POST: 2022-05-22T10:18:59+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 110

என் கடன் பணி செய்துக் கிடப்பதே

முனைவர் ஔவை அருள்,

எந்தையார் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பொழுது, 1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் ‘கலைமகள்’ இதழில் ‘புத்தொளி’ என்ற தலைப்பில், சீரார்ந்த கட்டுரையினை வரைந்திருந்தார்.

அக்கட்டுரை பின்வருமாறு:-

“இந்திய நாடு விடுதலை அடைந்து முப்பதாண்டுகள் முடிந்துள்ளன.

அதனால் வாழ்விலும், அன்றாட அலுவல் நடைமுறையிலும் உரிமையோடு செயற்படுகின்ற வாய்ப்பினை நாம் பெற்றுள்ளோம்.

எல்லோரும் தமக்கேற்ற உரிமைகளைப் பெறுவதும், எல்லா நிலைகளிலும் எல்லோரும் சரி நிகராக நடத்தப் பெறுவதும் விடுதலை வாழ்வின் விளைந்த வெற்றியாகும்.

ஆகையால் தான் உரிமை மலர்ந்த மக்களாட்சியை நாகரிக வாழ்க்கை நெறியாக உலகம் பாராட்டிப் போற்றுகிறது.

மக்களுக்குக் காப்பாக நிற்கும் அடிப்படையில் காவலமைப்பாகத்தான் அரசாங்கம் என்று தொடக்கத்தில் இயங்கியது.

மக்களுக்கு வாழ்வு நிலைகளிலும் பொருளியல் வளங்களிலும் நன்மை செய்யும் நல்லரசாக நாளும் அந்த அமைப்புமுறை வளர்ந்து, பல்முனைப் பணிகளைப் பரந்த நிலையில் மக்களுக்கு எளிதில் நலமேற்பட உதவும் அமைப்பாக மக்களாட்சி இப்போது வடிவெடுத்துள்ளது.

மனமருள் கொண்ட மக்களால் அரசன் இறைவனே என்ற நிலையில் அரசமைப்பு உருவாகியது.

அரசனே இறைவன் என்ற அடிப்படையில் மன்னன் கையில் உரிமைகளை நம்பி வழங்கிவிட்டு, நீ உலகத்தை எப்படியாவது வேந்தன் நடத்திச் செல்வான் என்ற துணிவுடன் மக்கள் வாளாயிருந்த நிலைமை பழைய வரலாறாகும்.

பின்னர்ப் பிரெஞ்சு நாட்டு அரசியல் சிந்தனையாளர் ரூசோவின் கருத்துப்படி மக்களின் பொதுநலனுக்காகத்தான் அரசு ஆட்சியுரிமை வழங்கப்பெற்றதென்றும், மக்களுக்கும், ஆளும் உரிமையும் உண்டு என்ற கருத்தும் எழலாயிற்று.

இவ்வகையில் புரட்சி உருவாகி மக்களாட்சி முறை அரும்பியது.

அரும்பு மலர்ந்து விரிந்து நேர்முக மக்களாட்சியாகத் திகழ்ந்து இன்று உலகம் எல்லாம் பொதுநல மணம் கமழ்கிறது.

ஒரே மன்னன் என்னும் நிலைமை மாறி, எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாகி உரிமையும் கடமையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கூட்டாக வாழும் முறை மக்களாட்சியின் நடைமுறைகளாகியுள்ளன.

ஏறத்தாழ எழுபது கோடி உயிரணுக்களைக் கொண்ட ஓருயிர் உடலமைப்பாக நமது நாட்டில் மக்களரசு உருவாகியுள்ளது.

அலுவலக ஆட்சிக் கலையைப் பற்றிய அறிவும் திறனும் இன்றியமையாத தேவையாகிவிட்டது.

முன்னாளில் அரசன் அரியணையில் அமர்ந்திருந்தது போல, மக்களாட்சியும் அரியணையின் மேல் அமர்ந்துள்ளது என்பர்.

மூன்று கால்களில் நிற்கும் ஆட்சியாக ஓர் அரியணை அமைந்துள்ளது.

ஆட்சித் துறை, சட்டப்பேரவைத் துறை, நீதித்துறை என்ற மூன்றும் சேர்ந்து அரசை இயக்குகின்றது.

அந்தப் பிரிவுகளில் எந்தப் பிரிவுக்கு எவ்வளவு வல்லமை என்ற வாதம் எப்போதுமே அரசியல் உலகில் நீரால் நடந்துள்ளது.

நமது அரசியல் அமைப்பு பெருமளவுக்குப் பிரித்தானிய அரசியலமைப்பைத் தழுவியது.

நம் அரசியல் வல்லுநர்கள் அமெரிக்கப் பாங்கையும் தன்னோடு இணைத்திருக்கிறார்கள்.

சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களைப் பற்றிப் பிரித்தானிய நீதிமன்றம் எந்த மேலாய்வையும் செய்யவியலாது.

சட்டமன்றம் அதனை உயர்வுற உயர்த்த உரிமையுடையதாகும்.

அமெரிக்க நாட்டிலும் பாரத நாட்டிலும் நீதிமன்றமே நிகரற்ற உரிமை கொண்டது.

சட்டமன்றம் செய்த சட்டங்களை நீதிமன்றம் ஆராய்ந்து கருத்தறிவிப்பதை நாம் காணலாம்.

அரசியலில் கருத்து மாற்றங்கள் எழும், விழும். சட்டப்பேரவைகள் மாறும், மறையும். ஆனால், ஆட்சித்துறை மட்டும் நிலைத்து நின்றபடி செயற்படும்.

இருந்ததனை இருந்தபடி அலுவல்துறை இருத்திக் காட்டும்.

அதனாலேயே நிலைத்த ஆட்சித்துறை என்று அழைப்பார்கள்.

ஸ்டாலின், ரூசுவெல்டு, சர்ச்சில் ஆகிய முப்பெருநாட்டுத் தலைவர்களின் உச்சிமாநாடு இரண்டாம் உலகப் போரின்போது நடந்தது.

தொடர்ந்து இரண்டாம் மாநாடு நடந்தபோது, உலகப்போர் முடிந்து விட்டது.

பிரிட்டன் தலைமையமைச்சராக இருந்த சர்ச்சில் மாறி அட்லி தலைமையமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.

முதலில் நடந்த மாநாட்டுக்குச் சர்ச்சிலோடு வந்திருந்த அலுவலர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவரும் மாறாமல் அட்லியுடன் மீண்டும் வந்தது கண்டு ஸ்டாலினும், ரூசுவெல்டும் வியந்தார்களாம்.

அரசாங்க மாறுதல், அலுவல் முறையை மாற்றாத பிரித்தானிய மாட்சியை அது காட்டியது என்பர்.

அனைத்து மக்களுக்கும் அவரவர்களின் குறை நிறைகளை ஆராய்வதோடு, நலந்தீங்குகளை, கல்வி வாய்ப்புகளை, நிலபுலங்களை, ஊதிய மேம்பாடுகளை அலுவல் நடைமுறைகளை முறைப்படுத்தித் தீர்வு காண்பது அரசின் கடமையாகும்.

நெறிமுறைகளை வகுக்கும்போது, கோட்பாடுகளை ஒருங்குறப் பின்பற்றி, தனிச்சலுகைக்கு இடந்தராமல், முன்னமைகளையே பெரும்பாலும் பின்பற்றி, திறமையாகவும், விரைவாகவும் மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற அடிப்படையில் தான் அலுவலகம் அமைந்தது.

தங்களுக்கு விதித்த பணிகளை வரம்பு மீறாமல் ஒத்த நெறியில் ஒருகாலும் கோடாமல் எந்திரப் பொறிகளைப்போல அலுவலர்கள் செயலாற்ற வேண்டுமென்று உருவான நன்னோக்கம், காலப்போக்கில் கனத்துப்போய்க் கல்லாகிவிட்டதோ என்று அனைத்து நாடுகளிலும் உணரத் தலைப்பட்டுள்ளனர்.

ஊரில் தீப்பற்றி எரிகிறது என்றால், அது தீயணைப்புப் படையின் பணி என்றும், பிற துறையினர் தமக்குத் தொடர்பில்லாதாவராக ஒதுங்குவதும் நடைமுறையை விடாது பின்பற்றும் அலுவல் நாகரிகமாகச் சீர் குலைந்துள்ளது.

அலுவலகத்தின் மூலையில் தீப்பற்றிக் கொண்டது என்று ஓடிவந்து ஒருவர் முறையிட்டாராம்.

காதுகொடுத்தும் கேட்காமல், இது விற்பனைப் பிரிவு, நீங்கள் தகவல் பிரிவுப் பகுதிக்குப் போய் இதைச் சொல்லுங்கள் என்றாராம்.

அலுவல் அமைப்புக்கு அறியும் மூளை தான் உண்டு. உணரும் உள்ளம் இருப்பதில்லை என்பதை இப்படிச் சுட்டிக் காட்டுவார்கள்.

ஆட்சி அலுவலகங்களில் உள்ளவர்கள், அறியும் அறிவினை மட்டுமே துணைக் கொண்டு, உணரும் உள்ளம் இல்லாத மனப்பான்மையோடு செயற்படும்போது, நேர்மையாகப் பணிபுரிந்தாலும் கூட அன்பில்லாத அறம் என்பில்லாத புழுவை வாட்டி வருத்துவது போல, ஏழை எளியவர்களுக்கு இன்னல் நேர்கின்றது.

சுற்றி வளைத்துச் செல்லும் சுணக்கமான போக்கே அலுவலகத்தில் இருப்பது போலவும், அதை முறையாகச் செயற்படுவது என்றால், ஒவ்வொரு பிரிவையும் அணுகி அப்பிரிவின் முடிவுக்குப் பிறகு பிறிதொரு பிரிவு என்று பல வரிசை நிலைகளில் நெடுக வளர்ந்து அயரவைக்கும் போக்கை எப்படியாவது மாற்றலாமா என்று பலர் கருதினாலும், புதிய போக்கை வகுக்கத் தயங்குகின்றனர்.

மக்களாட்சிக்குப் பெருமதிப்பு தந்து, மக்கள்பால் பேரன்பு பூண்டுள்ள நமது முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒருமுறை பேசியபோது, அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களும் பணியாளர்களும் தாமெடுக்கும் ஒவ்வொரு கோப்பினையும் உயிரற்ற ஒரு காகிதக்கட்டு தானே என்று, அன்பில்லாமல் அசட்டையாகக் காலங்கடத்தினால், பல இன்னல்கள் நேரும்.

ஒவ்வொரு குறிப்புக்குப் பின்னாலும் அதன் முடிவை எதிர்பார்த்துத் தனியொருவரோ, குடும்பமோ, மக்கள் கூட்டமோ பொது நல அமைப்போ காத்துக் கிடக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தாளின் பின்னும் ஒருவர் ஆணைக்காக அனுமதியை, எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்து நிற்கிறார் என்பதை உருவகமாகக் கண்டு, உள்ளக் கனிவுடன் குறிப்புகளை அலுவலர்கள் விரைந்து அனுப்ப வேண்டுமென்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.

நெடுநாளாக ஊறிக்கிடக்கும் சில பழக்கங்களை அலுவலர்கள் மாற்றிக் கொண்டால் வேகமாகவும், திறமையாகவும் செயற்படலாம்.

தம்மிடம் வரும் தகவல்களை அசட்டை செய்து தட்டிக் கழிக்காமலும், பொறுப்பை இன்னொருவர் மேல் சுமத்தாமலும் முடிவெடுக்கத் தனிப் பயிற்சியும் பக்குவமும் வேண்டும்.

பொதுவாக நம் நாட்டிலுள்ள பழைமைப்பற்று, புதுமையைப் புறக்கணிக்கச் செய்கிறது.

புதுமைகளையேற்கவும், புகுத்தவும் நாம் தயங்குகிறோம்.

இதுவரை நம்மால் எளிதாகக் கருதப்பட்டிருந்த வாழ்க்கைச் செயல்முறைகள் காலப்போக்கில் அறிவியல் சார்ந்த துறைகளாக மாறியுள்ளன.

அலுவலக ஆட்சியும் அறிவியல் நுட்பம் செறிந்த கலவையாக அயல் நாடுகளில் கற்பிக்கப்படுகிறது.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தொண்டுணர்வோடு அனைவரும் தம் அலுவலகங்களில் சிந்தனை செலுத்தினால், மக்களாட்சியில் புத்தொளியும் புதுவுணர்வும் பூத்து அனைத்து மக்களுக்கும் சிறந்த வாய்ப்பும் நிறைந்த பயனும் அளவில் கிட்டும்.”

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (34)

அக்காலத்தே நூல் முகப்பில் கடவுள் வாழ்த்து இருந்தே ஆகவேண்டும் என்ற முறைமை விதிக்கப்படவில்லை.

அதுபற்றியே சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் தாம் பாடிய நூல்களில் முதற்கண் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை போலும். இவ்வாற்றால் இவ்விரு சான்றோரும் கடவுள் கொள்கை உடையவர் அல்லர் என்பது கருத்தன்று.

இவர்களுடைய நூலுக்குள் சிவன், திருமால், கொற்றவை, முருகன், அருகன், புத்தன் என்போர் கடவுள் நிலையில் வைத்துப் பாராட்டப் பெற்றுள்ளனர்.

பிற்காலத்தே புத்தம் சமணம் வைதீகம் என்ற சமயங்கள் தமிழகத்தில் இடம்பெற்றபோது நன்மக்களிடையே கடவுள் அன்பு நெறி தோன்றி மக்கள் செயல் ஒவ்வொன்றிலும் முதலிடம் பெறவேண்டும் என்ற கொள்கையை உருவாக்கிற்று.

எச் சமயத்தவரும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் தத்தம் சமயக் கடவுளை வாழ்த்தியே தொடங்கினர்.

சமணச் சான்றோர்கள் தமிழ் இலக்கணத் துறையில் புதிய புதிய பணி செய்தபோது கடவுள் வாழ்த்தை நூற்பாத் தொடகத்துக்கு உறுப்பாக அறுதியிட, அச்சூழ்நிலையில் தோன்றியவரான பாரதம் பாடிய பெருந்தேவனார், கடவுள் வாழ்த்து இல்லாத சங்கத் தொகை நூல்களுக்கெல்லாம் கடவுள் வாழ்த்துச் செய்தார்.

பெருந்தேவனார் “மாநிலம் சேவடி” ஆக எனத் தொடங்கும் கடவுள்வாழ்த்துச் செய்யுளைச் செய்து இதன்கண் கோத்துள்ளார்.

நற்றிணைக் கடவுள் வாழ்த்து முதலில் பதிப்பித்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வடமொழிச் செய்யுள் ஒன்றின் துணை கொண்டு திருமாலுக்கு ஏற்றி உரை கூறினார்.

இப்பாட்டு குறைந்தது 9அடியும் மிகுந்தது 13 அடியும் இருத்தல் நூல் அமைதிக்கு ஏற்றது.

ஆனால் மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டிலும் அச்சுப் படியிலும் மேற்குறித்த ஏழு அடிகள் இருக்கின்றன.

ஆசிரியப் பாட்டின் எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பா உரை, இப்பாட்டைக் காட்டி இது ஏழயடியான் வந்தது என்பர் பேராசிரியர்.

ஏனைத்தொகை பலவற்றிலும் பாரதம் பாடிய பெருந்தேவனார் செய்து சேர்த்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பலவும் சிவனுக்கே உரியவாய் இருப்பதால், இது திருமாலுக்கு ஏற்றி இருப்பதை இதுகாறும் அறிஞர் எவரும் ஆராயவில்லை.

இதன்கண் “படர்கதிர்மதியமொடு சுடர்கண் ஆக” என்று ஏட்டில் காணப்பட்ட பாடவேறுபாடு சிவனுக்கு ஏற்றுவதை எடுத்துக்காட்டி, இச் செய்யுளின் கருத்து முற்றும் அப் பெருந்தேவனார் காலத்தவரான சேரமான் பெருமாளுடைய பாட்டு ஒன்றில் அமைந்திருப்பதை ஆதரவாகக் கொண்டு ஔவை விரித்துரைப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், ‘தீதற விளங்கிய திகிரியோன்’ என்பதில் உள்ள தீது என்றது “செம்பில் களிம்பு போல உயிரிற்கிடந்து அதனை அறியாமை இருளில் செறித்திருக்கும் மலம்” என்றது.

திகிரி என்பது திருவருளாகிய ஆணை என்றும் உரைகூறுவது சைவநூல் கொள்கை.

உயிர்கள் மருள்நீங்கி அதற்கென்றே இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்டது எனப் படைப்பின் நோக்கத்தையும் நோக்கம் நிறைவேற வேண்டி இறைவன் உலகு உயிர்களோடு ஒன்றாயும் உடனேயும் இருக்கும் திறத்தையும் உரையிடைப்பெய்து கூறுவது மிக்க இன்பம் தருகிறது.

சித்தாந்த நூல்கள் உரைக்கும் தத்துவக் கூறுகளைப் பொறிவட்டம், புந்திவட்டம், உயிர்வட்டம் என்று மூன்றாக வகுத்து விளக்குவதும் “மன நினைவு எண்ணங்களையும் அவற்றுள் நிகழ்ந்தவை நிகழ்பவைகளையும் ஆராய்ந்து காணும் உயிர், அறிவு வடிவாய் வீற்றிருக்கும் இடம் உள்ளம்” எனப்படுகிறது என்று தெரிவித்து, திருவள்ளுவர், திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்கள் நூல்களிலிருந்து ஆதரவு காட்டுவதும் ஒளவையவர்களின் சமயநூல் தெளிவைப் புலப்படுத்துகின்றன.

பொருள் விளக்கம்

தலைவன் வழி இயல்பைக் கூறுதல்.
“பைங்காய் நன்னிறம் ஓரீஇய செங்காய்க் கருங்கனி ஈந்தின் வெண் புறக் களரி” என்று உரைக்கின்றனன்.

இதன் உட்பொதிந்திருக்கும் கருத்தை ஈந்து காய வழிப் பசுமை நிறமும் காய்த்த வழிச் செந்நிறமும் கனியுமிடத்துக் கருநிறமும் பெறும் என்றது பிள்ளைமையிற் பசுமையும் இளமையில் எழிலும் செம்மையும் முதுமையில் நரையும் திரையும் எய்திக் கழியும் யாக்கையின் நிலையா இயல்பு கூறியது எனக் கொள்க” என உரைவேந்தர் விளக்கம் செய்வர்.

பாடவேறுபாடு:
பாடல்149:
“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் ஊக்கி வாய்விரல்பொத்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறுகோல் வலத்தனள் அன்னை அலைப்ப” (1-4)

அச்சுப் படியில் 2-ஆம் அடி, ‘மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி’ என்று பாடம் காணப்படுகின்றது.

ஒளவை உரை

சிலரும் பலருமாகத் தம்மிற் கூடிக்கொண்டு கண்ணின் கடைப்பார்வையால் என்னை இகழ்ந்து நோக்கி மூக்கினை உயர்த்திப் பெருமூச்சுவிட்டுக் கைவிரல்களால் வாயிதழ்களைப் பொத்தித் தெருக்களில் ஏதில் மகளிர் பழிச் சொற்களை முகிழ்த்துச் சொல்லித் தூற்றுதலால் அன்னை சிறுகோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓங்கி என்னை அடித்து வருத்த யான் வருந்தினேன் தோழி (பக்-235.)

இரண்டு பாடங்களும் ஏடுகளில் காணப் பெறுவனவே. இருப்பினும் உரையாசிரியர்கள் பழக்கவழக்கங்களை நன்கு உணர்ந்து எழுத வேண்டும்.

அலர் தூற்றுவோர் எவ்வாறு சைகை செய்வர் என்பதை நன்குணர்ந்து ஒளவை உரை எழுதியுள்ளனர்.

ஒருத்தி அலர் சொல்லுவாள்.

அதைக் கேட்கும் மற்றொருத்தி வியப்படைவாள்.

அச்செய்தியின் தலைவியோ அவள் உறவினரோ தெருவழி வரும்போது பேசிக்கொண்டிருந்த பெண்டிர் பேசுவதை நிறுத்தி விட்டுத் தம் கைகளால் வாய்பொத்தி நின்று, பெருமூச்செறிந்து, அதைச் சொல்லாமல் சொல்லுவர். உரைவேந்தர் அதற்கேற்ற பாடத்தையே தெரிவுசெய்து உரை செய்தனர்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *