நேர்மைக்கோடு – நெற்றியில் தெரிந்தது !
தஞ்சையில் நான் பணியாற்றிய போது என் காலணியைப் பழுது பார்த்த ஒரு முதியவரைக் கண்டேன் .நலிந்த அம்முதியவரை நான் விடுதிக் காப்பாளராக இருந்த இல்லத்தின் முகப்பின் மூலையில் இருந்தபடி பணியைச் செய்தார் .நான் தஞ்சையை விட்டுத் தில்லி சென்ற பிறகு ஒரு நாள் என் முகவரிக்கு 23 ரூபாய் பணவிடை வந்தது .
அதை வாங்கிய போது என் கைகள் நடுங்கின .கண்கள் கலங்கின .அந்த பணவிடையில் இருந்த குறிப்பு என்னை நெகிழ வைத்தது .
என் தந்தையார் தங்கள் காலணியைப் பழுது பார்த்த போது நீங்கள் 100 ரூபாய் தந்தீர்களாம்.அவர் இப்போது மருத்துவமனையில் உள்ளார் .அவருக்குச் சேர வேண்டியது 77 ரூபாய் தானாம் .இந்த 23 ரூபாயை அவருக்கு எப்படியாவது அனுப்பு என்று சொன்னாராம் .முகவரியைக் கேட்டு அதனை அனுப்புகிறேன் .
இப்படிக்கு அப்பாவின் தொழிலைத் தொடர்ந்து வரும் அப்பாஸ் என்று எழுதியிருந்தார் .
நேர்மை எந்த வடிவத்திலும் வாழ்வதை நினைவு படுத்துவதற்கு .
இன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது .
எனக்குக் காரோட்டியாய் இருந்த திரு .சங்கர் என் மகனுக்கும் அந்தப் பணியைத் தொடர்ந்தார் .எல்லையில்லாத தீய பழக்கத்தால் அவரைப் பணியிலிருந்து நிறுத்த நேர்ந்தது .இது நடந்து 18 மாதங்கள் ஆகின்றன .மறந்து போய் என் மகன் அருள் ஒரு காசோலையைச் சங்கர் என்ற பெயருக்கு அனுப்பப் சொன்னாராம் .
அவர் குறிப்பிட்ட சங்கர் வேறோர் அலுவலர் . பிழையாக அவர் காரோட்டி சங்கருக்குக் காசோலையை அனுப்பிவிட்டார் . திரு சங்கர் நலிந்து – மெலிந்த நிலையில் தான் பெற்ற காசோலையை உடனே மாற்றினாராம் .இது எனக்குச் சேரவேண்டிய தொகை இல்லை என்று நேற்று வந்து அருளிடம் திருப்பித் தந்த போது அவன் கைகள் நடுங்கின .அருளுக்குக் கண்கள் கலங்கின .
நேர்மை எந்த நிலையிலும் சிலரை விட்டு நீங்காமல் அவர்களுக்கு நல்வாழ்வைத்தரும் என்றே நம்புகிறேன்
நெற்றியைச் சுருக்கி என்னை அவர் நிமிர்ந்து பார்த்த போது அவர் நெற்றியின் கோடு நேர்மைக்கோடாக எனக்குத் தெரிந்தது .
ஒளவை நடராசன்

Add a Comment