அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 100
சாதனைச் சிகரம் டத்தோ சாமிவேலு!
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
அலைபேசி தலையெடுக்காத அக்காலத்திலேயே எந்தையார், சென்னையிலிருந்து மலேசியா நாடு சென்று சேர்ந்தவுடன், வானூர்தி நிலையத்திலிருந்து மிகப்பெரிய ஐமீன் உணவகத்துக்குச் சீருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுதே எங்களிடமும், அம்மாவிடமும் சீருந்திலிருந்தே மலேசியா நாட்டின் வனப்பையும், சிறப்பையும் தொலைபேசி வாயிலாகப் பேசியதை நினைக்கும் போது மலைப்பாக எங்களுக்கு இருந்தது.
அத்தகைய வாய்ப்பை வழங்கிய டத்தோ சாமிவேலு அவர்கள், 1965-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மலேசிய நாட்டிற்கு முதன்முறையாக வருகை புரிந்த போது, அவரின் கரம் பற்றி அனைத்து வசதிகளையும் செவ்வனே செய்து அவருடன் அருகிருந்து உபசரிக்கும் பேறு பெற்றவர் ஆவார்.
இவர், 1974-ஆம் ஆண்டு, மலேசிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகி,
1975-இல் ம.இ.கா.வின் துணைத் தலைவராக உயர்ந்தார்.
1978-இல் வீட்டு வசதி (ம) உள்ளாட்சித் துறையின் துணை அமைச்சராகத் தனது ஆளுமையைத் தொடங்கி, 1979 முதல் ம.இ.கா.வின் தலைவராகவும், நீண்ட காலமாக மலேசிய நாட்டின் பொதுப் பணித் துறை, எரிசக்தித் துறை, தொலை தொடர்புத்துறை, துறைமுகங்கள் துறையின் தனிநிகர் அமைச்சர் பெருந்தகையாகவே மிளிர்ந்தவர் ஆவார்.
மலேசிய நாட்டு நெடுஞ்சாலைகளையெல்லாம் தனியார்மயமாக்கி, இன்றைக்கு மலேசிய நாட்டின் முதுகெலும்பாய்த் திகழும், 900 கி.மீ. நீளம் கொண்ட, வடக்கு-தெற்கு பெருவழிச் சாலை அமைவதற்கு அடிகோலியவர் இவரேயாவார்.
மலேசியாவின் 13.6 கி.மீ. நீளமுள்ள, ஒப்பற்ற பினாங்கு பாலத்தைக் கட்டமைத்த பெருந்தகையும் இவரேயாவார்.
23.06.1983 வியாழக்கிழமை மலேசிய நாளிதழான தமிழோசையில் டத்தோ சாமிவேலு, டாக்டர் ஔவை நடராசன் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று ஆற்றிய உரை வருமாறு:-
“தமிழைப் பிரதிநிதிப்பதற்கோ மலேசிய நாட்டில் எந்த அமைப்பும் இல்லை.
தமிழ் படித்தவர்கள் ஏனோ தெரியவில்லை, அறிஞர்களை அறிஞர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.
இதற்கான காரணம் என்ன என்பதை டாக்டர் ஔவை நடராசன் போன்றவர்கள்தான் விளக்க வேண்டும்.
இங்கே நல்ல கருத்துகளைச் சொன்னாலும் கூட விதண்டாவாதமாக எதிர்க் கேள்விகளைக் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அண்மையில் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது கூடப் பேரறிஞர் ஔவை நடராசனிடம் மலேசிய நாட்டைச் சேர்ந்த சில அறிஞர்கள் விதண்டாவாதமாகக் கேள்விகளைக் கேட்டதாக அறிகிறேன்.
ஏதோ, பேனா பிடித்து எழுதிவிட்டால் இவர்கள் தான் பெரிய எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் தான் இந்த நாட்டின் சிறந்த இலக்கிய வாதிகளாகவும், அறிஞர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.
புழுதிக்கும் சேற்றுக்கும் அடியில் தங்கம் இருப்பதைப் போல், இலைமறைக் காய்களாக எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள் மலேசியாவில் இருக்கிறார்கள்.
அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
எதை எழுதினாலும் சரி, ஏதோ ஒரு சுயநலத்துடன் எழுதியவர்கள் தான் இன்று சிறந்த எழுத்தாளர்கள் என்று பெயர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து பெண் எழுத்தாளர்கள் வந்தால் வண்டாக மாறிச் சுற்றிச் சுற்றி வருவார்கள்.
தங்கையாக நினைக்க வேண்டிய அந்த நங்கையின் எழுத்தை வருணிப்பதற்குப் பதிலாக, அவரைப் பற்றியே வருணிப்பார்கள்.
என்னைப் பற்றி வருணிக்காதீர்கள், என் எழுத்தைப் பற்றி வருணியுங்கள் என்று அந்த எழுத்தாளரே கதறும் அளவிற்கு வருணிப்பார்கள்.
இத்தகைய தரம் கெட்ட எழுத்தாளர்கள் இன்று மலேசியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக இத்தகைய தரம் கெட்டவர்களை உருவாக்குவதற்கு உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு நானும் உழைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது வேதனையடைகிறேன்.
‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்ற குறளை எழுத்தாளர்களுக்கென்றே வள்ளுவர் சொல்லியிருக்கிறார் போலும்.
எழுத்தை ஆளுகின்ற எழுத்தாளர்கள் இதுபோன்ற திருக்குறள்களை அடிக்கடி பார்ப்பவர்கள், படிப்பவர்கள் தான்.
எனவே, அவர்கள் குறளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வரும் நங்கைகளைச் சுற்றிச் சுற்றி வரும் சில எழுத்தாளர்கள், அறிஞர்கள் வந்தால் கவனிப்பதில்லை.
எனவே, இலக்கியவாதிகளையெல்லாம் ஒன்றாக இணைத்து, இலக்கியத்தை வளர்க்கும் முயற்சியையும், ம.இ.கா.-வே செய்தால் என்னவென்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.
எதிர்காலத்தில், வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் இலக்கிய வாதிகளை வரவேற்று, உபசரித்து அனுப்பும் பொறுப்பையும், இலக்கிய வாதிகள் ம.இ.கா-வின் விருந்தினர்களாகவே தங்கியிருந்து போவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கு யோசித்து வருகிறேன்.
தன்னுடைய சொந்தக் கருத்துகளை, சொந்தப் பெயரில் பிரசுரிக்கத் தயங்குபவர்கள், தேவஸ்தானக்காரர்களை அழைத்து அவர்களுடைய பெயரில் தங்களுடைய கருத்துகளைப் பிரசுரிக்கிறார்கள்.
ஐம்பெருங்காப்பியங்களில், சிலப்பதிகாரத் துக்கு மட்டுமே தனிச் சிறப்பு இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் நம்மிடம் விளக்குவார்கள்.
மருத்துவர்களிடம் உடலில் உள்ள நோயைச் சொல்லி அதனைத் தீர்த்துக் கொள்ள முயல்வதைப் போல இலக்கிய அறிவைச் சரிப்படுத்திக் கொள்ளச் சந்தேகங்களை டாக்டர் ஔவை நடராசனிடம் கூறி, அதற்கான சரியான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள இது சரியான தருணம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
இலக்கியம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெறுவதற்கு ஔவை நடராசன் தகுதிவாய்ந்த ஒருவர் என்பதால், அவரிடம் தாராளமாகச் சந்தேகங்களைக் கேட்கலாம்.
ஔவை நடராசன் பேசுவதும், அதனை மற்றவர்கள் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதுமாக மட்டும் இருந்தால், எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
ஔவை நடராசன் அவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடல் போலக் கூட்டம் நடக்க வேண்டும் என்று சொன்னதையும், மேலும், ஒருவர் பேச்சைப் பலர் கேட்டுக் கொண்டேயிருப்பது, ஒருவகை அடிமைத்தனம் என்பதை அவர் வலியுறுத்தியதை நான் வரவேற்கக் கடமை பட்டுள்ளேன்.
இலக்கிய அறிவு வளர வேண்டுமென்றால், இருவரும் விவாதித்துக் கொண்டால்தான் வளரும்.
எனது நல்ல நண்பர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள்.
எங்கு என்ன நடக்கிறது என்பதை, சம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள் எனக்குத் தெரிவித்து விடுவார்கள்” என்று சொல்லி உரையை நிறைவு செய்தார் டத்தோ சாமிவேலு அவர்கள்.
உலக நாடுகளில், ஓங்கிய நிலையில் வாழும் தமிழர்களிடம், எந்தையார் பேசும் போதெல்லாம், மலேசிய நாட்டின் ஈடு இணையற்ற தமிழ்த் தலைவராகத் திகழும் துன். சாமிவேலுவின் பெருமையைப் பற்றித்தான் அதிகமாகக் குறிப்பிட்டுப் பேசுவார்.
ஒருமுறை, எந்தையாருடன் சென்னையிலுள்ள ‘தாஜ் கோரமண்டல்’ ஐமீன் உணவு வளாகத்தில் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவைச் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது, ‘நீ என்ன படித்தாய் தில்லியில்?’ என்று கேட்ட பொழுது, நான் ‘சேக்ஸ்பியர் நாடகங்களின் தமிழாக்கம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்’ என்று பதிலுரைத்தேன்.
உடனே, தன்னுடைய செம்மாந்த குரலில், ஆங்கிலத்தில்,
‘To be, or not to be, that is the question:
Whether this is nobler in the mind to suffer
The slings and arrows of outrageous fortune,
Or to take Arms against a Sea of troubles,
And by opposing end them: to die, to sleep
No more; and by a sleep, to say we end
The heart-ache, and the thousand natural shocks’
என்று ஹேம்லட் வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் என்னுடன் பேசிக்காட்டி, ‘நீ பிறந்த ஆண்டு என்ன?’ என்று கேட்டார்.
நான் ‘67’ என்றேன்.
அதற்கு உடனே, நீ பிறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே நான் ஹேம்லட் நாடகத்தில், ஹேம்லட் வேடம் புனைந்து மலேசிய நாடக அரங்கத்தில் நடித்தேன் என்று பெருமிதமாகச் சொன்னார்.
மலேசிய நாட்டின் சிகரமாய், ம.இ.கா.வுக்கு மணிமுடியாய் வாழ்ந்து நிறைந்த நிலையில், ஓய்வுற்ற தலைவர் துன். சாமிவேலு அவர்களை என் தந்தையார் பெரிதும் போற்றுவார்!
துன். சாமிவேலு தமிழகம் வரும் போதெல்லாம் எந்தையாரைக் கண்டு மகிழ்வார். இருவரும் ஒரே ஆண்டில் (1936) பிறந்தாலும், அப்பாவுக்கு ஒரு திங்கள் மூத்தவராவார்.
அவருடைய பிறந்த நாள் உலக மகளிர் தினமான மார்ச்-8-ஆம் நாளாகும். ஒப்பற்ற தலைவராகிய டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களைக் கண்ணுங் கருத்துமாய்த் தலைவர் நிலையிலேயே காத்து வருகின்ற டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களின் பெருந்தகவை நாடு என்றும் போற்றும்.
அருமை அண்ணனும் எல்லோருடைய உள்ளத்திலும் ஈடில்லாப் பெருமையோடு விளங்கும் கவியரசர் மரபின் மைந்தன் – டத்தோ ஸ்ரீ சரவணன் பெருமகனார் மீது பாடிய பாடலை அப்படியே துன். சாமிவேலு அண்ணலுக்கும் பொருந்துவதாகும் என்பதால், அந்தக் கவி மாலையைத் துன் சாமிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டுப் பொன் மாலையாக அணிவிப்பதில் பெருமிதமடைகிறேன்.
“எண்ணமெலாம் பிறர் நலமே என்பதாலே
எதிரிகளும் பாராட்டும் ஏற்றம் பெற்றார்.
வண்ணமுடன் கலைபலவும் கற்றதாலே
வளர்பொதுமை வையமெல்லாம் பரப்ப வந்தார்.
காலமெல்லாம் பிறர் கண்ணீர் துடைத்ததாலே
கடவுளைப்போல அவதாரம் நீயும் கொண்டாய்.
திண்ணமுடன் முடிவெடுக்கும் தீர்மானத்தால்
திணறாமல் – திகைக்காமல்
அரசியலில் தலைமை கொண்டாய்.
வாழ்வுக்காய்ப் போராடும் தமிழருக்கு
வலதுகை வாளாகத் திகழ்ந்தாய் நீயே!
கோரிக்கை வைக்கின்ற ஏழையர்க்கு
கோடிக்கை கொடுக்காதகொடை கொடுப்பாய்!
கேளிக்கை கொண்டாட்டம் நடுவே கூட
கண்கொத்திப் பாம்பாக விழித்திருப்பாய்!
ம.இ.கா. கண்களிலே மலர்ந்து நின்ற
மகத்தான பெருந்தலைவர் நீவிர் தானே!
சாளரத்தில் நிலாப்பார்த்து நின்றபோதும்
சாலையோர மனிதர்களை மறந்ததில்லை!
ஆளுமையின் சிகரங்கள் தொட்ட போதும்
அடித்தளத்தை ஒருநாளும் மறந்ததில்லை!
தோளுரசும் தோழர்களை எந்த நாளும்
துவண்டுபோக விட்டதில்லை; பத்துமலைமுருகன்
தாள்வணங்கி அருள்பெற்ற தலைவன் நீதான்
துன். சாமிவேலாய் சகம் போற்ற வாழி நீதான்!
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (24)
வெறிபாடிய காமக் கண்ணியார் (271)
உ.வே.சா: “வெறிபாடிய காமக் கண்ணியார் இவர் பெண்பாலார்.
காமக்கண்ணி காமாட்சி என்பது காஞ்சி நகரத்தில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம்.
வெறி என்பது தெய்வம் ஏறப்பெற்ற ஒருத்தி ஆடுதல்; வெறியாட்டம் எனவும் வழங்கும்.”
ஒளவை: “வெறிபாடிய காமக்காணியார், இப்பெயர் காமக்கன்னி என்றும் காமக்காணி என்றும் வழங்கப்படும்.
சங்கச் சான்றோர் உள் நுழை இப்பெயர் காம காணி என வரப்பட்டது.
இம்மையில் புகழ், மக்கட்பேறு முதலிய பயன்களையும் மறுமையில் துறக்க இன்பத்தையும் கருதிச் செய்யும் வேள்வி காமியம் எனப்படும்.
அது காமம் எனவும் வரும்.
இவ்வேள்வியை முடித்துத் தரும் வேதியருக்குத் தரப்படும் சிறப்பு காமக்காணி எனப்படும்.
இது பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்து நிகழ்ந்தது என்பது வேள்விக்குடிச் செப்பேட்டில் புலனாகின்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீட்டில் இதுவிரிவாக ஆராய்ந்து காட்டப் பெற்றுள்ளது.
இத்தகையோர் இடைக்காலத்திலும் பலர் இருந்திருக்கின்றனர் என்பது ஏடு எழுதியவரால் காமக்கண்ணி என்றும் காம கண்ணி என்றும் எழுதப்பட்டு விட்டது.”
(1) புலவர் பெயர் – பாட வேறுபாடு
அடைநெடுங்கல்வியார் (பாட்டு – 283)
உ.வே.சா: “எளிதில் அடைந்த மிக்க கல்வியுடையார் என்பது இதன் பொருள்”.
ஒளவை: “அண்டர் நடுங்கல்லினார், அடைநெடுங்கல்லியாரெனவும் காணப்படுகிறது.
அடைநெடுங்கல்வியாரென்றோதி, இவர் ஒருவரையடுத்து அரிதிற் பெறற்கரிய கல்வியை எளிதில் பெற்று தெடிதுடையார் என்று பொருள் கூறவும் படுகிறது.
ஆலியார் (208)
உ.வே.சா: “ஆலி என்பது சோழநாட்டின் உள்நாடுகளில் ஒன்றாகிய ஆலி நாடு என்பதன் தலைநகர்.
இது திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் என்பர்.
இவ்வூரினராதலால் இவர் இப்பெயர் பெற்றார் போலும்.
இவ்வூர் பெயர் திருவாலி என வழங்கா நிற்கும்.
இப்பெயர் சில பிரதிகளில் ஆவியார் என்றும், ஆனீயார் என்றும் காணப்படுகிறது.”
ஔவை: “ஆவியார் என்னும் இச்சான்றோர் திருவாவினன் குடியில் இருந்து ஆட்சி புரிந்த வேளிர் குடியினர்.
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி (அகம்.1) என்றும், முழவுறழ் திணி தோள் நெடுவேள் ஆவி (அகம் 61) என்றும் ஆவியர் குடி முதல்வன் சான்றோரால் குறிக்கப் படுகின்றான்.
அவனுடைய தலை நகர் பொதினி எனப்படும்.
அதனைப் பொன்னுடை நெடுநகர்ப் பொதிவி (அகம் 61) என்ப.
அது பிற்காலத்தே பழனி என மருவிற்று.
இந்த ஆவியர் வழியினர் பிற்காலத்தே நன்குடி வேளாளர் என்றாகித் தென்பாண்டியில் வாழ்வாராயினர்.
அவருள் பலர் தொல்பெயரான ஆவியார் என்ற பெயர் தாங்கியிருக்கின்றனர்.
ஆலியார் என்றும் பாட வேறுபாடுண்டு.
அதுவே பாடமாயின், அவர் ஆலி என்னும் சோழநாட்டு ஊரினர் எனக் கோடல் வேண்டும்.
பல்லவர் காலத்தில் திருமால் அடியாராகச் சிறப்புற்றிருந்த திருமங்கை மன்னன் ஆலி என்னும் ஊரினர் ஆவர்.
அவரைத் திருவாலி நாடர் என்பது வழக்கம்.
திருவாலி சோழநாட்டில் சீர்காழியிலிருந்து திருவெண்காட்டிற்குச் செல்லும் வழியில் உள்ளது.”
ஒருசிறைப் பெரியனார் (137)
உ.வே.சா: “இவர் பெயர் ஒருசிறைப் பெயரினார்; ஒருசிறைப் பெயரியனார் என்றும் பாடம்.”
ஒளவை: “இவர் நாஞ்சில் வள்ளுவனது நாட்டிலே பிறந்து வளர்ந்து நல்லிசைப் புலமை நிறைந்தவர்.
இப்போதுள்ள நாகர்கோவிலைச் சூழவுள்ள நாடு நாஞ்சில் நாடு எனப்படுகிறது.
ஆங்குள்ள மலைகளுள் நாஞ்சில் மலை இன்னதெனத் தெரிந்திலது.
ஆதலால், வள்ளுவனது நாஞ்சிமலையும் அவனது நாடும் இவையெனத் தெளிதற்கு வேண்டும் விளக்கமில்லாமல் இருக்கின்றன.
உடுமலைப்பேட்டைக்குத் தெற்கிலுள்ள மலைத் தொடர்களிற்றோன்றியோடுங் காட்டாறுகளுள் ஒன்று நாஞ்சிலாறு என்னும் பெயர் கொண்டுள்ளது.
திரு. உ.வே.சாமிநாதையரவர்களும் இது குறித்து ஒன்றுங் கூறமாட்டா தொழிந்தனர்.”
வளரும்…
– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment