செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 39
மாற்றுத் திறனாளிகள் நம் மனத்தில் நிற்பார்கள் !
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது –
மானிடர் ஆயினும் கூன் – குருடு – செவிடு பேடு
நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது
என்பது ஒளவையார் மூதுரை
.
ஊனமுற்றவர்கள் , அங்க ஈனர்கள் , நற்பேறு வாய்க்காதவர்கள் ,
பொறுப்புக்களை வழங்கப் பெறாதவர்கள் என்றெல்லாம் துயர்க்கடலில் தள்ளப்பட்டு வருந்திய மக்களை வாரியணைத்துக்கொண்டு அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வழங்கி நலம் செய்த நிலைத்த பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞரையே சாரும் .
இப்போதெல்லாம் அறிவியல் வளர்ச்சியால் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமும் அளிக்கப்படுகிறது என்றாலும் எளிமையாலும், ஏழ்மையாலும் அல்லலுறுகிறவர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை அரசின் சார்பில் அமைத்த கனிவு கலைஞரையே சாரும் .
தனியாரும், அரசும் இணைந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தினார் .
அவ்வாறு வலியுறுத்திய உருக்கவுரைதான் இதைத்தொடர்ந்து வெளியிடப்படுகிறது .
எங்கெல்லாம் சமுதாயத்தில் குறைகளும் , கொடுமைகளும் இடம் பெற்றாலும் அரசு தாமாகச் சென்று அவர்களின் துயர் துடைக்கவேண்டும் என்று மனம் உருகி வலியுறுத்தியவர் நம் முதல்வர் கலைஞர் .
தான் எழுதிய திரைப்படங்களில் கூட இரவலர் இல்லம் தொடங்கும் காட்சியை 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வரைந்து காட்டியவர் . . .
” இங்கேயுள்ள சிறார்கள் கண்ணற்றவர்களாக இருந்தாலும், யாரும் இதயமற்றவர்கள் அல்ல.
இருந்தும் உயிரோடு வாழ்ந்துகொண்டு, உதவி செய்யாமல் இருந்தால், அவர்களுக்கு இதயம் இருந்தாலும் இதயம் இல்லாதவர்களாகத் தான் கருதப்படுவார்கள்.”
– கலைஞர்
“ஏழை எளியவர்கள் ஊனமுற்றவர்கள், தெருவோரத்தில் அலையும் இரவலர்கள் இந்த அரசாங்கத்தை வாழ்த்துகிறார்கள் என்றால், அது உண்மையிலேயே ஆண்டவனிடமிருந்து கிடைக்கிற பாராட்டு என்று நாங்கள் எண்ணிக்கொள்வோம்.
அதைத்தான் நானும் சரி. என் தலைமையில் இயங்குகிற இந்த அரசும் சரி, இந்த அரசால் ஆதரிக்கப்படுகிற இப்படிப்பட்ட நிறுவனங்களும் – விரும்பும்.”
சென்னைச் சிறுமலர் இல்லம் செவிப் புலனற்றோர் – அந்தகர் பள்ளியின் பொன்விழா ஆண்டு முகாம்களின் தொடக்க விழா .
சென்னை இராசேசுவரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறுமலர் செவிடர், அந்தகர் பள்ளியின் சார்பில் முதல்வர் கலைஞருக்கு வரவேற்பு மடல் வாசித்து அளிக்கப்பட்டது.
ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தினார்
. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தைச் செயற்படுத்தி வரும் கழக அரசையும் முதல்வர் கலைஞர் அவர்களையும் பாராட்டப் பள்ளித் தலைவி ரீத்தாமேரி பேசினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய முதல்வர் கலைஞர், திசம்பர் 26 ஆம் தேதியிலிருந்து சனவரி 12 – ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் முகாம்களைத் தொடங்கி வைத்து. உணர்ச்சி பொங்கும் உரை நிகழ்த்தினார்.
விழா நிறைவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் பொம்மலாட்டம், கரகாட்டம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல்வர் விழா மேடையருகே வந்தபோது, செவிடர், அந்தகர் பள்ளி மாணவ மாணவியர் பலத்த கர ஒலி எழுப்பித் தங்களின் இதய வாழ்த்துகளைச் சமர்ப்பித்தனர்.
விழாத் தொடக்கத்தில் கண்ணற்ற பெண்கள் பாட காது கேளா இரண்டு மாணவியர் முதல்வருக்கு மாலை அணிவித்தனர்.
ஊனமுற்றோரின் முகாமில் உவகை அடைகிறேன் !.
இன்று நடைபெறுகின்ற இந்தத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதை நான் எனக்குக் கிடைத்த பெரும் பேறு என்று கருதினாலும் – கேட்கின்ற பேறும், பார்க்கின்ற பேறும் பெறாத குழந்தைகளைக் காணும் நேரத்தில், உள்ளபடியே தாங்கொணாத வேதனை நம்முடைய நெஞ்சத்தைக் கப்பிக் கொள்கிறது.
எனினும் அவர்களை வாழவைக்கும் முயற்சியில் நாமெல்லாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை எண்ணி ஆறுதல் பெறவும் நம்மால் முடிகிறது.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், இவர்களுக்கான முகாம்கள்
மாநிலத்தின் ,பல்வேறு பகுதிகளில் இவர்களுக்கான முகாம்கள் நடத்தப்போவது கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று நமக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட தொகையினரோ அல்லது இதுபோன்ற அற உள்ளம் கொண்டவர்கள் நடத்துகின்ற நிறுவனங்களில் இருந்து புதுவாழ்வைப் பெற்றுக்கொண்டு இருக்கும் அல்லது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சார்பில் நல்வாழ்வு பெறுவதற்காக ஆங்காங்குப் பல்வேறு இடங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொகையினரோ, மாத்திரம் பாதிக்கப்பட்ட சூழிலிலோ இல்லை.
இவர்களை எல்லாம் விடப் பெரும் பகுதியினர் , இன்னும் கவனிக்கப்படாத சூழலில்தான வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
கவனிக்கப்படாத சூழலில் பல்லாயிரக்கணக்கிலே இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நம்மால் உதவி செய்ய முடியுமா ? எனப் பெருமூச்சுவிட்டு நின்றுவிடுவோமேயானால் எதையும் செய்ய முடியாதவர்களாக ஆகிவிடுவோம்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததைச் செய்வோம் என்கிற முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இல்லாவிட்டால், இப்போது கவனிக்கப்படுகின்ற பகுதியினரும் கவனிக்கப்பட முடியாத இன்னலுக்கு ஆளாக நேரிடும்.
ஆகவே தான், சிறுகச் சிறுக ஆனால், எதிர்காலத்திலே நம்பிக்கையோடு சில திட்டங்களை இன்றைக்கு நாம் தொடங்கியிருக்கிறோம்.
சபிக்கப்பட்டோருக்கு சகாப்தம் படைப்போம் !
1967- ஆம் ஆண்டு நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட காலத்திலிருந்து இதுவரையில், யார் யார் சமுதாயத்திலே அடித்தளத்திலே வீழ்ந்து கிடக்கிறார்களோ, யார் யார் சமுதாயத்திற்குப் பயன்பட மாட்டார்கள் என்று புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்களோ, யார் யாருக்கு வாழ்வே கிடையாது என்று காலத்தினால் சபிக்கப்பட்டார்களோ, அவர்களுக்கெல்லாம் புதுவாழ்வு அளிப்பது என்று சபதம் எடுத்துக்கொண்டு, அதனை முடிந்த வரையில் செய்து வருகிறோம்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கண்ணற்ற மகளிர் பாடவும், கேட்கின்ற ஆற்றலற்ற இரண்டு அரும்புகள் ஆடவும், அவர்கள் எனக்கு மாலை அணிவிக்கவுமான நிகழ்ச்சி ஒருபுறத்தில் மகிழ்ச்சியை அளித்ததென்றாலும், எவ்வளவு பெரிய துன்பச் சுமையை என்னுடைய உள்ளத்தில் அது ஏற்றி வைத்தது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு உணர்வீர்கள் என்றே நான் நம்புகிறேன் .
புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக தாழ்த்தப்பட்டவர்களுக்காக – சமுதாயத்திலே எங்கேயோ ஒரு மூலையில் அழுத்தப்பட்டவர்களுக்காக – பணி ஆற்றுவதுதான் மனிதனின் தலையாய கடமையாக இருந்திட வேண்டும்.
இல்லாவிட்டால், மற்றவர்கள் இழிவுபடுத்தப்படும் நேரத்தில் , அவர்கள் தாமே இழிவுபடுத்தப்படுகிறார்கள்,
நமக்கென்ன என்று எந்த மனிதன் நினைத்தாலும், உண்மையிலேயே அவனை அறியாமல் அவனும் இழிவுபடுத்தப்படுகிறான்.
சமுதாயத்திலே எல்லோருமே அங்கம்தாம். சமுதாயத்தில் இரவலர்கள் – கண்ணற்றவர்கள் – தொழு நோயாளிகள் – செவிப் புலனற்றவர்கள் – விதவைகள் – ஆதரவற்ற இளைஞர்கள் – என்றெல்லாம் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை எல்லாம் தேடிப்பிடித்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பது என்று ஓர் அரசு விரும்பினாலும், அல்லது யார் விரும்பினாலும் அவர்களுக்குப் பெரிய வரவேற்போ, செல்வாக்கோ காத்துக் கொண்டிராது என்பதை நான் மிக நன்றாக உணர்வேன்.
ஓர் அரசோ, அல்லது நல்ல உள்ளம் வாய்ந்த ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ, செல்வாக்குப் பெறவேண்டுமானால், அவர்கள் நாட்டிலேயிருக்கிற செல்வச் சீமான்களோடு, கூடிக் குலாவி அவர்களுக்குத் தேவையானவைகளைச் செய்து கொடுத்தால், அப்படிப்பட்ட செல்வச் சீமான்கள் சந்திக்கும் இடங்களில், அவர்கள் கூடக் களியாட்டங்களில் ஈடுபடுகின்ற இடங்களில், அவர்களுக்கு விருப்பமான விருந்துகளில், அவர்கள் அமர்ந்து உரையாடும் நேரத்தில் இந்த அரசாங்கத்தைப் போல உண்டா ?
அல்லது இந்த நிறுவனத்தைப் போல உண்டா ?
என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், அந்தப் பாராட்டு யாரிடமிருந்து கிடைக்கின்ற பாராட்டு என்றால், பணம் படைத்தவர்களிடமிருந்து கிடைக்கிற பாராட்டு; உல்லாசத்தை அனுபவிக்க வேண்டும் என்று கருதுகிற சமுதாயத்திலே மிகச் சிறிய பிரிவினரிடமிருந்து கிடைக்கிற பாராட்டு – இவை எல்லாம் மனிதர்களிடமிருந்து கிடைக்கிற பாராட்டு என்றுகூடக் கருத முடியாது.
மனிதர்களுள் தாழ்ந்தவர்களிடமிருந்து கிடைக்கின்ற பாராட்டு என்றுதான் அதனைக் கருத முடியும்.
அதே நேரத்தில், ஏழையெளியவர்கள், ஊனமுற்றவர்கள், தெருவோரத்தில் இருக்கிற இரவலர்கள் இந்த அரசாங்கத்தை வாழ்த்துகிறார்கள் என்றால், அது உண்மையிலேயே ஆண்டவனிட மிருந்து கிடைக்கின்ற பாராட்டு என்று நாங்கள் எண்ணிக் கொள்வோம்.
அதைத்தான் நானும் சரி, என் தலைமையில் இயங்குகின்ற இந்த அரசும் சரி, இந்த அரசால் ஆதரிக்கப்படுகிற இப்படிப்பட்ட நிறுவனங்களும் சரி, விரும்பும்.
ஆண்டவன் தராத ஆதரவினை
ஆளுகிற கழக அரசு தரும்
அரசாங்கத்தின் சார்பில் செய்யப்படும் காரியங்கள், கடந்த இரண்டு மூன்று ஆண்டுக் காலமாகத்தான் விரிவான வகையில் ஊனமுற்ற மக்களுக்காகச் செய்யப்படுகிறது .
அதற்கு முன்பு ஊனமுற்றவர்களைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லையா என்றால், நான் இல்லை என்று சொல்லவில்லை.
சிந்தித்தார்கள். ஆனால், பரந்த அளவில் அவர்களுக்குக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்கிற முயற்சி ஓர் அரசின் சார்பில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அரசின் சார்பில் செய்யப்பட்டதெல்லாம் இப்படிப் நிறுவனங்களுக்கு ஓரளவு மானியத்தொகை வழங்குதல் என்றளவில் மட்டும் நிலவியது.
அல்லது இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் வந்து கலந்து கொள்ளுதல்; கோரிக்கை நிறைவேற்றுவதாக வாக்களித்தல்; இவைதாம் பழைய காலத்தில் அரசாங்கத்தில் சார்பில் ஊனமுற்றவர்களுக்காகச் செய்யப்பட்ட காரியங்களாக இருந்தன.
இன்றைக்கு இதுபோன்ற மானியத்தொகை அளித்தல் கோரிக்கைகளைக் கேட்டல் என்பதொடு மாத்திரமல்லாமல், நிறுவனங்களிலே இருக்கிற நல்லவர்கள் கொண்டிருக்கும் அதே உணர்ச்சியை அரசாங்கத்தில் இருக்கிற நாங்களும் பெற்று, இவர்களுக்காகப் பாடுபடுவதில் பங்கேற்றிருக்கிறோம்.
அரசு திட்டங்கள்
ஐந்தாறு ஆண்டுக் காலமாக இந்த அரசு தொடங்கி நிறைவேற்றி வருகின்ற காரியங்களை எல்லாம், இங்கே குறிப்பிட்டார்கள்.
முதல் திட்டமாக நாங்கள் தொடங்கிய திட்டமே கூடத் தொழுநோய் இரவலர்களுக்கு மறுவாழ்வு இல்லங்களைக் கட்டும் திட்டம் தான்;
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் முக்கியப் பகுதிகளில் தொழுநோய்ப் பிச்சைக்காரர்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் இல்லங்களைப் பார்த்தால், அது ஏதோ பட்டதாரி மாணவர்களுடைய விடுதிபோல தோற்றமளிப்பதை அறிந்து கொள்ளலாம்.
அந்த இல்லங்களில் அவர்களை வாழ வைப்பதற்காக, அவர்களுக்குத் தொழில்களைக் கற்றுக்கொடுக்க, உடல் நோயை முடிந்தவரையில் குணப்படுத்த எல்லா முனைப்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அந்த சாதனை இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஊனமுற்றவர்களுக்குள்ள சங்கடம், ஊனமுற்றது மாத்திரமல்லாமல் சில நேரங்களில் மணமற்றும் வாழ வேண்டிய நிலைமை ஏற்படுகிறது .
கை, கால்கள் நன்றாக இருந்தால்தான், மற்றவர்களுடைய ஏளனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்.
இல்லாவிட்டால் மற்றவர்களுடைய ஏளனத்திற்கும் ஆளாக வேண்டியியிருக்கிறது.
எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கிராமத்தில் இருக்கிற ஒரு வயதான தாய் – தன்னுடைய வாலிப வயதில் ஓடி உழைத்தவள்.
வயதாக வயதாகத் தன் கண்ணொளி மங்கியிருக்கிற நேரத்தில், மருமகளை அழைத்துக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று கேட்கிற நேரத்தில், கொண்டு வருவதாகச் சொல்லி வரத் தாமதமாக, இவ்வளவு நேரம் என்ன செய்தாய் ?
தொண்டை அடைக்கிறதே என்று கிழவி கேட்கிற நேரத்தில், கிழட்டுப் பிணத்திற்கு வேறு வேலை கிடையாது என்று மருமகள் சொல்கிற நேரத்தில், அந்தத் தாய் யாரையும் சபிப்பது இல்லை பாவம் ஆண்டவனைத்தான் ” பாவி ஆண்டவனே, இப்படிப் பார்வையில்லாமல் செய்துவிட்டாயே ” என்று மனம் குமுறி அண்டவனைச் சபிப்பதைப் பார்த்திருக்கிறோம்.
இன்னும் கண் பார்வையில்லாத காரணத்தால், கால் இல்லாத காரணத்தால், தடுமாறித் தெருவில் நடக்கிற ஒருவன் இடறி விழுகின்ற நேரத்தில் ” ஐயோ, கடவுளே, நான் உனக்கு என்ன செய்தேன் ? பாவி கடவுளே ” என்று ஆண்டவனைத்தான் சபிக்கிறான்.
ஊனமுற்றிருக்கிற ஒவ்வொருவரும் தங்களால் ஒரு காரியம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிற நேரத்தில் எல்லாம் ஆண்டவனைத்தான் சபிப்பார்கள்.
அவர்களுடைய சாபங்களிலிருந்து ஆண்டவனைக் காப்பாற்றத்தான் – ஊனமுற்றவர்களுக்கெல்லாம் உதவி செய்யும் முயற்சியில் நாம் ஈடுபட்டுப் பணியாற்றி வருகிறோம்.
ஆகவே, உண்மையிலேயே ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால், நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னைக் காப்பாற்றுகிறீர்களே என்று நம்மை வாழ்த்திக் கொண்டிருப்பான் என்பதில் சந்தேகம் கிடையாது.
இதயமுள்ள கழக அரசு இயன்றதைச் செய்யும் .
தமிழக அரசைப் பொறுத்தவரையில், இதுபோன்ற தனியார் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு உதவியளிக்க ஓரளவு தொகையை ஒதுக்கித் தக்க வழிகளில் அதனைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது.
அரசின் சார்பில் செய்யப்படுகின்ற இதுபோன்ற காரியங்களுக்கு, இப்படிப்பட்ட நிறுவனங்களை நடத்துகின்றவர்களுடைய நல்ல ஆலோசனைகள் நிரம்பத் தேவை.
இந்த ஆண்டில்கூட 52 – க்கு மேற்பட்ட இடங்களில் கருணை இல்லங்கள் என்ற பெயரால் தாய் – தந்தையற்ற அனாதைச் சிறுவர்கள் – அனாதை என்று அழைக்கப்படக்கூடாது அவர்களுக்கெல்லாம் கல்வி வசதியும், உணவும் இலவசமாக இன்று அளிக்கப்படுகிறது.
இப்படி வகையிலும், இந்த நாட்டில் இருக்கிற இயலாதவர்களுக்கு உதவி புரிகிறோம்.
இந்த அருந்தொண்டை நான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம், பெரும் தொண்டு ஆற்றுவதற்கான உற்சாகத்தை, உணர்ச்சியைப் பெறுகிறேன் .
இங்கேயுள்ள சிறார்கள், கண்ணற்றவர்களாக இருந்தாலும் . யாரும் இதயமற்றவர்கள் அல்லர்; எல்லாம் இருந்தும் உயிரோடு வாழ்ந்துகொண்டு, உதவி செய்யாமல் இருந்தால், அவர் இதயம் இருந்தாலும் இதயம் இல்லாதவர்களாகத்தான் கருதப்படுவார்கள்.
நமக்கெல்லாம் இதயம் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டவாவது, இப்படிப்பட்ட சிறார்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அதற்கு இந்த அரசால் இயன்ற எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி :
முரசொலி, 19.12.1975
தொடர்புக்கு : thamizhavvai@hotmail .com

Add a Comment