அன்புப் பாலம் –
மே மாத இதழ் – 2023
பக்கம் எண்கள் : 26,27,28…
தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ்
ஒளவை நடராசன் அவர்களுக்கு இரங்கற்பா
☯ முனைவர் அ. சிவபெருமான்
தோன்றல் சிறப்பு
பெருமழைப்பு லவர் ஔவை துரைசாமி தந்தை ஆவார்
பெரும்புயல்பு லவர் ஔவை நடராசன் மகனாவார்
நூல்களுக்கு உரை எழுதும் உரைவேந்தர் என்று சொல்வர் தந்தையினை
நூல்களையே உரைக்கின்ற உரைவேந்தர் என்று சொல்வர் மகனையும்
துரைசாமி லோகாம்பாள் பெற்றெடுத்த தவக்குழந்தை
எண்பத்தா றகவை வரை வாழ்ந்திட்ட தமிழ்க்குழந்தை
சிவபாத சேகரனாம் இயற்பெயரைக் கொண்டவராம்
நடராசன் என்றேதான் பெயர்மாற்றம் கொண்டாரே
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்எம்,ஏ, படிப்பினையும்
இச்சையாகப் படித்திட்டார் இனிதாக முடித்திட்டார்
சங்ககாலப் பெண்பாற்பு லவரென்றே தலைப்பினிலே
தங்கமகன் முனைவரென்னும் பட்டத்தை முடித்திட்டார்
பணிச்சிறப்பு
மன்னர்சர போஜிபெயர் பெற்றிட்ட கல்லூரியில்
மன்னர்நட ராசனுமே மதிப்புடனே பணிசெய்தார்
தில்லியிலே அகிலஇந்திய வானொலியாம் நிறுவனத்தில்
நல்லபடி செய்தியினை வாசிக்கும் பணிபுரிந்தார்
தலைமைச்செயலகத்தினிலே மொழிபெயர்ப்புத் துறையினிலே
தலைமைமிகு இயக்குநராய்த் தகைமையுடன் பணிசெய்தார்
நஞ்சையுமே புஞ்சையுமே கொஞ்சியுமே விளையாடும்
தஞ்சைத்தமிழ்ப் பல்கலையின் துணைவேந்த ராய்இருந்தார்
சென்னையிலே பாரத்தின் பெயர்தாங்கும் பல்கலையில்
நிரந்தரவேந்தர் பணியில் நிரந்தரமாய் ஆட்சிசெய்தார்
செல்வாக்கு மிகுந்திட்ட சிறப்பான பதவிகளில்
சொல்வாக்கு மிக்கவராய்ச் சுறுசுறுப்பாய்ப் பணிசெய்தார்
வெற்றிக்கொடி பலவும்தான் நாட்டிட்டார் பணியினிலே
கடமையினைக் கண்ணாக நேர்மையினை உயிராகக்
கண்டிப்பை மூச்சாகக் கொண்டவராம் இப்பெரியார்
விருதுச்சிறப்பு
தமிழகத்தின் அரசு தந்த கலைமாமணி விருதினையுமே
மத்தியநல் அரசுதந்த பத்மத்திரு விருதினையும்
அண்ணாவின் பெயராலே தந்திட்ட விருதினையுமே
திருக்குறள்நெறிச் செம்மலென்ற தங்கமான விருதினையும்
ஆழ்வார்மை யம்தந்த இராமாநுசர் விருதினையும்
என்றுபல விருதுகளை ஏற்றமுடன் பெற்றிட்டார்
சொல்வேந்தர் சிறப்பு
சொற்கள்தம் காதலரை சொல்வேந்தர் எனஅழைப்பர்
அற்பமான கோபத்தை அணுவளவும் மேற்கொள்ளார்
நாவென்னும் நல்மந்திரக் கோலினையும் இவரசைத்தால்
நானிலமும் மயங்கிடுமே நற்சிலையாய் அமர்ந்திடுமே
இனிமையோடு அழகும்தான் பேச்சினிலே அமர்ந்திருக்கும்
கனித்தமிழ்மேல் கொள்பக்தி மூச்சினிலே நிறைந்திருக்கும்
பொன்னாரின் பேச்சுக்கு எதுநிற்கும் முன்னாடி
அண்ணாவே இவருடைய பேச்சுக்கு முன்னோடி
ஐந்தாவது ஏழாவது உலகத்தமிழ் மாநாட்டை
வேந்தருமே சிறப்பாக நடத்தித்தான் காட்டிட்டார்
குடும்பச் சிறப்பு
குழந்தைநல மருத்துவராம் தாராவைக் கரம்பிடித்தார்
குழந்தைகளோ முத்தமிழ்போல் மூன்றினையுமே ஈன்றெடுத்தார்
தன்வழியில் ஒருமகனை வழிநடத்திச் சென்றிட்டார்
தாய்வழியில் இருமகனை மருத்துவராய் ஆக்கிட்டார்
நல்லதொரு குடும்பமென பேர்பெற்ற குடும்பமிது
எல்லோர்க்கும் வழிகாட்டும் ஊர்போற்றும் குடும்பமிது
மனமகிழ்ச்சி கொண்டிட்ட நிறைவான குடும்பமிது
பெருமைபல பெற்றிட்ட அருமையான குடும்பமிது
கல்விக்கு அதிபதியாம் கலைமகளின் அருட்பார்வை
பூரணமாய்ப் பெற்றிட்ட பேர்பெற்ற குடும்பமிது
மேடைச் சிறப்பு
துண்டுச்சீட் டொன்றுகூட தன்கையில் இல்லாமல்
மேடையிலே கோடையிடி யாகத்தான் முழங்கிடுவார்
உணர்வுக்கு விருந்திளிப்பார் உவகையான பேச்சாலே
குன்றக்குடி அடிகளார்போல் தமிழ்க்குன்று கோமகனும்
பட்டிமன்றக் கலையினையும் பட்டிதொட்டி கொண்டுசென்றார்
கம்பன்பெயர் கழகம்தான் விழாஎதுவும் எடுத்தாலும்
அன்பன்இவர் இல்லாமல் ஒருபோதும் நடக்காது
அருட்பாவின் மீதேதான் அளவற்ற ஈடுபாடு
இறைப்பாவைப் பாடுகின்ற ஏற்றமிகு கோவிலிலே
இலக்கியத்தை ஒலித்திடவே வைத்திட்ட பெருமகனார்
அரசியல் சிறப்பு
கன்னித்தமிழ்க் காவலராம் கற்கண்டுப் பாவலராம்
அந்நியமொழி ஆங்கிலத்தில் அளவற்ற புலமையுண்டு
கொள்கையினால் வேறுபட்ட மூன்றான முதல்வர்கள்
நல்லவரைக் கொண்டாடப் படுவதிலே ஒன்றுபட்டார்
இந்நாள்பா ராளுமன்ற உறுப்பினராம் ஜெகத்ரட்சகன்
மன்னவர்க்கு வளர்ப்புமகன் இவர்மறைந்த பின்னாளே
இரங்கற்பா பாடித்தான் அனைவரையும் அழவைத்தார்
இடுகாடு வரைஅவரின் உடல்சுமந்து சென்றிட்டார்
மதுரைகாமராசர் பல்கலையில் என்கண்
முன்நிகழ்ந்த ( 13.2.2009 ) அடக்கச் சிறப்பு
மதுரையிலே நடைபெற்ற நிகழ்ச்சியிலே நடந்தத்து
என்தந்தை அடிகளாரும் அவ்வையினைக் கண்டிட்டு
என்னுடைய நண்பர்நீர் என்றேதான் அழைத்திட்டார்
அவசரமாய் அதைமறுத்த ஒளவைப்பெரு மகனாரும்
நண்பரல்ல சீடரென்று ஆணித்தர மாய்ச்சொன்னார்
இன்னுமந்த சொல்தானும் என்செவியில் ஒலிக்கிறதே
எவ்வளவோ பேர்பெற்ற ஏற்றமிகு மனிதரிடம்
இவ்வளவாம் அடக்கமா!என் றதிசயித்துப் போனேனே
தமிழாலே இறைஞ்சுகின்றேன்
பத்தான உலகத்தமிழ் மாநாட்டில் பங்குகொண்டார்
பதினொன்றாம் மாநாடு உமைத்தேடி அழைக்கின்றதே
பதிலென்ன யாம்சொல்வோம் தெரியாமல் விழிக்கின்றோம்
அற்றைத்திங் கள்அவ்வெண் நிலவென்ற பாடலையும்
இற்றைக்கு இவ்விடத்தில் பதிலாக யாம்சொல்வோம்
அன்னாரின் ஆத்மாவும் நன்முறையில் அமைதியுற
பொன்னான தமிழாலே பரம்பொருளை இறைஞ்சுகிறேன் ….

Add a Comment