உலக முதன்மொழி – மாத இதழ் – நவம்பர் மாதம் 2021
தமிழகம் – வடவெல்லை
உரைவேந்தர் ஒளவை சு துரைசாமி
‘நம் தமிழகத்துக்குத் ‘தமிழ் உலகம்’ என்ற பெயர் தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் என்பவர் எழுதிய பாயிரத்தில் காணப்படுகிறது.
அவர், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” என்று உரைக்கின்றார்.
உலகம் என்பது பொதுவாக நாம் வாழும் நிலவுலகம் முழுதும் குறிக்கும்; ஆயினும் “மைவரை யுலகம்”, “காடுறை யுலகம்,” “பெருமணல் உலகம்” என்றாற்போல, அது நிலவுலகத்தின் பல்வேறு பகுதிகளையும் குறிப்பதுண்டு.
அதுவே நாடு என்ற பெயரால் பெரிதும் வழங்கும்.
இவ்வகையில் தமிழ் உலகம் என்பது தமிழ்நாடு என்றே பொருள்படும்.
தமிழ்நாட்டைத் தமிழ் உலகம் என்று வழங்கியதோடு தமிழகம் என்றும் வழங்குவதுண்டு.
இதனால், தமிழர் வாழும் தென்னாடு, தமிழகம், தமிழ் உலகம், தமிழ்நாடு என்ற பெயர்களையுடையது என்பது தெளிவாம்.
தமிழகத்துக்கு வடவெல்லை வேங்கடமும், தென் எல்லை குமரியும், கிழக்கும் மேற்கும் கடலும்
எல்லை களாக உள்ளன.
எல்லை பற்றிய பேச்சு நிகழும்போ தெல்லாம் அறிஞர்கள் தென்குமரியைப் பற்றியே பெரிதும் எடுத்துப் பேசுவர்.
வடவேங்கடம் தமிழர் வாழிடமாயினமையின், அதனைப் பற்றி ஒன்றும் கூறுவதில்லை.
ஒருகால் ஏதேனும் பேசவேண்டின், வேங்கடமலையில் வீற்றிருக்கும் தெய்வம் திருமாலா, முருகனா என்று ஆராய்ந்து பேசுவது வழக்கம்.
மலைகள் முருகன் உறையும் இடமாகலின், வேங்கடத் தெய்வம் முருகனே; அதுவே பிற்காலத்தே திருமாலாகிவிட்டது என்பர் சிலர்; இளங்கோவடிகள் காலத்தேயே வேங்கடத் தெய்வம் திருமால் என்பது தெளிவாக இருத்தலால் வேங்கடம் திருமாலுக்கே உரியது என்பர் சிலர்.
வேங்கடம் தமிழகத்தின் வடவெல்லை என்பதில் யாரும் ஐயுற்றதுமில்லை; ஆராய்ச்சி மேற்கொண்டதுமில்லை.
தமிழகத்தில் தமிழரது பண்பட்ட வாழ்வு தோன்றிய அன்றுமுதல், மேனாட்டவர் ஆட்சி தோன்றி மறைந்த நாள் வரை, நம் தமிழகத்தின் வடவெல்லையைப் பற்றித் தமிழர் எடுத்துப் பேசவேண்டிய இடம் இல்லாமல் இருந்தது.
தமிழ்நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த ஆந்திரர்களும், தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களும், சென்னை மாநில ஆட்சி முறையில் ஒருசேர வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும்.
இப்போது வேற்று நாட்டவரது ஆட்சி நீகிவிட்டது. நம்நாட்டை நம்மவரே ஆட்சி செய்யும் நலம் பெற்றுவிட்டனர்.
இந்த ஆட்சி, இனிதே இயங்கி மக்கட்கு வேண்டும் நன்மைகளைச் செய்வதற்கு மொழிவழியாக நாடுகள் தம்முட் பிரிந்து இயலவேண்டும் என்ற கொள்கை உணரப்பட்டது.
மக்களின் வாழ்வு கருதி மக்களே முன்னின்று நடத்தும் மக்களாட்சி, அம் மக்கள் அறியாத மொழியில் நடப்பது என்பது போலியரசாம் என்று அரசியல் அறிவு வற்புறுத்துவதாயிற்று.
மொழிவழியாகப் பிரிந்து இயங்கும் இயக்கமே மக்களிடையே ஒருமைக் கருத்து வளர்வதற்கு ஏற்றதாம் என்ற கருத்தை முன்கூட்டி யுணர்ந்த காங்கிரசு இயக்கத் தலைவர்கள், பல்லாண்டு கட்கு முன்பே மொழிவழியாக ஆந்திர மாகாணக் காங்கிரசு, தமிழ்நாடு காங்கிரசு, கேரள மாகாணக் காங்கிசு எனப் பிரித்துத் தமக்குரிய பணியை ஆற்றி வெற்றியும் வீறும் எய்தக் கண்டனர்.
இதுவும், நாடுகள் மொழிவழியாகப் பிரிந்துநின்று அரசியலை நடத்துவது நல்லது என்ற கருத்தை வலுப்படுத்துவதாயிற்று.
இவற்றால் ஆந்திரரிடையே ஆந்திர நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டுமென்றே கிளர்ச்சி தோன்றிற்று.
எவ்வகைக் கிளர்ச்சிக்கும் வழக்கம்போல் தோன்றும் தடைகள் இதற்கும் எழுந்தன.
முடிவில் ஆந்திர மாநாடு பிரிய வேண்டிய இன்றியமையாமை பிறந்தே போயிற்று.
ஆந்திர நாடு பிரிவதென்றால் அதற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் நிறுவவேண்டிய எல்லையைப் பற்றிய செய்தி முன்னணியில் வந்து நின்றது.
ஆந்திர மாகாண அரசியல் தலைவர்களும், அவர்வழி நின்ற தொண்டர்களும், அவர் நாட்டுத் தென்னெல்லையைப் பற்றிப் பேசித் திரிவாராயினர்.
அவர்கள் பேச்சில் வீண்வம்பு விளையத்தக்க கருத்துகளும் இடையிடையே பிறந்த வண்ணம் இருந்தன.
தமிழகத்தின் முடிமணியாய் மேனாட்டவர் காலத்தில் புதிது தோன்றித் திகழும் சென்னை மாநகர் ஆந்திரருக்குரியதா தமிழருக்குரியதா என்ற வினாவொன்றை எழுப்பி மக்களிடையே மனக் குழப்பத்தைச் சில அறிஞர்கள் உண்டாக்கத் தலைப்பட் டார்கள்.
அவருட் சிலர், நாட்டு வரலாற்றின் பெயரை இழுத்துக் கொணர்ந்து தமது பேச்சுக்கு ஆதரவு காட்டு வாராயினர்.
நெடுநாள் காறும் மடியுற்றிருந்த தமிழ் நாட்டுத் தலைவர்கள், அது கேட்டதும் மடிமை நீங்கி விழித்தெழுந்து, “சென்னை மாநகர் ஆந்திரர்கட்குரிய தென்று சொல்லுவது பொருந்தாது; அது தமிழருக்கே உரியது” என்று சொல்லத் தொடங்கினர்.
அதன் பின் ஆந்திரரது சென்னை மாநகர் பற்றிய ஆரவாரம் அடங்குவதாயிற்று.
உலக நாடுகளில் வாழும் மக்களுள் தமது நாட்டுத் தமது வரலாறு அறியாத மடவோர் கூட்டம் ஒன்று இந்த இருபதாம் நுற்றாண்டிலும் உளது என்றால், அது தமிழர் இனத்தின் வேறாக இருக்க முடியாது,
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிமூத்த குடி” தமிழர் குடி என்று பழந்தமிழ் நூல்கள் பாரித்துரைக்கினும் செவியிற் கொள்ளார்;
ஏனை நாட்டவரது வரலாற்றை ஏடு ஏடாய்ப் புரட்டிப் படித்து நெட்டுருச் செய்வர்;
தமது நாட்டு வரலாற்றைக் கண்ணெடுத்தும் பாரார்;
மேனாட்டு வரலாற்றுப் பெருமையையும் ஏனைக் கீழ்நாட்டு வரலாற்றுக் கிளர்ச்சியையும் தேனும் பாலும் போன்ற செஞ்சொற் களால் சிறக்கப் பேசிப் பிறங்குவர்;
தமது நாட்டு வரலாற்றை எடுத்துரைக்க வாயின்றி ஊமையராய் நிற்பர்.
இவர்களது இச் செயலைக் கண்டே தேசிய கவி பாரதியார் “பாமரராய் விலங்குகளாய்,”
“ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்,” “நாமமது தமிழர் எனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?” என்று வயிறெரிந்து பாடினார்.
இடைக் காலத்தில்தான் இது நிலைமை என்றால், இன்றும் அதுவே நீடித்து நிற்கிறது.
நாட்டு வரலாற்றறிவு நாட்டு மக்களின் அரசியல் வாழ்வை எத்துணை உயர்ந்த நிலைக்குக் கொணர்ந் திருக்கிறது என்பதை மேலைநாட்டு வரலாற்றறிவு நிரம்பப்பெற்ற தமிழர் உணராமல் இல்லை.
என்றாலும், பிறர்க்கு அஞ்சி அஞ்சி யொடுங்கும் கீழ்மைப் பண்பு எங்ஙனமோ இவர்களைப் பற்றிக்கொண்டுளது.
தென்னிந்திய வரலாறு காண்போர்க்கு மிகப் பழைமையான வரலாற்றுச் சான்றாகத் தொல்காப்பியம் முற்பட்டு நிற்கிறது.
தமிழ்நாட்டின் எல்லைக் குறிப்பாக, அந்நூலின்கண் பனம்பாரனார் என்பார், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலுகம்” என்று கூறியதை முன்பே காட்டியுள்ளோம்.
இதன் கருத்து, தமிழகத்துக்கு வடவெல்லை வடவேங்கடமும் தென்னெல்லை தென்குமரியுமாம் என்பது.
மேற்கும் கிழக்கும் எல்லை கடலாதலால் அவை பனம்பாரனாராற் கூறப்படவில்லை.
வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லை இரண்டனுள் தென்குமரியைப் பற்றி ஆராய்ச்சி யாளர் பல செய்திகளை விரியக் கூறியிருக்கின்றனர்.
தென்குமரியென்பது குமரிக்கோடு என்ற மலையையும் அதனைச் சார்ந்து ஓடிய குமரியாற்றையும் குறிக்கிற தெனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமிழ் பயிலும் மாணவர் அனைவர்க்கும் இது நன்கு தெரிந்த செய்தியாகும்.
இவ்வாறே, வடவேங்கடத்தைப் பற்றிக் கூறியோர், அது திருமால் எழுந்தருளியிருக்கும் திருமலைத் திருப்பதியாகும் என்பதோடு அமைந்து போயினர்.
வடவேங்கடமலை, திருமலைத் திருப்பதியோடு நில்லாமல், திருக்காளத்தி வரையும் கிழக்காகத் தொடர்ந்து சென்று, பின்பு வடக்கு நோக்கி வடபெண்ணையாற்றங்கரை வரையில் படர்ந்து நிற்கிறது.
வடக்கு நோக்கிச் செல்லும் மலைத்தொடர் வேங்கடத்தின் தொடர்ச்சியாதலால் அதனையும் வேங்கடகிரியெனப் பண்டையோர் குறித்தனர்.
பிற்காலத்தே அந்தப் பெயர் மறைந்துபோகவே வேறு பெயர் உண்டாயிற்று.
ஆயினும் அதன் பழம்பெயரும் பெருமையும் மறையாதபடி இப்போதும் அதன் அடியில் வேங்கடகிரியென்னும் பழைமையான நகரம் இருந்து சான்று கூறிக்கொண்டு நிற்கிறது.
அவ் வேங்கட மலையின் வடகோடியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று கடலொடு கலக்கும் வடபெண்ணையாறு உளது.
எவ்வாறு தென்குமரியென்பது குமரி மலையையும், அதனைச் சார்ந்ததோடிய குமரியாற்றை யும் குறிக்கிறதோ, அவ்வாறே வடவேங்கடமென்பது வேங்கடமலையையும், அதனைச் சார்ந்தோடும் வடபெண்ணையாற்றையும் குறிக்கிறது.
தமிழகத்தின் வரலாறு, தமிழர் எவராலும் இதுகாறும் எழுதப் படாமையால், அதன் வடவெல்லை வேங்கடமலைத் தொடரும், வடபெண்ணையாறும் என்ற உண்மை எல்லாரும் தெளிய அறிந்த செய்தியாகாமல் மறைந்து கிடப்பதாயிற்று.
அதனால் ஆந்திரர்களுக்கும் தங்கள் நாட்டின் தென்னெல்லை வடபெண்ணையோடே நிற்கிறதெனத் தெரியாது போயிற்று.
தமிழகத்தில் தோன்றிய தலைவர்களின் தலைமை, தமிழறியாமையும் தமிழர் வரலாறறியாமையுமே பெருமையாகக் கொண்டு பிறங்கினமையின், வடவெல்லையை வரையறுத் தொதுக்கும் மாண்பு தமிழரிடம் விளங்கா தொழிந்தது.
மேலே கூறிய ஆசிரியர் பனம்பாரனார் காலத்தில் நிலவிய தமிழ் உலகம், பன்னிரண்டு சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது அவை,
தென்பாண்டி நாடு,
குட்டநாடு,
குடநாடு,
கற்கா நாடு,
வேணாடு,
பூழி நாடு,
பன்றி நாடு,
அருவா நாடு,
அருவா வடதலை நாடு,
சீத நாடு,
மலாடு
புனல் நாடு
என்பவையாகும்.
இவற்றைத் தொல்காப்பிய னார் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்” என்றார்.
சிறு சிறு நாடாகும் வகையில் பன்னிரண்டாயினும் அரசியல் முறையில் அந் நாளைத் தமிழகம், சேர நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என்ற மூன்று பெரும் பிரிவுகளாக இயன்றிருந்தது.
இம் மூன்றையும் சேர பாண்டிய சோழர் என்ற முடிவேந்தர் மூவரும் முறையே ஆட்சி புரிந்து வந்தனர்.
அக் காலத்தே பாண்டி நாட்டுக்கு வடவெல்லை வெள்ளாறு என்பது. இது, பன்றி மலையின் தொடர்ச்சி யாகக் கீழ்ப்பகுதியில் குழுமிருக்கும் சிறுமலைத் தொகுதியில் தோன்றிக் கிழக்கில் புதுக்கோட்டை நகருக் கண்மையில் கிழக்கு நோக்கி ஓடிக் கடலில் விழுகிறது.
இந்த வெள்ளாற்றைத் தென்னெல்லையாகக் கொண்ட சோழ நாட்டுக்குத் தில்லைச் சிதம்பரத்துக்கு வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக வோடிப் பறங்கிப்பேட்டைக்கு அண்மையில் கடலொடு கலக்கும் வெள்ளாறு வடவெல்லையாகும்; இதனை வட வெள்ளாறு என்பதும் தெற்கிலுள்ளதைத் தென் வெள்ளாறு என்பதும் பண்டை நாளை வழக்கு.
வடவெள்ளாற்றுக்கு வடக்கிலும் வடபெண்ணைக்குத் தெற்கிலும் உள்ள பரந்த நிலப்பகுதி தொண்டை நாடு என்ற பெயருடன் சோழ வேந்தர்களின் வழித் தோன்றல்களால் ஆளப் பெற்றுவந்தது.
தொண்டை நாட்டு வட பகுதியிலுள்ள வேங்கடத்தில் புல்லியென்பவனும், அதற்குக் கீழ் கடற்கரைப் பேரூரான பவத்திரியில் திரையன் என்பவனும் இருந்து தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர்.
சங்க காலப் புலவருள் ஒருவரான மாமூலனார் வேங்கடத்தைக் குறிக்கும்போது,
“கழல்புனை திருந்தடிக் களவர் கோமான், மழபுலம் வணக்கிய மாவண் புல்லி, விழவுடை விழுச்சீர் வேங்கடம்”
என்று கூறியுள்ளார்.
பவத்திரி நகரை, நக்கீரர் என்ற சங்கப் புலவர், “செல்ல நல்லிசைப் பொலம்பூண் திரையன், பல்பூங் கானற் பவத்திரி” 2 என்று குறித்துள்ளார்.
ஏனைக் கிருஷ்ணை யும் கோதாவிரியும் போலின்றி, வட பெண்ணையாறு தென்பெண்ணை போலக் கங்கநாட்டு (மைசூர் நாடு) நந்திமலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிச் சென்று கடலொடு கலப்பது கொண்டு அதற்குப் பழந்தமிழர் வடபெண்ணையெனப் பெயரிட்டுச் சிறப்பித்தனர்.
சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்த சோழர், தொண்டை நாட்டை இரு கூறாக்கினர்.
ஒன்று, சோழ நாட்டின் வடவெல்லையாக ஓடும் வடவெள்ளாற்றைத் தென்னெல்லையாகவும், தென்பெண்ணையை வடவெல்லையாகவும் கொண்டு நடுநாடு என்ற பெயர் பெற்று நின்றது; மற்றையது, தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டுத் தொண்டை நாடு என்ற பெயருடன் விளங்குவதாயிற்று.
அதன் பின் தொண்டை நாடு, பற்பல கோட்டங்களாகவும், சிறுசிறு உண்ணாடுகளாகவும் பிரிக்கப்பட்டுத் தொண்டை வேந்தர் தொண்டைமான்கள் எனச் சிறப்பிக்கப்பெற்று வந்தனர்.
பல்லவர் காலம்: (கி. பி. 300-900) வடவெள்ளாற்றுக்கும் தென்வெள்ளாற்றுக்கும் இடையில் சோழநாடு சிறந்து விளங்கியதுபோல, வடபெண்ணை, தென் பெண்ணை என்ற இரண்டு ஆறுகளுக்கும் இடையே தொண்டை நாடு கிடந்து தொல்புகழ் சிறந்து வந்தது.
பின்னர்ச் சங்ககாலச் சோழர்களும் தொண்டை வேந்தர்களும் வீழ்ந்தனர்.
இதனைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.
அதற்குப்பின் அறுநூறு ஏழுநூறு ஆண்டுகள் பல்லவர் முதலிய வேற்று நாட்டவர் தமிழகத்திற் புகுந்து ஆட்சி செய்தனர்.
அவர் காலத்தே பழைய தமிழ்வேந்தர் குடிகள் வலியிழந்து சிதறிக் கிடந்தன.
இதனைத் திருப்பதித் திருமலையிலுள்ள பல்லவர் கல்வெட்டால் 3 அறிகின் றோம்.
பல்லவர்கள் பெரும்பாலும் தொண்டைநாட்டிலும் நடுகாட்டிலுமே தங்கள் ஆட்சியை நிறுவி வளப் படுத்தினர்; எனினும் அவர்களுடைய கல்வெட்டுகள் பலவற்றிலும் பழைய தமிழ்வேந்தர்கள் வகுத்திருந்த கோட்டங்களும் நாடுகளும் பெயர் சிதையாமல் உள்ளன.4
மேலும், வடபெண்ணையின் தென்கரையி லுள்ள நாட்டில் காணப்படும் பல்லவர் கல்வெட்டுகள் பலவும் தமிழிலே இருக்கின்றன.
இதனால், வடபெண் ணைக் கரையிலும் அதன் தெற்கிலுமுள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்
தமிழ் மக்கள் என்பது தெளிவாகும்
அவர்கள் வாழ்ந்த ஊர்கள் பலவும் தமிழ்ப் பெயர்களையே கொண்டு நிலவின.
வடபெண்ணையின் கரைக் கண் நின்று நெல்லூர் மாவட்டத்துக்குத் தலைமை நகராக விளங்கும் நெல்லூரின் பெயரும் தனித்தமிழ்ப் பெயரேயாகும்.
இடைக்காலச் சோழ பாண்டியர் காலம்: (900-1400) பல்லவர்க்குப் பின் சோழர்களும் பாண்டியர் களும் அரசியல் வானத்தில் தோன்றி வளம்பெற்றனர்.
அவர்களது ஆட்சி நலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் வளரத் தலைப்பட்டது.
சோழவேந்தருள் சிறப்பு மிகப் பெற்ற முதல் இராசராசனும் அவன்மகன் கங்கை கொண்ட சோழனும் வடபுலத்தில் தமது கருத்தைச் செலுத்தித் தங்கள் அரசெல்லையைப் பரப்பலுற்றனர்.
சோழ நாட்டைப் பலவளநாடுகளாகவும் சிறுசிறு உண்ணாடுகளாகவும் பிரித்து அரசுமுறை புரிவாராயி னர்.
சோழ நாட்டின் வடபகுதியான நடுநாடும் தொண்டை நாடும் அவர்கள் ஆட்சியெல்லையில் அடங்கிக்கிடந்தன.
அவற்றுக்குச் “சயங்கொண்ட சோழ மண்டலம்” என்று பெயர் குறித்தனர்.
திருக்காளத்தியில் உள்ள கல்வெட்டு, அதனைச் “சயங்கொண்ட சோழ மண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட் டுத் திருக்காளத்தி” என்று குறிக்கின்றது.
சென்னைக்கு வடக்கே பொன்னேரி வட்டத்திலுள்ள திருப்பாலைவனம், “சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பையூர்க் கோட்டத்துத் திருப்பாலைவனம்” எனப்படுகிறது.
அதற்கு வடக்கில், நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் சூலூர்ப்பேட்டையை, “சயங்கொண்ட சோழமண்டலத் துப்பையூர் இளங்கோட்டத்து வெங்கா நாட்டுச் சூரலூர்” என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கிடைக்கின்றது.
அதற்கு வடக்கிலுள்ள கூடூர் வட்டத்தின் தலை நகரான கூடூர் குமுளூர் என்ற பெயரின் சிதைவாதலால், அக் கூடூர்க் கல்வெட்டு அதனை, “சயங்கொண்ட சோழ மண்டலத்து மேலைப் பட்டயநாட்டுக் குமுளூர்” என்று குறிக்கிறது.
அதற்கும் வடக்கில் வடபெண்ணைக் கரையில் உள்ளதும் நெல்லூர் மாவட்டத்துத் தலைநகருமாகிய நெல்லூரை அங்குள்ள கல்வெட்டுகள், “சயங் கொண்ட சோழமண்டலத்துச் சேதிகுல மாணிக்க வளநாட்டுப் பெடை நாட்டு நெல்லூரான விக்கிரம சிங்கபுரம்” என்றும், அவ்வூரிலுள்ள திருமாலை, “திருப்பாற் கடலான சித்திர மேழி விண்ணகரான பள்ளி கொண்ட பெருமாள்” 9 என்றும் இயம்புகின்றன.
நெல்லூர்க் கிழக்கில் பெண்ணையின் வடகரையிலுள்ள சங்கம் என்னுமூர் பண்டைநாளில் விரியூர் என்ற பெயர் பூண்டிருந்தமையின், “சயங்கொண்ட சோழ மண்டலத் துப் பாக்கை நாட்டு விரியூரில் பெண்ணையாற்று வடகரையில் சங்கமீச்சுர முடையார்க்கு” 10 என அது குறிக்கப்படுகிறது.
வேங்கடமலைத் தொடரின் அடியில் வடபெண்ணையின் தென்பாற் பகுதியான இராபூர் வட்டத்தைச் சேர்ந்த சாகணம், சிக்கவோலு, கிலகபாடு, லிங்கபாளையம் முதலிய ஊர்களிலும், வேங்கடகிரி யைச் சேர்ந்த வேங்கடகிரி, மோப்பூரு, இனுகுண்டா முதலிய இடங்களிலும் உள்ள கல்வெட்டுகள் பலவும் இப்பகுதிகளைச் “சயங்கொண்ட சோழமண்டலத்துப் பாக்கை நாட்டு” ஊர்கள் என்று இசைக்கின்றன.
இதனால், நெல்லூர் மாவட்டத்துப் பெண்ணையின் தென்பகுதி முற்றும் தமிழ்நாட்டுச் சயங்கொண்ட சோழ மண்டலமான தொண்டை நாடு என்பதைத் தெளிவாக யாவரும் இனிது காணலாம்.
இங்குள்ள கல்வெட்டுகள் தமிழிலே பொறிக்கப்பட்டு இருப்பது ஒன்றே இது தமிழ்நாடு என்பதை நன்கு வற்புறுத்தா நிற்கும்.
சங்க காலத்துக்கும் பல்லவர் காலத்தும் இடையே தென்னாட்டில் காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப் பட்டபோது, சயங்கொண்ட சோழ மண்டலத்திலும் ஒரு கடல்கோள் நிகழ்ந்தது.
கடல்கொண்ட அப் பகுதி இப்போது பழவேற்காட்டு ஏரி என்ற பெயர்கொண்ட நீர்நிலையாக உளது.
இப் பகுதியில் சங்ககாலத்துத் திரையன் இருந்து ஆட்சிபுரிந்த பவத்திரி நகரம் இருந் தது.
பவத்திரிக்குச் சிறிது வடக்கில் கூடூர் வட்டத்துப் பாண்டரங்கம் என்னும் ஊர் இருக்குமிடத்தே காகந்தி என்னும் நகரமொன்றும் இருந்தது.
எழுநூறு எண்ணூறு ஆண்டுகட்டு முன்பும் இக் காகந்தி சிறப்புற்றிருந்தது.
நாளடைவில் அது தன் சிறப்புக்குன்றிச் சிற்றூராகத் தேய்ந்துபோயிற்று.
இவ்வூரிலுள்ள கல்வெட்டுகள் இப் பகுதியைக் ”கடல்கொண்ட பவத்திரிக் கோட்டம்” என்று குறித்துள்ளன.
இவ் வூரருகேயுள்ள ரெட்டிபாளையத்திலுள்ள கல்வெட்டு இதனை, “சயங்கொண்ட சோழ மண்டலத்துக் கடல் கொண்ட பவத்திரிக் கோட்டத்துக் காகந்தி மாநகர்” என்று கூறுகிறது.
ககந்தன் என்பவன் ஆண்டதனால் காவிரிப்பூம்பட்டினத்துக் காகந்தி என்றொரு பெயருண்டாயிற்றென மணிமேகலை நூல் கூறுவது ஈண்டு அறிஞர்கள் நினைவிற்கு வரும்.
சோழர்களுக்குப் பின் பாண்டியருட் சிலர் தொண்டை நாட்டில் முன்னேறிச் சிறப்புற்றதும் உண்டு.
அவர்களுள், மாறவன்மன் சுந்தரபாண்டியன் என்பவன் தமிழ்நாட்டின் வடவெல்லையைக் கண்டான்.
அக் காலத்தே அவன் நெல்லூரிலுள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோயிலில் தன் பெயரால் ஒரு சந்தி ஏற்படுத்தியுள்ளான்.
அதனை, “திரிபுவனச் சக்கரவர்த்தி கள் கோநேரின்மை கொண்டான் மாறவன்மரான ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு…. ஆவணி மாத முதல் சேதி குல மாணிக்க வளநாட்டுப் பெடைநாட்டு நெல்லூரான விக்கிரமசிங்கபுரத்துத் திருப்பாற் கடல் சித்திர மேழி விண்ணகரான பள்ளிகொண்ட ஆழ்வார்க்கு நம் பேரால் கட்டின சுந்தர பாண்டியன் சந்தி….” 12 என்று கல்வெட்டுக் கூறுவதனால் நன்கு அறியலாம்.
விசய நகர மன்னர் காலம் (கிபி 1400 – 1700)
இடைக் காலச் சோழ பாண்டியர்க்குப் பின் தோன்றிய விசய நகர மன்னராட்சியில் நெடுநாள் வரையில் தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடையிலுள்ளதான சயங்கொண்ட சோழமண்டலம் முழுதும் தமிழ்மொழியே ஆட்சிபுரிந்து வந்தது.
அரசியல் வழக்குகளே கல்வெட்டுக்களும், செப்பேடு களும் பெரிதும் குறிக்கும் செய்தியாதலால், அவற்றில் வழங்கிய மொழியே அரசியல் மொழி என்றற்கு ஐயமில்லை.
அவ் வகையில் நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி முற்றும் தமிழ்க் கல்வெட்டுகளே நிரம்பியிருத்ததால் அப்பகுதி முற்றும் தமிழ் நிலமாகத் திகழ்ந்தது என்பது தெளிவாகிறது.
இவ் விசய நகர வேந்தர்களில் அரியராயர், சதாசிவ தேவராயர்,13 முதலியோருடைய கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன.
அவர்கள் அனைவரும் தெலுங்கு பேசும் மன்னராயினும் அவர்களது அரசியல் முற்றும் இப்பகுதியில் தமிழிலே நடந்திருப்பது ஈண்டு மனங்கொள்ளற் குரியது.
ஆகவே, விசயநகர மன்னர் காலத்திலும் தமிழ்நாட்டெல்லை வடபெண்ணையை மேற்கொண்டு நின்றமை இனிது விளங்குகிறது.
விசயநகர ஆட்சியின் வீழ்ச்சிக் காலத்தில் சந்திரகிரி ராச்சியம் சிறந்திருந்தது.
அதன் எல்லை தெற்கே காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள திருப்புட்குழி வரையில் பரவியிருந்ததென அவ்வூர்க் கல்வெட்டால்14 அறி கிறோம்.
அதன் ஆட்சியிலும் சென்னைக்கும் வடபெண் ணைக்கும் இடையிலுள்ள பகுதியெங்கும் தமிழ் மொழியே நிலவிற்று.
அரசியலும் தமிழிலேதான் நடந் தது; அங்கே தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர்.
“சந்திர கிரி ராச்சியத்தின்” தலைநகரான சந்திரகிரி தொண்டை நாட்டுத் திருவேங்கடக் கோட்டத்தின் தலைநகராக இருந்து வந்தது. இப்பொருள்பற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய அரசியற் கல்வெட்டிலாகாவின் ஆண்டறிக்கை 15 கி. பி. 16, 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேங்கடராயர் காலத் தில் தொண்டைநாட்டு அரசியலில் தெலுங்குமொழி இடம்பெற்றிருக்கலாம் என்று கண்டுள்ளது.
விசயநகர ஆட்சி வீழ்தற்கு முகமதியரது வளர்ச்சி காரணமாகும்.
முகமதியர் வலி மிகமிகச் சந்திரகிரி யரசும் ஏனைச் சிற்றரசுகளும் கெட்டு வீழ்ந்து தேயத் தலைப்பட்டன.
முகமதியரது அரசியல் பாரசீக மொழியில் நடைபெற்றது.
அவர் பொறித்த கல்வெட்டு கள் சிலவும் அம் மொழியிலே உள்ளன.
ஜில்லா, தாலுகா, பிர்க்கா, ஜமாபந்தி, தாசீல் முதலியன யாவும் அவர்கள் புகுத்தியனவாகும்.
தெலுங்கின் வளர்ச்சியும் பாரசீகத்தின் படர்ச்சியும் செல்வாக்கும் பெற்றதனால், தமிழ்த் தொண்டை நாடான சயங்கொண்ட சோழ மண்டலத்தின் வடபகுதியில் தமிழர் தெலுங்கராயினர்; தமிழ்மொழி பையச் சிதையத் தொடங்கிற்று.
வடபெண் ணையின் வட பகுதியில் வாழ்ந்த வடுகர் பலர் தென் பகுதியிற் குடிபுகுந்தனர்.
அதனால், தமிழ்மொழி அப் பகுதியில் விரைந்து மறைவதாயிற்று.
இந் நிலையில் தென்னாட்டில் தெய்வப் பெயர்களும் ஊர்ப் பெயர் களும் மக்கட்பெயர்களும் வடமொழியில் மொழி பெயர்க்கும் முயற்சி தோன்றிச் சமயத் துறையில் வெற்றி பெறத் தலைப்பட்டது.
அதுவே வாய்ப்பாகக் கொண்ட தெலுங்கர், தாம் குடிபுகுந்த ஊர்களின் பெயரைத் தெலுங்காக்கினர்.
நெல்லூர் மாவட்டத்து நெல்லூரைச் சேர்ந்த கொடுவலூர் கொடவலூரு எனவும், வெங்கூர்17 வெகூரு எனவும், ஊட்டக்கூர்18 ஊட்டுகூரு எனவும், சூரலூர்19 சூலூரு பேட்டா எனவும், தும்பையூர்20 தும்மூரு எனவும், இருங்குண்டையூர்21 இனுகுண்டா எனவும், செறுமணவில்22 சிரமணா எனவும், குமுளூர்23 கூடூரு எனவும் மாறின.
இவ்வாறே மிகப் பலவூர்கள் பழைய தமிழ்ப் பெயர் தெரியாதவாறு சிதைந்து உருமாறிப் போயின.
திருமலைத் திருப்பதி தேவத்தான செயல் யாவும் மகந்துவின் மேற்பார்வைக்கு வருமுன் தமிழிலே நடைபெற்று வந்தன.
நாளடைவில், அங்கே தொழில் செய்வோர் தெலுங்கராக வேண்டிய நிலைமை யுண்டாயிற்று.
திருப்பதியிலும் அதற்குத் தென்பகுதியி லுள்ள ஊர்களிலும் தமிழ்வழங்குவோர் தொகை மிகுதி யாக இருந்தும் தெலுங்கு மொழி அப்பகுதியில் வலிபெற்றமையே இம் மாறுபாட்டுக்குக் காரணமாகும்.
இன்று தெலுங்கரது தெலுங்கு செங்கற்பட்டு மாவட்டத் தின் வடபகுதிகாறும் படர்ந்து வந்திருக்கிறது.
இதற்கிடையே, மேனாட்டவரான ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் உலாந்தக்காரரும் எனப் பலர் தமிழ்நாட்டில் தங்கி வாணிபம் செய்ய முயன்றனர்.
திருவெற்றியூருக்கும் திருமயிலாப்பூருக்கும் எழுமுருக் கும் இடையேயுள்ள கடற்கரைப் பகுதியை ஆங்கிலேயர், சந்திரகிரி வேந்தரிடமிருந்து பெற்று, அங்கே தமது வாணிக நிலையத்தை நிறுவினர்.
அப் பகுதி அங்கே வாழ்ந்த கரையார் தலைவன் மருரேசன் என்பவன் மேற்பார்வையில் இருந்தது.
வேந்தன் ஆணைக்கடங்கி அவன் அப் பகுதியை ஆங்கிலேயருக்கு விட்டுவிட்டான்.
அவனது பெயர் மறையாவண்ணம் ஆங்கிலேயர் அப்பகுதியை மதராஸ் என மருவி வழங்கலாயினர்.
மதுரேசன் பகுதியை அடுத்துச் சென்ன கேசவன் பட்டினம் என்பது இருந்தமையின் மதராசை ஏனையோர் சென்னபட்டினம் என்று வழங்கினர்.
இவ்வாறே சதுரவாசகன் பட்டினம்24 என வழங்கிய கடற்கரையூர் பிற்காலத்தே சதராசு25 என ஆங்கிலேயரால் சிதைக்கப்பட்டது.
இப் பகுதிக்கு மேனாட்டு ஆங்கிலேயர் திடீர் என ஓர் ஆராய்ச்சியுமின்றி வந்துவிடவில்லை.
இங்குள்ள திருவெற்றியூரும் திருமயிலாப்பூரும் கி.பி.ஏழாம் நுற்றாண்டிலேயே சிறப்புற்று விளங்கிய இடங்கள்.
திருஞானசம்பந்தர் முதலிய திருமுறையாசிரியர்கள் அவற்றை மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.
இப்போது எழும்பூர் என வழங்குவது அந்நாளில் எழுமூர் என்ற பெயரால் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் சிறப்பாகக் குறிக்கும் பேறுபெற்றது.
திருவல்லிக்கேணி என்ற திருமால் திருப்பதி திருமங்கை மன்னரால் சிறப்பித்துப் பாடப்பெற்ற பெருமையுடையது.
இங்குள்ள தெள்ளிய சிங்கப்பெருமாளுக்கு இடைக்காலச் சோழரும் பிறரும் நிவந்தங்கள் விட்ட குறிப்பைக் கல்வெட்டுகள்26 காட்டுகின்றன.
திருவொற்றி யூரில் இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் அரசர்களும் சான்றோர்களும் கூடியிருந்து நம்பியாரூரர் வரலாற்றைத் திருவிழாக் காலத்தில் மக்கட்கு எடுத்துரைக்கும் சமயப் பணி புரிந்தனர்.
நாடோறும் சைவ சமயச் சொற்பொழிவுகளும் அங்கே நட பெற்றன.
27 மாணவர்கள் கூடி இலக்கணம், இசை முதலியன கற்கும் கல்வி நிலையமும் இங்கே இருந்தன.
திருமயிலாப்பூரில் திங்கள்தோறும் பல திருவிழாக்கள் நடைபெறும் எனத் திருஞானசம்பந்தர் தெரிவிக்கின் றார்.
எழுமூர் சயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து எழுமூர் நாட்டுக்குத் தலைநகராக விளங்கிற்று.
இத்துணைச் சமயச் சிறப்பும் தமிழ்ச் சிறப்பும் அரசியல் சிறப்பும் பெற்றிருந்ததனால்தான் ஆங்கிலேயர் இவ்விடத்தைத் தேர்ந்து கொண்டனர்.
அந்நாளில் இப்பகுதி சந்திரகிரி மன்னனிடம் இருந்தமை யால் அதனை வாங்கவேண்டிய நிலைமையேற்பட்டது; இஃது ஒன்றே பற்றிச் சென்னை நகர் தெலுங்கு நாட்டுக்கு உரியதென்பது அறமன்று.
உடையவர் தமது உடைமை யின் வரன்முறை அறியாதொழுகுவாராயின் அதனைப் பாதுகாக்கும் மனவலி குன்றி உலகம் பழிக்கும் கீழ்மை எய்துவரென்ற மூதுரைப்படி, தமிழர் தமது வரலாற்றறி யும் கருத்தில்லாது போனமையால் ஒருவர்க்கொருவர் மனங்கசந்து வருந்தும் அவல நிலை எய்தினர்.
இனியாகிலும் தமிழர் தங்கள் வரலாற்றை முறையுறக் கண்டு, எல்லை வரையறுத்துக் கொண்டு நாடு முன்னேறும் நற்பணியில் ஈடுபடுதல் கடனாகும்.
மக்கள் வாழ்வு, உலகியல் வாழ்வு, அறிவியல் வாழ்வு என இருபாற்பாடும், உலகியல் வாழ்வு நாடு, பொருள், தொழில், வாணிகம், அரசு முதலிய கூறுகளில் எல்லை வரையறைபெற்று இயலுவது.
அறிவியல் வாழ்வு, எல்லையின்றிப் பரந்து “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற விரிந்த நோக்குடன் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் கொண்டு அறம்பேணி நிற்பதாகும்.
இரண்டையும் ஒன்றாய்க் கலக்கிக் காண்பது அறிவு இன்ப வாழ்வுக்கு ஆக்கமாகாது; அரணுமாகாது என்பதைத் தலைவர்கள் உணர்தல் வேண்டும்.
மக்களை அறியாமை இருளில் கிடத்தி, அதனை அடிப்படை யாகக் கொண்டு நிற்கக் கருதும் தலைவர்கள் விரைவில் தலைமையிழந்து அலமருவர், நாளும் மாறிவரும் மக்களுலகம் இனி அறிவு அறைபோகாது, அறிவொளி எழத் தொடங்கிவிட்டது.
அறியாமை, அறிவு நெறிக்குப் பொருந்தாமை என்ற படைகொண்டு ஆட்சி செய்ய நினையும் தலைமை நிலைமையிழந்து கெடும் என்பதை யும் தலைவர்கள் தமது உள்ளத்தில் நிலைபெறக் கொள்ளல் வேண்டும்.
அடிக்குறிப்பு:
1 (அகம்)
2 (அகம்)
3 S.I.I.Vol. XII. No 43.
4 Nellore Inscriptions: Gundur No. 54.
5 Annual Report Madras Epigraphy No. 84 of 1922
6 A.R.No.309 of 1928 – 29.
7 Nellor Inscritions sulucpet No 4
8 Nellor Ins. Gudur, No. 20-33
9 S.I.I.V.V. No.491
10 Nel. Ins. Nellore. No. 108
11 Nel. Ins. Gudur. No 87
12 SII Vol. V. No 495
13 Nellore Ins Nel. Tq No 76
14 AR No 172 of 1926
15 Para 14 of AR for 1904 Madras Epigraphy
16 No 31 of Nel. Tq
17 120 of Nel.
18 66 of Nel.
19 3 of Sulurpet Tq.
20 12 of sul.
21 26 of Venkatagiri
22 26 of Atmakur
23 20 – 33 of Gudur
24 A.R.123 of 1933
25 Sudras
26 S.II. Vol. VIII. No 533 – 44
27 SII. Vol. VII. No 371
நூல் : தமிழ்த்தாமரை
பேரா. ஔவை சு.துரைசாமிப்பிள்ளை,
1957
உலக முதன்மொழி – மாத இதழ் – நவம்பர் மாதம்
தமிழகம் – வடவெல்லை
உரைவேந்தர் ஒளவை சு துரைசாமி
‘நம் தமிழகத்துக்குத் ‘தமிழ் உலகம்’ என்ற பெயர் தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் என்பவர் எழுதிய பாயிரத்தில் காணப்படுகிறது. அவர், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” என்று உரைக்கின்றார். உலகம் என்பது பொதுவாக நாம் வாழும் நிலவுலகம் முழுதும் குறிக்கும்; ஆயினும் “மைவரை யுலகம்”, “காடுறை யுலகம்,” “பெருமணல் உலகம்” என்றாற்போல, அது நிலவுலகத்தின் பல்வேறு பகுதிகளையும் குறிப்பதுண்டு. அதுவே நாடு என்ற பெயரால் பெரிதும் வழங்கும். இவ்வகையில் தமிழ் உலகம் என்பது தமிழ்நாடு என்றே பொருள்படும். தமிழ்நாட்டைத் தமிழ் உலகம் என்று வழங்கியதோடு தமிழகம் என்றும் வழங்குவதுண்டு. இதனால், தமிழர் வாழும் தென்னாடு, தமிழகம், தமிழ் உலகம், தமிழ்நாடு என்ற பெயர்களையுடையது என்பது தெளிவாம்.
தமிழகத்துக்கு வடவெல்லை வேங்கடமும், தென் எல்லை குமரியும், கிழக்கும் மேற்கும் கடலும் எல்லை களாக உள்ளன. எல்லை பற்றிய பேச்சு நிகழும்போ தெல்லாம் அறிஞர்கள் தென்குமரியைப் பற்றியே பெரிதும் எடுத்துப் பேசுவர். வடவேங்கடம் தமிழர் வாழிடமாயினமையின், அதனைப் பற்றி ஒன்றும் கூறுவதில்லை. ஒருகால் ஏதேனும் பேசவேண்டின், வேங்கடமலையில் வீற்றிருக்கும் தெய்வம் திருமாலா, முருகனா என்று ஆராய்ந்து பேசுவது வழக்கம். மலைகள் முருகன் உறையும் இடமாகலின், வேங்கடத் தெய்வம் முருகனே; அதுவே பிற்காலத்தே திருமாலாகிவிட்டது என்பர் சிலர்; இளங்கோவடிகள் காலத்தேயே வேங்கடத் தெய்வம் திருமால் என்பது தெளிவாக இருத்தலால் வேங்கடம் திருமாலுக்கே உரியது என்பர் சிலர். வேங்கடம் தமிழகத்தின் வடவெல்லை என்பதில் யாரும் ஐயுற்றதுமில்லை; ஆராய்ச்சி மேற்கொண்டதுமில்லை.
தமிழகத்தில் தமிழரது பண்பட்ட வாழ்வுதோன்றிய அன்றுமுதல், மேனாட்டவர் ஆட்சி தோன்றிமறைந்த நாள் வரை, நம் தமிழகத்தின் வடவெல்லையைப் பற்றித் தமிழர் எடுத்துப் பேசவேண்டிய இடம் இல்லாமல் இருந்தது. தமிழ்நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த ஆந்திரர்களும், தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களும், சென்னை மாநில ஆட்சி முறையில் ஒருசேர வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும். இப்போது வேற்று நாட்டவரது ஆட்சி நீகிவிட்டது. நம்நாட்டை நம்மவரே ஆட்சி செய்யும் நலம் பெற்றுவிட்டனர். இந்த ஆட்சி, இனிதே இயங்கி மக்கட்கு வேண்டும் நன்மைகளைச் செய்வதற்கு மொழிவழியாக நாடுகள் தம்முட் பிரிந்து இயலவேண்டும் என்ற கொள்கை உணரப்பட்டது.
மக்களின் வாழ்வு கருதி மக்களே முன்னின்று நடத்தும் மக்களாட்சி, அம் மக்கள் அறியாத மொழியில் நடப்பது என்பது போலியரசாம் என்று அரசியல் அறிவு வற்புறுத்துவதாயிற்று. மொழிவழியாகப் பிரிந்து இயங்கும் இயக்கமே மக்களிடையே ஒருமைக் கருத்து வளர்வதற்கு ஏற்றதாம் என்ற கருத்தை முன்கூட்டி யுணர்ந்த காங்கிரசு இயக்கத் தலைவர்கள், பல்லாண்டு கட்கு முன்பே மொழிவழியாக ஆந்திர மாகாணக் காங்கிரசு, தமிழ்நாடு காங்கிரசு, கேரள மாகாணக் காங்கிசுர எனப் பிரித்துத் தமக்குரிய பணியை ஆற்றி வெற்றியும் வீறும் எய்தக் கண்டனர். இதுவும், நாடுகள் மொழிவழியாகப் பிரிந்துநின்று அரசியலை நடத்துவது நல்லது என்ற கருத்தை வலுப்படுத்துவதாயிற்று. இவற்றால் ஆந்திரரிடையே ஆந்திர நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டுமென்றே கிளர்ச்சி தோன்றிற்று.
எவ்வகைக் கிளர்ச்சிக்கும் வழக்கம்போல் தோன்றும் தடைகள் இதற்கும் எழுந்தன. முடிவில் ஆந்திர மாநாடு பிரிய வேண்டிய இன்றியமையாமை பிறந்தே போயிற்று.
ஆந்திர நாடு பிரிவதென்றால் அதற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் நிறுவவேண்டிய எல்லையைப் பற்றிய செய்தி முன்னணியில் வந்து நின்றது. ஆந்திர மாகாண அரசியல் தலைவர்களும், அவர்வழி நின்ற தொண்டர்களும், அவர் நாட்டுத் தென்னெல்லையைப் பற்றிப் பேசித் திரிவாராயினர். அவர்கள் பேச்சில் வீண்வம்பு விளையத்தக்க கருத்துகளும் இடையிடையே பிறந்த வண்ணம் இருந்தன. தமழகத்தின் முடிமணியாய் மேனாட்டவர் காலத்தில் புதிதுதோன்றித் திகழும் சென்னைமாநகர் ஆந்திரருக்குரியதா தமிழருக்குரியதா என்ற வினாவொன்றை எழுப்பி மக்களிடையே மனக் குழப்பத்தைச் சில அறிஞர்கள் உண்டாக்கத் தலைப்பட் டார்கள். அவருட் சிலர், நாட்டு வரலாற்றின் பெயரை இழுத்துக் கொணர்ந்து தமது பேச்சுக்கு ஆதரவு காட்டு வாராயினர். நெடுநாள் காறும் மடியுற்றிருந்த தமிழ் நாட்டுத் தலைவர்கள், அது கேட்டதும் மடிமை நீங்கி விழித்தெழுந்து, “சென்னை மாநகர் ஆந்திரர்கட்குரிய தென்று சொல்லுவது பொருந்தாது; அது தமிழருக்கே உரியது” என்று சொல்லத் தொடங்கினர். அதன் பின் ஆந்திரரது சென்னை மாநகர் பற்றிய ஆரவாரம் அடங்குவதாயிற்று.
உலக நாடுகளில் வாழும் மக்களுள் தமது நாட்டுத் தமது வரலாறு அறியாத மடவோர் கூட்டம் ஒன்று இந்த இருபதாம் நுற்றாண்டிலும் உளது என்றால், அது தமிழர் இனத்தின் வேறாக இருக்க முடியாது, “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிமூத்த குடி” தமிழர் குடி என்று பழந்தமிழ் நூல்கள் பாரித்துரைக்கினும் செவியிற் கொள்ளார்; ஏனை நாட்டவரது வரலாற்றை ஏடு ஏடாய்ப் புரட்டிப் படித்து நெட்டுருச் செய்வர்; தமது நாட்டு வரலாற்றைக் கண்ணெடுத்தும் பாரார்; மேனாட்டு வரலாற்றுப் பெருமையையும் ஏனைக் கீழ்நாட்டு வரலாற்றுக் கிளர்ச்சியையும் தேனும் பாலும் போன்ற செஞ்சொற் களால் சிறக்கப் பேசிப் பிறங்குவர்; தமது நாட்டு வரலாற்றை எடுத்துரைக்க வாயின்றி ஊமையராய் நிற்பர்.
இவர்களது இச் செயலைக் கண்டே தேசிய கவி பாரதியார் “பாமரராய் விலங்குகளாய்,” “ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்,” “நாமமது தமிழர் எனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?” என்று வயிறெரிந்து பாடினார். இடைக் காலத்தில்தான் இது நிலைமை என்றால், இன்றும் அதுவே நீடித்து நிற்கிறது. நாட்டு வரலாற்றறிவு நாட்டு மக்களின் அரசியல் வாழ்வை எத்துணை உயர்ந்த நிலைக்குக் கொணர்ந் திருக்கிறது என்பதை மேலைநாட்டு வரலாற்றறிவு நிரம்பப்பெற்ற தமிழர் உணராமல் இல்லை. என்றாலும், பிறர்க்கு அஞ்சி அஞ்சி யொடுங்கும் கீழ்மைப் பண்பு எங்ஙனமோ இவர்களைப் பற்றிக்கொண்டுளது.
தென்னிந்திய வரலாறு காண்போர்க்கு மிகப் பழைமையான வரலாற்றுச் சான்றாகத் தொல்காப்பியம் முற்பட்டு நிற்கிறது. தமிழ்நாட்டின் எல்லைக் குறிப்பாக, அந்நூலின்கண் பனம்பாரனார் என்பார், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலுகம்” என்று கூறியதை முன்பே காட்டியுள்ளோம்.
இதன் கருத்து, தமிழகத்துக்கு வடவெல்லை வடவேங்கடமும் தென்னெல்லை தென்குமரியுமாம் என்பது. மேற்கும் கிழக்கும் எல்லை கடலாதலால் அவை பனம்பாரனாராற் கூறப்படவில்லை. வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லை இரண்டனுள் தென்குமரியைப் பற்றி ஆராய்ச்சி யாளர் பல செய்திகளை விரியக் கூறியிருக்கின்றனர். தென்குமரியென்பது குமரிக்கோடு என்ற மலையையும் அதனைச் சார்ந்து ஓடிய குமரியாற்றையும் குறிக்கிற தெனத் தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழ் பயிலும் மாணவர் அனைவர்க்கும் இது நன்கு தெரிந்த செய்தி யாகும். இவ்வாறே, வட«ங்கடத்தைப் பற்றிக் கூறியோர், அது திருமால் எழுந்தருளியிருக்கும் திருமலைத் திருப்பதியாகும் என்பதோடு அமைந்து போயினர்.
வடவேங்கடமலை, திருமலைத் திருப்பதியோடு நில்லாமல், திருக்காளத்தி வரையும் கிழக்காகத் தொடர்ந்து சென்று, பின்பு வடக்கு நோக்கி வடபெண்ணையாற்றங்கரை வரையில் படர்ந்து நிற்கிறது. வடக்கு நோக்கிச் செல்லும் மலைத்தொடர் வேங்கடத்தின் தொடர்ச்சியாதலால் அதனையும் வேங்கடகிரியெனப் பண்டையோர் குறித்தனர். பிற்காலத்தே அந்தப் பெயர் மறைந்துபோகவே வேறு பெயர் உண்டாயிற்று. ஆயினும் அதன் பழம்பெயரும் பெருமையும் மறையாதபடி இப்போதும் அதன் அடியில் வேங்கடகிரியென்னும் பழைமையான நகரம் இருந்து சான்று கூறிக்கொண்டு நிற்கிறது. அவ் வேங்கட மலையின் வடகோடியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று கடலொடு கலக்கும் வடபெண்ணையாறு உளது. எவ்வாறு தென்குமரியென்பது குமரி மலையையும், அதனைச் சார்ந்ததோடிய குமரியாற்றை யும் குறிக்கிறதோ, அவ்வாறே வடவேங்கடமென்பது வேங்கடமலையையும், அதனைச் சார்ந்தோடும் வடபெண்ணையாற்றையும் குறிக்கிறது.
தமிழகத்தின் வரலாறு, தமிழர் எவராலும் இதுகாறும் எழுதப் படாமையால், அதன் வடவெல்லை வேங்கடமலைத் தொடரும், வடபெண்ணையாறும் என்ற உண்மை எல்லாரும் தெளிய அறிந்த செய்தியாகாமல் மறைந்து கிடப்பதாயிற்று. அதனால் ஆந்திரர்களுக்கும் தங்கள் நாட்டின் தென்னெல்லை வடபெண்ணையோடே நிற்கிறதெனத் தெரியாது போயிற்று. தமிழகத்தில் தோன்றிய தலைவர்களின் தலைமை, தமிழறியாமையும் தமிழர் வரலாறறியாமையுமே பெருமையாகக் கொண்டு பிறங்கினமையின், வடவெல்லையை வரையறுத் தொதுக்கும் மாண்பு தமிழரிடம் விளங்கா தொழிந்தது.
மேலே கூறிய ஆசிரியர் பனம்பாரனார் காலத்தில் நிலவிய தமிழ் உலகம், பன்னிரண்டு சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது அவை, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, கற்கா நாடு, வேணாடு, பூழி நாடு, பன்றிநாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலாடு புனல் நாடு என்பவையாகும். இவற்றைத் தொல்காப்பிய னார் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்” என்றார். சிறு சிறு நாடாகும் வகையில் பன்னிரண்டாயினும் அரசியல் முறையில் அந் நாளைத் தமிழகம், சேர நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என்ற மூன்று பெரும் பிரிவுகளாக இயன்றிருந்தது. இம் மூன்றையும் சேர பாண்டிய சோழர் என்ற முடிவேந்தர் மூவரும் முறையே ஆட்சி புரிந்து வந்தனர்.
அக் காலத்தே பாண்டி நாட்டுக்கு வடவெல்லை வெள்ளாறு என்பது. இது, பன்றி மலையின் தொடர்ச்சி யாகக் கீழ்ப்பகுதியில் குழுமிருக்கும் சிறுமலைத் தொகுதியில் தோன்றிக் கிழக்கில் புதுக்கோட்டை நகருக் கண்மையில் கிழக்கு நோக்கி ஓடிக் கடலில் விழுகிறது. இந்த வெள்ளாற்றைத் தென்னெல்லையாகக் கொண்ட சோழ நாட்டுக்குத் தில்லைச் சிதம்பரத்துக்கு வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக வோடிப் பறங்கிப்பேட்டைக்கு அண்மையில் கடலொடு கலக்கும் வெள்ளாறு வடவெல்லையாகும்; இதனை வட வெள்ளாறு என்பதும் தெற்கிலுள்ளதைத் தென் வெள்ளாறு என்பதும் பண்டை நாளை வழக்கு.
வடவெள்ளாற்றுக்கு வடக்கிலும் வடபெண்ணைக்குத் தெற்கிலும் உள்ள பரந்த நிலப்பகுதி தொண்டை நாடு என்ற பெயருடன் சோழ வேந்தர்களின் வழித் தோன்றல்களால் ஆளப் பெற்றுவந்தது. தொண்டை நாட்டு வட பகுதியிலுள்ள வேங்கடத்தில் புல்லியென்பவனும், அதற்குக் கீழ் கடற்கரைப் பேரூரான பவத்திரியில் திரையன் என்பவனும் இருந்து தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர். சங்க காலப் புலவருள் ஒருவரான மாமூலனார் வேங்கடத்தைக் குறிக்கும்போது, “கழல்புனை திருந்தடிக் களவர் கோமான், மழபுலம் வணக்கிய மாவண் புல்லி, விழவுடை விழுச்சீர் வேங்கடம்” என்று கூறியுள்ளார்.
பவத்திரி நகரை, நக்கீரர் என்ற சங்கப் புலவர், “செல்ல நல்லிசைப் பொலம்பூண் திரையன், பல்பூங் கானற் பவத்திரி” 2 என்று குறித்துள்ளார். ஏனைக் கிருஷ்ணை யும் கோதாவிரியும் போலின்றி, வட பெண்ணையாறு தென்பெண்ணை போலக் கங்கநாட்டு (மைசூர் நாடு) நந்திமலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிச் சென்று கடலொடு கலப்பது கொண்டு அதற்குப் பழந்தமிழர் வடபெண்ணையெனப் பெயரிட்டுச் சிறப்பித்தனர்.
சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்த சோழர், தொண்டை நாட்டை இரு கூறாக்கினர். ஒன்று, சோழ நாட்டின் வடவெல்லையாக ஓடும் வடவெள்ளாற்றைத் தென்னெல்லையாகவும், தென்பெண்ணையை வடவெல்லையாகவும் கொண்டு நடுநாடு என்ற பெயர் பெற்று நின்றது; மற்றையது, தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டுத் தொண்டை நாடு என்ற பெயருடன் விளங்குவதாயிற்று. அதன் பின் தொண்டை நாடு, பற்பல கோட்டங்களாகவும், சிறுசிறு உண்ணாடுகளாகவும் பிரிக்கப்பட்டுத் தொண்டை வேந்தர் தொண்டைமான்கள் எனச் சிறப்பிக்கப்பெற்று வந்தனர்.
பல்லவர் காலம்: (கி. பி. 300-900) வடவெள்ளாற்றுக்கும் தென்வெள்ளாற்றுக்கும் இடையில் சோழநாடு சிறந்து விளங்கியதுபோல, வடபெண்ணை, தென் பெண்ணை என்ற இரண்டு ஆறுகளுக்கும் இடையே தொண்டை நாடு கிடந்து தொல்புகழ் சிறந்துவந்தது. பின்னர்ச் சங்ககாலச் சோழர்களும் தொண்டை வேந்தர்களும் வீழ்ந்தனர். இதனைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். அதற்குப்பின் அறுநூறு ஏழுநூறு ஆண்டுகள் பல்லவர் முதலிய வேற்று நாட்டவர் தமிழகத்திற் புகுந்து ஆட்சி செய்தனர். அவர் காலத்தே பழைய தமிழ்வேந்தர் குடிகள் வலியிழந்து சிதறிக் கிடந்தன. இதனைத் திருப்பதித் திருமலையிலுள்ள பல்லவர் கல்வெட்டால்3 அறிகின் றோம். பல்லவர்கள் பெரும்பாலும் தொண்டைநாட்டிலும் நடுகாட்டிலுமே தங்கள் ஆட்சியை நிறுவி வளப் படுத்தினர்; எனினும் அவர்களுடைய கல்வெட்டுகள் பலவற்றிலும் பழைய தமிழ்வேந்தர்கள் வகுத்திருந்த கோட்டங்களும் நாடுகளும் பெயர் சிதையாமல் உள்ளன.4 மேலும், வடபெண்ணையின் தென்கரையி லுள்ள நாட்டில் காணப்படும் பல்லவர் கல்வெட்டுகள் பலவும் தமிழிலே இருக்கின்றன. இதனால், வடபெண் ணைக் கரையிலும் அதன் தெற்கிலுமுள்ள பகுதிகளில் வாழ்ந்தவர் தமிழ் மக்கள் என்பது தெளிவாகும். அவர்கள் வாழ்ந்த ஊர்கள் பலவும் தமிழ்ப் பெயர்களையே கொண்டு நிலவின. வடபெண்ணையின் கரைக் கண் நின்று நெல்லூர் மாவட்டத்துக்குத் தலைமை நகராக விளங்கும் நெல்லூரின் பெயரும் தனித்தமிழ்ப் பெயரேயாகும்.
இடைக்காலச் சோழ பாண்டியர் காலம்: (900-1400) பல்லவர்க்குப் பின் சோழர்களும் பாண்டியர் களும் அரசியல் வானத்தில் தோன்றி வளம்பெற்றனர். அவர்களது ஆட்சி நலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் வளரத் தலைப்பட்டது. சோழவேந்தருள் சிறப்பு மிகப் பெற்ற முதல் இராசராசனும் அவன்மகன் கங்கை கொண்ட சோழனும் வடபுலத்தில் தமது கருத்தைச் செலுத்தித் தங்கள் அரசெல்லையைப் பரப்பலுற்றனர். சோழ நாட்டைப் பலவளநாடுகளாகவும் சிறுசிறு உண்ணாடுகளாகவும் பிரித்து அரசுமுறை புரிவாராயி னர். சோழ நாட்டின் வடபகுதியான நடுநாடும் தொண்டை நாடும் அவர்கள் ஆட்சியெல்லையில் அடங்கிக்கிடந்தன. அவற்றுக்குச் “சயங்கொண்ட சோழ மண்டலம்” என்று பெயர் குறித்தனர். திருக்காளத்தியில் உள்ள கல்வெட்டு, அதனைச் “சயங்கொண்ட சோழ மண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட் டுத் திருக்காளத்தி” என்று குறிக்கின்றது.
சென்னைக்கு வடக்கே பொன்னேரி வட்டத்திலுள்ள திருப்பாலைவனம், “சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பையூர்க் கோட்டத்துத் திருப்பாலைவனம்” எனப்படுகிறது. அதற்கு வடக்கில், நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் சூலூர்ப்பேட்டையை, “சயங்கொண்ட சோழமண்டலத் துப்பையூர் இளங்கோட்டத்து வெங்கா நாட்டுச் சூரலூர்” என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கிடைக்கின்றது. அதற்கு வடக்கிலுள்ள கூடூர் வட்டத்தின் தலை நகரான கூடூர் குமுளூர் என்ற பெயரின் சிதைவாதலால், அக் கூடூர்க் கல்வெட்டு அதனை, “சயங்கொண்ட சோழ மண்டலத்து மேலைப் பட்டயநாட்டுக் குமுளூர்” என்று குறிக்கிறது. அதற்கும் வடக்கில் வடபெண்ணைக் கரையில் உள்ளதும் நெல்லூர் மாவட்டத்துத் தலைநகருமாகிய நெல்லூரை அங்குள்ள கல்வெட்டுகள், “சயங் கொண்ட சோழமண்டலத்துச் சேதிகுல மாணிக்க வளநாட்டுப் பெடை நாட்டு நெல்லூரான விக்கிரம சிங்கபுரம்” என்றும், அவ்வூரிலுள்ள திருமாலை, “திருப்பாற் கடலான சித்திர மேழி விண்ணகரான பள்ளி கொண்ட பெருமாள்” 9 என்றும் இயம்புகின்றன. நெல்லூர்க் கிழக்கில் பெண்ணையின் வடகரையிலுள்ள சங்கம் என்னுமூர் பண்டைநாளில் விரியூர் என்ற பெயர் பூண்டிருந்தமையின், “சயங்கொண்ட சோழ மண்டலத் துப் பாக்கை நாட்டு விரியூரில் பெண்ணையாற்று வடகரையில் சங்கமீச்சுர முடையார்க்கு” 10 என அது குறிக்கப்படுகிறது. வேங்கடமலைத் தொடரின் அடியில் வடபெண்ணையின் தென்பாற் பகுதியான இராபூர் வட்டத்தைச் சேர்ந்த சாகணம், சிக்கவோலு, கிலகபாடு, லிங்கபாளையம் முதலிய ஊர்களிலும், வேங்கடகிரி யைச் சேர்ந்த வேங்கடகிரி, மோப்பூரு, இனுகுண்டா முதலிய இடங்களிலும் உள்ள கல்வெட்டுகள் பலவும் இப்பகுதிகளைச் “சயங்கொண்ட சோழமண்டலத்துப் பாக்கை நாட்டு” ஊர்கள் என்று இசைக்கின்றன. இதனால், நெல்லூர் மாவட்டத்துப் பெண்ணையின் தென்பகுதி முற்றும் தமிழ்நாட்டுச் சயங்கொண்ட சோழ மண்டலமான தொண்டை நாடு என்பதைத் தெளிவாக யாவரும் இனிது காணலாம். இங்குள்ள கல்வெட்டுகள் தமிழிலே பொறிக்கப்பட்டு இருப்பது ஒன்றே இது தமிழ்நாடு என்பதை நன்கு வற்புறுத்தா நிற்கும்.
சங்க காலத்துக்கும் பல்லவர் காலத்தும் இடையே தென்னாட்டில் காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப் பட்டபோது, சயங்கொண்ட சோழ மண்டலத்திலும் ஒரு கடல்கோள் நிகழ்ந்தது. கடல்கொண்ட அப் பகுதி இப்போது பழவேற்காட்டு ஏரி என்ற பெயர்கொண்ட நீர்நிலையாக உளது. இப் பகுதியில் சங்ககாலத்துத் திரையன் இருந்து ஆட்சிபுரிந்த பவத்திரி நகரம் இருந் தது. பவத்திரிக்குச் சிறிது வடக்கில் கூடூர் வட்டத்துப் பாண்டரங்கம் என்னும் ஊர் இருக்குமிடத்தே காகந்தி என்னும் நகரமொன்றும் இருந்தது. எழுநூறு எண்ணூறு ஆண்டுகட்டு முன்பும் இக் காகந்தி சிறப்புற்றிருந்தது. நாளடைவில் அது தன் சிறப்புக்குன்றிச் சிற்றூராகத் தேய்ந்துபோயிற்று. இவ்வூரிலுள்ள கல்வெட்டுகள் இப் பகுதியைக் ”கடல்கொண்ட பவத்திரிக் கோட்டம்” என்று குறித்துள்ளன. இவ் வூரருகேயுள்ள ரெட்டிபாளையத்திலுள்ள கல்வெட்டு இதனை, “சயங்கொண்ட சோழ மண்டலத்துக் கடல் கொண்ட பவத்திரிக் கோட்டத்துக் காகந்தி மாநகர்” என்று கூறுகிறது. ககந்தன் என்பவன் ஆண்டதனால் காவிரிப்பூம்பட்டினத்துக் காகந்தி என்றொரு பெயருண்டாயிற்றென மணிமேகலை நூல் கூறுவது ஈண்டு அறிஞர்கள் நினைவிற்கு வரும்.
சோழர்களுக்குப் பின் பாண்டியருட் சிலர் தொண்டை நாட்டில் முன்னேறிச் சிறப்புற்றதும் உண்டு. அவர்களுள், மாறவன்மன் சுந்தரபாண்டியன் என்பவன் தமிழ்நாட்டின் வடவெல்லையைக் கண்டான். அக் காலத்தே அவன் நெல்லூரிலுள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோயிலில் தன் பெயரால் ஒரு சந்தி ஏற்படுத்தியுள்ளான். அதனை, “திரிபுவனச் சக்கரவர்த்தி கள் கோநேரின்மை கொண்டான் மாறவன்மரான ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு…. ஆவணி மாத முதல் சேதி குல மாணிக்க வளநாட்டுப் பெடைநாட்டு நெல்லூரான விக்கிரமசிங்கபுரத்துத் திருப்பாற் கடல் சித்திர மேழி விண்ணகரான பள்ளிகொண்ட ஆழ்வார்க்கு நம் பேரால் கட்டின சுந்தர பாண்டியன் சந்தி….” 12 என்று கல்வெட்டுக் கூறுவதனால் நன்கு அறியலாம்.
விசய நகர மன்னர் காலம் (கிபி 1400 – 1700)
இடைக் காலச் சோழ பாண்டியர்க்குப் பின் தோன்றிய விசய நகர மன்னராட்சியில் நெடுநாள் வரையில் தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடையிலுள்ளதான சயங்கொண்ட சோழமண்டலம் முழுதும் தமிழ்மொழியே ஆட்சிபுரிந்து வந்தது. அரசியல் வழக்குகளே கல்வெட்டுக்களும், செப்பேடு களும் பெரிதும் குறிக்கும் செய்தியாதலால், அவற்றில் வழங்கிய மொழியே அரசியல் மொழி என்றற்கு ஐயமில்லை. அவ் வகையில் நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி முற்றும் தமிழ்க் கல்வெட்டுகளே நிரம்பியிருத்ததால் அப்பகுதி முற்றும் தமிழ் நிலமாகத் திகழ்ந்தது என்பது தெளிவாகிறது. இவ் விசய நகர வேந்தர்களில் அரியராயர், சதாசிவ தேவராயர்,13 முதலியோருடைய கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன. அவர்கள் அனைவரும் தெலுங்கு பேசும் மன்னராயினும் அவர்களது அரசியல் முற்றும் இப்பகுதியில் தமிழிலே நடந்திருப்பது ஈண்டு மனங்கொள்ளற் குரியது. ஆகவே, விசயநகர மன்னர் காலத்திலும் தமிழ்நாட்டெல்லை வடபெண்ணையை மேற்கொண்டு நின்றமை இனிது விளங்குகிறது.
விசயநகர ஆட்சியின் வீழ்ச்சிக் காலத்தில் சந்திரகிரி ராச்சியம் சிறந்திருந்தது. அதன் எல்லை தெற்கே காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள திருப்புட்குழி வரையில் பரவியிருந்ததென அவ்வூர்க் கல்வெட்டால்14 அறி கிறோம். அதன் ஆட்சியிலும் சென்னைக்கும் வடபெண் ணைக்கும் இடையிலுள்ள பகுதியெங்கும் தமிழ் மொழியே நிலவிற்று. அரசியலும் தமிழிலேதான் நடந் தது; அங்கே தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். “சந்திர கிரி ராச்சியத்தின்” தலைநகரான சந்திரகிரி தொண்டை நாட்டுத் திருவேங்கடக் கோட்டத்தின் தலைநகராக இருந்துவந்தது. இப்பொருள்பற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய அரசியற் கல்வெட்டிலாகாவின் ஆண்டறிக்கை 15 கி. பி. 16, 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேங்கடராயர் காலத் தில் தொண்டைநாட்டு அரசியலில் தெலுங்குமொழி இடம்பெற்றிருக்கலாம் என்று கண்டுள்ளது.
விசயநகர ஆட்சி வீழ்தற்கு முகமதியரது வளர்ச்சி காரணமாகும். முகமதியர் வலி மிகமிகச் சந்திரகிரி யரசும் ஏனைச் சிற்றரசுகளும் கெட்டு வீழ்ந்து தேயத் தலைப்பட்டன. முகமதியரது அரசியல் பாரசீக மொழியில் நடைபெற்றது. அவர் பொறித்த கல்வெட்டு கள் சிலவும் அம் மொழியிலே உள்ளன. ஜில்லா, தாலுகா, பிர்க்கா, ஜமாபந்தி, தாசீல் முதலியன யாவும் அவர்கள் புகுத்தியனவாகும். தெலுங்கின் வளர்ச்சியும் பாரசீகத்தின் படர்ச்சியும் செல்வாக்கும் பெற்றதனால், தமிழ்த் தொண்டை நாடான சயங்கொண்ட சோழ மண்டலத்தின் வடபகுதியில் தமிழர் தெலுங்கராயினர்; தமிழ்மொழி பையச் சிதையத் தொடங்கிற்று. வடபெண் ணையின் வட பகுதியில் வாழ்ந்த வடுகர் பலர் தென் பகுதியிற் குடிபுகுந்தனர். அதனால், தமிழ்மொழி அப் பகுதியில் விரைந்து மறைவதாயிற்று. இந் நிலையில் தென்னாட்டில் தெய்வப் பெயர்களும் ஊர்ப் பெயர் களும் மக்கட்பெயர்களும் வடமொழியில் மொழி பெயர்க்கும் முயற்சி தோன்றிச் சமயத் துறையில் வெற்றி பெறத் தலைப்பட்டது. அதுவே வாய்ப்பாகக் கொண்ட தெலுங்கர், தாம் குடிபுகுந்த ஊர்களின் பெயரைத் தெலுங்காக்கினர்.
நெல்லூர் மாவட்டத்து நெல்லூரைச் சேர்ந்த கொடுவலூர் கொடவலூரு எனவும், வெங்கூர்17 வெகூரு எனவும், ஊட்டக்கூர்18 ஊட்டுகூரு எனவும், சூரலூர்19 சூலூரு பேட்டா எனவும், தும்பையூர்20 தும்மூரு எனவும், இருங்குண்டையூர்21 இனுகுண்டா எனவும், செறுமணவில்22 சிரமணா எனவும், குமுளூர்23 கூடூரு எனவும் மாறின. இவ்வாறே மிகப் பலவூர்கள் பழைய தமிழ்ப் பெயர் தெரியாதவாறு சிதைந்து உருமாறிப் போயின. திருமலைத் திருப்பதி தேவத்தான செயல் யாவும் மகந்துவின் மேற்பார்வைக்கு வருமுன் தமிழிலே நடைபெற்று வந்தன. நாளடைவில், அங்கே தொழில் செய்வோர் தெலுங்கராக வேண்டிய நிலைமை யுண்டாயிற்று. திருப்பதியிலும் அதற்குத் தென்பகுதியி லுள்ள ஊர்களிலும் தமிழ்வழங்குவோர் தொகை மிகுதி யாக இருந்தும் தெலுங்கு மொழி அப்பகுதியில் வலிபெற்றமையே இம் மாறுபாட்டுக்குக் காரணமாகும். இன்று தெலுங்கரது தெலுங்கு செங்கற்பட்டு மாவட்டத் தின் வடபகுதிகாறும் படர்ந்து வந்திருக்கிறது.
இதற்கிடையே, மேனாட்டவரான ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் உலாந்தக்காரரும் எனப் பலர் தமிழ்நாட்டில் தங்கி வாணிபம் செய்ய முயன்றனர். திருவெற்றியூருக்கும் திருமயிலாப்பூருக்கும் எழுமுருக் கும் இடையேயுள்ள கடற்கரைப் பகுதியை ஆங்கிலேயர், சந்திரகிரி வேந்தரிடமிருந்து பெற்று, அங்கே தமது வாணிக நிலையத்தை நிறுவினர். அப் பகுதி அங்கே வாழ்ந்த கரையார் தலைவன் மருரேசன் என்பவன் மேற்பார்வையில் இருந்தது. வேந்தன் ஆணைக்கடங்கி அவன் அப் பகுதியை ஆங்கிலேயருக்கு விட்டுவிட்டான். அவனது பெயர் மறையாவண்ணம் ஆங்கிலேயர் அப்பகுதியை மதராஸ் என மருவி வழங்கலாயினர். மதுரேசன் பகுதியை அடுத்துச் சென்ன கேசவன் பட்டினம் என்பது இருந்தமையின் மதராசை ஏனையோர் சென்னபட்டினம் என்று வழங்கினர். இவ்வாறே சதுரவாசகன் பட்டினம்24 என வழங்கிய கடற்கரையூர் பிற்காலத்தே சதராசு25 என ஆங்கிலேயரால் சிதைக்கப்பட்டது.
இப் பகுதிக்கு மேனாட்டு ஆங்கிலேயர் திடீர் என ஓர் ஆராய்ச்சியுமின்றி வந்துவிடவில்லை.
இங்குள்ள திருவெற்றியூரும் திருமயிலாப்பூரும் கி.பி.ஏழாம் நுற்றாண்டிலேயே சிறப்புற்று விளங்கிய இடங்கள். திருஞானசம்பந்தர் முதலிய திருமுறையாசிரியர்கள் அவற்றை மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இப்போது எழும்பூர் என வழங்குவது அந்நாளில் எழுமூர் என்ற பெயரால் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் சிறப்பாகக் குறிக்கும் பேறுபெற்றது. திருவல்லிக்கேணி என்ற திருமால் திருப்பதி திருமங்கை மன்னரால் சிறப்பித்துப் பாடப்பெற்ற பெருமையுடையது. இங்குள்ள தெள்ளிய சிங்கப்பெருமாளுக்கு இடைக்காலச் சோழரும் பிறரும் நிவந்தங்கள் விட்ட குறிப்பைக் கல்வெட்டுகள்26 காட்டுகின்றன. திருவொற்றி யூரில் இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் அரசர்களும் சான்றோர்களும் கூடியிருந்து நம்பியாரூரர் வரலாற்றைத் திருவிழாக் காலத்தில் மக்கட்கு எடுத்துரைக்கும் சமயப் பணி புரிந்தனர். நாடோறும் சைவ சமயச் சொற்பொழிவுகளும் அங்கே நட பெற்றன.27 மாணவர்கள் கூடி இலக்கணம், இசை முதலியன கற்கும் கல்வி நிலையமும் இங்கே இருந்தன. திருமயிலாப்பூரில் திங்கள்தோறும் பல திருவிழாக்கள் நடைபெறும் எனத் திருஞானசம்பந்தர் தெரிவிக்கின் றார். எழுமூர் சயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து எழுமூர் நாட்டுக்குத் தலைநகராக விளங்கிற்று. இத்துணைச் சமயச் சிறப்பும் தமிழ்ச் சிறப்பும் அரசியல் சிறப்பும் பெற்றிருந்ததனால்தான் ஆங்கிலேயர் இவ்விடத்தைத் தேர்ந்து கொண்டனர். அந்நாளில் இப்பகுதி சந்திரகிரி மன்னனிடம் இருந்தமை யால் அதனை வாங்கவேண்டிய நிலைமையேற்பட்டது; இஃது ஒன்றே பற்றிச் சென்னை நகர் தெலுங்கு நாட்டுக்கு உரியதென்பது அறமன்று. உடையவர் தமது உடைமை யின் வரன்முறை அறியாதொழுகுவாராயின் அதனைப் பாதுகாக்கும் மனவலி குன்றி உலகம் பழிக்கும் கீழ்மை எய்துவரென்ற மூதுரைப்படி, தமிழர் தமது வரலாற்றறி யும் கருத்தில்லாது போனமையால் ஒருவர்க்கொருவர் மனங்கசந்து வருந்தும் அவல நிலை எய்தினர். இனியாகிலும் தமிழர் தங்கள் வரலாற்றை முறையுறக் கண்டு, எல்லை வரையறுத்துக் கொண்டு நாடு முன்னேறும் நற்பணியில் ஈடுபடுதல் கடனாகும்.
மக்கள் வாழ்வு, உலகியல் வாழ்வு, அறிவியல் வாழ்வு என இருபாற்பாடும், உலகியல் வாழ்வு நாடு, பொருள், தொழில், வாணிகம், அரசு முதலிய கூறுகளில் எல்லை வரையறைபெற்று இயலுவது. அறிவியல் வாழ்வு, எல்லையின்றிப் பரந்து “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற விரிந்த நோக்குடன் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் கொண்டு அறம்பேணி நிற்பதாகும். இரண்டையும் ஒன்றாய்க் கலக்கிக் காண்பது அறிவு இன்ப வாழ்வுக்கு ஆக்கமாகாது; அரணுமாகாது என்பதைத் தலைவர்கள் உணர்தல் வேண்டும். மக்களை அறியாமை இருளில் கிடத்தி, அதனை அடிப்படை யாகக் கொண்டு நிற்கக் கருதும் தலைவர்கள் விரைவில் தலைமையிழந்து அலமருவர், நாளும் மாறிவரும் மக்களுலகம் இனி அறிவு அறைபோகாது, அறிவொளி எழத் தொடங்கிவிட்டது. அறியாமை, அறிவு நெறிக்குப் பொருந்தாமை என்ற படைகொண்டு ஆட்சி செய்ய நினையும் தலைமை நிலைமையிழந்து கெடும் என்பதை யும் தலைவர்கள் தமது உள்ளத்தில் நிலைபெறக் கொள்ளல் வேண்டும்.
அடிக்குறிப்பு:
1 (அகம்)
2 (அகம்)
3 S.I.I.Vol. XII. No 43.
4 Nellore Inscriptions: Gundur No. 54.
5 Annual Report Madras Epigraphy No. 84 of 1922
6 A.R.No.309 of 1928 – 29.
7 Nellor Inscritions sulucpet No 4
8 Nellor Ins. Gudur, No. 20-33
9 S.I.I.V.V. No.491
10 Nel. Ins. Nellore. No. 108
11 Nel. Ins. Gudur. No 87
12 SII Vol. V. No 495
13 Nellore Ins Nel. Tq No 76
14 AR No 172 of 1926
15 Para 14 of AR for 1904 Madras Epigraphy
16 No 31 of Nel. Tq
17 120 of Nel.
18 66 of Nel.
19 3 of Sulurpet Tq.
20 12 of sul.
21 26 of Venkatagiri
22 26 of Atmakur
23 20 – 33 of Gudur
24 A.R.123 of 1933
25 Sudras
26 S.II. Vol. VIII. No 533 – 44
27 SII. Vol. VII. No 371
நூல் : தமிழ்த்தாமரை
பேரா. ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, 1957

Add a Comment