POST: 2021-01-28T10:04:33+05:30

வில்லுக்கும் சொல்லுக்கும் வெற்றி மாலை !

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுமே களிப்பே
என்ற தொடருக்குப் பொருள் விளக்கத்தை
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக
அரங்கத்தைக் கலகலப்பாக்கி உயர்த்திய
பெரும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும்

வில்லிசை வேந்தர் கலைத்திலகம்
சுப்பு ஆறுமுகமும் பதும விருது
பெற்றிருப்பதைக் கண்டு
நாடு எல்லையில்லாத
மகிழ்ச்சிப் பெருமிதம் பெறுகிறது .

தவத்திரு அடிகளாருக்குப் பிறகு
பட்டிமண்டபத் தலைமை என்றால்
பேராசிரியர் பாப்பையாவின்
தலைமை என்று
மக்கள் மகிழ்ந்து
வரவேற்றனர் .

கலைவாணருக்குப் பிறகு
கையில் ஏந்திய வில்லிசையால்
பல்லாயிரம் மக்களை
களிப்புக்கடலில் மிதக்க வைத்த

அண்ணல் சுப்பு ஆறுமுகம்
பன்முகத்திறமை வாய்ந்த
பண்பாட்டுத் திலகம் .

” வில் ” என்றால்
கவிஞர் சுப்பு ஆறுமுகம்
” சொல் ” என்றால்
பேராசிரியர் சாலமன் பாப்பையா

அரங்கம் ஆகுபெயராக்கியே
இவர்களை அழைக்கிறது .

பத்ம விருதுக்குப் பொலிவு மிகுந்துள்ளது .

வில்லும் – சொல்லும் வெல்க !
பல்லாண்டு பாடுவோம் !.

அன்போடு
ஒளவை நடராசன்
26 1 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *