POST: 2022-12-19T14:38:22+05:30

தின செய்தி – பக்கம் எண். 4 (19.12.2022)

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 84

தமிழறிஞர்களுக்கு வேண்டுகோள்

– முனைவர் ஔவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருந்த மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்து நிகழ்த்திய பேருரை தமிழ்மொழி, இன வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பவை.

கலைஞரின் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுத் தொடக்க உரையில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றது எப்படி என்பதை விளக்கி உரைத்தார்.

அந்த உரை வருமாறு.

“தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஒலித்து வந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின், தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ் செம்மொழியென அறிவிக்கப்பட்டது,” என்று, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

மாநாட்டுக்குத் தலைமை வகித்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.

கோவையில் நடைபெறுகின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமெனத் தமிழர்கள் வந்துள்ளனர்.

கோலமிகு கோவை மாநகரிலே உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன்.

இதுவரை, ‘உலகத் தமிழ் மாநாடு’ என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்துள்ளன.

முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடக்கும் மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு.

முன்னர் நடந்தவை, ‘உலகத் தமிழ் மாநாடுகள்’, இப்போது நடைபெறுவது, ‘உலகத் தமிழ்ச் செம்மொழி’ என்பதில், உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை.

தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலகமொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ‘ஞால முதல்மொழி தமிழே’ என்று, நிறுவிக் காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில் சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, உலகமொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப்பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப்பெயர்கள். நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள் போன்றவை, தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன.

தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலகமொழிகளில் இல்லாததால், தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது.

உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது.

இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என, அறியலாம்.

கி.மு. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் சாலமனுக்கு, தமிழகக் கப்பல்கள் மயில் தோகையையும், யானைத் தந்தங்களையும், வாசனைப் பொருட்களையும் கொண்டு சென்றன.

வடமொழியில், வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் இருப்பதை, ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார்.

இதிலிருந்து, வடமொழிக்கு முன்பே தமிழிருந்தது என்பதை, அறியலாம்.

வால்மீகி இராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன.

இது, லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக்கருதப்படுகிறது.

கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர்,

தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

கி.மு.350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞர் காத்தியாயனார் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பாரதப்போர் பற்றிய குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன் 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது, இரு பக்கப் படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்தக் காரணத்தால் உதியஞ்சேரலாதன் – சேரன் பெருஞ்சோற்றுதியன், சேரலாதன் என்று அழைக்கப்பட்டார்.

பாரதப்போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது.

அப்படியானால், இந்த சேரனின் காலம் கி.மு. 1500ஆக இருக்க வேண்டும்.

இவையனைத்தும் தமிழ் இனம், தமிழ்மொழியின் தொன்மையையும் புலப்படுத்துகின்றன.

பேரறிஞர்களான ஜான்மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், ‘திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்’ எனவும், அவர்களின் மொழி திராவிட மொழி தான் எனவும் உறுதிப்படுத்துகின்றனர்.

‘சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

சிந்துவெளிக் குறியீடுகளைப் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்’ என்று, கடந்த 40 ஆண்டுகளாக சிந்துவெளிப் பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார்.

இன்று, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ பெறும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா, ‘சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை’ என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே, என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் அவர் விரிவாகக் கூறியிருக்கிறார்.

அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது.

தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது.

சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை, கடல் வழியாகப் பயணம் செய்து உஜ்ஜயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்றும் வாணிகம் செய்தார்கள்.

தமிழக வாணிகர், அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தார்கள்.

அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளைப் பேசிய மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

தமிழ்நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேர நாட்டின் ‘முசிறி’ துறைமுகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர்.

இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று.

அதன் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பினால் தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத்தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி, செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெறறிருந்தால்தான், அது செம்மொழியாகும்.

இந்தப் பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்தத் தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத்தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒரு மனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தமிழ், செம்மொழியே என, முதன் முதலில் குரல் கொடுத்த, தமிழறிஞர் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர் ‘தமிழ்’ செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டு அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.

அயர்லாந்து நாட்டில் ‘ஷெப்பர்ட்ஸ் காலனி’ என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை வட்டத்தில் இடையன்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர்.

அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார்.

தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் குரல் கொடுத்தன.

தவிர, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச.அகத்தியலிங்கம், வா.செ.குழந்தைசாமி, ஜான் சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராசன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும்,

டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல்.ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர்.

எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்தக் குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று.

ஆனால், சோனியாவின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான், தமிழைச் செம்மொழியென பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

கடந்த 2004, அக்., 12ல் தமிழ் செம்மொழி பிரகடன அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக் காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல், குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்குப் பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இது.

இதனால்தான் தமிழின் பெயரால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், இந்த மாநாடு கோவை மாநகரில் நடைபெறுகிற- ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை, எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும்; சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர், கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இது வரை மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை.

அதன் காரணமாகவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது.”

இவ்வாறு கலைஞர் பேசினார்.

தமிழறிஞர்களுக்கு முத்தமிழறிஞர் வேண்டுகோள்

“தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,” என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்கவிழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள ‘டி’ ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது.

ஆய்வரங்கத்தைத் துவக்கி வைத்து, முதல்வர் கலைஞர் பேசியதாவது:

தமிழ்மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்தடும் வகையில், அதனை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துகளையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கிறோம்.

தமிழ்மொழி – தமிழர் பண்பாடு – நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெடுப்பின் போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது.

ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதியதெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும்.

அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது.

திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.

இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக்குடும்பம்.

அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர்.

1927ல் ஜான் மார்ஷலின் சிந்து வெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது.

அதன்பின்பே, தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில் உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

திராவிடம் தந்த செழிப்பும், வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் இரவீந்திரநாத்தாகூர்.

வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார் சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப்.

காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப்பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர்.

பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் ‘குருக்கர்’ என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.

அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது.

ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்து வெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.

உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும் உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்கிறார் சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திர தோவ்.

எழுத்து முறையை எகிப்தியருக்குக் கொடையாகக் கொடுத்ததும் திராவிடர்களே.

மெசபடோமியா நாகரிகமும், எலாமியர் ஏற்றமும் குமரிக் கண்டத் தமிழரிடமிருந்து சென்றவை. பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில், மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த ‘ஒனசு’ என்பவர், தமது குழுவினருடன் வந்தார், நாகரிகம் கற்பித்தார், ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார், அறிவியல் கலை, கட்டடக் கலை, ஆண்டவன் வழிபாட்டையும் கற்றுக் கொடுத்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

சங்ககாலம், கி.மு.4வது நூற்றாண்டின் தொடக்கக் காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.

இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய ‘தமிழர் தோற்றமும், பரவியதும்’ என்ற நூலில் “மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே” என்று கூறியுள்ளார்.

தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை.

அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும், திணை, துறை வகுப்பும், அகப்பாடல்களும், தூய காதலைப் போற்றும் மரபும், மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை.

திருக்குறள் போல அற இலக்கியம் எந்த மொழியிலும் இல்லை.

சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை.

ஆசியா முழுவம் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலிமொழியிலும் இல்லை.

எல்லாச் சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக் கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப்பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்துத் தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி.

திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம், தமிழினம், மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் இரசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி.1053வது ஆண்டைச்சேர்ந்த 85 செப்பேடுகள், கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலமாகும்.

தஞ்சையை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக்குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது.

இந்தச் செப்பேடு, மாநாட்டுக் கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது

உத்திரமேரூர்க் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப்பதிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்களாகும்.

இந்த பெருமையையெல்லாம் தமிழர்கள்தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆனால், தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலை தான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தமிழன், புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை முதலில் தமிழன் உணர வேண்டும்.

தமிழ், தமிழினம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதனைகள், ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமிதம் தருபவை.

அந்தப் பூரிப்போடு இருந்து விடாமல், தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன.

இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப்பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும்.

வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய்க் கலைக்களஞ்சியங்களும் வர வேண்டும்.

இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

உயிருள்ளவரை தமிழுக்காகப் பாடுபட, நம்மைத்தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட, நமது தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட, உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நமக்கு அளித்துள்ளது.

எனக் கலைஞர் பேசினார்.

தொடர்புக்கு:thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *