POST: 2022-11-17T11:25:43+05:30

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகைக்கான காசோலையும்,

புதிதாக உருவாக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருதினை திரு. எண்ணரசு கருநேசன் அவர்களுக்கும் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் திரு சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

உலகெங்கும் தமிழ் மொழியின் சிறப்பினைப் பரப்பிடும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட கோரிக்கைக்கேற்ப நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த ஐம்பதாண்டு காலமாகத் தமிழ்ப் பண்பாட்டினை சீரோடும் சிறப்போடும் போற்றிப் பாதுகாத்து வரும் அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்படி ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை. அமைப்பின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு 3 இலட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.

கப்பலோட்டிய தமிழர் வ. உ.சி. விருது
இந்திய விடுதலைப் போரில் மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி எழுச்சி பெறச் செய்த பெருமைக்குரிய கப்பலோட்டிய தமிழர் வ. உ சிதம்பரம் அவர்களின் பெயரில், அன்னாரின் 150ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு 3.9.2021 அன்று உருவாக்கப்பட்ட புதிய விருதினை முதன்முதலாக, திருவாரூர் மாவட்டம். மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் வெட்டிக்காடு கிராமத்தில் கருநேசன் தொண்டைமான்-கமலம் இணையரின் மகணக பிறந்து 33 ஆண்டுகளாகத் துறைமுகம் மற்றும் சரக்குப் பெட்டகத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திப் பெட்டக ஏற்றுமதி – இறக்குமதியை எளிதாக்கியதோடு மும்பை, முந்தரா, சென்னை, காமராசர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி பல சாதனைகளைச் செய்தவருமான கப்பல் பொறியியல் தொழில்நுட்ப வித்தகர் பொறிஞர் திரு. எண்ணரசு கருநேசன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு தொழில்கள் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு,

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம். இஆ ப

மற்றும்

தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் வரப்பெற்ற செய்திப் பரல்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *