அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 109
இலக்கியவாதியின் அழகுணர்ச்சி
முனைவர் ஔவை அருள்,
‘அருந்தமிழில் அயற்சொற்கள்’ என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில், முதுநிலை ஆய்வு மாணவராக, முனைவர் வ. ஜெயதேவன் வழிகாட்டுதலில் 1989-இல் பயின்று கொண்டிருந்த பொழுது, வாராது வந்த மாமணியாக, செல்வி வித்யா ஸ்ரீனிவாசன் வாயிலாகப் பம்பாய் விளம்பர நிறுவனமான ‘கிளியா’ விளம்பர நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு அலுவலராகச் சென்னையில் கல்லூரிப் படிப்புக்குக் குந்தகமில்லாத நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
அந்நிறுவனத்தில் தொடர்ந்து, ஈராண்டுகளாக இல்லத்திலிருந்தே பணியாற்றுகின்ற நல்வாய்ப்பும், நல்லூதியமும் கிடைக்கப் பெற்றது.
1992-ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் ‘லியோ’ மன்றத்தின் நண்பர், ஆடிட்டர் கணேஷ் வழியாக GAY Travels வளாகத்தின் பின்புறத்தில், பெரிய அளவில் அலுவலகம் அமைக்கப்பட்டு, நிறுவனத்தில் அடுத்த உயர் பொறுப்பில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அதே ஆண்டு, பெண்டஃபோர் மென்பொருள் நிறுவனம், SI இல்லக் கட்டுமான நிறுவனம் ஆகியவற்றின் பங்குச்சந்தை விளம்பரங்களையும், ஊடக மற்றும் பங்குச் சந்தைத் தரகர்கள் சந்திப்பெல்லாம் ஒருங்கிணைக்கும் பணியில் தோய்ந்தவனாக மிளிர்ந்தேன்.
1990 முதல் 1994 வரையிலான நான்காண்டுகளில், பங்குச்சந்தையில் திரட்டப்பட்ட நிதியானது, சராசரியாக ஆண்டுதோறும் 98 சதவீதம் உயர்ந்திருந்ததனால், பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள் அக்காலங்களில் பங்குநிதி விளம்பரங்களின்மீது, தமது பார்வையைத் திருப்பின.
அப்பொழுது பங்குச் சந்தையில் நிதிதிரட்டும் நிறுவனங்கள், அவை திரட்டப்போகும் தொகையில் ஆறு முதல் எட்டுச் சதவீதத்தை விளம்பரத்திற்கென ஒதுக்குவதாகப் புள்ளி விவரங்கள் வாயிலாக அறிந்து, பலர் பங்குச்சந்தை விளம்பர நிறுவனங்களை நடத்துவதிலும், ஒருங்கிணைப்பதிலும், செயற்படுத்துவதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
சான்றாக, 1993-94-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 1154 நிறுவனங்கள் மொத்தம் ரூ.21,850 கோடியைப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டியிருந்தன.
அதில், ஏறக்குறைய ரூ.1,500 கோடியை இந்நிறுவனங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே செலவழித்திருந்தன.
அதில் குறிப்பாக நான் பணியாற்றிய கிளியா விளம்பர நிறுவனம் நிதியியல் விளம்பரங்களில் மட்டுமே கோலோச்சி வந்தது.
எஸ்ஸார், குஜராத், வீடியோகான், ஐசிஐசிஐ, மார்கன் ஸ்டேன்லி, மலர் மருத்துவமனை, இக்கி ரிசார்ட்ஸ், இந்தியன் வங்கி போன்ற பெரிய நிறுவனங்களையெல்லாம், வாடிக்கையாளர்களாகக் கொண்டு, பெருமளவில் வருவாய் ஈட்டிக் கொண்டிருந்தது.
குஜராத்தைச் சேர்ந்த திரு. சுனில் கவுதமும், திரு. தவல் தேசாயும், கேரளாவைச் சேர்ந்த திரு. வேணுகோபாலும், 1985-ஆம் ஆண்டில், கிளியா விளம்பர நிறுவனத்தைப் பம்பாயில் தொடங்கினர்.
திரு. வேணுகோபால், ரிலையன்ஸ் அம்பானியிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது மகள் பெயரான ‘கிளியா’வையே நிறுவனத்துக்கும் சூட்டினார்.
ஆங்கிலப் புதினம் ஒன்றில் வரும் பிரபலக் கதாபாத்திரத்தின் பெயர் ‘கிளியா’ ஆகும்.
மிகவும், சாதுர்யமான, புத்திசாலித்தனமிக்க, சக்திவாய்ந்த, எதையும் நினைத்தவுடன் சிறப்பாகச் செய்து முடிக்கிற குணம் இந்தப் பெண் கதாபாத்திரத்துக்கு உண்டு.
பொதுவாக, விளம்பரம் என்பதே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒரு செயல்தான்.
பத்து வருட நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி, ஒரு பக்க விளம்பரத்தில் நாங்கள் சொல்லி விடுவது போல, நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் கொள்கையையும், ஒரே சொல்லில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பெயர் ‘கிளியா’ என்று தேர்வு செய்தேன் என்று என்னிடம் 1990-ஆம் ஆண்டில் பரோடாவுக்கு அருகிலுள்ள வதோதரா எஸ்ஸார் நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக் கூட்டரங்கில் என்னிடம் திரு. வேணுகோபால் பகிர்ந்து கொண்டதை இன்று நினைந்தாலும் பெருமிதமாக வுள்ளது.
எஸ்ஸார் நிறுவனத்திற்காக ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஏழு வெவ்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் பங்குச்சந்தைத் தரகர்களின் சந்திப்பை நடத்திக் காட்டிய பெருமை ‘கிளியா’ நிறுவனத்தைச் சார்ந்ததாகும்.
அதேபோல அமெரிக்காவிலுள்ள, மார்கன் ஸ்டேன்லி நிறுவனத்திற்காக, தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நான்கு இடங்களில் பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்.
இது வாடிக்கை. ஆனால், இந்நிறுவனத்துக்குப் புதுமையாக, யாரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு, 1993-94-இல் மார்கன் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான, திரு. பார்ட்டன் பிரிக்ஸ், திரு. மாதவ் தர் ஆகிய இருவரும் நியூயார்க்கில் அமர்ந்து கொண்டு உரையாற்றியதை மேற்சொன்ன நான்கு பெருநகரங்களிலும், ஒரேநேரத்தில் திரையில் ஒளிபரப்பிப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் அவர்களைத் திரைவழியே பதிலளிக்கச் செய்த சாதனை அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இந்தியாவிலேயே தனியார் விளம்பர நிறுவனமொன்று இவ்வகை ‘டெலி கான்பரன்ஸ்’ முயற்சியைச் செய்தது இதுவே முதன்முறையாகும்.
கிளியா நிறுவனத்தின் வாயிலாக, முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ஒவ்வொரு ஞாயிறு இரவும், பத்தே முக்கால் முதல் பதினோறு மணி வரை Few Rupees More என்ற நிகழ்ச்சி ஒன்றையும், தூர்தர்ஷன் இரண்டாவது அலைவரிசையில் வழங்கினோம்.
இந்நிகழ்ச்சியை, நிறுவனத்தின் தலைவர் அனீஷ் பேனட்டும், பம்பாயைச் சார்ந்த, திரு சீனிவாசனும் தொகுத்து வழங்கினார்கள்.
இதில் முதலாம் நிலைச் சந்தை பற்றியும், இரண்டாம் நிலை சந்தை பற்றியும், பரஸ்பர நிதியம் பற்றியும், தொடக்க நிலையிலிருந்து நேயர்களுக்கு விளக்கிக் காண்பித்தோம்.
பங்குச் சந்தைத் துறையில் முன்னோடியாக விளங்கும் பலரையும் அழைத்து அவர்களுடனும், கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தோம்.
விளம்பரங்களைத் தயாரிப்பதில், எங்களது அணுகுமுறை சற்று வித்தியாசமானது.
நாங்கள் எப்போதும், தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
தகவல்களை உறுதிப்படுத்தும் கருத்துகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
உதாரணத்துக்கு ஒரு பொருளைப்பற்றி அதிகத் தகவல்களைக் கொடுத்துவிட்டு, அதைத் தேடி வாடிக்கையாளர்களை அலைய விடுவதை விட அப்பொருள் சந்தையில் இந்த இடத்தில், இன்ன விலையில் கிடைக்கிறது என்று சொல்லவே நாங்கள் விரும்புகிறோம்.
இதுதான் வாடிக்கையாளர்களைச் சரியான வழியில் இட்டுச் செல்வதாய் நாங்கள் நம்பினோம்.
நான், அடிக்கடி என்னுடன் பணியாற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து சொல்வது, விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசியல் தலைவரின் பொறுப்புணர்ச்சியும், இலக்கியவாதியின் அழகுணர்ச்சியும் இன்றியமையாத தேவைகளாகும் என்று.
அக்கண்ணோட்டத்தில் விளம்பரங்களைத் தயாரித்தால் மக்களுக்கு அதன் உட்கருத்துகள் எளிதில் சென்று சேரும் என்று உறுதியாகச் சொல்லி வருவேன்.
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (33)
இந்த ஆராய்ச்சிக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பும், சென்னை சைவ சித்தாந்த மகாசமாசச் சங்க இலக்கியம் பதிப்பும், தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம், யாப்பருங்கலம், இலக்கண விளக்கம், வீரசோழியம் முதலியவற்றின் உரைகளில் காணப்பட்ட நற்றிணைப் பாட்டுக்களும் செய்த உதவியையும் ஆங்காங்கே ஒளவையவர்கள் குறித்திருக்கிறார்கள்.
“…..அவ்வப்போது கருத்துரைத்து ஊக்கிய தஞ்சை, கரந்தை திரு சிவ குப்புசாமி பிள்ளை அவர்கட்கும் என்மனம் கெழுமிய நன்றி என்றும் உரியதாகும்.”
ஒளவையவர்களின் நற்றிணை உரை
மேற்குறித்த புறநானூற்று உரையமைப்பை அடியொற்றிய நிலையில் – பாட்டைப் பற்றிய அறிமுகம், புலவர், மன்னர், பெயர் / ஊர் ஆய்வு, பாடுபொருள் குறித்த முன்னுரை;
அதையடுத்து யாப்பமைதியுடன் சீர்பிரித்த நற்றிணைச் செய்யுள்; தொடர்ந்து பொருளமைதி புலப்படுமாறு கண்ணழித்துத் கூறும் உரை;
நிறைவாக, ஆதரவு நல்கும் இலக்கிய, இலக்கண, சமய நூல் மேற்கோள்கள், வரலாற்று, கல்வெட்டுச் சான்றுகள், அறிவியல் ஆராய்ச்சி முடிபுகள், செறிந்த திட்ப நுட்ப உரைவிளக்கங்கள் என இம்முறையில் உரைப்போக்கு அமைந்திருக்கிறது.
மூலமும் பாடவேறுபாடும்.
ஓரளவு தமிழ் கற்றவரும் எளிதில் புரிந்து கொள்ளும்பொருட்டு மூலப்பாடல் சந்திபிரித்து நிறுத்தற்குறிகளுடன் அமைந்துள்ளது.
ஆராய்ந்துகொண்ட பாட வேறுபாடுகளும் அடியில் குறிக்கப்பெற்றுள்ளன.
உரை நலம்.
அச்சுப் படியும் ஆராய்ச்சிப் படியும் -ஓர் ஒப்பீடு
சங்க இலக்கியம்- சமாசப் பதிப்பு, ஆசிரியர் பெயர் காணப்படவில்லை என 56 நற்றிணைப் பாடல்களைக் குறிப்பிடுகிறது.
ஆனால், ஒளவை பதிப்பில் அந்தப் பாடல்களின் புலவர் அனைவரும் பெயர் பெறுகின்றனர்.
“அச்சுப் பிரதியில் காணப்படாது இந்நூற்கண் காணப்படும் ஆசிரியர் பெயர்கள் ஏடுகளிற் காணப்பட்டவை எனக்கொள்க.” (முன்னுரை)
பாடல் எண்ணும் புலவர் பெயரும்
8 கண்ணகனார்,
10 குடவாயிற் கீரத்தனார்,
45 உலோச்சனார்,
46 கோட்டம்பலவனார்,
92 பெருந்தேவனார்,
84 பாலை பாடிய பெருங்கடுங்கோ, 107 பெருவழுதியார்,
108 இளவேட்டனார்,
111 உலோச்சனார்,
115 அம்மள்ளனார்,
125 கச்சிப்பேட்டுக் கண்ணனார்,
126 ஓதலாந்தையார்,
132 பெருங்கண்ணனார்.
134 கருவூர்க் கதப்பிள்ளையார்,
160 வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்,
161 பெருந்தலைச் சாத்தனார்,
162 நெய்தல் தத்தனார்,
163 தாயங்கண்ணனார்,
164 பேயனார்,
165 நல்வெள்ளியார்,
166 மருதன் இளநாகனார்,
167 உலோச்சனார்,
168 மதுரை அறுவை வாணிகள் இளவேட்டனார்,
169 இடைக்காடனார்,
170 பரணர்,
171 செங்கண்ணார்,
172 நக்கீரனார்,
173 பிரமன் காரி,
174 பாலை பாடிய பெருங்கடுங்கோ, 175 மதுரைக் கணக்காயனார்,
176 மதுரை இளம்பொன் சேந்தங் கூத்தனார்,
177 பெருந்தலைச்சாத்தனார்,
178 பூதன்தேவனார்,
179 உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்,
180 கயமனார்,
181 உம்பற்காட்டு இளங் கண்ணனார்,
182 அதியன் விண்ணத்தனார்,
183 கயமனார்,
184 நெய்தல் தத்தனார்,
186 அறுவை வாணிகள் இளவேட்டனார்,
188 கண்ணகனார்,
189 இடைக்காடனார்,
190 நக்கண்ணையார்,
192 பரணர்,
193 நற்றாமனார்,
195 பெருங்குன்றூர் கிழார்,
207ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்,
229 இளங்கண்ணனார்,
235 வெள்ளிவீதியார்,
271 கயமனார்,
355 மோசிகீரனார்,
385 அஞ்சில் ஆந்தையார்,
396 முத்தூற்று மூதெயினனார்.
பெயர் வேறுபாடுகள் – பின்னத்தூரர் – ஒளவை:
1 பாட்டு – 24 கண்ணத்தனார் x குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்;
46 இனிச்சந்தநாகனார் x மிளைக்கநாதன் நாயனார்;
56 பெருவழுதி X இளங்கீரனார்;
64 உரோகடத்தனார்;
40 கோண்மா நெடுங்கோட்டனார் கோமால் உலோச்சனார் நெடுங்கோடனார்;
105 முடத்திருமாறன் X முட்டத்திருமாறன்;
3 நல்விளக்கனார் x நல்விளக்குன்றனார்;
66 பிரான் சாத்தனார் x விரான் சாத்தனார் முதலியன.
பாடலுக்கு முன்னுரை அளிக்கும் உத்தியை ஔவையவர்களின் பதிப்பில் மட்டுமே காணமுடியும்.
சில விளக்கங்கள்
நற்றிணை – பின்னத்தூரார் பதிப்பில், 8-ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் காணப்படவில்லை.
ஆயினும் புதுப்பட்டி ஏட்டில் கண்ணகனார் என்ற குறிப்பு ஒன்று துறைக்கூற்றின் இறுதியில் காணப்படுகிறது.
பாட்டு – 85 நல்விளக்குன்றனார் – ஏடெழுதியோர் நல்விளக்கனார் எனப் பிழையாக எழுதினர்.
25 கச்சிப்பேட்டுக் கண்ணனார் என்றுள்ளது, ஆனால் அதைப் பாடியவர் தூங்கலோரியார்.
46 கோட்டம்பலவனார் என்பது அச்சுப்படியில் கொட்டம்பலவனார் என இருக்கிறது;
135-ஐப் பாடியவர் கருவூர்க் கதப்பிள்ளை என உள்ளது.
ஆனால் நூலாராய்ச்சி ஏடுகளுள் இரண்டில் தூங்கலோரியார் என்றுள்ளது.
125 கச்சிப்பேடு கண்ணனார்- மதுரைத் தமிழ்ச் சங்க ஏடு, அச்சுப்பிரதி இவற்றில் இல்லை.
162 நெய்தல் தத்தனார் இவர் பெயர் அச்சுப் பிரதியில் காணப்படவில்லையாயினும் இந் நூலாராய்ச்சிக்குக் கிடைத்த இரண்டு பழைய ஏடுகளிலும் காணப்படுகிறது.
185 நல்விளக்குன்றனார் என்பது ஏடு எழுதியோரால் நல்விளக்கனார் எனப் பிழையாக எழுதப்பெற்றது.
தாயங்கண்ணனார் எனப்படுகிறார். தாயங்கண்ணனார் பெயருடன் பலர் காணப்படுதலின் அவரின் வேறுபடுத்த, எருக்காட்டூர் என்ற ஊர்ப்பெயரால் சிறப்பிக்கப் பெற்றார்.
164 பேயனார். பையனூர் என இப்போது வழங்கும் சேரநாட்டு ஊர்; மலையாள மொழி தோன்றிப் பரவுவதற்கு முன்பெல்லாம் பேயனூர் என வழங்கிற்று. அதனை அவ்வூரின் பழம் குறிப்புகள் வற்புறுத்துகின்றன.
234 புதுப்பட்டி ஏட்டில் 233ஆம் பாட்டின் இறுதியில் இதனை அடுத்துவரும் பாட்டு 233 அஞ்சில் ஆந்தையார்.
இந்த அஞ்சிலூர் இடைக்காலத்தில் அஞ்சூர் என மருவியது.
திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டுக்கள் (A.R.No. 171 of 1933) செயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்குன்றக்கோட்டத்துக் களத்தூர் நாட்டு அஞ்சூர் எனக் குறிக்கின்றன.
பொதும்பில் பொதும்பு எனவும், விளம்பில் விளம்பி எனவும், அழும்பில் அம்புக்கோயில் எனவும் மருவியது போல அஞ்சில் அஞ்சி என மருவியது.
அஞ்சில் என்பதற்கு மாறாக அம்பில் என ஓர் எட்டில் காணப்படுகிறது.
அஞ்சிலத்தியார் என்றும் ஒரு பாட வேறுபாடு புதுப்பட்டியேட்டில் இறந்தது என்றும், தேவர் ஏடு இப்பாட்டு இறந்தது என்றும் கூறுகின்றன.
235 வெள்ளிவீதியார், இவர் பெயர் அச்சுப்பிரதியிலும் மதுரைத் ஏட்டிலும் இல்லை.
தேவர் ஏட்டில் வெள்ளி விடியலார் எனக் காணப்படுகிறது.
385 அஞ்சிலாந்தையார். எழில் மழைக் கண். இதிலுள்ள பாட்டை 7 அடிகளுடன் முடித்து இவ்வளவில் ‘இவ்வஞ்சி லாந்தையார் பாட்டு இறந்தது’ என்ற குறிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டில் உண்டு; அச்சுப்படியில் குறிப்பு இல்லை; அடிக்குறிப்பு கிடைத்த பிரதிகள் அனைத்தும் இந்த அளவே காணப்படுகிறது.
எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்படவில்லை என்று கூறுகிறது.
மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டில் எழில் மழைக்கண் என்ற அடியும் சிதைந்து விட்டது.
396 முத்தூற்று மூதெயினனார் எனும் பெயர் அச்சுப்பிரதியிலுள்ள பாட்டில் இல்லை; இப்பாட்டைத் தொடர்ந்து நிற்கும் துறைக்குறிப்புக்களின் எழுதப்பட்டுள்ளது.
இறுதியில் எழுதப்பட்டுள்ளது.
கடவுள் வாழ்த்து
‘உரைவேந்தர் ஒளவை அவர்கள் சித்தாந்த கலாநிதி ஆவார்கள். வாய்ப்பு நேரும் தோறும் தமது சமயப் பெருமையை உரைகாணும்போது பயன்படுத்தி அதை நிறைவு செய்யும் திறம் கொண்டவர்.
கடவுள் வாழ்த்தைப்பாடி நூலைத் தொடங்க வேண்டும் என்ற மரபு தொல்காப்பியர் காலத்தில் பத்துப்பாட்டு என்ற தொகை நூல்களில் முதற்கண் கடவுள் வாழ்த்துக் காணப்படுகின்றது.
ஏனைத் தொகை நூல்கள் அகநானூறு, புறநானூறு முதலியவற்றில் கடவுள் வாழ்த்து இல்லை.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment