பொன்னேரிக்கு வாய்த்த புகழாரம் !
கவிப்பேரரசு வைரமுத்து என்னும் உலகறிந்த இலக்கியச் சோலைக்குத் தோட்டப்பணியாளர் தொடங்கித் தோழராகத் திகழும் பாசுகரன் வரை அவருடைய ஆட்சித்திறம், கணிப்பொறித்திறம், சுட்டியைக் கையாளும் ஆற்றல் என்று ஓர் அணிநிதியே எப்போதும் உண்டு.
அந்தச் சோலையில் தழைத்தவர்தான் தான் அன்பு நண்பர் பொன்னேரி பிரதாப் !
தோழர் பாசுகரன் பரிந்துரையில் என்னிடம் சேர்ந்து (12-11-2014 ) ஏழாண்டுகளுக்கு மேலாகின்றன.
காலந்தவறாமை, கடுமையான உழைப்பு, கணினித்திறமை, உடனிருப்பவர்களைக் கடிந்து ஒழுங்குபடுத்தும் ஆளுகை, வங்கிக்கணக்கு முதல் வீட்டுக்கணக்கைச் சரிபார்த்தல், காதில் பொருத்திய தொலைபேசி அழைப்புகளுக்கு கனிவோடு விடையளிக்கும் கடமை, இப்போது என் வாயுரைக் கட்டுரைகளை அவரே திருத்தும் திறம், பொது நிர்வாகம், பத்திரிகைவாணர்கள் உறவு முதலிய நல்லியல்புகளின் உறைவிடம்- அமைதியின் நிறைகுடம் !
அவரது பிறந்த நாள்(25.5.2022)-எனக்கு ஊக்கம் தரும் நன்னாள்! கடமை தவறாத நெஞ்சின் பொன்னாள்!
என் துணைவியார் மருத்துவர் தாரா அம்மையார் அவர்கள் அடிக்கொருமுறை பிரதாப்பைப் பாராட்டுவார்கள்.
தாரா அம்மையார் மறைந்தபோது அந்தத் தீநுண்மித் தொற்றுநோய்க் காலத்தில் பொன்னேரியிலிருந்து அவர் ரேலா மருத்துவமனைக்கு வந்து துடிதுடித்துப் புலம்பியதை என் மகன் அருள் எப்போதும் நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்வார்.
எனது துணைவியார் தாரா அம்மையாரும் அடிக்கடி பிரதாப்பின் குழந்தைகள் நலத்தைக் கேட்பதோடு “ நேரத்தில் சென்று இல்லம் சேர்கிறாயா ? ஞாயிறுக்கிழமைகளில் குழந்தைகளோடு நேரம் செலவிடுகிறாயா ?
குழந்தைகளின் நலன்களைக் கவனிக்கிறாயா ?
” என்றெல்லாம் எப்போதும் அக்கறையோடு வினவிக்கொண்டே இருப்பார்.
குழந்தைகள் நல மருத்துவ இதழ் வரவில்லையென்றாலும் பிரதாப்பிடம் சொல்லிவிட்டால் போதும். இதழின் தில்லி அலுவலத்தைத் தொடர்பு கொண்டு வாங்கி விடுவார். அவர்களும் எப்போதும் பிரதாப்பை அழைத்தே
பேசுவார்கள் !
கீழ்ப்பாக்கத்தில் -வானகரத்தில் அப்பல்லோ மருத்துவ மனையில் பர்ஸ்ட் மெட் கிளினிக்கில்,பில்ராத்தில் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் இருந்தபோது என எத்தனையோ இக்கட்டான நேரங்களில் எங்கள் குடும்பத்தினரோடு இருந்து நாங்கள் பெற்றெடுக்காத மகனாக எங்களை பேணியதைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.
ஆசுதிரேலியாவில் பிரிஸ்பேனில் இருக்கும் எனது மூத்த மகன் கண்ணன் பிரதாப்பிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.
எனது இளைய மகன் பரதன் தெற்கு ஆப்ரிக்கா, ஜோஹன்னஸ்பர்கில் இருந்து அடிக்கடி பிரதாப்புடன் தொடர்பில் இருக்கிறார்.
இருவருக்கும் உரிய நேரத்தில் தகவல்கள் தந்து இதமாக இணைப்பில் இருப்பதில் வல்லவர் பிரதாப் !
நானும் எனது துணைவியார் தாரா அம்மையாரும் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த போது தொலைவில் இருக்கும் எனது இரு மகன்களும் நலமறிய தொடர்பு கொண்டபோதெல்லாம் அவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தந்ததை அவர்களும் சொல்லிப் பாராட்டுவதுண்டு.
ஒருவரின் திறனைக் கூறும் திருவள்ளுவர் தந்த குறள்களில் முத்தான ஒன்று இது:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
எண்ணியவர்கள் மனவுறுதி உள்ளவராக இருந்தால், எண்ணியவற்றை எண்ணியபடியே அடைந்திடுவர் என்ற திருவள்ளுவரின் திண்மையான கூற்றுக்கேற்ப, தனக்குத் தரப்படும் எந்தச் செயலையும் புரிந்து செயலாற்றுவதில் வல்லவர் பொன்னேரி பிரதாப் என்று பொன்னாரம் சூட்டலாம்.
அன்றாடம் தான் கையாளும் எண்ணற்ற பணிகளை முன்னுரிமை தந்து வரிசைப்படுத்தி அவற்றுக்கான கால அளவை நிர்ணயித்து மன உறுதியோடு அவர் செய்து முடிக்கும் திட்பம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
அதுமட்டுமன்றி, சமூகத்தில் உள்ள மாபெரும் ஆளுமைகளோடு நல்லுறவு கொண்டு பழகி அவர்களைத் தம் இணைப்பில் வைத்திருப்பதிலும் மாபெரும் இலக்கிய நிகழ்வுகளையும் அரங்கம் பார்ப்பதில் தொடங்கி, நிரல்களை அமைப்பது, நிகழ்வுக்கான நூலைக் கொணர்வது, நிகழ்வை விளம்பரப்படுத்துவது எனப் பலர் சேர்ந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் தானொருவராகத் தனித்து நின்று தலைமேற்கொண்டு கால அளவில் தவறாமல் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலிலும் அவரது செயல் திறனைக் காண முடியும்.
கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்ரீராம் குழுமம் நடத்தும் பாரதியார் விழாவை ஒரு தனிமனிதனாக பிரதாப் நின்று நிர்வகித்து வெற்றியடையச் செய்வதை அக்குழுமத்தின் தலைவர் பத்மஸ்ரீ விருதாளர் திரு.ஆர். தியாகராஜன் வியந்து பாராட்டுவதுண்டு.
கவிப்பேரரசுவும் எப்போதும் பிரதாப்பின் செயல்பாடுகளைப் பாராட்டுவதுண்டு.
அவரைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டியவை உள்ளன.
எனக்கு எந்தச் செய்தி அனுப்பவும் – இல்ல நிகழ்வுகளில் பங்கு பெறவும் ,நம் அருமை நயவுரை நம்பி
– நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உடனே அழைக்கும் நெருக்கம் கொண்டவர் நண்பர் பிரதாப் .
எனது கடினமான காலங்களில் என்னுடன் இருந்து பொறுப்புடன் துணை தந்து வரும் அவருக்கு எனது வாழ்த்துகள் எப்போதுமே உண்டு.
அவரது பிறந்த நாளில் (25.5.22)அவரைப் பல்லாண்டு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்.
எவரிடத்தும் கோணாமல்
எல்லோர்க்கும் இனியவராய்
பெறற்கரிய துணைவராய்
என்னைக்காத்து வரும் என் தனிச்செயலாளர்
பொன்னேரியில் வாழும்
புகழேந்தியின் செயல்கள் வெல்க!
சிந்தனை நாளும் மலர்க !!
அருமை மக்கட் செல்வங்களும்
அன்புத் துணைவியாரும் பெருமை சேர்த்திடப்
பல்லாண்டு வாழ்க !
பல்வளம் சூழ்க !!
நெகிழ்ச்சியுடன்
ஒளவை நடராசன்
25 5 2022

Add a Comment