மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 70
மாளிகையில் மணி விளக்கு
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
” மாந்தருக்குள் ஒரு தெய்வம் ” என்று ஆண்ணல் காந்தியடிகளைப் போற்றிய பேராசிரியர் கல்கி எழுதிய தொடர் நூலாகவும் வெளி வந்துள்ளது.மாந்தர் என்று சொன்னால் உலக மக்கள் அனைவரையும் குறிக்கும்.
நாமும் மனிதர்கள் தான்.காந்தியடிகள் நம்மோடு தான் பிறந்தார்- வளர்ந்தார், அதனாலேயே அவரையும் நம்மைப் போன்ற மனிதர் என்று அழைக்க முடியுமா, அதனால் தான் மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்று தலைப்பிட்டேன் என்றார்.தியாகத்தால் – திறமையால்- வள்ளன்மையால் மன்னிக்கும் மனஉறுதியால் புத்தாக்கத்தால் உலக மக்களினத்திலிருந்து வேறுபட்டுச் சிலர் தெய்வங்களாகின்றனர்.வாழ்வாங்கு என்று வரும் ஒரு திருக்குறட்சொல்லில் ஆயிரம் உயர் பண்புகளை நாம் அடைத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு வாழ்ந்து தன் புகழை நிறுவியவர் பொன்மனச்செம்மல்.” மானுடம் இவர்தான் அல்லர் என்றும் மனிதருள் தலையாய மனிதர் தாமே”
என்று இலக்கியங்களில் மாமுனிவர் அரவிந்தர், மீமனிதர் என்றே எதிர்காலத்தில் அமையும் சமுதாயம் பற்றிக் கருத்துரைத்தார் .
.” ஒளிவிளக்கு” என்ற திரைப்படத்தில் புரட்சித்தலைவர் தீக்கிரையாகும் ஒரு குழந்தையைச் சுற்றி எரியும் நெருப்பு வளையத்திலிருந்து பாய்ந்து காக்கும் ஒரு நிகழ்ச்சி வருகிறது.அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத் தீக்குள் பாய்ந்த நிலையில் இவரும் ஆட்பட்டு உயிருக்குப் போராடுவார்.அப்போது அவர் குணமடைய வேண்டும் என்பதற்காக உருக்கமான ஒரு பாடல் அமைவதாகக் காவியக் கவிஞர் எழுதிய பாடல் கோடிக்கணக்கான மக்கள் துதித்துப் போற்றும் வாழ்த்துப் பாடலாக விளங்கியது.
ஒருமுறை கவியரசர் வாலி புரட்சித் தலைவரைக் கானச் சென்ற போது ஜானகி அம்மையார் கவிஞர் வாலியின் வரி தான் எமனிடத்திலிருந்து உங்களை மீட்டுத்தந்தது என்று கண் கலங்கக் கூறியதைப் பொறியாளரும் புகழ் வாய்ந்த கவித் திலகமாகவும் வாழும் நெல்லை ஜெயந்தா என்னிடம் ஒருமுறைகுறிப்பிட்டார்.
அந்தப்பாடல் பின் வருமாறு:
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு, தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு,ஆண்டவனே உன் பாதங்களை- நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா…பன்னிரண்டு கண்களிலே,ஒன்றிரண்டு மலர்ந்தாலும்,என்னிரண்டு கண்களிலும்,இன்ப ஒளி உண்டாகும், உள்ளமது உள்ளவரை,அள்ளித் தரும் நல்லவரை,விண்ணுலகம் வாவென்றால்,மண்ணுலகம் என்னாகும்..மேகங்கள் கண்கலங்கும்,மின்னல் வந்து துடிதுடிக்கும்,வானகமே உருகாதோ, வள்ளல் முகம் பாராமல்,உன்னுடனே வருகின்றேன்,- என் உயிரைத் தருகின்றேன்,மன்னன் உயிர் போகாமல்,இறைவா நீ ஆணையிடு.
புரட்சித்தலைவரோடு நெருங்கிப் பழகியவர்கள் என்ற வகையில் தம் நெஞ்சங்களையே கோயிலாக்கி அவர் திருவுருவைத் தெய்வமாக்கி வழிபட்டார்கள் பலர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக மிளிர்ந்து மனித நேயச் செம்மலாக இளமையோடும்- புகழோடும் திகழும் பெருந்தகை சைதை துரைசாமி. அவர் தொடங்கிய பயிற்சிக்கல்லூரியில் பயின்று நூறு பேராவது இந்திய ஆட்சிப் பணியில் வெற்றி பெற்று அவரை நினைவு கூர்கிறார்கள்.” இந்தப் பணியெல்லாம் எனக்கு என் தலைவர் காட்டிய வழியாகும்” என்று எப்போதும் சொல்வார். புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்றே அவர் நினைவு நாளில் எழுதிய வரைவு என்னைக் கவர்ந்தது.
அக்கட்டுரையின் சில பத்திகள் வருமாறு: ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர்’ சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ – என்று ‘மன்னாதி மன்னன்’ படத்தில் பாடியபடியே, புரட்சித்தலைவர், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இன்றும் சமாதியில் காது வைத்து,எம்.ஜி.ஆரின் கடிகாரச் சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார்.புரட்சிதலைவர் பிறந்த தினத்தில் நினைவில் கொண்டு வந்து பதிவு செய்துள்ளார்.
திரையரங்குகளில் எல்லோரும் வணிக ரீதியாக பொழுதுபோக்குப் படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில்,புரட்சித்தலைவர் மட்டும் மனித நேயச்சிந்தனை,நேர்மை,வாய்மை,உழைப்பு,குடும்ப உறவு,முதியோருக்கு மதிப்பு என வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படங்களை வெளியிட்டார்.ஏழைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் புரட்சித் தலைவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது.உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உழைப்பாளி,தொழிலாளி,விவசாயி,ரிக்க்ஷாக்காரன்,மீனவ நண்பன் என்று படங்களுக்குப் பெயர் சூட்டித் தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் இணைய வைத்தார். உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு,அது வெற்றியும் அடைந்தது என்றால், அது புரட்சித்தலைவரின் படங்கள் மட்டும் தான்.
தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும்,சாதனையாக மாற்றிக்காட்டியவர் புரட்சித்தலைவர்.அதனாலே,எம்.ஜி.ஆரை தெய்வப் பிறவியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்குப் புரட்சித்தலைவர் தயாராக இருந்தார்.பங்கீட்டு அரிசி வழங்குவதைப் புரட்சித்தலைவரின் அரசு ஏற்கவில்லை என்ற காரணத்தால்,மத்திய தொகுப்பிலிருந்து அரிசி தருவதை மத்திய அரசு நிறுத்தியது.உடனே,பொங்கியெழுந்து அண்ணா நினைவகத்தில் புரட்சித்தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.
மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடிவந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது வரலாறு.
ஒருமுறை எம்.ஜி.ஆர்.தூத்துக்குடி அருகே,கைக்குழந்தைகளுடன் சில தாய்மார்களைக் கண்டார் . ‘காலையில் சாப்பிட்டீர்களா’ என்றார்.இல்லை.காலையில் சமைக்க நேரமில்லை.மாலையில் சென்று ஒரே வேளையாகச் சமைத்துச் சாப்பிடுவோம் என்றனர்.அதிர்ந்தார் புரட்சித்தலைவர்.
சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்.சத்துணவுத்திட்டம் பிறந்தது.பெண்கள் தங்கள் குழந்தைகளை பட்டினி போடாமல் உண்ண வழி வகுத்தது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து,பணிப் பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டிவர் புரட்சித்தலைவர்.
ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த மீனவர்,நெசவாளர்,பனையேறுவோர்,கட்டிடத்தொழிலாளர்,கைவண்டி இழுப்போர்,மாட்டுவண்டி ஓட்டுவோர்,பீடி சுற்றுவோர்,சுமை ஏற்றி இறக்குவோர்,மண்பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக நலவாரியங்கள் அமைத்து,குறைந்தபட்ச ஊதியம்,குடும்ப ஓய்வூதியம்,திருமண உதவி,கல்விஉதவி,விபத்து நிவாரணம்,சேமிப்பு பலன் போன்ற நல உதவிகளை வழங்கி,அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் புரட்சித்தலைவர்.
நான் இப்படி நினைக்கிறேன் என் மனதுக் கேற்றவகையில் நலத்திட்ட உதவிகளுக்கு வடிவம் தர வேண்டும் என்று அரசுசெயலாளர்களை ஒன்றாகக் கூட்டி விவாதித்து அதற்குரிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு பிறகுதான் அதற்கு வடிவம் தருவார்.எந்த வகையிலாவது எள்ளளவும் அத்திட்டம் முடிந்துவிடக் கூடாது என்று விழிப்பாகவும் இருந்தார் .
முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும், முதியோர்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததும் புரட்சித் தலைவர்தான்.சாதி,மதத்தின் பெயரால் மக்களுக்குக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார்.’உரிமைக்குரல்’ படத்தில், ‘தாழ்த்தப்பட்ட சாதி உயர்த்தப்பட்ட சாதிங்கிறது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்து வைத்த கொடுமை,என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே சாதி தான்,அது மனித சாதி’ என்று வசனம் பேசுவார்.மேலும், தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவிகிதம் என உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்டியதும், புரட்சித்தலைவர் தான்.’நாடோடிமன்னன்’ படத்தில், ‘வேலை செய்ய முடியாத முதியோர்கள், கூன்,குருடு,முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கத் தொழில் நிலையங்கள் அமைக்கவும்,பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னது போலவே தன்னுடைய சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் உயில் எழுதி வைத்தார். நடிகர், முதல்வர் என்பதைவிட ,புரட்சித் தலைவர் என்றாலே ஞாபகத்துக்கு வருவது,அவரது வள்ளல் தன்மைதான்.’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ – என்று’பணம் படைத்தவன்’ படத்தில் பாடியது போலவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.
புரட்சித்தலைவரின் வள்ளல் தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்ல முடியும் .அவை எல்லாவற்றையும் அடுக்குவதை விட,1961 ஆம் ஆண்டு ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவர் மழைக்கோட்டு வழங்கும் விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது மட்டுமே போதுமானது.’புயல் மழையால்– சேதம் வரும் இடங்களில் எல்லாம்,எங்கள் புரட்சிநடிகர் உதவியினைக் காணலாம்.தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல்.தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல்.ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அப்படியல்ல,சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய்,அவன் கண்ணீரைத் துடைத்துக் கை கொடுக்கிற எம்.ஜி.ஆர்.வள்ளலுக்கெல்லாம் வள்ளல்’ என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த நேரம் ஒரு நாள் மராட்டிய மாநிலத்திலிருந்து, விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் பேரன் அப்போது தமிழ்நாடு மேல் சபைத் தலைவராக இருந்த சிலம்புச்செல்வர் மூலம் எம்ஜிஆரைச் சந்திக்க வந்தார் .மராட்டிய மாநிலம் புனே நகரில் திலகருக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.அதற்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவி செய்ய வேண்டும் என திலகரின் பேரன் எம்ஜிஆரிடம் வேண்டினார் .
உடனே , தன் உதவியாளரை எம்ஜிஆர் அழைத்து அவர் காதில் ஏதோ சொன்னார் .சிறிது நேரத்தில் உதவியாளர் ஒரு காசோலைப் படிவத்தை எடுத்து வந்தார் .அதை வாங்கிய எம்ஜிஆர் ரூபாய் ஐம்பதாயிரத்துக்குக் காசோலை எழுதி கையெழுத்துப் போட்டு அதை சிலம்புச்செல்வர் மூலமாக திலகரின் பேரனிடம் கொடுத்தனுப்பினார்.
நான் அரசாங்கத்திடமிருந்து தான் நிதி எதிர்பார்த்து வந்தேன்.முதலமைச்சர்
அவரது சொந்தப் பணத்திலிருந்தே இவ்வளவு
பெரிய தொகையைக்
கொடுத்து விட்டாரே
எனத்
திலகரின் பேரன்
ஆச்சர்யத்துடன்
நின்றார் .
இதைக் கேட்ட எம்ஜிஆர் அரசாங்க நிதியிலிருந்து கொடுக்க வேண்டுமென்றால், அதற்காக நான் எழுதும் கடிதம் கோப்பாக உருவாகி ,முறைப்படி பல்வேறு துறைகளுக்குச்- சுற்றாகப்போய், அந்தக் கோப்பு என் கைக்குத் திரும்புவதற்குப் பல மாதங்களாகும்.அதைத் தவிர்ப்பதற்காகவே நானே அளித்து விட்டேன் என்று கூறினார்.முகமறியாதவர்களுக்கும் – முகமலர்ச்சியுடன் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவே எம்ஜிஆர் வாழ்ந்து
வரலாறு படைத்தார்.
இப்படியொரு தனி மனிதப்பண்பு,கலைத்திறன்,நிர்வாகத்திறன்,ஏழைகளிடம் கனிவு,ஊழல் இல்லாத மக்களாட்சி,தனக்கென சொத்து சேர்க்காத குணம்,வள்ளல்தன்மை,அறம் சார்ந்த வாழ்க்கை,உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால் தான்,புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்கிறேன்.
தொடர்வோம் …
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
– ஒளவை நடராசன்
thamizhavvai@hotmail.com

Add a Comment