப் பாடலை முணுமுணுக்கும் நடிகர் இவர்களுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு பல எரிச்சல்களை ஏற்றுக்கொண்டு ஒரேமுகமாக எல்லோரையும் இசைய வைப்பது ஒரு சோதனையாகும் .
பழங்காலத்தில் முகமது சந்திர பிம்பமோ என்ற பாட்டு வரியில் இசுலாமியக் கருத்திருக்கிறது உடனே மாற்றுங்கள் என்று ஒரு நடிகர் சொல்லி ” வதனமோ சந்திர பிம்பமோ ” என்று மாற்றியதைக் கவியரசர் சுரதா ஒரு கதையாகச் சொன்னார் .
மொழிப்புலமை கூடப் பெரிதில்லை .மொழி தெரியாதவர்கள் கூடப் பாடலைத் திருத்துவார்கள் .”
பாயும் ஒளி நீ எனக்கு – பார்க்கும் விழி நான் உனக்கு
என்ற பாரதியார் பாடலைப் பாட வராது என்று ஓர் இயக்குநர் சொன்னாராம் .மிக உயரிய பாடல் அது என்று உடனிருந்தவர் சொன்னாராம் .எதற்கும் சுப்பிரமணிய பாரதியாரை நாளைக்கு அழைத்து வாருங்கள் என்றாராம் .அது சரி அவர் எந்த ஊரில் இருக்கிறார் எனக் கேட்டுச் சொல்கிறேன் என்றாராம் கதையாசிரியர்
இப்படிப் பலவற்றைத் திரையுலகில் நிகழ்ந்ததாகச் சொல்வார்கள் .எழுத்தில் எண்ணிக்கையில் அதிட்டமில்லை என்று சொல்லும் ஆரூடம் நாடறிந்தது .ஆனால் எந்த நம்பிக்கையும் கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ” நீர்க்குமிழி ” என்ற பெயரைத்தான் தன் படத்துக்கு வைத்தேன் என்று குறிப்பிட்டார் . .
மேலும் பாடல் எழுதுகிறவன் , கவிஞன் கற்றுத் தெளிந்தவன் என்ற மனப்போக்கை நிலை நிறுத்துவது அரிய செயலாகும் .
ஒரு நிகழ்ச்சியைக் கவியரசர் முத்துலிங்கம் சுட்டிக்காட்டியதை அவர் சொற்களிலேயே படிக்கலாம் .
தலைவர் படத்தில் ஒரு பாடல் ஒலிப் பதிவும் ஆகிவிட்டது. ஆனால் தலைவர் இப் பாடலைக் கேட்டுவிட்டு ஆயலோட்டுவது போல் வருகின்ற இப்பாடலில் பொதுக்கருத்துகள் எதுவும் வரவில்லை. ஆகவே வேறு இசைக்கோலம் போட்டு வேறு பாடலை எழுதுங்கள் என்று அவரே சில கருத்துக்களை எழுதி எந்தெந்த வகையில் வரிசைப்படி அவை வரவேண்டும் என்று அவர் கைப்படவே எழுதிக் கொடுத்திருந்தார்.
அதன்பிறகு நான் எழுதி அவர் ஒப்புதல் பெற்ற பிறகு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்தான் படத்தில் இடம் பெற்றது.
“பழத் தோட்டம் என் தோட்டம் பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவணெடுத்தா திண்டாட்டம் கன்னி நானொரு அம்பாட்டம்
கனிதேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே ”
என்று பாட்டு தொடரும்
இப்பாடலில் ” கனிதேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே ” என்றொரு வரி வரும். “குயில் என்ன கனிகளையா தின்னும்? கனிதேடும் கிளியினமே” என்று எழுதியதை மாற்றுங்கள் என்று இயக்குநர் . சங்கர் கூறினார்.பலபேர் ” குயில் கனி தின்னாது ” என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு.
தமிழ்க்கடல் உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியரான திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதுபோல் குயிலுக்கும் மாங்கனி என்றால் மிகவும் பிடிக்கும். குயில் விரும்பி உண்ணும் கனிகள் மாங்கனியும், நெல்லிக்கனியும்தான். பறவைகளின் உணவுப் பழக்கம் என்ற நூலில்கூட இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றேன்.
கனிகள் இல்லாத நேரத்தில் எதைத் தின்னும் என்று மடக்கினார். மாங்கொழுந்தைத் தின்னும் என்றேன். அவர் மலர்ச்சியை முகத்தில் காட்டினார்.இப்படியெல்லாம் கேட்டால் கவிஞர் என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்துகொள்ளச் சில நேரத்தில் இப்படிக் கேள்விக் கொக்கியைப் போட்டு இழுக்கப் பார்ப்பார்கள் . சாமர்த்தியமாகப் பதிலுரைத்தால் தட்டிக் கொடுப்பார் இயக்குநர் .
இல்லையென்றால் நீ லாயக்கில்லை என்று பட்டென்று சொல்லிவிடுவார். நான் எழுதிப் புகழ்சேர்ந்த பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களுக்கு இந்த இயக்குநரே முதலடியை எடுத்துக் கொடுத்திருக்கிறார். நல்ல தமிழார்வம் உள்ள இயக்குநர்.
பாடல்களுக்கான காட்சியைப் படமாக்குவதில் சிறப்புக்குரிய இயக்குநர்களில் கே. சங்கர் குறிப்பிடத்தக்கவர். .
திரு சங்கர் இயக்கிய பல படங்களுக்கு நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் புரட்சித்தலைவர் நடித்த ” இன்று போல் என்றும் வாழ்க” என்றொரு படம். அதில் இரண்டு பாடல்கள் எழுதினேன்.
நாகரிகம் என்ற பெயரில் பண்பாட்டைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் தலைவர் பாடுவதுபோல ஒரு காட்சி. ” பாதை மாறிப் போனவரே பயணம் எங்கே சொல்லுங்கள் ”
என்றொரு பல்லவி எழுதி அதற்கு இசை மீட்டினோம் . பெருந்தகை எம்.எஸ்.விசுவநாதனைப் பார்க்க வந்த இயக்குநர் ஸ்ரீதரிடம் காட்சியைச் சொல்லி இந்தப் பல்லவியைச் சொல்லிப் பாடிக் காட்டினார்
அதன்பின் வேறு இரண்டு பல்லவிகள் எழுதி இசையமைத்துக் காட்டினோம். “பாதை மாறிப் போனவரே” என்று சொல்லக் கூடாது. நான் பாடுவதில் அப்படிப்பட்ட பாதை மாறியவன் என்ற கருத்து வரக் கூடாது என்றார் . பல்லவிகள் எழுதி டியூன் போட்டோம். அதில் ஒன்றை மிகவும் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார். *
தலைவர் தேர்ந்தெடுத்த அந்தப் பாடல் தான் , நாடெங்கும் பாடப்பட்டது .
” அன்புக்கு நான் அடிமை –
தமிழ்ப்பண்புக்கு நானடிமை –
நல்ல கொள்கைக்கு நானடிமை –
தொண்டர் கூட்டத்தில் நானடிமை
.
.
இந்தப்பாடலை அரசப்பெருமிதம் வாய்ந்த புரட்சித்தலைவர் பாடியபோது நாடே அவருடைய பணிவின் சிறப்பை பலபடப் பாராட்டியது .பணியுமாம் என்றும் பெருமை என்ற திருக்குறள் எதிரொலிக்க முத்துலிங்கத்துக்கு இப்பாடல் முத்து மாலையாக அமைந்தது .
ஒருமுறை தமது பாடலில் கோட்டையில் பறக்கும் நமது கொடி என்ற தொடரைப்பார்த்துப் புரட்சித்தலைவர்
நமது கொடி என்றால் கட்சிக்கொடி என்றாகிவிடும் .தணிக்கைக் குழுவினர் அதனை எடுத்து விடுவார்கள் .மீன் கொடி என்று மாற்றுங்களேன் என்று வேண்டுமானால் மீன் கொடி என்று எழுதலாமே என்றாராம் .மீன்கொடி என்பதை விட மகரக்கொடி என்பது தத்தாகாரத்திற்குப் பொருந்தி வருகிறது என்றார் கவிஞர் முத்துலிங்கம் மேலும் தலைவர் பாடிய பாடல் வரியைத் தணிக்கையாளர் எடுக்க மாட்டார் என்று சொல்லித் திரும்பினார் .
தணிக்கையாளரிடமே நேரில் சென்று எனது பாடல் வரியைக் கூறினேன் .நமது கொடி என்ற சொல் நன்றாக அப்படியே இருக்கட்டும் என்றார் .என் மனம் குளிர்ந்தது .புரட்சித்தலைவர் மனம் அன்பால் நனைந்தது .
அவர் எனக்காக நீங்கள் செய்த இந்த முயற்சியை நான் என்றும் மறக்கமாட்டேன் .யார் இப்படித் தணிக்கை அலுவலகத்துக்கே சென்று வாதாடுவார்கள் என்று நன்றியோடு என்னைப் பாராட்டினார் .
அவர் நெஞ்சில் நான் இருப்பதைப் போலவே என் நெஞ்சிலும் புரட்சித்தலைவர் நிலையாக அமர்ந்துள்ளார் என்றார் .
புரட்சித்தலைவர் கையில் இருப்பது ரேகையல்ல ஈகை என்று எழுதியவரும் கவிஞர் தான் .
கவிஞர் முத்துலிங்கம் பல்லாண்டு வாழ்க !
தொடர்வோம் …
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
– ஒளவை நடராசன்
thamizhavvai@hotmail.com

Add a Comment