அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 111
கடல் கடந்து முழங்கு தமிழ்
முனைவர் ஔவை அருள்,
உலக நாடுகளில் தமிழை அங்கிங்கெனாதபடி கொண்டு செல்ல வேண்டும் என்பது பல வெளிநாட்டு தமிழர்களின் ஏக்கமாகும்.
அவ்வகையில், 1936-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் டர்பன் நடால் பகுதியில் அங்கிருந்த தமிழர்கள் மியர் பேங்க் தமிழ் பாடசாலை சபையினை உருவாக்கியிருந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் பல வகைகளில் மொழியினை இளந்தலைமுறையினருக்குக் கற்பிக்க மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் இப்பாடசாலையாகும்.
14.05.1986-ஆம் நாளன்று தென்னாப்பிரிக்காவிலுள்ள மியர்பேங்க் தமிழ் பாடசாலை சபையின் சார்பாக எந்தையாருக்கு கடிதம் வரைந்து தென்னாப்பிரிக்காவுக்கு வருகை புரிய அழைப்பு விடுத்தனர்.
அவ்வழைப்பு பின்வருமாறு:-
“புலமைமிக்க உயர்திரு டாக்டர் ஔவை நடராசன்,
(M.A., M.Litt., Ph.D., D.Litt.,).
அரசாங்கச் செயலாளர்,
கோட்டை, சென்னை – 9
மிக்க மரியாதைக்குரிய ஐயா,
மேற்கண்ட கழகம் தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், வருகிற அக்டோபர் திங்கள் பொன்விழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
எல்லா வகையிலும் சிறந்த அறிஞராகிய தாங்கள் இங்கு வருகை தந்து, தலைமை வகித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று நாங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்.
தற்காலிகமாக அக்டோபர் 11, 12 ஆகிய இரு நாட்களில் பொன்விழா கொண்டாடத் தீர்மானித்துள்ளோம்.
ஐயா! தாங்கள் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, எங்களுடைய தாழ்மையான அழைப்பை ஏற்று, இங்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
மேன்மை தங்கிய தாங்கள் எளியோர்களின் அழைப்பை ஏற்று, எங்களைப் பெருமைப்படுத்தினால் அதைவிடப் பெரும் பேறு இருக்க முடியாது.
நாங்கள் என்றென்றும் நன்றியறிதல் உள்ளவராய் இருப்போம்.
எங்கள் பெருமதிப்பிற்குரிய தலைவர் உயர்திரு முனிசாமி இராமசாமி முதலியார் அவர்கள் ஏற்கெனவே இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு நற்பண்பு சம்பந்தமான ஆய்வுக்கு வந்திருந்போது தங்களைச் சந்தித்திருக்கிறார்கள்.
அவர்கள் எங்களுக்குத் தங்களுடைய பெருமதிப்பையும், சமூக அந்தஸ்து பற்றியும் பெருமையாகக் கூறினார்கள்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள பிறரும் தாங்கள் தமிழ் நாட்டில் நுண்மாண் நுழைபுழம் மிக்கவர் என்றும், சமூகத்தில் எவ்வளவு மேம்பாடுடையவர் என்றும் அறிந்திருக்கிறார்கள்.
முதன்மையாகத் தாங்கள் சம்மதம் என்று தெரிவித்தால் எங்கள் நாட்டுக்கு வர, வேண்டிய அரசாங்க ஏற்பாடுகள் செய்யக் காத்திருக்கிறோம்.
மேலும் தாங்கள் தயை கூர்ந்து தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு காலம் எந்தத் தேதியில் இருந்து எந்தத் தேதி வரையில் தங்குவீர்கள் என்று தெரிவிக்கவும்.
எங்கள் விருப்பம் என்னவென்றால் தங்களை விழா தொடங்குவதற்கு முன்னமே வரவழைத்து, விழா முடிந்த பிறகு சில காலம் எங்களுடன் இருக்க விரும்புகிறோம்.
எங்களுடைய கருத்து என்னவென்றால், தாங்கள் நாடு முழுவதும் சென்று தமிழர் பண்பாடு பற்றிப் பல சொற்பொழிவுகள் ஆற்றி இந்நாட்டுத் தமிழர்களுக்கு அறிவு கொளுத்த வேண்டும் என்பதே.
எங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்துப் பலரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் பேரவா.
தங்களுடைய போக்குவரத்துச் செலவுகள் மற்றும் உணவு உறைவிடம் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகளுக்கு எங்கள் தமிழ்க்கழகமே பொறுப்பு.
எங்களைப் பொறுத்த வரையில் இந்நாட்டு அசாங்கத்தின் பிறநாட்டு நுழைவு இணக்கம் கிடைப்பதில் எந்தவிதமான இடர்ப்பாடுகளும் இருக்காது.
தயவு செய்து விரைவில் இது சம்பந்தமாகத் தங்களின் அபிப்பிராயமும், எண்ணங்களையும் புலப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
எங்கள் நன்மதிப்பையும், நன்றியறிதலையும் மிக்க தாழ்மையுடன் புலப்படுத்திக் கொள்கிறோம்.”
அத்தமிழ்க்கடிதத்தோடு ஆங்கிலத்திலும் அதே அழைப்பினை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
“Dr. Avvai D. Nataraja,
(M.A., M.Litt, Ph.D., D.Litt)
Secretary to Government,
Fort St. George, Madras 9
Very Respected sir,
The above organisation has very great pleasure in informing you that it has chosen you as the esteemed Guest of Honour at our forthcoming Golden Jubilee Celebrations at MereBank in Durban during the middle of October, this year.
Our tentative dates are 11th and 12th.
So we have great joy in extending this invitation to you to kindly attend.
We shall be more than grateful if you will very graciously accept the invitation and consent to honour us with your esteemed presence.
Our respected Chairman Mr. Munisamy Ramasamy Moodley has already met you on 9th January 1986 when he was in India while on a cultural mission.
He has appraised us of your status and stature and has spoken about you in glowing terms.
Others in South Africa have heard about you and your high standing in the cultural world of Tamil Nadu.
Depending upon your consent in the first place, we hope to set in motion the various processes and documentations that may be necessary to arrange your visit.
You may also kindly inform us as to how long you will be able to spend in South Africa and from which date.
It is our hope to bring you to South Africa earlier and keep you with us for a while after the function.
The idea is to expose the people of our country to a series of free lectures on Indian Culture to be given by you.
Also we would like to offer you some opportunity to see the country a little and meet the people.”
To continue…
—————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (35)
பாடவேறுபாடு – புலவர்
141 அரிசில் இளங்குமரனார்.
அரிசில் என்பது காவிரியின் கிளையான அரிசிலாறு காவிரியினின்றும் பிரியும் இடத்திற்கு அருகே இருந்து மறைந்து போன ஊர்.
அரிசில் கிழார் என்னும் சான்றோரும் இவ்வூர்.
அச்சுப்படி சல்லிய குமரனார் எனத் திருத்தவே, பொதுப் பட்டியலில் இவர் பெயர் இளங்குமரனார் எனக் குறித்தமை கொண்டு மேலே குறித்த உண்மை வடிவு ஒழித்து உணரப்பட்டது.
குமரனார் சோழநாட்டையும் கிள்ளியையும் அரிசில் ஆற்றையும் இப்பாட்டின்கண் பாடுவது இவர் அரிசிலங் குமரனார் எனப்படுவதை வற்புறுத்துகிறது.
இவர் பாடியதாக இது ஒரு பாட்டு ஒழிய வேறு காணப்படவில்லை.
இப்பாட்டில் கணவன் பொருள்வயிற் பிரிவு மேற்கொள்ள வேண்டிய சூழலில் அவன் மனநிலையை உளவியல் வழி நின்று உரைக்கும் திறம் அறிதற்குரியது.
மக்கள் உயிர்க்கு அறிவு விழைவு செயல் என்ற மூவகை செயல் பண்புகள் உண்டு.
அவன் தன் பிரிவைத் தலைமகட்குப் பையக் குறிப்பிட்டு அவளை ஒருப்படுத்த வேண்டிப் பிரிவை வெறுப்பான் போல நெஞ்சை முன்னிறுத்தி அதனோடு சொல்வதனைத் தலைவியின் செவிப்புலனாமாறு சில உரைக்கின்றான்:
கொடிய சுரத்தைக் கடந்து செல்ல அஞ்சுகின்றேன் இல்லை அது பெரிதும் எளிது.
ஆனால் அம்பர் என்னும் ஊரைச் சூழ்ந்திடும் அரிசிலாற்றின் கருமணல் போன்ற கூந்தலையுடைய காதலியாகிய இவளை விட்டு நீங்கலன்.
ஆகலின் நெஞ்சே, நீ மாத்திரம் சென்று வருக”என்று கூறினான்.
காதலும் உயிரினமும்
காதல் அடைதல் உயிரியற்கை என்பர்.
இதில் மனித உயிர் மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்துமே அடங்கும்.
ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை 108ஆம் பாடல் முன்னுரையில் உரைவேந்தர் தெளிவு படுத்துகின்றார்.
இயற்கையால் உடல் இன்பத்தில் தோய்வது விலங்கிற்கும் பறவை இனத்திற்கும் ஒத்ததே யாயினும் உடம்பின் செயல் முடிந்ததும் அவை ஒன்றினை ஒன்று விலகுவது இயல்பு எனவும் எடுத்துக்காட்டி, மக்களின் மனவழி உறவுநிலை வருவதால் காதல் நெறி தோன்றுகிறது என்றும் உணர்த்துகின்றனர்.
நற்றிணைஉரைநலம் பற்றி:
“கரும்பைக் கணுகணுவாய்த் தறித்துச் சுவை காண்பது போலப் பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும்.
அம்முறையில் இவ்வுரையும் அமைந்திருப்பதால் படிக்கும் போது பல இடங்கள் உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.
இவ்வாறு தொலி நீக்கியபின் பழத்தைச் சுளைசுளையாகப் பிரித்து உண்டு மகிழ்வது போலப் பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து வரன்முறையில் அத்தெளிவுரையையும் தெளிவுபடுத்துவதும், தென்னுண் தேனில் தேக்கிய செஞ்சொற்களில் தொடுத்து உரைப்பதும் உரைநடையின் மாண்பாகும்.”
(இராதா அம்மையார்)
புலவர் பெயர்/ ஊர் விளக்கம், பொய்பொதி பொருள்
161 பெருந்தலைச்சாத்தனார்:
பெருந்தலை என்பது சாத்தனாரின் ஊர்ப்பெயர்.
பெருந்தலையூர் என்ற இவ்வூர் கோவை மாவட்டத்தில் பூவானி (பவானி) ஆறு பாயும் நாட்டில் உள்ளதோர் ஊர்.
இது பெருந்தலை எனச் சுருங்கி நிற்கிறது.
குடநாட்டு ஊர்களில் ஒன்றான சீத்தலையூர் சீத்தலை எனக் குறுகிக் (Coorg Ins. Vol. No.10) காணப்படுவது போல, இப் பெருந்தலையூரும் பெருந்தலை என வழங்கும்.
இஃது ஊர்ப்பெயராதல் விளங்குதற்கு முன், தலை சிறிது பெருத்திருந்தமையின் பெருந்தலைச்சாத்தனார் எனப்பட்டார் என்றும், சீவடியும் புண்பொருந்திய தலையை யுடைமை பற்றிச் சீத்தலைச்சாத்தனார் எனப்பட்டார் என்று பலரும் கூறிவந்தனர்.
நெடுங்களம் என்னும் ஊரவரான பரணர் என்பவரை நெடுங்கழுத்துப் பரணர் என்றும், அவரது ஊர் இறைவனை நெடுங்கழுத்து மகாதேவர் என்றும் ஏடெழுதினோர் பிழைபட எழுதினாராக, முறையே புலவரான பரணர்க்கும் இறைவனான மகாதேவர்க்கும் கழுத்து நீண்டிருந்ததாக உரைத்தோரும் உண்டு.
உண்மை புலப்படும் வரையில் பொய் பொதிந்து கொண்டிருக்கும்.
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
அந்நாளில் மக்களுக்கு அறம் முதலிய பொருட்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாலாசிரியன் என்ற பெயர் வழங்கிற்று.
பாலாசிரியர் பலர் சங்ககாலம் முதல் இடைக்காலச் சோழர் காலம் வரை இருந்துள்ளனர்.
முதல் இராசராசன் மகனான இராசேந்திர சோழன் கருந்திட்டைக்குடியில் தோன்றிய கல்வெட்டு (190 of 1894 at Tiru Vallam) ஒன்றில், பாலாசிரியன் பரமேசுவரன் சீராகவன் என்றோருவன் காணப்படுகின்றதே இதற்குப் போதிய சான்றாகும்.
பிராமணன் பாலாசிரியன் நக்கன் கொல்லி, பாலாசிரியன் சேந்தன் கொற்றனாரென வரும் பலரும் ஒருவர் மேதியராக இருத்தலால் இவரையும் வேதியரெனெக் கோடற்கு இடமுண்டு.
இப்பாலாசிரியர் கண்ணனார் ஒருவர் தொகை நூல்களுள்ளும் காணப்படுதலால், இவர் அவரின் வேறாதல் புலப்படும்.
திரு. அ. நாராயணசாமி ஐயர் இருவரையும் ஒருவராகவே கருதுகின்றார்.
இப்பாலாசிரியர் இளமையிலேயே இச்சிறப்பெய்தியது பற்றி இவர் இளம்பாலாசிரியர் எனப்பட்டார்.
இளம்பால் என்பது இவரது ஊர் என்றும், கூத்தனார் எனப்படுவதால் கூத்தாடுவதில் இவர் வல்லுநர் என்றும் சிலர் கூறுவதுண்டு.
இது கோபாலன் என்று ஒருவர் பெயர் கொண்டிருப்பது கொண்டு, அவர் ஆடு மேய்க்கும் தொழிலுடையவர் என்று கருதுவது போலும் பொருந்தாவுரையாகும் என நகைச்சுவை அரும்ப நயவுரை நவில்கிறார்.
228 முடத்திருமாறன்:
பாண்டி நாட்டு தங்கம் இரணியல் முட்டம் என்றாற் போல, தொண்டை நாட்டுக் குரங்கணில் முட்டம் ஓர் இடத்தின் பெயர் ஆகும்.
தென்னார்க்காடு மாவட்டம் சோழர் காலத்தில் இவ்வூர் முட்டம் என்றே உள்ளது.
வடகரை விருதராச பயங்கர வளநாட்டு முட்டம் என்பது கல்வெட்டு.
இது ஸ்ரீமுஷ்ணம் என மாறிவிட்டது.
பாடவேறுபாட்டிற்கும் விளக்கம்
179 உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்:
உமட்டூர் மலையான மாவட்டத்தில் சேரதாடு வட்டத்தில் உள்ளதோர் ஊர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய கண்ணனாருடைய குமட்டூர் என்பது, இந்த உமட்டூரின் வேறு பாடம்.
பரங்கொற்றனார் என்பது பெயர்; அது பாரங்கொற்றனார் என்றும் ஏடுகளிற் காணப்படுகிறது.
அதுவே பாடமாயின், பாரம் என்பது குறும்பர் நாடு வட்டத்திலுள்ளதோர் ஊராகும்.
அச்சுப் படிகளில் பரங்கொற்றனார் என்றே குறிக்கின்றன.
மறுப்பும் வரலாற்று விளக்கமும்
182 அதியன்விண்ணத்தனார் :
பண்டை நாளைச் சேரர் குடியில் உதியர், அதியர் என இரு கிளையினர் இருந்தனர்.
அவருள் உதியர் சேரநாட்டிலும் அதியர் மேற்குமலைத்தொடரின் கீழ்ப்பகுதியிலும் பரவியிருந்தனர்.
பண்டைச் சேரர் குடியையைச் சேர்ந்திருத்ததற்கு அடையாளமாக அதியமான்கள் பனந்தார் அணிந்துகொள்வது மரபு;
இவற்குப் பனந்தார் கூறியது சேரமாற்கு உறவாதலின் எனப் புறநானூற்றுப் பழைய உரைகாரர் கூறுவது காண்க.
பெரும்புகழாளன் அதியமான் நெடுமான் அஞ்சியும், அவன் மகன் பொகுட்டெழினியும் சிறந்தோராவர்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment