POST: 2022-12-08T10:45:22+05:30

தினசெய்தி – 5 12 2022 –
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் -138

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

முனைவர் ஔவை அருள்

பேரறிஞர் டி. என். சேஷாசலம் அவர்கள் மொழியின் மாபெரும் வளர்ச்சியைப் பற்றி தமிழர்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக 85 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை இன்றும் அக்கருத்திற்கு ஏற்ப மின்னி மிளிர்வதை பின்வரும் கட்டுரையில் காணலாம்.

ஆண்டவன் ஒருவனேயாயினும் பற்பல நாட்டு மக்கள் அவனுக்குப் பற்பல திருநாமங்களைத்தந்து வழிபடுமாறுபோலச் சொல்லின் கிழத்தியாகிய கலைவாணியும் பற்பல நாட்டுமொழிச் சார்பினாலே பற்பல உருவங்களை வகித்தாள்.

ஆதியிலே நான்முகக் கடவுளது நாவிலிருந்து வேதத்தை யருளி, இடைக்காலத்திலே வேதவியாசரது நாவினின்று மாபாரதத்தைத் தோற்றுவித்துக் காளிதாசனை யுள்ளிட்ட உத்தமக் கவிகளது நாவிலே களி நடம்புரிந்தாள் ஆரியவாணி.

இமயத்திற்கு வடபாலதாய் உத்தர குருவெனப் புராணங்கள் கூறும் போக பூமியையுள்ளிட்ட தாய், நாற்பது கோடி மக்களுக்கு உறைவிடமாகிய சீனத்திலே தோன்றிய கவிவாணரது நாவினை இருப்பிடமாகக் கொண்டாள் சீனவாணி.

பண்டைக்காலத்திலே, யவனபுரத்தாரோடு போர் மலைந்தும் நட்புப்பூண்டும் மேற்றிசைக்குங் கீழ்த்திசைக்கும் நடுநாடாகி. அக்கினி தேவனை வழிபடுவோருக்கு உறைவிடமாகிப் பொலிந்த செல்வப் பாரசீகப்பழந் தேசத்து மக்கள் களிகூரும் வண்ணம் அந்நாட்டுப் புலவர் நாவின்று கவிசுரந்தளித்தாள் பாரசீகவாணி ஹோமார் என்னும் அந்தகக் கவியின் நாவிலிருந்து துரோயம் என்னும் ஈலிய நாட்டிலே நிகழ்ந்த போரினை விரித்துக்கூறும் ஈலிய காவியமும், அப்போர்க்களத்திலே சிறந்து விளங்கிய உலீசன் (Ulysses Odysseus) என்னும் வீரனது நிகழ்ச்சிகளைக் கூறும் உலீச காவியமும் ஆகிய வீரகாவியங்களை அளித்தும், ஐய்க்கிலீஸ், அரிஸ்தொபனீஸ், இயூரிப்பிடீஸ், என்னும் நாடகக் கவிகள் வாயிலாக என்றும் புலராது யாணர் நாட்செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மைய வாகிய அழகிய நாடகங்களை அளித்தும், பிண்டார் என்னும் சுவிவாணர், சஃபோ என்னுங் கவியரசி வாயிலாக அசுப் பொருட்டுறை தழுவிய இசைப் பாடல்களைத் தோற்றுவித்தும், சோக்ரத்தீஸ், பிளேத்தோ, அர்ஸ்தாத்தில் என்றித் தொடக்கத்த தத்துவ ஞானிகள் வாயிலாக உண்மைநூல், ஒழுக்கநூல்களைத் தோற்றுவித்தும் பண்டை யவனமொழிக்கு ஆக்கமளித்தாள் யவனவாணி. உரோமவாணி. இத்தாலியவாணி, ஜெர்மானியவாணி, பிராஞ்சியவாணி, ஆங்கிலவாணி யென்றின்னோரெல்லாம் யவனவாணியின் செல்வப் புதல்வியரே யாவர்.

கணிதம், சிற்பம், வைத்தியம், காவியம், தர்க்கம், தத்துவம் என்னும் அருங்கலைகளுக்கெல்லாம் தாயகம் யவனபுரமேயாகும்.

ஆதலினாலன்றோ. மேனாட்டுக் கலைக்கழகங்களிலே, யவனபுரத்து மொழியாகிய கிரேக்க மொழியும் உரோமருக்குரிய லத்தீன் மொழியும் பெரிதும் கற்சுப்பட்டு வருகின்றன.

எலிசபெத்து இராணி காலத்திலே, அமெரிக்காக் கண்டத்துப் பொருட் செல்வமும் பழைய யவன புரத்துக் சுலைச்செல்வமும் ஆங்கில நாட்டிற்கு உரியவாயின.

ஸ்பென்சர் என்னும் மகாகவி ‘அரமடந்தையர் இராணி’ என்னும் பெருங்காப்பியத்தோடமையாது அழகு பொருந்திய சிறு காப்பியங்கள் பலவற்றையும் செய்தார்.

”ஆயன் நாட்குறிப்பு” என்பது அவற்றுள் ஒன்று.

அது இயற்கை வனப்பினைக் கூறுவது.

பலவகையிலும் ஆங்கில நாடு பொலிவுற்ற இக்காலத்திலேதான் செகசிற்பியார் (ஷேக்ஸ்பியர்) என்னும் சிறந்த நாடகக் கவிதோன்றினார்.

இவருடைய கவிவனப்பினை ‘மதங்கசூளாமணி’ யென்னும் நூலிலே சற்று விரிவாகக் கூறியிருக்கின்றோம்.

யூலியஸ்சீசர் எனும் நாடகத்தின் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பை ஈங்குத் தருகின்றோம்.

இந்நாடகத் தலைவராகிய யூலியஸ்சீசர் பராக்கிரம சாலியென்றும் சேனைத்தலைவரென்றும் முன்னர்க் குறிப்பிடப்பட்டார்.

உரோமாபுரியில் வாழ்ந்த காஷியஸ் எனப் பெயரிய சனத்தலைவனொருவன் கஸ்கா, திரேபோனியஸ், லிகாறியஸ், டேசியஸ், சின்னா. கிம்பர், என்பாரையும் நீதிமானும் யூலியஸ்சீசரது நண்பனுமாகிய மார்க்கஸ் புரூட்டஸையுந் தன்வயப்படுத்திப் பங்குனித் திங்களின் நடுநாளில், நண்பகலில், அத்தாணி மண்டபத்தில், யூலியஸ்சீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்பாடு செய்தனன்.

குறித்த தினத்திற்கு முன்னாளிரவில் விண்வீழ் கொள்ளிகளும், தூமகேதுக்களும் பலவகை உற்பாதங்களுந் தோற்றின.

யூலியஸ் சீசரின் மனைவி கல்பூர்ணியா தீக்கனாக்கண்டு அச்சமுற்றெழுந்து, புறத்தே நிகழ்கின்ற உற்பாதங்களினால் உள்ளம் அவலித்துத் துயிலொழித்திருந்து, காலைப்பொழுது வந்ததும் கணவனது முன்னிலையை யடைந்து,

பேரிரவில் நடந்தவெலாம் பீழையினை விளைக்கப்

பேதலிக்கும் உளச்சிறியேன் பேசுகின்ற மொழிகள்

ஆருயிர்க்குத் தலைவ! நின தருட்செவியில் வீழ்க,

அகத்திடையின் றிருந்திடுக. அவைபுகுத லொழிக.

எனக் குறையிரந்துவேண்டி நின்றனள்.

அதனைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து,

அஞ்சினர்க்குச் சதமரணம். அஞ்சாத நெஞ்சத்(து)

ஆடவனுக்(கு) ஒருமரணம், அவனிமிசைப் பிறந்தோர்

துஞ்சுவர்என், றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்

துன்மதிமூ டரைக்கண்டாற் புன்னகைசெய் பவன்யான்

இன்னலும்யானும் பிறந்த தொருதினத்தில் அறிவாய்;

இளஞ்சிங்கக் குருளைகளயாம். யான் மூத்தோன் எனது

பின்வருவது இன்னல்எனப் பகைமன்னர் அறிவார்,

பேதுறல்பெண்ணணங்கே யான் போய்வருதல்வேண்டும். எனக் கூறினர்

இத்தருணத்தில் டேசியஸ் என்பவன் வந்து அத்தாணி மண்டபத்திற் குழுமியிருந்த முதியோர், சீசரை அழைந்து வரும்படி சொல்லியதாகத் தெரிவித்தான்.

சீசர் முதலிலே மறுத்துப் பின்பு இசைந்து உடன்போயினர்.

வழியில் ஒரு சேவகன் ஒரு நிருபத்தைக் கொண்டுவந்து கொடுத்து, ‘இது சீசருடைய சுகத்தைக் கோரியது, இதனையுடனே படித்தருளவேண்டும் எனச் சீசர் கையிற் கொடுத்தனன்.

‘நல்லது நண்ப! சனங்களுடைய சுகத்தைக் கோரிய நிருபங்களைப்படித்த பின்பு இதனைப்படிக்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சீசர் அத்தாணி மண்டபத்தை நோக்கி நடந்தனர்.

அங்குச் சிம்பர் என்பவன் முற்பட்டுவந்து முழந் தாட்படியிட்டு நின்று, மஹௌதாரிய மஹாப் பிரபுவே! ஏழையேனது விண்ணப்பத்திற்கிரங்கி ஏழையேனது சகோதரனை மன்னித்தருளவேண்டும். என வேண்டி நின்றனன்.

சீசர் அவனை நோக்கித்,

தாழ்ந்து மென்மொழி யுரைத்திடேல், தரணியிற் பணிந்து

வீழ்ந்து தைபவர் பொய்யுரைக் கிரங்கிய வீணர்

சூழ்ந்து செய்தன துடைத்துப்பின் சோர்வினை யடைவார்

ஆழ்ந்து செய்வன செய்யும்யான் அவர்தெறி அணையேன்;

அண்ணல் நீர்மையேன் பிழைசெயேன், அணுவளவேனும்

தண்ணும் நீதியிற் பிரித்திடேன். நாயெனக் கதறிக்

கண்ணில் நீர்மிக நிலத்தினிற் புரள்வதாற் கருதும்

எண்ணம் முற்றுறும் என்னநீ எண்ணுவதிழிவே.

எனக் கூறச் சார்ந்து நின்ற மார்க்கஸ் புரூட்டஸ் சீசரை நோக்கி. ‘

ஐய! நான் இச்சகம் பேசுவேனல்லேன், தேவரீரது திருக்கரத்தை முத்தமிட்டேன், சிம்பரின் விண்ணப்பத்துக்கிரங்கி அவரது சகோதரனை விடுதலை செய்தல் வேண்டும்’ என்றனன்.

சமீபத்தில் நின்ற காஷியல் சீசரை நோக்கி, ‘மகிமை பொருந்திய சீசரே ! மன்னிக்கவேண்டும்! உம்மிருதாளினையும் பற்றினேன்.

சிம்பரின் சகோதரனை விடுவிக்கவேண்டும்’ என்றனன்.

சீசர் தம்மைச் சூழ்ந்து நின்று விண்ணப்பித்தோரை நோக்கி,

இரங்குதிர், என்ன இரக்கும் நீர்மையர்

தமைப்பிறர் இரக்கிற் றயைகாட் டுநரே!

நும்போல் வேனெனின், நும்மொழிக்கு இசைவேன்;

வானகம் மிளிரும் மீனினம் அனைத்தும்

தற்சூழ்ந் தசையத் தானசை வின்றி

நிலைபெறு துருவன் நிலைமைகண் டிலிரோ?

வான்மீன் அனையர் மாநில மாந்தர்;

துருவன் அனையன் ஒருவனீங் குளனால்:

அவன்தான் யான், என அறிகுவிர், புகன்ற

மொழியிற் பிரியேன்: பழியொடு படரேன்;

மலைவீழ் வெய்தினும், மனம்வீழ் விலனே,

எனக்கூறினார்.

இதனைக்கேட்ட புரூட்டஸ் ஆதியோர் சீசரது பெருமிதவுரையை தற்பெருமையுரையென வெண்ணி, உடை வாளை உருவி அனைவரும் ஏகோபித்துச் சீசரை வெட்டினார்கள்.

‘நீயுமா புரூட்டஸ்’ என்னும் உரையோடு சீசர் வீழ்ந்து மரணித்தனர்.

———————–

சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்,

‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில்

இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில்

16.02.2021 அன்று

பேசிய உரைக் குறிப்பின் முழு வடிவம் பின் வருமாறு…

பகுதி 1

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக” எனத் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புறநானூற்றில் பாடியிருக்கிறான்.

இப்படித்தான் இன்றைக்கும், தமிழர்களுக்கு ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதனாக மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் வாய்த்திருக்கிறார்.

அவரோடு இங்குத் தலைமை ஏற்றிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் அவர்களையும் போற்றுகிறேன்.

எதற்காகப் போற்றுகிறேன்?

கடந்த ஓராண்டாகக் கிருங்கை சேதுபதி போன்ற மேடை நாயகர்களுக்கும் சரி (அவர், திங்கள் தோறும் பல கூட்டங்கள் பேசிவிடுவார்), என்னைப் போன்ற எளிய தமிழாசிரியர்களுக்கும் சரி (நான் திங்கள் தோறும் குறைந்தது ஒரு கூட்டமாவது பேசுவேன்), ஒரே திண்டாட்டமாகப் போய்விட்டது.

கொரோனா காரணமாக, ஒரு மேடைகூடக் கிடைக்கவில்லை எங்களுக்கு.

ஓராண்டாக நாங்கள் எல்லாம் இணையவழியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

என்றாலும், இப்படி மாணவர்களைப் பார்த்து ஒலிபெருக்கி முன்பாக நின்று பேசுகிற அந்தப் பழைய மகிழ்ச்சியான நாள்கள் இனிமேல் வரவே வராதோ என்று ஏங்கியிருந்த ஓர் இடைக்காலத்தில், அதுவும் கடந்துபோய்விட்டது என்று எண்ணும்படியாக இந்த ஓர் அருமையான வாய்ப்பை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

அதற்குத் தோள்கொடுத்துத் துணையாக மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் செயல்பட்டிருக்கிறார்.

இப்போது இங்கே என் அருமை நண்பர் அருள் நடராசன் பேசுகிறபோதுகூட, எனக்கு என் தமிழ் ஆசான் ஒளவை நடராசன் அவர்களுடைய நினைவு திடீரென்று வந்துவிட்டது.

ஒளவைக்கும் அருளுக்கும் தோற்றத்திலும் பேச்சு நடையிலும் தான் எவ்வளவு ஒற்றுமை!

ஒளவை நடராசன் வழக்கமாகச் சொல்லுவார்: ”

விழா எடுக்காவிட்டால், தமிழன் விழுந்துவிடுவான்” என்பார்.

ஆகவே, இந்த விழாக்கள், கருத்தரங்குகள் எல்லாம் – பொதுச் சமூகத்தில் தமிழின் அறிவுப் பண்பாட்டுப் பரவலுக்குப் பயன்படுகின்றன என்பதுதான் இங்குக் கருத்து.

இந்தப் பேச்சு மேடைகள், நம்முடைய இலக்கிய – இலக்கண வளத்தை, தமிழ் மாணவச் சமூகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன.

இவற்றை ஒழுங்கு செய்கின்ற பணி, மிகப் பெரிய ஒரு பணி.

இந்தக் கொரோனா காலத்தில், தமிழ் ஆய்வுக் கூட்டங்களைச் சிறப்பாக ஒருங்கிணைக்கும் பணியை, நீண்டதொரு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தான் முன்னெடுத்திருக்கிறது.

இத்தகைய செயல்களைத் தற்போது செய்வது எளிதானதில்லை.

இப்போது நமது கூட்டங்கள் – கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழ் மன்றங்கள் என்று எங்குமே நடைபெறுவதில்லை.

இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்தான், அரும்பாடுபட்டுத் தமிழ் ஆய்வுப் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்,மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஆகிய இருவருக்கும் இதற்காக நான் எத்தனை முறை நன்றி பாராட்டினாலும் அது தகும்.

நண்பர் முனைவர் அருள் நடராசன் அவர்களிடமிருந்து, இரண்டு வாரங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

உரைவேந்தர் பற்றிய நினைவுச் சொற்பொழிவுக்கு நீங்கள் வரவேண்டும் என்றார்.

நான், இராமேஸ்வரத்தில், டாக்டர் அப்துல்கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக இருக்கிறேன்.

சென்னை வந்து செல்வதென்றால், வருவதற்கு 13 மணி நேரம், திரும்பப் போவதற்கு 13 மணி நேரம் என்று பயணத்திலேயே 26 மணி நேரம் ஓடிவிடும்.

இப்படி நயமாகச் சொல்லி அருளிடம் இந்த வாய்ப்பை மறுப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, உருக்கமாக அருள் சொன்னார்:

“அப்பா நீங்கள்தான் வந்து பேசவேண்டும் என்கிறார்” என்றார்.

நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன.

இதற்குள் உரைவேந்தரைப் பற்றி எப்படிப் பேசத் திட்டமிடுவது என்று நான் மலைக்கிறேன்.

இருந்தாலும், என் தமிழ் ஆசான் ஒளவையே சொல்லிவிட்ட பிறகு, அந்தச் சொல்லை என்னால் எப்படி மீற முடியும்? ”

உறுதியாக நான் வருகிறேன்” என்று வந்த வாய்ப்பை மறுக்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு உடன்பட்டுவிடுகிறேன்.

காலஞ்சென்ற என் தந்தைக்கு நிகரான பெரியவர் ஒளவை நடராசன் அவர்கள் சொன்ன பிறகு, எனக்கு அதைவிட வேறு உரிய பணி ஏதுமில்லை என்பதனால்தான், நான் இந்தப் பெரும் பொறுப்பை ஏற்க நேர்ந்தது.

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
( 05.09.1903 – 03.04.1981) அவர்களை, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலமை மரபின் கடைசிக் கொழுந்து என்று தயங்காமல் நான் சொல்வேன்.

அப்படித்தான் நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்.

ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, கணேசையர், உ.வே.சா., ரா.ராகவையங்கார்
(இவரைப் பிரம்ம ராட்சசன் என்பார் ஒளவை நடராசன்),

மு.ராகவையங்கார்,
ந.மு. வேங்கடசாமி நாட்டார், மா.இராசமாணிக்கனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, பெருமழைப்புலவர், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், வ.சுப.மாணிக்கனார், மு.வரதராசனார் முதலிய பெரும் புலமை வாய்ந்த தமிழ்ப் பேரறிஞர்களின் வரிசையில் முதன்மையானவராக விளங்கியவர் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்களைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இத்தகையதொரு பெரும் புலமை மரபு, மீண்டும் இந்த மண்ணில் மலருமா என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறிதான்.

ஒரு பழந்தமிழ் நூலுக்கு உரை எழுதுவது என்பதை, ஏதோ ஓர் எளிய பணியாகத்தான், இன்றளவிலும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதாவது, சொல்லுக்குப் பொருள் சொல்லுவதுதான் உரையெழுதுவது என்று புரிந்துகொண்டிருக்கிறோம்.

வெறும் சொல்லுக்குப் பொருள் சொல்லுவதா புலமை மரபு?

பழந்தமிழ்ப் பண்பாட்டின் ஒழுகலாறுகளையும் விழுமியங்களையும் உரைகள்வழிப் பதிவுசெய்யும் மாபெரும் திருப்பணியல்லவா அது!

ஒரு சான்றுக்காகச் சொல்லுகிறேன். வகுப்பறைகளில் தமிழ் மாணவர்களுக்குப் பதிற்றுப்பத்தை நடத்துவது என்பது எவ்வளவு உழைப்பைக் கோருவது என்பது, தமிழாசிரியர்களுக்குக்குத் தெரியும்.

அந்தப் பதிற்றுப்பத்திற்கு, எவ்வளவு நுட்பமாக, நம் உரைவேந்தர் உரை செய்திருக்கிறார் தெரியுமா?

இன்றைக்குப் பதிற்றுப்பத்தை வகுப்பறைகளில் தெளிவுற நடத்தும் ஒவ்வொரு தமிழாசிரியரும் உரைவேந்தருக்குத்தான் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.

பதிற்றுப்பத்து சங்கச் செய்யுள். இன்னொரு பக்கத்தில், சமணப் பனுவலான – தோலாமொழித்தேவரின் – சூளாமணிக்கும்

ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் உரை செய்திருக்கிறார்.

அது மட்டுமா? பரவலாகப் பலரும் படித்தறியாத யசோதர காவியத்திற்கும் உரையெழுதியிருக்கிறார்.

இரட்டைக் காப்பியங்களில் மணிமேகலைக்குச் சிறந்ததோர் உரை செய்திருக்கிறார்.

அடுத்து அருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பாவிற்கும் உரையெழுதியிருக்கிறார்.

திருவருட்பாவின் ஆறு தொகுதிகளுக்கும் முழுதாக உரையெழுதியிருக்கிறார்.

பொதுவாக இன்றைக்கு உரை எழுதுபவர்களைப் பார்த்தீர்கள் என்றால், உரைநூல்கள் அதிகமுள்ள சங்க இலக்கியங்களுக்கும் காப்பியங்களுக்கும் அல்லது திவ்வியப் பிரபந்தத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உரையெழுதுபவர்களாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

இவர்கள் யாருமே, ஐஞ்சிறு காப்பியங்களுக்கும் சிற்றிலக்கியங்களுக்கும் சித்தாந்த சாத்திரங்களுக்கும் உரையெழுதத் துணிந்துவிட மாட்டார்கள்.

காரணம் என்ன தெரியுமா? பழைய உரைகள் அருகிய இவற்றுக்கெல்லாம் உரையெழுதப் பெரும் புலமை தேவை என்பதுதான் ஒரே காரணம்.

உரைவேந்தர் சங்க இலக்கியத்திற்கும் எழுதுவார்; சிற்றிலக்கியங்களுக்கும் எழுதுவார்; ஐம்பெரும் காப்பியங்களுக்கும் எழுதுவார்; ஐஞ்சிறு காப்பியங்களுக்கும் எழுதுவார்; அருட்பாவுக்கும் எழுதுவார்; சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் எழுதுவார்.

இப்படிப் பரந்துபட்ட ஒரு பன்மைத்துவப் புலமைத்திறத்திற்குத் தலைசிறந்த சான்றுகளாக, நமது ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்களின் உரைநூல்கள் திகழ்கின்றன.

இங்கு நான் ஒரு மணி நேரம் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

உரைவேந்தரைப் பற்றிப் பேசுவதற்கு ஒருநாளே போதாது என்னும்போது, இந்த ஒரு மணி நேரமெல்லாம் எப்படிப் போதும்?

எனினும், கொரோனா காலம் என்பதால், குறித்த காலத்தையும் மனத்திலிருத்தியே இங்குப் பேச முனைகிறேன்.

வளரும் . . . .

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *