POST: 2022-10-16T11:42:24+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 131

உரைவேந்தரும் இலக்கியப் பணியும்

முனைவர் ஔவை அருள்,

முனைவர் ஔவை நடராசன் அவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாநகரிலிருந்து 13.10.1986 அன்று அருளுக்கு எழுதிய கடித சுருக்கம்.

“ஒரே English atmosphere-ல் என்னைத் தவிர இன்னொருவரானால் திக்குமுக்காடி விடுவார்கள்.

முதல்நாள் வந்து சேர்ந்ததுமே இங்கே பனிக்காற்று வீசுகிறது.

In view of the arrival of the guest of honour we have arranged this Conference என்று ஆங்கில வரவேற்பு.

20 நிமிடம் ஒரு கச்சேரி.

பிறகு நான் 5 நிமிடம் ஆங்கிலத்தில் நன்றி சொல்லி முடித்தேன்.

எங்கே தமிழில் பேசுவிடுவீர்களோ என்று பயந்தோம்.

நல்ல வேளையாக ஆங்கிலத்தில் அற்புதமாகப் பேசுகிறீர்கள்.

You are a learned scholar என்று பலர் கை குலுக்கினார்கள்.

எனக்கல்லவா என் வேதனை தெரியும்!

இரவு 10 மணிக்குத் திரும்பினேன்.

அங்கே நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூக்கக் கலக்கம்.

வழக்கம் போல சாப்பாட்டுக் கஷ்டம்.

Golden Jubilee Inauguration முடிந்தது.

என் பேச்சு எவ்வளவு வேகம் தெரியுமா.

7 நிமிடம் மட்டும் தான்.

பாட்டு, நடனம், நான் தலைவருக்கு பொன்னாடை போர்த்தியது, முதலமைச்சர் வாழ்த்துப் படித்தது, திருக்குறள் நூல்களை கொடுத்தது. இவைகள் எல்லாம் முடிந்தது.

அங்கேயே Tea & Toast இப்படியாக இன்றைய விழா – பல நண்பர்கள் என்னைப் பார்த்துக் கேள்விக்கேட்டு அங்கேயே Discussion செய்கிறார்கள்.

Whites, Coloured, Black, Indian Tamils என்று பலரைப் பார்க்க முடிகிறது.

நிற வேறுபாடு எனக்கு தெரியாது.”

முனைவர் ஔவை நடராசன் அவர்களின் உரைச் சுருக்கம்:

“திருமிகு சு.த.முதலி அவர்களே,

[கௌரவ செயலாளர், மியர் பேங்க் தமிழ்ப்பாடசாலை சபை]

கடந்த 120 ஆண்டுகளாகத் திரைகடலோடித் தென்னாப்பிரிக்காவை வாழ்வகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இந்தியத் தமிழ் மக்கள் இந்தியப் பண்பாட்டையும் குறிப்பாகத் தமிழ்க்கரை, இயல், இசை, நாடகம் ஆகியவற்றைக் கண்போல் போற்றிக் கருத்தாக வளர்த்து வருகிற செய்தியை நான் அறிந்து மகிழ்கிறேன்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழிக்கேற்றவாறு தென்னாப்பிரிக்காவில் வாழ்கின்ற தமிழர்கள் அங்குள்ள மக்களோடு நன்கு பழகித் தோழமையும் நட்புணர்வும் வளர்த்து வருகிறார்கள்.

தமிழ்க்கல்வி பெருக, தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் வளர, தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்கள் ஆற்றிவரும் பணிகள் போற்றத்தக்கனவாகும்.

உலகெங்கும் வாழும் அயலகத் தமிழர்கள் தமிழ் கற்கவும் தமிழ்க் கலை, தமிழ் நாகரிகப் பண்பாடுகளைப் பேணி வளர்க்கவும் தேவைப்படும் உதவிகளை யெல்லாம் தமிழக அரசு இயன்றவரை செய்து வருகிறது.

அயலகத் தமிழர்களோடு கலை பண்பாட்டு உறவு கொள்வதற்காக உலகத்தமிழ்ச் சங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

அச்சீரிய நோக்கம் வெற்றிபெறத் தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழ் நிறுவனங்களும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.”

தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாநகரில் அமைந்துள்ள மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலை அமைப்பைச் சேர்ந்த திரு. ஆதிமூலம் நடேசன் அவர்கள் இவ்வாண்டுத் தொடக்கத்தில் இயற்கை எய்திய தருணத்தில், எந்தையார் வரைந்த இரங்கற் செய்தி:

“தர்பன் மாநகரில் மியர்பாங்க் தமிழ் மாமன்றத்தின் தூணாக மிளிர்ந்தவர்கள் பண்பாளர் திரு. முதலியும், அறச் செம்மல் ஆதிமூலம் நடேசன் (6.11.1922-20.3.2022) அவர்களுமாவார்.

அன்பு, அடக்கம், பண்பு, பரிவு, ஆர்வம், மனிதநேயம், எங்கும் எதற்கும் தன் பெயர் சொல்லாத கொடைத் தகைமை இத்தனை பண்பு நலங்களையும் மொத்தமாகச் சேர்த்தால் திரு. ஆதிமூலம் நடேசன் அவர்கள் தான் நினைவில் நிற்பார்.

உயர்ந்த திருவிளக்காக அமைந்த துணைவியார், ஒப்பற்ற புதல்வர்கள் என்று புகழ் பூத்துக் குலுங்கிய பூஞ்சோலையாக அந்தக் குடும்பம் ஒளிவீசுகிறது.

என்னை மறந்தாலும் என் மகன் பரதன் மீது அளப்பரிய பாசம் காட்டிவரும் செம்மல் மார்கனைப் பற்றிப் பரதன் பாராட்டாத நாளில்லை.

மார்கன் என் உயிர் காத்த உறவுகொண்டவர்.

என் மகன் பரதன் – நிசா திருமணத்திற்காக டர்பன் மாநகரிலிருந்து திரு. நடேசன் குடும்பத்தோடு வந்து வாழ்த்தியதை நினைவு கூர்கிறேன்.

எங்கள் குடும்பத்தை மதித்த நிகழ்ச்சியாக அம்மா அடிக்கடி நெகிழ்ந்து குறிப்பிடுவார்கள்.

முதுமை கனிந்த 99 ஆவது வயதில் தான் திரு. ஆதிமூலம் நடேசன் மறைந்தார் இருந்தாலும் இந்தப்பிரிவு பெரும்பிரிவு.

பண்பாட்டின் திலகமாக வாழ்ந்த திரு. ஆதிமூலம் நடேசன் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறி அமைதி பெறுகிறேன்.

என் மனம் இன்றும் 1986 இல் நான் பங்குகொண்ட மியர்பேங்க் மாமன்றத்திலேயே தேங்கித் ததும்புகிறது.

வாழ்க மார்கன் குடும்பம்!
வளர்க நடேசனாரின் புகழ்!
வெல்க இந்திய – தென்னாப்பிரிக்க நல்லுறவு !

Mr Morgan Nadesan is a Bright Jewel of the family and his Administration and Affection are Unattainable.

I Remember his Generosity and Life Saving Magnanimity.

I wish all the Best for Your Family.

With Remorseful Feelings
Dr Avvai Natarajan”
———————

உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களைப்பற்றி தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் வரைந்த நெடுங்கட்டுரை (1)

ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையின் இலக்கியப் பணி

முன்னுரை:

அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
புதியதொரு ஆண் ஒளவை என வியப்பான்
பூரிப்பான் மகிழ்ச்சியிலே மிதப்பான், மற்றோர்
அதிமதுரக் கருநெல்லிக்கனி கொணர்ந்தே
அளித்துங்கள் மேனியினைக் காதலிக்கும்
முதுமைக்குத் தடை விதிப்பான் நமது கன்னி
மொழி வளர்க்கப் பல்லாண்டு காத்திருப்பான்.

– கவிஞர் மீரா

என்ற கற்பனை நயம் செறிந்த பாடலில் கவிஞர் மீரா உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளையைப் புகழ்ந்து கூறுகிறார்.

5-9-1902-இல் தோன்றி, 1981இல் தமது எழுபத்தொன்பதாம் வயதில் பூதவுடலை நீத்த உரைவேந்தர் இன்றும் நம்மிடையே அவரது நூல்களின் வழியே வாழ்கின்றார்.

ஒளவை துரைசாமிப் பிள்ளையின் வாழ்வு

இன்றைய திண்டிவனத்திற்கு அருகில் ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் கர்ணிகர் மரபில் சுந்தரம் பிள்ளை-சந்திரமதி இணையரின் ஐந்தாம் மகனாகப் பிறந்த ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, அவ்வூரிலேயே தொடக்கக் கல்வி பயின்று திண்டிவனத்தில் அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்று சிறப்பாகத் தேறினார்.

தொடர்ந்து வேலூர் ஊரிசுக் கல்லூரியில் அந்நாளைய இண்டர் மீடியட் என்னும் இடைநிலை வகுப்பில் பயிலத் தொடங்கினார்.

எனினும் சூழ்நிலைகள் உந்தித் தள்ள, படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டுச் சுகாதார ஆய்வாளார் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார்.

ஒளவை அவர்களின் தந்தையார் இலக்கியப் பயிற்சியும் கவிதையியற்றும் திறனும் உடையவராகத் திகழ்ந்தமையினால் ஒளவைக்கும் இளமையிலேயே இலக்கிய ஆர்வம் மிக்கிருந்தது.

இதனால் முறையாகத் தமிழ் இலக்கியம், இலக்கணம் பயிலும் பெருவிருப்புடன் சுகாதார ஆய்வாளர் பணியைத் துறந்து கரந்தைத் தமிழ் சங்கத்தில் தமிழவேள் உமாமகேசுவரனாரிடம் தமிழ் பயிலச் சென்றார்.

தமிழவேள் உமா மகேசுவரனார், கரந்தைக் கவியரசு சு.வேங்கடாசலம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலான சான்றோர்களிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் முதலியன பயின்று 1930-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான் தேர்வெழுதி வெற்றி பெற்றார்.

கரந்தையில் பயின்ற காலத்திலேயே ஏடு பெயர்த்து எழுதும் பணியில் ஈடுபட்டவர் அவர்.

தமிழவேள் உமாமகேசுவரனாரின் தனிப்பட்ட அன்பிற்குரியவராக இருந்த ஒளவை துரைசாமிப் பிள்ளை அவருடைய ஆசிரியரைப் போன்றே ஆங்கிலப் புலமை மிக்கவராகவும் திகழ்ந்தார்.

ஒளவையின் வாழ்க்கைத்துணைவியாக அமைந்தவர் லோகாம்பாள் அம்மையார் ஆவார்.

இவர்களின் இல்லறத்தின் பயனாகப் பதினொரு மக்கள் பிறந்தனர்.

ஆற்றிய பணிகள்:

கரந்தையில் கல்வியை முடித்த பின்னர், வட ஆர்க்காடு மாவட்டக் கழக, (District Board) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராக இவர் பன்னிரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார்.

உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் போது பணி நிமித்தமான இடர்ப்பாடுகளுக்கு நடுவில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுதல், ஏட்டுச் சுவடி படித்துச் சோதனை செய்தல், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல் என உழைத்து வந்த ஒளவை பெரும்புகழ் பெற்று விளங்கினார்.

அவரது பெருமைகளை உணர்ந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவரைத் தன்பால் ஈர்த்துக்கொண்டது.

1943ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகத் தொண்டாற்றினார்.

இந்தக் காலகட்டத்தில் தான் சைவ இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலிய அரிய நூல்கள் இவரால் எழுதப் பெற்றன.

புறநானூறு நூலுக்கு உரை எழுதும் பணியையும் இங்கு மேற்கொண்டார்.

தியாகராசர் கல்லூரியில்
ஒளவை அவர்களின் அருமை பெருமைகளை உணர்ந்த கலைத்தந்தையவர்கள் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் 1951-இல் பேராசிரியராகப் பணி நியமனம் செய்தார்.

ஆசிரியப் பணியை ஊதியம் பெறும் பணி என்று கருதாமல், தெய்வீகப் பணியாகவே கருதிச் செயல்பட்டுப் பெயரும், புகழும் பெற்றார்.

ஒளவையவர்களிடம் பாடம் பயின்று தமிழை வளப்படுத்தித் தாமும் வளம் பெற்று வாழ்ந்த மாணவர்கள் பலராவர்.

அவர்களுள் தமிழகச் சட்டமன்றத் தலைவராகக் கடமையாற்றிய புலவர் க.கோவிந்தனும் ஒருவர்.

ஒளவை துரைசாமிப்பிள்ளையின் வாழ்வு பல்வேறு ஏற்ற இறக்கங்கள் கொண்டது.

எனினும் பிள்ளை எச்சூழலிலும் தமிழ்ப் பற்றினையும் கடும் உழைப்பினையும் கைவிடவில்லை.

வாழ்வில் அவர் பெற்ற பல்வேறு பெருமைகளுக்கெல்லாம்-உரைவேந்தர் விருது உள்பட-அவரது அயராத உழைப்பே காரணம் எனலாம்.

இன்றுபோல் தகவல் தொடர்புச் சாதனங்கள், மின்னணுத் தொடர்பியல் வசதிகள் இல்லாத காலத்தில் கடும் உழைப்பின் வழியே அவர் சிகரங்களை எட்டிப் பிடித்தார்.

இன்றைய தலைமுறை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி இதுவாகும்.

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்

ஒளவை துரைசாமிப் பிள்ளையின் மாணவர்களுள் சிலர் தம் ஆசிரியரைப் பற்றிய நூல்களை வெளியிட்டுள்ளனர்.

1. ஊர்ப்பெயர்- வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)
2. ஐங்குறுநூறு உரை
3. ஒளவைத் தமிழ்
4. சிலப்பதிகார ஆராய்ச்சி
5. சிலப்பதிகாரச் சுருக்கம்
6. சிவஞானபோதச் செம்பொருள்
7. சிவஞானபோத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
8. சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
9. சீவக சிந்தாமணிச் சுருக்கம்
10. சூளாமணி
11. சைவ இலக்கிய வரலாறு
12. ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13. தமிழ்த்தாமரை
14. தமிழ் நாவலர் சரிதை பழைய உரையும்
15. திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
16. திருவருட்பா மூலமும் உரையும், (9 தொகுதிகள்)
17. திருவோத்தூர் தேவார திருப்பதிகவுரை
18. தெய்வப்புலவர் திருவள்ளுவர்
19. நந்தாவிளக்கு
20. நற்றிணை உரை
21. பதிற்றுப்பத்து உரை
22. பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
23. பரணர்
24. புதுநெறித் தமிழ் இலக்கணம் ( 2 பகுதிகள்)
25. புறநானூறு மூலமும் உரையும் (2 பகுதிகள்)
26. பெருந்தகைப் பெண்டிர்
27. மணிமேகலை ஆராய்ச்சி
28. மணிமேகலைச் சுருக்கம்
29. மதுரைக்குமரனார்
30. மத்தவிலாசம் மொழிபெயர்ப்பு
31. மருள்நீக்கியார்
32. யசோதர காவியமும் மூலமும் உரையும்
33. வரலாற்றுக்கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)
34. Introduction to the study of Thiruvalluvar

(1. தி. நா. அறிவொளி, ஒளவை துரைசாமிப்பிள்ளைவாழ்க்கைக் குறிப்பு,

2. கோமான். ம.வி. இராகவன், ஆசிரியப் பெருந்தகை ஒளவை துரைசாமி,

3. பி.வி.கிரி. (தொ.ஆ.) உரை வேந்தர்க்கு ஒரு நூற்றாண்டு,

4. கு.சிவமணி, 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர் ஒளவை சு. துரைசாமி (கருத்தரங்கக் கட்டுரைகள்)

இவை தவிரப்

பண்டிதமணி வித்துவான் சாம்பசிவனார் சாகித்திய அகாதெமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை என்ற நூலினை எழுதியுள்ளார்.)

உரை எழுதும் பணி

ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களின் தமிழ்ப்பணிகளில் தலை சிறந்தது அவரது உரை விளக்கப் பணி. உரையின் முதன்மை நோக்கம் பாடலின் பொருளை வாசகர்களுக்கு விளங்க வைத்தல்.

பாடலின் கருத்துக் குவியலுக்கிடையே பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் நயங்களை வெளிக்கொணர்ந்து பாடலின் சிறப்பினை மிகுதிப் படுத்துதல், ஆழ்ந்திருக்கும், கவிஞரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து படைப்பின் உண்மைத் தன்மையை உலகிற்கு உணர்த்துதல் ஆகிய கடமைகள் ஓர் உரையாசிரியருக்கு உண்டு.

சுருங்கக் கூறின் ஒரு தொல்பொருள் ஆய்வாளன், புதை பொருள் ஆய்வாளன் போல உரையாசிரியர் செயல்பட வேண்டும்.

ஒளவையவர்கள் தாம் உரை வரைந்த நூல்களில் மேற்குறிப்பிட்டவாறு தம்மை இனங்காட்டுகிறார்.

அவரது பல்துறை அறிவு நலம் அவரது உரைகளிற் புலனாகிறது. ஒரு பாடல் சான்று காணலாம்…

வளரும்…
– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *