அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 90
அறங்காவல்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
அப்பாவின் நெருங்கிய நண்பரும், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தின் செயலாளராக இருந்த பொறிஞர் பக்தவத்சலம், ஏகாம்பர மாமாவைப் பற்றிய பல தகவல்களைத் திரட்டி எழுதிய கட்டுரையின் துணைக் கொண்டு, அவர் ஆசிரியராக இருந்த ‘கருணீகர் நலவாழ்வு’ மலரில் வெளியான ‘அறங்காவல்’ கட்டுரையை உங்கள் அனைவரின் பார்வைக்கும் மீளப் பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏகாம்பர மாமா எந்தக் கருத்தையும் நுட்பமாகச் சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர் என்று அடிக்கடி அப்பா சொல்வார்.
அவ்வண்ணமே, மிக நுட்பமாக அறங்காவலரின் விழுமியங்களை இக்கட்டுரையில் எழுதியுள்ளது நினைக்கத் தக்கது.
அறங்காவல்:-
“இயல்பு திரியாது என்றும் நிர்மலமாக இருப்பவன் இறைவன்.
குழந்தை பிறக்கும் பொழுது தெய்வமாகத்தான் பிறக்கிறது.
அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர் சான்றோர்.
குழந்தையின் இயல்பும் நிர்மலமானது;
வெளியுலக இழுப்பிற் கெல்லாம் அப்பாற்பட்டவை:
ஆசை அவா, வெகுளி, இன்னாச் சொல், கொலை, பொய்மை, களவு போன்ற குணங்கள் பிறக்கும் குழந்தைகளிடம் காணமுடிவதில்லை.
நேர்மை, உண்மை, அஞ்சாமை, அன்பு முதலிய நற்பண்புகளே உடன் பிறப்பு.
அதனால்தான் நீதிகளை நிலை நாட்டக் குழந்தைகளின் சாட்சி வலிவுடையதாக மதிக்கப்படுகின்றது.
இத்தகைய இயற்கையான தன்மைகளே அடிப்படை அறங்களாக உலகம் முழுவதும் ஏற்கப்படுவன.
நாளடைவில், வளர வளர ஆசைகளின் உந்துதலால் பேராசை பிடித்த மனிதன் மிருகமாக மாறிக் கொண்டே வருகிறான்.
அவனால் அறங்கள் அல்லலுறுகின்றன.
வளரும் மனிதரைக் கணிப்பிட அவர் இயல்பில் (சுபாவம்) குழந்தை; மனம் குழந்தை போன்றது என்றெல்லாம் பேசுவது பாராட்டு.
ஆனால் அவரே அறிவில் குழந்தை என்றால் ஏதோ குறைபாடுடையவர் அன்பில் என்பது புலப்படும்;
குழந்தை என்றாலும் தெளிவு பெற வேண்டியவர் என்ற ஐயம் ஏற்படும்.
ஆகவே அன்பும், அறிவும் கணந்தோறும் வளர்ச்சியும், முதிர்ச்சியும் பெற வேண்டியவை;
இயல்பும் – மனமும் மாறாமல் மலர வேண்டியவை எனப் பெறப்படுகின்றனவல்லவா?
அறம் வாழவேண்டுமென்பதில் ஆரம்பக் காலந்தொட்டே மனித இனம் உன்னிப்பாக இருந்து வருகிறது என்பது கண்கூடு.
அறம் பிறழும் போதெல்லாம் ஆண்டவன் அவதாரம் நிகழ்வதாகப் புராணங்கள் கூறும்.
அறம் வாழ அன்பு மலர வேண்டும்; அறிவு வளர வேண்டும்.
அறம் இன்னதென உய்த்துணரக் கல்வியறிவு வேண்டாம்; இயற்கையறிவே போதும்.
கல்லாதாரும் நல்லது கெட்டதை ஆய்ந்து உய்த்துணர மனமென்ற துலாக்கோலே போதும்.
எனினும் பிறந்த மனித இயல்போடு மனிதன், வளர்ந்து வாழ உறுதுணையாக அமைதல் வேண்டி மனமலர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்குமென ஆக்கம் தரும் வழி வகைகளைப் பலர் வகுத்தனர்.
ஆயுள் நிரந்தரமல்ல. ‘
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ் வுலகு’ என்பார் திருவள்ளுவர்.
ஆனால் அறம் உண்மையானது; நின்று நிலவ வேண்டியது.
இடையறா ஒழுக்கத்தில் நிற்றல் அறம்; சிறப்புடைய ஒழுக்கமே அறம் என்றும் பொருள் கொள்வார் பரிமேலழகர்.
அங்ஙனம் அறச்செயல்களைக் கொண்டு கருத்தில் அறநிறுவனங்களைப் பண்டைக் காலந்தொட்டு அரசர்கள் முதல் நல்ல மனம் படைத்த பலரும் நிறுவிச் செல்கின்றன .
இதனை ஆங்கிலத்தில் Trust என்கின்றனர்.
அதாவது நம்பிக்கை, உறுதி கொள்வது, நம்பிக்கையோடு ஒப்புவிப்பது எனப் பொருள் கொள்வர்.
Trustee என்பதற்குப் பொறுப்பாளி என்றும் வடமொழியில் தர்மதரிசி என்றும் பொருள் கூறுவர்.
எனினும் நிறுவியவர் நியதிகளின்படி செயல்பட்டு, நிறுவனம் சிதறாமலும் சிதையாமலும் காப்பதே பணி என்ற அடிப்படையில் அவர்கள் “அறங்காவலர்” என அழைக்கப் படுகின்றனர்.
தமிழ் நாட்டையாண்ட பாண்டிய அரசர்கள் காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்தேனும் அரசர்களைக் காத்த படையினருக்கு ஆபத்துதவிகள் எனப் பெயர்.
அதேபோல் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கோவில் சொத்துகளையும் நேர்மையான நிர்வாகத்தையும் பாதுகாப்பதற்கென அமர்த்தப்பட்டவர்கள் “திரிசூல வேலைக்காரர்” என அழைக்கப்பட்டனர்;
பெரும்பாலும் அவர்கள் சிவ பக்தர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதேபோல் ஈழத்தில் பொலனருவை (விஜயராஜபுரம்) எனுமிடத்தில் முதலாம் விஜயபாகு கட்டிய புத்தவிகார் கல்வெட்டொன்றில் அறங்காவலர் (அல்லது வேலைக்காரர்) பொறுப்பில் விடப்பட்டுள்ளது என்ற குறிப்பு காணப்படுகிறது.
இந்த அறங்காவலர் வாழ்க்கைச் செலவிற்கென ஒரு வேலி நிலம் தனியே ஒதுக்கப்பட்டிருப்பதனையும் குறிக்கப்பட்டுள்ளது.
(AR 600 of 1921; SII, IV No 1396).
பாண்டிய நாட்டில் திருவலீஸ்வரம் கோவிலும், அதன் சொத்துகளையும், புரோகிதரையும், பணியாட்களையும் பராமரிக்கும் பொறுப்பு மூன்று கை மகாசேனையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், அந்த ஏற்பாடு நிரந்தரமானதும், நம்பிக்கையானதும், அரசர் கருத்தைக் களங்கமின்றி நிறைவேற்றத்தக்கவர் என்றும் அக்கோவில் கல்வெட்டு செப்புகிறது (AR.120 of 1905).
மாயூரத்திற்குச் சுமார் 10 கிமீ. தொலைவிலுள்ள பூஞ்சை நற்றுணை ஈஸ்வரன் கோவிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு செப்புவதாவது:
இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தது. (காலம் கி.பி. 1163 -1178). தேவதானமாக அளிக்கப்பட்ட சில நிலங்களின் பேரில் நால்வர் பொய்யான உரிமை கொண்டாட, திரிசூல வேலைக்காரர் தீக்குளித்து உண்மையை நிலைநாட்டினாராம்.
பின் ஊர்ச்சபை நிலங்களை மீள ஒப்படைப்பது மட்டுமின்றித் தீக்குளித்தோர் சிலை நிறுவ 200 காசுகள் தரவேண்டுமென்றும் அவற்றைப் பூசிப்பதற்கான செலவினங்களுக்கு அவர்கள் சொந்த நிலங்களையும் தண்டமாகக் கோவிலுக்கு ஒப்படைக்கவேண்டுமெனத் தீர்ப்பு வழங்கிற்றாம்.
பாண்டியர் திரிபுவனச் சக்கர வர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்திலும் ஆறு கிராமங்களில் தவறாக விற்கப்பட்ட தேவதான இறையிலி நிலங்கள் கோவிலுக்கே மீட்கப்பட்டதாகச் செய்தி கூறுகிறது. ( SII, II, 21).
மேலும் இராஜராஜதேவர் செப்பேடொன்றில் அறத்தான் பயன்பெற வேண்டிய குடும்பத்தில் ஆண் சந்ததி அற்றுப்போய் விட்டதாகவும், அறத்தினைத் தொடர்வது எப்படி என்ற விவாதத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த பெண் சந்ததியினருக்கு மேலும் தொடர்வது என்றே முடிவெடுக்கப்பட்டதாம்.
(SII, III, PL IV, 210).
தஞ்சை இராஜராஜேஸ்வரன் கோவில் கல்வெட்டொன்று (SII, II, 69) அறங்காவல் கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்கக் கரணத்தார் அமர்த்தப் பட்டதாகக் குறிக்கிறது.
ஆகவே அறங்காவல் என்பது எளிய பணியல்ல.
நேர்மையும், நாணயமும், திறமையும் மிக்கவரே அறங்காவலர் பொறுப்பேற்கும் தகுதி பெற்றவர்கள்.
அறநிலையத்தின் அதிகாரிகளல்லர் அறங்காவலர்; அதன் வேலைக்காரர்கள்; காவலர்கள். இவற்றான் அறம் எழுந்ததன் உள் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, அது அருகாமலும், திரியாமலும், தன் நலம் கருதாமலும் பணிபுரிதலே தலையாய்க் கடன் என்பது பெறப்படுகின்ற தல்லவா?
இந்த உயர்ந்த குறிக்கோளைக் கருத்தில் கொண்டே இந்தியாவை ஆளத் தொடங்கிய ஆங்கில அரசும் 1882 ஆம் ஆண்டு இந்த வழிவழி வந்த மரபினைத் தொடரும் வகையில் இந்திய அறங்காவல் சட்டமொன்று இயற்றி
(Indian Trust Act 1882) இன்னமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அறங்காவல் கணக்குகளை நம்பிக்கையுடனும் , நாணயத்துடனும் நிர்வகித்து வந்த கருணீக குல மக்கள் நலனுக்கென 1909-ஆம் ஆண்டு நிறுவிய மாடம்பாக்கம் வாசுதேவப் பிள்ளை அறம்” நம்மவரின் பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய ஒன்றாகும்.
ஆனால் அந்த அறக்கட்டளை எவ்வாறு இதுகாறும் பராமரிக்க வந்தது என்பதும் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின்
‘ஔவையும் புலமையும்’ – (14)
சங்க இலக்கிய உரைகள் – ஐங்குறுநூறு – பதிப்புகள்
1) ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும் – உவேசா பதிப்பு – (1903/1920 ) நூல் முழுமைக்கும் பழைய உரையில்லை.
129, 130 பாடல்கள் கிடைக்கவில்லை; 416, 490-இல் இரண்டாம் அடி சிதைந்துள்ளது.
2) ஐங்குறுநூறு – மூலமும் விளக்க உரையும் (மருதத்திணை) 1938 – ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை, வெளியீடு – கா.கோவிந்தன், திருவத்திபுரம்.
ஐங்குறுநூறு மூலமும் உரையும் – ஈழத்து ஆறுமுகம் பிள்ளை, யாழ்ப்பாண ஆரியத் திராவிடப் பாஷாபிவிருத்திச் சங்கம் வெளியீடு
1943 – (2-ஆம் பதிப்பு ஆசிரியர் தி. சதாசிவ ஐயர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு – 1999)
உவேசாவின் 1920ஆம் ஆண்டுப் பதிப்பை அடியொற்றி, நூல் முழுவதற்கும் உரை எழுதியுள்ளார்.)
3) ஐங்குறுநூறு மூலமும் உரையும் – ஒளவை துரைசாமிப்பிள்ளை 3 தொகுதிகள் – அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1957 (1, 2 தொகுதிகள்), +1958 (3)
நூற் செய்தி:- ஐங்குறுநூறு மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் திணைவைப்பு முறையில் 100 பாடல்களைக் கொண்டது.
இவற்றை முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் பாடினர்.
“இதில் உள்ள அகவற்பா ஒவ்வொன்றின் பின்னும் தனித்தனியே கருத்துரையும் பழைய உரையும் உள்ளன.
சில பாக்களுக்கு இரண்டு கருத்துரைகள் உண்டு.
கருத்துரைகளை இயற்றியவர்கள் நூலாசிரியர்களோ வேறு யாரோ எதுவும் புலப்படவில்லை.
தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இந்நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டிய செய்யுட்களில் சிலவற்றிற்கு நச்சினார்க்கினியர் முதலியோர் கருத்துரைகளைத் தழுவாமல் வேறு கருத்துரைகள் எழுதி, அவற்றிற்கேற்ப அச்செய்யுள்களுக்குப் பொருளும் விளங்க எழுதி இருக்கிறார்கள்.
இது இப்புத்தகம் 145-ஆம் பக்கம் முதலியவற்றில் அமைந்துள்ள பிரயோக விளக்கக் குறிப்பால் விளங்கும்” (உ.வே.சா., முகவுரை)
இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இருவரும் மலை நாட்டவர் ஆதலின் ஆதனவினி என்னும் சேரனைத் தலைவனாகக் கொண்ட முதற்பத்து மருதத்தை முதலிலும், சேரர் கடற்கரை நகராகிய நெய்தலைச் சிறப்பிக்கும் தொண்டியை அதன் பின்னரும், பெரும்பாலும் மலைநாட்டைப் பாடி மலைநாட்டில் வதிந்து மலைவளம் பாடுதலிற் சிறந்த கபிலரின் குறிஞ்சியைப் பின்னும் கோத்தார்.
எனினும் பாலையும் முல்லையும் அடுத்து வருவதற்குக் காரணம் விளங்கவில்லை
ஐங்குறுநூற்றுக்குப் பழைய உரை
“இந்நூலின் பழையவுரை பதவுரையுமன்று; பொழிப்புரையுமன்று.
அகத்திணை நூல்களுக்கேயுரிய உள்ளுறையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றைப் பெரும்பாலும் நலமுற விளக்கிச் சிலசில இடத்து மட்டும் திரிசொற்களின் பொருளைப் புலப்படுத்திச் சிறுபான்மை இலக்கணக் குறிப்பையும் பொருள் முடிவுகளையும் பெற்றுள்ளது.
469ஆம் பாடலுக்கு மேலுள்ளவற்றிற்குக் கையெழுத்துப் பிரதியில் இவ்வுரை காணப்படவில்லை.
ஆனாலும் கிடைத்த வரையிற் பாடல்களின் பொருளைத் தெரிந்துகொள்வதற்கு இவ்வுரை மிகச் சிறந்த கருவியாக உள்ளது.
இந்நூல் போலவே நடையாலும் நுணுக்கத்தாலும் இவ்வுரையும் மிகப் பாராட்டப்பாலது.
இவ்வுரை இல்லையாயின், இந் நூற்பாக்களிலுள்ள உள்ளுறை உவம முதலியனவும் மற்ற அருமை பெருமைகளும் நன்கு புலப்படா.
இவ்வுரையாசிரியர் இன்னார் என்பது ஒருவாற்றானும் விளங்கவில்லை.
ஆனாலும் நடையை உற்றுநோக்கின் இவர் பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலியவர்களுள் ஒருவரோ அல்லது அவர்களைப் போன்ற வேறொருவரோவென்று ஊகிக்கப்படுகிறார்.
உரிமை உரை
டாக்டர் உ.வே.சா.அவர்கள் தமிழாராய்ச்சியோடு தமக்குத் தொடர்புண்டாக்கிய தமிழ்ப் பெருமகனார் தியாகராச செட்டியார் அவர்களின் அருமை பெருமைகளை அழகுற இயம்பி, நூலை உரித்தாக்கும் நன்றியுணர்வு அறிந்து போற்றத்தக்கது.
“திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவானும் என் ஆசிரியருமாக விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய கண்மணி போன்ற முதன் மாணாக்கரும் பாடஞ் சொல்லுதல், செய்யுள் செய்தல், நூலாராய்தல் முதலியவற்றில் அவர்களைப் போன்றவரும், முன்பு கும்பகோணம் கவர்மெண்ட் காலேஜ் தமிழ்ப் பண்டிதராயிருந்தவரும், கவலையின்றி நூலாராய்ச்சியையே செய்துகொண்டு காலங்கழிக்கும்படி வற்புறுத்திக் கூறி அவ்வாறே யான் நடத்தற்குக் கரும்பு தின்னக் கூலி கொடுத்தாற் போலத் தம்முடைய அரிய வேலையை அன்புடன் எனக்கு எளிதிற் கிடைக்கச் செய்தவரும், ‘இரந்து புன் மாக்கடமையென்றுந் துதியா, வரந்தர வென் முன்நின்ற’ வள்ளலுமாகிய திரிசிரபுரம் வித்வான் ஸ்ரீ தியாகராச செட்டியார் அவர்களுடைய பேருதவி எழுமையும் மறக்கற் பாலதன்று.
அவர்கள் செய்த மேற்கூறிய அரிய உதவி இல்லையேல் எனக்கும் பழைய தமிழ் நூல் ஆராய்ச்சிக்கும் இக்காலத்தில் யாதோரியைபும் இன்றென்பது திண்ணம்.
ஆதலால் இனியதும் அரியதுமான இந்நூற் பதிப்பை அவர்களிடத்துள்ள நன்றியறிவிற்கு அறிகுறியாக அவர்களுக்கு உரித்தாக்குகின்றேன்.”
(உ.வே.சா.)
உ.வே.சா பதிப்பிற்கு நான்கு சுவடிகள் பயன்பட்டிருக்கின்றன. அவற்றுள் மூன்று சுவடிகள் மூலமும் கருத்துரையும் கொண்டிருந்தன.
ஆழ்வார் திருநகரி தே . இலட்சுமணக் கவிராயர் சுவடியில் மட்டும் மூலம், கருத்துரை, பழையவுரை இருந்தன.
ஒளவைக்கு உரையெழுதும் எண்ணம் தோன்றல்
“சென்ற பத்துப் பத்து ஆண்டுகளாக ஐங்குறுநூற்றின் கண் கருத்தைச் செலுத்தி இதன் செய்யுள்களைச் சுவைத்துக் கொண்டே வந்த யான் என்பால் தமிழ் பயின்று வரும் பிறர்க்கும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பாட்டின் நலத்தைக் கூறுவதுண்டு.
அதனைக் கேட்குந்தோறும் அவர்கள் இதற்கு விளக்கவுரை எழுத வேண்டும் என என்னை வற்புறுத்தினர்.
அதற்குப் பழைய உரை இல்லாது செய்யுட்களுக்கு உள்ளுறை உவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரை எழுதி இதனுடன் பதிப்பிக்கலாம் என்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு.
நூலையும் உரையையும் உற்று நோக்க அவ்விருப்பம் அடியோடு மாறிவிட்டது’ எனத் திரு ஐயர் அவர்களே கூறுவாராயின், எல்லா வகையினும் குறைபாடு நிரம்பிய யான் எழுதுவதென்பது கூடாத செயல் என்றே எண்ணி யமைந்து ஒழிந்தேன்.
பின்பு ஒருகால் இயன்ற அளவு உரை காண்பதே நலம் என்னும் எண்ணம் பிறந்தது.”
(ஔவை. முன்னுரை)
ஐங்குறுநூறு – மூலமும் உரையும்
சேயாறு போர்டு உயர்தரக் கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியர், வித்துவான் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதிய விளக்கவுரையும், முதலாவது மருதமும், திருவத்திபுரம், கிரிதரன் பேட்டை, ஒளவைத் தமிழக மாணவர் திரு.கா. கோவிந்தன் அவர்களால், திருவத்திபுரம் ஸ்ரீ இலட்சுமி பிரஸில் பதிப்பிக்கப் பெற்றன.
உரிமை உரையாசிரியரது;
1938; விலை 1-4-0.
டாக்டர் திரு. உ.வே. சாமிநாதையர் அவர்கட்குப் பாராட்டு
“இவ்வரிய நூலை முதன்முதலில் அச்சேற்றிய பெருமை எம் தமிழன்னையின் தவப்புதல்வர் தமிழராகிய நாம் நம் முன்னோர் ஈட்டி நமக்கென வைத்த செந்தமிழ்ச் செல்வம் என வீறு கொண்டு பேசுதற்குரிய பெருந்துணை புரிந்தவராய், இதுபோலும் பண்டைத்தமிழ் பெருநூல் பலவற்றையும் அச்சிட்டு உதவிய பெருந்தகையாய் விளங்கும் டாக்டர் திரு. உ.வே.சாமிநாதையர் அவர்கட்குரியதாகும்.
அவர்கள் திருப்பணியில் ஈடுபட்டுச் செய்தருளியுள்ள தொண்டுகளை உண்மைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மறப்பதும் நினையார்.
அத்தகைய பெருமகனார், நாடிய செல்வமும், நீடிய நாளும், சூடிய புகழும் உடையராய் தமிழன்னையின் சிறப்புடைய மகனெனத் திகழுமாறு பரமன் திருவருள் பெருகுக
மனமொழி மெய்களால் அவன் திருவடிகளை வணங்குகின்றேன்”
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment