POST: 2022-01-21T10:44:25+05:30

முரசொலி -14.1.2022

தைத்திங்கள் முதல் நாள் – தமிழ்ப்புத்தாண்டு –
பொங்கல் சிறப்பு மலர் – 2022 .

தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டே – தமிழர் வாழ்வின் நடைமுறை !

– ஒளவை நடராசன்

தண்ணிய குளிர்ச்சியும், தழைக்கும் பயிர்களும் மனத்தை இனிமையாக்க வரும் திங்கள் தான் மார்கழித் திங்கள்.

இத்திங்கள் தீர்ந்து புத்தமுது படைக்கும் தைத்திருநாளின் தொடக்கம் தமிழர்க்குப் புத்தாண்டாகும்.

பழையன கழியும் போகியிலிருந்து விடுபட்டுக் கார் அறுத்துக் கதிரவனுக்குப் படையல் அளித்துப் புத்தரிசியிலிருந்து புத்தாடை உடுத்துவது வரை வனப்பாக வரும் பொங்கல் நன்னாள் தமிழர்க்குரிய தனித் திருநாளாகும் இதுவே முறையான தமிழ்ப் புத்தாண்டாகும் .

உழுதுண்டு வாழும் வாழ்க்கையில் உவகை பிறக்கச்செய்யும் இத்திருநாள், பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு வருவதாகும்.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் உவப்புடன் மகிழ்ந்து கொண்டாடும் இந்நாள், கதிரவனை வழிபடுவதன் மூலம் கதிரவன் தரவேண்டிய வளங்களை வணங்கி வாழ்த்தி இன்புற்று மகிழும் நன்னாளாகும்.

இத்திருநாள் தமிழர் திருநாள் என்றும் , உழவர் திருநாள் என்றும் திருவள்ளுவர் திருநாள் என்றும் தொடர்ந்து அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கப்படும்.
இதுவே தமிழ்ப்புத்தாண்டாகும்

சங்க கால இலக்கியத்தில் தைந்நீராடல் என்ற குறிப்புண்டு.

மகளிர் ஒன்றாக, நீரில் குளிர்ந்தாடி மகிழ்ந்து கொண்டாடித் தம் வருங்கால நல்வாழ்விற்கு வழி கோலுவதாகத் தமிழ் இலக்கியம் பேசும்.

தை முதல் நாள் தமிழரின் நன்னோக்குத் திருநாளாகும்.

வழி வழி வந்த மரபில் தைத்திங்களே தமிழர்க்குரிய புத்தாண்டாகும்.

இவ்வகையில் தமிழர் புத்தாண்டு என்று தைத்திங்களை நிறுவிய பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தனியுரிமையாகும் .

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பொங்கல் நன்னாளை நினைவூட்டுவது போன்ற ஒரு பாடல் உண்டு.

இப்பாடல் ஒரு குறிப்பிட்ட நாளில் மலை வாழ் மக்கள் புத்தரிசியைப் பானையில் இட்டுச் சமைத்துக் கூடிக் களித்து உண்பதைச் சுட்டுகிறது.

நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்

வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,

மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி

வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்ற

சாந்த விறகின் உவித்த புன்கம்,

கூதளங் கவினிய குளவி முன்றில்,

செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும் !

( புறம் 168 )

ஒரு நல்ல நாளை எதிர்நோக்கிய ( நன்னாள் வரு பதம் ) மலைமக்கள், புதிதாக அறுவடை செய்த தினைக் கதிரைப் புதிதுண்ண வேண்டி, ஒரு பானையில் ( குழிசி ) ஆட்டுப்பாலை இட்டு உலை நீராக வார்த்துச் சோறாக்கிச் சமைத்து ( உவித்து ) அதனை வாழை இலையில் பரிமாறிப் பலரோடு பகுத்துண்ணுவதைக் காட்சிப்படுத்துகிறது இப்பாடல்.

இதனைப் பொங்கலோடு தொடர்புபடுத்த இயலும்.

எனவே சங்க காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்தேறியுள்ளைதை எண்ணிப் பார்க்கலாம்.

மார்கழியின் இறுதிநாள் போகி அன்றைக்குப் பழையனவற்றைக் கழிப்பதும் புதியனவற்றை ஏற்பதும் உண்டல்லவா !

வீடும் சுற்றுப் புறமும் மாசு நீங்கி மகிழ்ச்சிப் பூத்துக் குலுங்கிப் பொலிவோடு இருக்கும் திருநாளே தமிழர் திருநாள்.

பழைய நிலையிலிருந்து மாறும் புதிய ஆண்டின் தொடக்கமும் அதுதானே !

தமிழர்க்குப் புத்தாண்டே தைத்திங்கள்தான் என்பது இதனால் பெறப்படுகிறது.

நம்பமுடியாத கதைகளையும் – நலிவுகளையும் ஆண்டுக் கணக்கில் ஏற்றி , மெல்லத் திங்கள் கணக்கிலும் கலப்பைச் சேர்த்துத் தமிழ் மக்களை திகைக்க வைத்திருந்தனர் .

இந்த வகையில் உழவர் திருநாளைத் – தமிழர் திருநாளாக திருவள்ளுவர் திருநாளாகச் செய்த பெருமை என்றும் போற்றுதற்குரியது .

நெல்லின் மக்களான உழுகுலத்தை மக்கள் தொழுகுலமாகக் கொண்டாடிக் களிக்கும் இந்நன்னாளில், இஞ்சியொடு மஞ்சளும், விரும்பியுண்ணும் கரும்பும் பொங்கலோடு படைக்கப்படும் புத்தரிசியும் இடம் பெறும்.

புதிய வாழ்விற்கு நல்வரவு பாடும் ; உழுதவன் தாளில் பிறப்பதே உலகத்தின் தொடக்கமாகும் –

காலில் பிறந்தவன் தாழ்ந்த குலமென்றும் வேதங்கள் வசை பாடிற்று .

அறுவடையான நெல்லின் மணமும், அருந்தமிழில் படைக்கும் சொல்லில் மணமும் கமழ்ந்து இனிக்கும் நன்னாளே இத்திருநாள்.

உயர்திணையைப் போற்றி மகிழும் இந்நன்னாளில், அஃறிணையை அரவணைத்து அவற்றிற்கும் விழா தனியாக எடுப்பதில் தமிழர் மனம் மகிழ்ந்தது .

வில்லேர் உழவர்களான வீரர்கள் ஒரு புறம்; சொல்லேர் உழவர்களான அறிஞர்கள் ஒருபுறம் இவர்களனைவரும் ஒன்று கூடிக்களித்துக் கொண்டாடி மகிழ்வதற்குரியது இத்திருவிழா.

உயர்திணை மக்கள் தம் வலிமை காட்ட அஃறிணைகளோடு முரண்டு தம் வலிமை காட்டி மகளிரை மணந்தது அக்காலம்.

தமிழரின் வீர விளையாட்டின் தொடக்கம் மஞ்சு விரட்டலில் தான் தொடங்குகிறது.

இதனைப் பண்டைக்காலத்தில் ஏறுதழுவுதல் என்றனர்.

காளையை அடக்கத் தெரியாதவனைக் கன்னிப் பெண் தழுவமாட்டாள் என்பதனைக் .

‘ கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே , ஆயமகள் ‘

( கலி. முல்லைக் கலி.103; 63 – 64 )

என்று கலித்தொகை பேசும்.

ஆடவரின் வீரத்தை அளக்கும் மகளிரின் கயல்விழியில் காதல் அரும்பும் காலம் அல்லவா தை.

அதனாலன்றோ வீரம் விளைவித்த வன்மைக் கைகளை மென்மை விரல்கள் இணைவிக்கும் மணவிழா தையில்தான் அரும்பியது .

தை என்பதற்குப் பொருந்துதல், இணைத்தல் என்றும் பொருள் உண்டு.

இரு மனங்களின் இணைப்புத் திருமணமாக இம்மாதத்தில்தான் பெரிதாக நிகழ்கிறது .

தமிழ்ப்புலவர்கள் முப்பதன்மர் ஒன்று கூடித் திருவள்ளுவர் திருநாள் என்று நாம் தைத்திங்களைக் கொண்டாட வேண்டும் என்றனர் .

புலவர் உரையைப் பொன்னே போல் போற்றிக் கலைஞர் அதை அரசாணையாக வெளியிட்டுத் தமிழ்ப்புத்தாண்டு என முரசொலியாகவும் முழங்கினார் .

பழமைப்பாசி பிடித்த மனத்தினர் ஒருநாள் தெளிவு பிறந்து உண்மைத் தமிழர் உணர்ந்தே தீர்வர் என்று அன்றே எழுதிய நம் முதல்வரின் மதிநுட்பம் வென்றது .

கதிரவனுக்குப் புதிதாக அறுவடை செய்த கதிரைப் படைத்து வழிபடும் முறை உலகில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

தமிழ் நாள்காட்டியில் தை மாதம் ஆங்கில மாதத்தின் நடுவில் வரும். அதாவது சனவரி 14 அல்லது 15 இல் வரும்.

புதுப்பானையில் பொங்கி வழியும் புத்தரிசி வழியும்போது நாம் பொங்கலோ பொங்கல் என்று கூவுவது போல அயல் நாட்டினரும் கூடக் கூவுவது உண்டாம் .

தமிழில் செய் என்பது வயலைக்குறிக்கும்.

செய் பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் கொள்ளும்போது பலவாறு பொருள் தரும்.

நன்செய், புன்செய் என்பன வயலையும், தோட்டத்தையும் குறிக்கும்.

இவற்றை நல்லபடி செழிக்கச் செய்து பயன்கொள்வது உழவர்களுக்குரிய செயற்பாடு.

செய் என்பது நிலமென்னும் நல்லாளின் அன்பாணையாகும் .

செழித்து வளர உழைப்புத் தேவை.

உழவர்களின் உழைப்பில் உருவாவது செய்.

நிலம் விளைந்தால் மக்களின் நலம் விளையும்.

எனவே செய் என்பது சேய் ( மக்களையும் குறிக்கும் சொல் ) என்பதாக மாறிற்று என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறிப்பிட்டது இன்றும் நினைவில் நிற்கிறது .

தமிழ் மாதங்களில் ஒற்றைச் சொல்லாக இருப்பது தை.

பிற தமிழ் மாதங்களுக்கு இல்லாத சிறப்பைத் தருவது தை.

புதிய உதயத்தின் தொடக்கம் தை.

அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம்.

வரிசை என்று அறுபதாகக் கணக்கிட்ட பொய்க்கதையில் விரோதி ஆண்டு என்றே ஒரு பெயர் வருமா ?

கேட்பதற்கு ஆளில்லாத கேடு பெருகியது .

தொல்காப்பியமே ஐ , இ என்ற வினை முடிபு வரும் என்றார் .

அதிலும் கலப்புச் செய்து புரட்டாசி ,மாசி ,கார்த்திகை ,பங்குனி என்ற சொற்கள் இடம் பெற்றன .

இதனை மாற்றவேண்டும் என்று ஆண்டுப்பெயர்கள் அறுபதையும் தமிழாக்கி ஒரு நிரல் வகுத்துக்கொள்வது நம் நலனாகும் என்று அறிஞர் வ சுப மாணிக்கம் ஒரு கட்டுரை எழுதினார் .

இவற்றைப்போக்கி புதுச்சொல் ஆக்குவதே நல்ல போகியாகும் .

இச் சூழலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வெளியிட்ட அரசாணை என்றும் வென்று நிற்கும் .

தைப்புத்தாண்டே வருக !

தமிழ்ப்பொங்கலே வளம் தருக !! .

திருவள்ளுவர் திறம் என்றும் எங்கும் பெருகுக !!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *