POST: 2022-04-12T09:52:08+05:30

தினமணி – 10 – 4 – 2022 – ஞாயிறு – கலாரசிகன் – பகுதி – பக்கம் எண் : 6

அகவை 87 காண இருக்கிறார் ஐயா ஔவை நடராசன் என்கிற தகவலுடன், ஏப்ரல் 21 ஆம் நாள் மாலை 6 மணிக்கு – சென்னை – கிருஷ்ண கான சபாவில் நடைபெற இருக்கும் பாரதியார் விழாவுக்கு அழைத்தார், அவரது தனிச் செயலர் நண்பர் பொன்னேரி பிரதாப் .

ஐயா ஒளவை நடராசன் ஏப்ரல் 24 – ஆம் தேதி பிறந்தவர் என்பதில் எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி.

நானும் 24 ஆம் தேதி பிறந்தவன்தான் ஆனால் மாதம்தான் வேறு .

மதுரை சேதுபதி பள்ளி நாளிலிருந்து நான் அண்ணாந்து பார்த்து வியந்த இலக்கிய ஆளுமைகள் குன்றக்குடி அடிகளார், ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பனார், சத்திசீலன், சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் பிற்காலத்தில் இவர்களை எல்லாம் அருகிலிருந்து பார்க்கவும் பேசவும், அவர்களது அன்பையும் ஆசியையும் பெறவும் எனக்கு வாய்த்தது என்பது முற்பிறவிப் பயன் என்பதல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ?

அருட்செல்வர் நா. மகாலிங்கத்தால் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அறிஞர் என்பது ஒன்று போதும் ஐயா நடராசனாரின் தகைசால் பெருமைக்கு அடையாளம்.

அதுமட்டுமல்ல, தமிழறிஞர் ஒருவர் கட்சி பேதங்கள் கடந்து, அனைத்து அரசியல் தலைவர்களின் மரியாதையையும் பெறுவது என்பது, தமிழகத்தில் இயலாத ஒன்று.

ஆனால், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூன்று அரசியல் தலைமைக்குக் கீழும் அவரால் மட்டும் தான் பணியாற்ற முடிந்திருக்கிறது.

தமிழைத் தவிர வேறு எந்தச் சாயமும் தன் மீது ஒட்டிக் கொள்ளாமல் அவரால் பார்த்துக்கொள்ள முடிந்தது என்பதுதான் அதற்குக் காரணம்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளப் பகுதியில் அமைந்திருக்கிறது சில ஆயிரம் புத்தகங்கள் கொண்ட ஔவை நடராசனாரின் நூலகம் – தமிழ், ஆங்கிலம் என்று உலகின் ஆகச் சிறந்த இலக்கியப் பொக்கிஷங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன ”

உரைவேந்தர் ” ஒளவை துரைசாமிப் பிள்ளையின் சேகரிப்பு ஒரு தனிப் பகுதியாக வைக்கப்பட்டிருக்கிறது.

ஔவை நடராசனாரின் சேகரிப்பும், மூன்றாவது தலைமுறை ஒளவை அருளின் சேகரிப்பும் தனித்தனியாக இடம் பெற்றிருக்கின்றன.

சிறிய இடத்தில் பெரிய நூலகம் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படி இருந்தது அந்த நூலகம் .

மேலே முதல் மாடியில் இருந்தார் ஐயா. கூடவே மகன் அருளும்.

விழிகளில் அதே உற்சாகம், ஆர்வம். புலமையை முதுமை வென்றுவிட முடியாது. என்பதை நான் உணர்ந்தேன்.

நிறைய பேசினோம். பேசினோம் என்பதைவிட, நான் பேசினேன் என்பதுதான் உண்மை.

மணிக்கணக்காக மேடையில் பேசும் நடராசனாரால், சுருங்கப் பேசியும் விளக்க முடியும் என்பது உலகறிந்த உண்மைதானே.

அவரது மேடைப் பேச்சுகளை எல்லாம் தொகுக்காமலும், பதிவு செய்யாமலும் விட்டது தமிழகத்தின் இழப்பு என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு,

நீண்ட நாள்களாக அவரிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருந்தது.

ஒன்றிரண்டு மாநாடுகள் தவிர, பெரும்பாலான உலகத் தமிழ் மாநாடுகளில் நேரில் கலந்து கொண்டவர் ஒளவை நடராசன்.

1981 – இல் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாடு அவரது பொறுப்பில்தான் நடைபெற்றது.

மொரீஷியஸில் நடந்த 7-ஆவது மாநாடும் அவரது மேற்பார்வையில்தான் நடைபெற்றது.

1995 – இல் தஞ்சையில் 8-ஆவது உலகத் தமிழ் மாதாடு நடந்தபோது, அவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் –

நீங்கள் பல தமிழ் மாநாடுகளில் நேரடி பங்களிப்புச் செய்திருக்கிறீர்கள்.

பல மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

இதுவரை நீங்கள் கலந்துகொண்ட தமிழ் மாநாடுகளில், எல்லாவிதத்திலும் சிறப்பான மாநாடு என்று எதைக் கருதுகிறீர்கள் ?

அவர் யோசிப்பார், ஒப்புநோக்கிப் பார்ப்பார் என்றுதான் நான் நினைத்தேன்.

எனது கேள்வி முடிவதற்குள் அவரிடமிருந்து, தெளிவாகவும், சுருக்கமாகவும் பதில் வந்தது.

” கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு “

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *